Saturday, March 30, 2024

பாசிச குற்றக்கும்பலை வீழ்த்துவோம்!

தங்களுக்கு எல்லையற்ற அதிகாரத்தையும், பணத்தையும், சொகுசையும் முறையற்ற, மோசடி வழிகளில் சேர்ப்பதற்காக எதையும் செய்யத் துணிந்த இரண்டு ரவுடிகள். அதற்கு 25 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் தேர்ந்தெடுத்து செய்துவருபவை தேர்ந்த குற்றக்கும்பல்களை மிஞ்சுபவை. பாசிசத்தின் அத்தனைக் கூறுகளையும் உடையவை. 

ஆசையைத் தூண்டினால் பணிபவர்களிடம் ஆசை காட்டுதல். அதற்கு எத்தனையோ வழிகள். பதவி, பணம், முறைகேடான வழிகளில் சொத்து சேர்க்க அனுமதி, வழக்குகளிலிருந்து விடுதலை செய்ய வைத்தல் அல்லது வழக்குகளைத் தேங்க வைத்தல், பதவிகாலம் முடிந்ததும் உயர் அவைகளில் பதவி, உயர் பொறுப்புகள்.“அத்தனைக்கும் ஆசைப்படு மொத்தமாக எங்கள் காலடியில் உன்னைக் கொடு” என்பது தாரக மந்திரம். 

இவர்கள் மிரட்டலுக்கு அச்சமடைந்து மோசடிகளைக் கண்டுகொள்ளமாட்டார்கள் என்றறிந்தால் அவர்களிடம் விதவிதமான வழிகளில் மிரட்டல். அது பொதுமேடைகளில், நீதிமன்றங்களில், சோதனை மற்றும் கண்காணிப்பு அமைப்புகள் வழி சிரித்தபடியும், எச்சரித்த படியும் என விதவிதமாக மிரட்டல்கள். அந்த மிரட்டலில் கூட பல வகை, பல கட்டங்கள். அதற்கும் அடங்காதவர்களை உரகத்தைவிட்டே மர்ம வழிகளில் தீர்த்துக்கட்டுதல். அவர் நீதிபதியே ஆனாலும் கூட… அதை மற்றவர்கள் கண்டு, கேட்டு மிரள வைத்தல். அந்த வழக்கையும் மிரட்டல், உருட்டல் வழி நீர்த்துப்போக வைத்தல். 

ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகளானாலும் ஆசைத் தூண்டியும், அச்சத்தைக் காட்டியும் பணிய வைத்தல். கடந்த பத்தாண்டுகளில் ஆசை, அச்சம் இரண்டையும் பாசிசத்தின் அத்தனைக் கூறுகளோடு ஆட்சியதிகாரத்தின் ஆயுதமாக்கியது இக்கும்பல். கூட்டணியை சேர்க்க, கூட்டணிகளை பிளக்க, கட்சிகளை பிரிக்க, மக்கள் பிரதிநிதிகளை அபகரித்து ஆட்சிகளைக் கைப்பற்ற, ஊடகங்களை மௌனமாக்க/பல்லக்குத் தூக்க வைக்க, நீதிமன்ற தீர்ப்புகளை எழுத வைக்க, நிதி மூலங்களை தகர்க்க என எத்தனையோ குற்றங்களை அதிகாரத்தின், சட்டத்தின் எல்லைகளை ஆயுதமாக இக்கும்பல் பயன்படுத்தியது. 

ஒரு சிற்றூரின் நிர்வாகத்தைக் கூட ஆட்சிசெய்ய திறன் இல்லாதவர்கள். குரூரமும், பாசிசமும் மூலதனமாகக் கொண்ட குற்றக்கும்பல். அதுவே அவர்கள் சித்தாந்தம், கொள்கை. இந்த பத்தாண்டு ஆட்சி என்பது வெறும் முன்னோட்டம் மட்டுமே. இன்னும் தொடருமானால் மாறாத தீங்கும், தீராத இன்னலும் பெருமடங்காகும். 

பாசிச குற்றக்கும்பலை வீழ்த்துவோம்! 

Wednesday, May 01, 2013

மேதினம்: உங்கள் சிந்தனைக்கு!

உழைப்பை மட்டும் மூலதனமாக கொண்டிருக்கும் மக்களுக்கு நிரந்தரமான, பாதுகாப்பான, தரமான வேலையில்லை. அமைப்புசாரா துறையில் வேலை செய்கிற சுமார் 94% உழைக்கும் மக்களுக்கு பணி பாதுகாப்பு, வேலை பாதுகாப்பு, சுகாதார மற்றும் பணியிட பாதுகாப்பு உட்பட எதுவுமில்லை. ஓய்வூதியம், மருத்துவ விடுப்பு, பேறுகால விடுப்பு, சேமநலநிதி, வேலையில்லா கால வருமான உத்தரவாதம் உள்ளிட்ட எந்த சமூக பாதுகாப்பு திட்டங்களும் இல்லை. வாழ்க்கை தரத்திற்கும், தேவைக்கும் ஏற்ற குறைந்தபட்ச ஊதியமும் இல்லை. சமூகத்தில் மனிதனாக அங்கீகாரமும் இல்லை. செய்கிற வேலையை வைத்து அடையாளப்படுத்தி சமூகத்தில் படிநிலை அடுக்குகளாக இழிவுபடுத்தப்படுகிற கொடுமை நிலவுகிறது.

முடிதிருத்தம் செய்கிறவர்களும், வீட்டுவேலை செய்கிறவர்களும், கடல்தொழில் செய்கிறவர்களும், வயல்வெளியில் வேலை செய்கிறவர்களும், கட்டிட வேலை செய்கிறவர்களும் இழிவாக, சமூகத்தில் அவமரியாதையாக, அங்கீகாரமற்றவர்களாக அவமானப்படுத்தப்படுகிறார்கள். ஆசிரியரா? மருத்துவரா? பொறியலாளரா?...செய்கிற வேலையை அடையாளமாக வைத்து சமூக அங்கீகாரம் மதிப்பாக கிடைக்கிறது. செய்கிற தொழிலை அடிப்படையாக வைத்து சாதீய ஒடுக்குமுறையை வகுத்தன் தொடர்ச்சியாக சமூகத்தில் ஆளமாக வேரூன்றியுள்ளது இந்த பாகுபாடும், சமத்துவமின்மையும். மேற்கு நாடுகளில் முடிதிருத்துபவரும், மருத்துவரும் சிவில் சமூகத்தில் செய்கிற வேலையின் அடிப்படையில் பார்க்கப்படுவதில்லை. அவர்கள் மனிதர்களாக சமூகத்தில் அங்கீகாரமும், மரியாதையும், கண்ணியமும் பெற்று வாழுகிறார்கள். இத்தகைய பாகுபாடும், சமத்துவமின்மையும் இந்தியாவில் உடல் உழைப்பிற்கான அங்கீகாரத்தை மறுக்கிறது. அதன் விளைவாக படைப்புத்திறனை அனுபவித்து ஈடுபாடுடன் வேலை செய்கிற மனமில்லாத போக்கையும் அதிகரிக்கிறது.

வீட்டுவேலைத் தொழிலாளர்களுக்கு பழைய அல்லது கெட்டுப்போன உணவுகளை வழங்குவதும், தனி உணவு பாத்திரங்களை வைத்திருப்பதும், பின்வாசல் வழியாக மட்டும் நுழைய அனுமதிப்பதும், அவர்கள் துவைத்த துணிகளையும், கழுவிய பாத்திரங்களையும் மீண்டும் தண்ணீர் தெளித்து அல்லது கழுவி "தூய்மை" சடங்கை செய்வதும், சமையல் செய்ய "உயர்சாதி" ஆட்களாக தேடுவதும்....எவ்வளவு கொடூரமான வன்முறையான மனங்களின் வெளிப்பாடுகள். இந்திய சமூகத்தின் வன்முறையை வரைமுறைப்படுத்துகிற போது எந்த வகை உணவை உட்கொள்ளுகிறார்கள் என்பதல்ல முக்கியம். வன்முறையை இப்படியான செயல்பாடுகளின் வழியாக நடைமுறை வாழ்க்கையில் கடைபிடிக்கிற அனைவரும் மிகப்பெரிய வன்முறையாளர்கள் தான். அவர்கள் ஒவ்வொருவரின் இந்த சாதீய, வேலை பாகுபாடு வன்முறையின் பெருக்கம் தான் சமூகத்தில் சாதீய தாக்குதல்களாக, கலவரங்களாக பலவகை வன்முறைகளாக உருவாகின்றன.

நீங்கள் எந்த சாமியை, கடவுள்களை, கார்ப்பரேட் சாமியாரை வழிபடுகிறீர்கள் அல்லது பின்பற்றுகிறீர்கள் என்பதெல்லாம் ஒன்றுமேயில்லை. நீங்கள் கார்ப்பரேட் முதலாளியாகவோ, ஆசிரியராகவோ, சமூகத்தில் அங்கீகாரம் பெற்ற பிரபலமாகவோ, மருத்துவராகவோ இருக்கலாம். ஆனால் உங்கள் ஆழ்மனதிலிருந்து ஒரு உடலுழைப்பு தொழிலாளியை எந்த கண்களால் என்ன பார்வை கொண்டிருக்கிறீர்கள் என்பதில் தான் நீங்கள் மனிதனா அல்லது மிக மோசமான வன்முறையும், வக்கிரமும் பிடித்தவரா என்பது உள்ளது. உலகத்தை ஏமாற்ற உங்கள் உடைகளும், தோற்றங்களும் உதவலாம். மனிதனாக மாறாத நிலையில் பரம்பரை பெருமை பேச்சுக்குள் மறைந்திருக்கும் அழுகிய மனத்திலிருந்து உங்களாலும் உங்களை மீட்க முடியாது. நீங்கள் சமத்துவமாக கண்ணியத்தோடு நடத்தாத அந்த உடலுழைப்பு தொழிலாளியின் மனசாட்சிக்குள் அசிங்கமும், அருவரும், அவமானமும் நிறைந்த ஏதோ ஒரு வகை உயிரியாக மட்டுமே இருப்பீர்கள். மரணத்திற்கு பின்னரும் உங்கள் அடையாளத்தை அப்படியே தான் விட்டுச்செல்வீர்கள்.

படைப்பூக்கமும், ஆக்கத்திறனும் கொண்டு வளர்ச்சிடைந்த சமூகமாக மாற வேண்டுமானால் இந்தியாவில் சாதி, வேலை அடிப்படையிலான பாகுபாடுகளையும், சமத்துவமின்மையையும் ஒழிக்காமல் வேறு வழியில்லை.  அனைவருக்கும் சமத்துவமும், சமூக பாதுகாப்பு திட்டங்களும், வேலை உத்தரவாதமும், வருமான பாதுகாப்பும் கிடைக்கிற சமூகமாக மாற மேதின வாழ்த்துகள்!

Monday, March 25, 2013

நீதிபதி ஜெ.எஸ்.வர்மா குழு அறிக்கை: அரசு மழுங்கடித்த ஆயுதம்!


    டில்லியில் மருத்துவ மாணவி ஜோதி சிங்கை கூட்டுப்பாலியல் பலாத்காரம் மற்றும் படுகொலை செய்த கொடூரம் அதிர்ச்சியையும், மத்திய அரசுக்கு அழுத்தத்தை உருவாக்கியது. அதனால் பெண்களுக்கு இழைக்கப்படுகிற குற்றங்களுக்கு எதிராக சட்டரீதியான பரிந்துரைகளை வழங்க முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜெ.எஸ்.வர்மா தலைமையில் மூவர் குழுவை மத்திய அரசு நியமித்தது. அக்குழு பொதுமக்கள், அரசுசாரா அமைப்புகள், சட்ட வல்லுநர்கள், பெண்கள் அமைப்புகளின் கருத்துக்களை கேட்டறிந்து பரிந்துரைகளை வழங்கியுள்ளது. சமநீதியையும், உரிமையையும் பெண்களுக்கு வழங்குவதில் இந்தப் பரிந்துரைகள் முதல் படிக்கல்.


பாலியல் பலாத்காரத்தோடு நடத்துகிற கொலைகள், செயலிழக்க வைத்தல், கூட்டு பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட குற்றங்களுக்கு குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் அல்லது ஆயுள் முழுவதும் கடுங்காவல் சிறைத்தண்டனை. பெண்கள் ஆடை மாற்றுதல், உடலுறவு உள்ளிட்ட அந்தரங்க செயல்களை படம்பிடிப்பது அல்லது மறைந்திருந்து கண்காணிப்பது, பெண்களை கேலி செய்தல், பெண்கள் மீது ஆசிட் வீசுதல் உள்ளிட்ட பல பாலியல் குற்றங்களுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையை வர்மா குழு பரிந்துரைத்துள்ளது. இந்தியாவில் பெண்களின் தனிப்பட்ட வாழ்வின் காட்சிகளை மொபைல் போன்களில் பதிவுசெய்து பரப்புவது அதிர்ச்சியூட்டுகிற வகையில் அதிகரித்து வருகிறது. இத்தகைய பாலியல் குற்றங்களை தடுக்க கடுமையான சட்டங்கள் அவசியம். அதோடு மொபைல் தொலைபேசிகள், நிழற்பட கருவிகளை பொறுப்பாக பயன்படுத்துவது குறித்த கல்வியும் தேவைப்படுகிறது.

இந்திய ஆண்கள் பலசாலியாக வெளிகாட்டிக்கொள்கிறார்கள். ஆனால் பெரும்பாலும் அவர்கள் மனதளவில் பெண்ணிடம் தனது காதலையும், நட்பையும் முறையாக வெளிப்படுத்த தெரியாத பலவீனமும், வன்முறையும் நிறைந்தவர்கள். நிலக்கிழாரின் மனநிலையும், சாதித் திமிரும் சேர்ந்த கலவையே இந்திய ஆண்மனம். பெண்களை தங்கள் பயன்பாட்டிற்குரிய உடமைகளாக, பொருளாக கருதுகிற ஆதிக்க மனநிலை அவர்களிடம் அதிகமாகவுள்ளது. வன்முறை அதிகாரத்தினால் பெண்களின் காதலையும், உறவையும், நட்பையும் பெறலாமென்று நம்புகிறார்கள். இதையே ஆணின் குணங்களாகவும், சிறப்பியல்பாகவும் கருதப்படுகிறது. பெண்ணின் சுதந்திரம், விருப்பம், சம்மதத்தை கேட்கபதும், பொருட்படுவதும் இல்லை. காதலிக்க மறுக்கிற அல்லது காதலிலிருந்து விடுபடுகிற பெண்கள் மீது ஆசிட் வீசுவது, கொலை செய்வது, அவதூறு பரப்புவது ஆகிய குற்றங்கள் பெருகுகின்றன.

தான் விரும்பாத எதையும் மறுக்க பெண்ணுக்கும் உரிமை உண்டு என்பதை ஆண்மனம் ஏற்க மறுக்கிறது. கணவனோடு உறவு வைத்துக்கொள்ள முடியாத அல்லது விருப்பமில்லாத நேரத்தில் மறுப்பதற்கு மனைவிக்கு முழுவுரிமையுண்டு. அத்தகைய நேரத்தில் கணவன் அத்துமீறி உறவில் ஈடுபடுவது பாலியல் பலாத்காரம். ஒருவரது சம்மதமில்லாமல் அவரது உடல் மீது செய்கிற மிகப்பெரிய வன்முறையிது. பல்வேறு மேற்குலக நாடுகளில் “பாலியல் தன்னாட்சி உரிமை” பெண்களுக்கு சட்ட ரீதியாக இதிலிருந்து முழு பாதுகாப்பளிக்கிறது. அத்துமீறுகிறவர்கள் எவராக இருந்தாலும் சட்டரீதியாக தண்டிக்கப்படுவார்கள். பெண்களின் உரிமைகளுக்கான தனிச்சட்டம் இயற்றி பெண்களுக்கு முழுமையான பாலியல் தன்னாட்சி உரிமையை உறுதிப்படுத்த வர்மா குழு முன்மொழிந்திருக்கிறது. இந்தியச் சட்டவியலில் மிக முற்போக்கான மாற்றமிது. பெண்களின் வாழ்வில் கண்ணியத்தையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்தவும் வலியுறுத்துகிறது. இந்தியாவில் அனைத்து திருமணங்களையும் நீதிபதியின் பார்வையில் பதிவு செய்தல். வரதட்சணை கோராமல், இருவரின் சுதந்திரமான முழு சம்மதத்துடன் திருமணம் நடைபெறுவதை நீதிபதி உறுதிப்படுத்த வேண்டும் போன்ற பரிந்துரைகள் பெண்களின் உரிமையை வலுப்படுத்துகின்றன.

பாலியல் பலாத்கார வழக்குகளை பதிவு செய்வதில் காவல்துறை நிலபிரபுத்துவ மனநிலையில் இருப்பதாக சாடுகிறது வர்மா குழு. காவல்த்துறையிடம் வருகிற ஒவ்வொரு பாலியல் பலாத்கார குற்றங்களையும் கண்டிப்பாக வழக்குகளாக பதிவு செய்தல். பாலியல் பலாத்கார வழக்கை பதிவு செய்ய மறுக்கிற அல்லது புலன்விசாரணையை முடக்க முயற்சிக்கிற அதிகாரிகளை தண்டித்தல் ஆகியவை காவல்துறையை செயல்பட தூண்ட தேவையான பரிந்துரைகள். பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முறையான நீதியை வழங்குவற்கு தற்போதைய மருத்துவ பரிசோதனை முறை எதிராகவுள்ளது. அதனால் பாலியல் பலாத்கார வழக்குகளுக்கு உலகின் சிறந்த வல்லுநர்கள் அறிவுறுத்துகிற முறைகளை மருத்துவ பரிசோதனைக்கு நடைமுறைப்படுத்த வலியுத்துகிறது.

ஆயுதப்படைகளின் பாலியல் வன்முறை குற்றங்களை தண்டிப்பதிலிருந்து ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டம் விலக்களிப்பதை வர்மா குழு சுட்டிக்காட்டியுள்ளது. காஷ்மீர், அஸ்ஸாம் உள்ளிட்ட மோதல் பகுதிகளில் இந்திய ஆயுதப்படைகளும், ராணுவத்தினரும் பாலியல் பலாத்காரம், பாலியல் சித்திரவதை உள்ளிட்ட பாலியல் குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர். ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டத்தை விரைவாக மீளாய்வு செய்யவும், பெண்கள் பாதுகாப்பிற்கான சிறப்பு ஆணையர்களை மோதல் பகுதிகளில் நியமிக்கவும் வர்மா குழு பரிந்துரைத்துள்ளது.  சிறார் உரிமை மற்றும் பாதுகாப்பில் நீதித்துறையின் கவனம், காவல்த்துறை சீர்திருத்தம் ஆகியவற்றையும் வலியுறுத்துகிறது. அரசியலில் குற்றவாளிகளின் ஆக்கிரமிப்பை தடுக்க வழிகளையும் குறிப்பிடுகிறது. நீதிபதி வர்மா குழு வழங்கிய பரிந்துரைகள் மிகச்சிறப்பானவை. ஆனால் அவற்றிலிருந்து சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து குற்றவியல் சட்டத்தில் சில கண்துடைப்பு திருத்தங்களை செய்தது மத்திய அரசு. நீதிபதி வர்மா குழு பரிந்துரைத்த பெண்களுக்கான அடிப்படை உரிமைகளை கண்டுகொள்ளவேயில்லை. இது ஆட்சியாளர்களின் பொறுப்பற்றதன்மையை வெளிப்படுத்துகிறது.

இதை எழுதுகிற நேரத்தில் மராட்டிய மாநிலத்தில் ஒரே குடும்பத்தில் 11 வயதுக்கு குறைவான மூன்று பெண் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட துயரம் வெளியாகியுள்ளது. குழந்தைகளை காணாத நிலையில் காவல்துறையிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கையில்லை. இந்தியாவில் 2011ல் பதிவான பாலியல் பலாத்கார வழக்குகளின் எண்ணிக்கை மட்டும் 24,206 என்கிற தேசிய குற்றவியல் ஆவண நிறுவனம். பெரும்பாலான பாலியல் பலாத்கார குற்றங்கள் பதிவாவதில்லை. நான்கு சுவர்களுக்குள் கணவனால் நிகழ்த்தப்படுகிற பாலியல் பலாத்காரமும் இவற்றில் சேர்க்கப்படவில்லை. அவற்றையும் சேர்த்தால் ஆண்டு தோறும் பல லட்சம் பெண்கள் பாலியல் சித்திரவதைக்கும், பலாத்காரத்திற்கும் ஆளாகிறார்கள். பெண்களை தெய்வங்களாக வழிபடுகிற இந்தியாவில் தான் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு மிக வேதனையான நிலையில் இருக்கிறது.

சிறுவயதிலிருந்தே ஒரு பாலினத்தவர் மற்ற பாலினத்தவர்களோடு பழகவும், புரிந்துகொள்ளவும் வாய்ப்பு வழங்காமல் தடுக்கப்படுகிறார்கள். பெண்களுக்கு தனிக்கல்வி நிலையங்கள், தனி போக்குவரத்து போன்ற தனிமைப்படுத்துகிற இறுநிலை அதிகரித்துள்ளது. பொற்றோர், ஆசிரியர்கள் உட்பட அனைவரும் பாலின அடிப்படையில் பிரிக்கிற கண்காணிப்பு வேலைகளில் ஈடுபடுகிறார்கள். தங்களது பாலினத்தையும், எதிர்பாலினத்தவரையும் புரிந்து, செயல்பட எந்த கல்வியும் இங்கில்லை. ஆரோக்கியமான நட்பை உருவாக்கவும், உறவுகளை வளர்க்கவும் வழிகாட்டுதல்கள் குழந்தைப் பருவத்திலிருந்தே தேவைப்படுகிறது. இறுக்கமான கட்டுப்பாடுகளாலும், தடைகளாலும், கண்காணிப்புகளாலும் நேர்மையான வழிகளில் உறவுகளும், நட்புகளும் உருவாக சாத்தியமில்லை. அவை எதிர்மறை விளைவுகளையே உருவாக்கும். குற்றங்களை தடுக்கவும், முறையான நீதியை உரிய நேரத்தில் வழங்கவும் சட்டரீதியான நடவடிக்கைகள் மிகவும் அவசியம். அவற்றிற்கு சமமாக குடும்பங்கள், சமூக அமைப்புகள், கல்வி நிலையங்களின் மூலம் உரிமைகள் மற்றும் உறவு பற்றிய கல்வியையும் உருவாக்குதல் அவசியம். 

---(மார்ச் 2013, தமிழ் ஆழி)---

Thursday, March 14, 2013

சவூதியின் நவீன நாட்டாமைகளும் அடிமைகளும்!

அரேபிய செல்வந்தரின் வீட்டில் வேலை செய்யச் சென்ற ரிஸானா  நஃபீக்கை சவூதி அரேபிய நீதிமன்றம் கொலை செய்தது அநீதியானது. இளம் குற்றவாளிகளுக்குக் கொடூரமான தண்டனைகளிலிருந்து விலக்களிக்கிற சர்வதேச சிறார் உரிமைச் சட்டத்தை மீறியுள்ளது சவூதி அரசு. ரிஸானா நான்கு மாத அரேபியக் குழந்தையைக் கொலை செய்ததாகக் குற்றச்சாட்டு. பதினேழு வயது ரிஸானாவிற்குக் குழந்தை வளர்ப்பு அனுபவமில்லை. குழந்தையின் இறப்புக்கான காரணங்களை பிரேத பரிசோதனை மற்றும் தடயவியல் ஆய்வுகளில் கண்டறிய முடியும். ஆனால், தவாத்மி காவல்துறையினர் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கும் தடயவியல் சோதனைக்கும் உட்படுத்தவே இல்லை. புலன்விசாரணை மற்றும் வழக்குவிசாரணையில் ரிஸானாவிற்கு மொழிபெயர்ப்பு வசதியும் செய்யப்படவில்லை. வழக்கறிஞர் ஏற்பாடு செய்யவில்லை. வழக்கு ஆவணங்களை வழங்கவில்லை. நவீன அறிவியலின் புலனாய்வு, தடயவியல், மருத்துவ சோதனைகள் எவையும் இல்லை. இந்திய கிராமங்களின் நாட்டாண்மை பஞ்சாயத்து முதியவர்களின் அடாவடித்தனம் போன்ற தீர்ப்பு இது.

சவூதி அரேபியாவில் மட்டும் 15 லட்சம் அயல்நாட்டுப் பெண்கள் வீட்டுவேலை செளிணிகிறார்கள். அதில் இலங்கைப் பெண்கள் மட்டும் 3 லட்சத்து 75 ஆயிரம் பேர். அயல்நாட்டுத் தொழிலாளர்களின் சேவையில்லாமல் போனால் சவூதி செல்வந்தர்களின் வீடுகள் வழக்கம் போல சொகுசாக இயங்கமுடியாது. ஆனாலும் சவூதிக்கு வீட்டுவேலைக்குச் செல்லுகிற பெண்கள் அரேபிய செல்வந்தர்களின் வீடுகளில் அனுபவிக்கிற கொடுமைகளும் துயரங்களும் வேதனைகளும் ஏராளம். முதலில் அவர்களது கடவுச்சீட்டு உட்பட அனைத்து ஆவணங்களும் பறிக்கப்படுகின்றன. வீடுகளுக்கு உள்ளேயே அவர்கள் முடக்கப்படுகிறார்கள். வெளியாட்களோடு தொடர்புகொள்ளவோ வெளியே செல்லவோ அனுமதிப்பதில்லை. உறங்குகிற சில மணிநேரங்கள் தவிர  ஓய்வு என்பதே இல்லை. எந்நேரமும் ஓய்வில்லாத வேலை, வேலை. முறையாக ஊதியம் கொடுப்பதில்லை.  அவர்கள் நவீன அடிமைகள். இன்னும் 50க்கும் மேற்பட்ட வீட்டுவேலை தொழிலாளர்கள் மரண தண்டனையை எதிர்நோக்கி சவூதி அரேபிய சிறைகளில் வாடுகிறார்கள். அவர்களில் எத்தியோப்பிய, இந்திய, பிலிப்பைன்ஸ், இந்தோனேசிய பெண்களும் உண்டு. சவூதி அரேபியாவின் மிக மோசமான நீதிபரிபாலனையும், விசாரணை அமைப்புகளும் தொடர்ந்து மனித உரிமை அமைப்புகளின் விமர்சனத்திற்கு உள்ளாகின்றன. கிராம நீதிமன்றங்களும் கோத்திரத்தலைவர்களின் கூட்டங்களும் சொல்பவை நீதியாகிறது. கை, கால்களை வெட்டுதல், தலை வெட்டுதல் என்று நிகழ்கால சமூகத்திற்கு சற்றும் பொருத்தமில்லாத வகையில் ஷரிஆவின் பெயரால் தண்டனைகள் வழங்கப்படுகின்றன. ஷரிஆ சட்டம் பாதிக்கப்பட்டவருக்குத் தண்டனையைக் கோரவும் மன்னிக்கவும் அதிகாரம் வழங்குகிறது. அது எவ்வகையிலும் நீதி வழங்க உதவாது. இத்தகைய சட்டங்களால் தான் ரிஸானாக்கள் பலியாடாக்கப்படுகிறார்கள்.

ஷரிஆவில் மாற்றம் கோருகிறது இன்றைய இஸ்லாமிய சமூகம்
நபிகள் வாழ்ந்த காலத்தில், அன்றைய அரேபிய சூழலில் உருவாக்கப்பட்ட சட்டத்தை இன்றைய காலத்திற்கு அப்படியே பொருத்துவது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல. மெக்காவிலிருந்து 70 தோழர்களோடு மெதீனாவிற்குச் சென்று அரசை உருவாக்கினார் நபிகள் நாயகம். அங்கே அவர் பழங்குடி மக்களை வழிமுறைப்படுத்த ஷரிஆவை நெறிப்படுத்தினார். 1440 ஆண்டுகளுக்கு முந்தைய அரேபிய சமூகத்தின் பிரச்சனைகளுக்கும் சவால்களுக்கும் ஷரிஆ பொருந்தியிருக்கலாம். அதனால் தான் காலத்திற்கும் சூழலுக்கும் ஏற்ப ஷரிஆவில் மாற்றம் செய்வது அவசியமென்கிற குரல் இஸ்லாமிய மதத்திற்குள் எழுப்பப்படுகிறது. ஆனால் நீதிபரிபாலனையிலும் தண்டனை மற்றும் கண்காணிப்பிலும் ஈடுபடுகிற ஆண்-மையவாத அடிப்படைவாதிகள் இக்குரல்களை இஸ்லாமிற்கு எதிரானதாகத் திசைதிருப்புகிறார்கள். ஆனால், மனித உரிமை கோட்பாடுகளை உள்வாங்குகிற சமூகங்களும் சட்டங்களுமே நவீன உலகில் வளர்ச்சிப் பாதையில் மற்ற சமூகங்களோடு இணையாகப் பயணிக்கமுடியும். இனியும் ரிஸானாக்களின் உயிர் வாழும் உரிமையைப் பழமைவாதமும் சட்டங்களும் கொலைசெய்ய அனுமதிக்கக்கூடாது.

(தமிழ் ஆழி, பெப்ருவரி 2013 இதழில் எழுதியது)

Sunday, January 20, 2013

“ஆஸ்திரேலியா – பல கதைகள்” தமிழ்ச்சிறுகதைப் போட்டி

ஆதிக் கதைகளும், கதைசொல்லிகளும் இந்த சமூகத்தைக் குறித்த கதைகளால் உயிர்ப்போடு வைத்திருக்கிறார்கள். “ஆஸ்திரேலியா – பல கதைகள்” என்ற தலைப்பில் தமிழ்ச்சிறுகதைப் போட்டியை ஆஸ்திரேலியா கண்டத்தில் வாழும் தமிழர்களுக்காக நடத்தப்படுகிறது. அதற்காக நண்பர் சத்தியா ராஜேந்திரன் அனுப்பியிருந்த அறிவிப்பு கீழே தரப்பட்டுள்ளது. கதைசொல்லிகள் நிறைந்த கண்டத்தில், கதை சொல்லிகளின் மொழி பேசுகிற மக்கள் நடத்துகிற இந்த படைப்பூக்க நிகழ்வு புதிய கதைகளையும், புதிய கதைசொல்லிகளையும் கண்டடைய உதவட்டும், ஆஸ்திரேலியா வாழ் நண்பர்கள், உறவினர்களோடு பகிர்ந்து கலந்துகொள்ள ஊக்கப்படுத்துங்கள். சொல்வதற்கு உங்களிடமும் கதைகள் இருக்கும். நீங்களும் கதை சொல்லிகளாகலாம்.

- திரு

கீழேயுள்ளது ஏற்பாட்டாளர்களின் அறிவிப்பு:
------------------------------------------------------------------------------

பேன்புடையீர்!

அனைவருக்கும் வணக்கம், 
நமது தாய்த்தமிழ்ப் பள்ளி, பிரிஸ்பேன் தமிழ்ச் சமூகத்தினருக்குச் சிறப்பான கல்வியை தரமாக வழங்கி வருவது நீங்கள் அனைவரும் அறிந்தததே. தமிழ்க் கல்வி கற்பிப்பது மட்டுமல்லாமல் சமூகத்தினரிடையே வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கவும், இலக்கியத்தில் நாட்டம் கொண்டோரிடையே புத்தகப் பரிமாற்றம் செய்வதற்கேதுவாகவும் தாய்த்தமிழ்ப் பள்ளி நூலகம் ஒன்றையும் நடத்திக் கொண்டுவருகிறது. 

இதன் அடுத்த நகர்வாக தமிழ்ச் சமூகத்தினரிடையே தமிழிலக்கியத்தை வளர்த்தெடுப்பதற்காகவும், அவர்தம் அனுபவம், எழுத்தாளுமை, கற்பனைத்திறனை பரந்துபட்ட வாசகர்களிடையே பகிர்ந்துகொள்ளும் பொருட்டு  “ஆஸ்திரேலியா – பல கதைகள்” என்ற தலைப்பில் தமிழ்ச்சிறுகதைப் போட்டி ஒன்றை நடத்தவிருக்கிறது. இது ஆஸ்திரேலிய கண்டத்துக்குட்பட்ட ஒரு போட்டியாகும். 
இப்போட்டியானது இரண்டு பிரிவுகளில் நடத்தப்படும். 
இளையோர் பிரிவு – 17 வயதிற்குட்பட்டோர்
பெரியோர் பிரிவு – 17 வயதிற்கு மேற்பட்டோர்
போட்டியின் விதிமுறைகள்
  1. போட்டியில் கலந்துகொள்வோர் ஆஸ்திரேலிய கண்டத்தைச் சேர்ந்த நாடுகளில் ஒன்றை வசிப்பிடமாகக் கொண்டிருக்க வேண்டும்.
  2. கதைக்களம் மற்றும் சூழல் ஸ்திரேலிய கண்டத்தை மையமாகக் கொண்டிருக்க வேண்டும்.
  3. கதைக்களன்  குடும்பம், காதல், அமானுஷ்யம், அனுபவம், மர்மம், நகைச்சுவை   என எப்படி   வேண்டுமானாலும் இருக்கலாம். உண்மைக் கதையாகவும் இருக்கலாம், புனைக்கதையாகவும் இருக்கலாம்.
  4. கதையின் அளவு  500  வார்த்தைகளுக்குக்  குறையாமலும்  1500   வார்த்தைகளுக்கு  மிகாமலும்  இருக்க வேண்டும்.
  5. ஒருவர் ஒன்றிற்கும் மேற்பட்ட கதைகளை அனுப்பலாம். ஆனால் வெவ்வேறு கதைக்களன்களில் இருக்கவேண்டும்.
  6. போட்டிக்கு வரும் சிறுகதை எந்தவொரு வடிவிலும் வேறெங்கிலும் வெளியாகியிருக்கக் கூடாது.
  7. வெற்றிபெறும் கதைகளையும் போட்டியில் பங்கெடுக்கும் கதைகளையும்  போட்டி  நடத்தும் அமைப்பு பயன்படுத்திக் கொள்ளலாம்
  8. ஒவ்வொரு பிரிவிலும் போட்டிக்கு வரும்  கதைகளின்  எண்ணிக்கையைப்   பொறுத்து  10 முதல் 20  கதைகள் வரை ஆஸ்திரேலிய  தோ்வுக் குழுவினரால்  தெரிவு  செய்யப்படும். அவை அனுபவமிக்க  எழுத்தாளர்  ஒருவருக்கு   அனுப்பப்பட்டு   அவர் மூலம் பரிசிற்குரிய கதைகள் தோ்ந்தெடுக்கப்படும். ஒவ்வொரு  பிரிவிலும்  மூன்று  பரிசுகள்  வழங்கப்படும்.
  9. போட்டியில் தெரிவு செய்யப்படாத கதைகள் எக்காரணம் கொண்டும் திருப்பியனுப்பப்பட மாட்டாது.
  10. கதைகளின் காப்புரிமை “தாய்த்தமிழ்ப் பள்ளி”க்குச் சொந்தமானது.
இப்போட்டியைப் பொறுத்தவரையில் தேர்வுக்குழுவினரின் முடிவே  இறுதியானது.

கதைகள் அனுப்புவதற்கான கடைசி நாள் சித்திரை 1 (14/04/2013)    
  
இப்போட்டியின் முடிவுகள் ஜுன் ாதம் அறிவிக்கப்பட்டு, பரிசுகள்  தாய்த்தமிழ்ப்  பள்ளியின்  ஆண்டு விழாவின் போது கொடுக்கப்படும். பரிசும், அதை தேர்வு செய்யும் நடுவரும் பின்னர் அறிவிக்கப்படும்.

 மேலும்  போட்டிக்கு வரும் கதைகளில் முத்திரைக் கதைகள்  தொகுக்கப்பட்டு   சிறுகதைத்  தொகுதி புத்தகமாக அச்சிடப்பட்டு வெளியிடப்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. இதன்   மூலம்  கதாசிரியர்களின்  திறன்   ஊரறியச்  செய்யப்படும். கதைகளை PDF கோப்பு வடிவில்      தாய்த்தமிழ்ப் பள்ளியின்  மின்னஞ்சல் முகவரியான  thaaitamilschool@gmail.com  க்கு  அனுப்பவும்.  கதைகளை   அச்சுப்பிரதியாக ( Hard copy)  அனுப்ப  விரும்புவோர்  ள்ளியின்  தபால் பெட்டிக்கு அனுப்பலாம்.

தாய்த்தமிழ்ப் பள்ளி த.பெ முகவரி
 Thaai Tamil School Queensland
 PO Box 6212 Fairfield Gardens, QLD 4103

மேலும் விவரங்களுக்கு தாய்த்தமிழ்ப் பள்ளியின் இணையதளத்தின் வழியாக தொடர்புகொள்ளலாம்.www.thaaitamilschool.com
அல்லது கீழ் உள்ள கைத்தொலைப்பேசி எண் வழியாகவும் தொடர்பு கொள்ளலாம்.
பார்த்தீபன்  0432276977
முகுந்த்ராஜ்   0423730122

Friday, January 04, 2013

“தமிழ் ஆழி” இதழ் அறிமுக விமர்சனம்

 
“தமிழ் ஆழி” மாதமொருமுறை செய்தி இதழ் இம்மாதம் வெளியாகி இன்னும் சில தினங்களில் கடைகளில் விற்பனைக்கு வருகிறது.

தமிழில் வார, மாத இதழ்கள் பல உள்ளன. அப்புறம் எதற்கு ஒரு புது இதழ் என்கிறீர்களா? புலனாய்வு அரசியல் வார இதழ்கள், மொழிபெயர்ப்பு இதழ்கள் என தமிழில் பல வகை மாத, வார இதழ்கள் வெளியாகின்றன என்பது உண்மை தான். தமிழில் திறமையான செய்தியாளர்களும், கட்டுரையாளர்களும் நிறைந்துள்ளனர். ஆனாலும் ஆதிக்கசார்பு, அதிகார வர்க்க நிழலில் பதுங்காத இதழை காண்பது அரிது. ஊடக அறத்துடன் முழுமையான செய்திகளை வழங்குகிற இதழ் இல்லை. “தமிழ் ஆழி” மாதமொருமுறை செய்தி இதழ் இக்குறையை போக்க வந்திருக்கிறது.

அரசியல், தொழில்நுட்பம், விளையாட்டு, வணிகம், நிகழ்வுகள், கொள்கைகள் குறித்து உள்ளூர் முதல் உலக செய்திகளை நேர்மையாகவும், ஆழமாகவும் தமிழில் தருகிற இதழை தேடுகிறீர்களா? புதிதாக வெளிவந்துள்ள “தமிழ் ஆழி” மாதமொருமுறை செய்தி இதழை வாசித்துப் பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கலாம்.

தமிழ் ஆழி முதல் இதழ் இரண்டு நாட்களுக்கு முன்னர் மின்வடிவில் எனக்கு வாசிக்க கிடைத்தது. முதல் இதழை முதலில் வாசித்த மகிழ்ச்சியுடன், தரமான இதழை வாசித்த நிறைவு எனக்கு. தமிழ் ஆழியின் ஆசிரியர் செந்தில்நாதன் தமிழக சமூக, அரசியல் களத்தில் மிக நீண்ட கால ஈடுபாடுடையவர். தமிழ் மக்களின் அரசியல், சமூகம், பொருளியல் ஆகிய பல தளங்களில் உள்ளார்ந்த நேர்மையான அக்கறையுடைவர். நீண்டகால ஊடக அனுபவமுடையவர். அவரது வழிகாட்டுதலில் தமிழ் ஆழி ஊடக அறத்தோடும், நேர்மையோடும் வளருமென்ற நம்பிக்கை முதல் இதழை வாசிக்கிற போது உருவாகிறது.

உள்ளடக்கம், வடிவமைப்பு, செய்திகள் மற்றும் கட்டுரைகளின் தரத்தை தமிழ் ஆழியின் முதல் இதழிலேயே காணமுடிகிறது. வடிவமைப்பில் உலக இதழ்களை ஒத்திருக்கிறது.

தமிழ் ஆழியின் முதல் இதழ் சுப. உதயகுமார் அவர்களை ஆண்டு நாயகராக தேர்ந்தெடுத்து மக்களின் தலைவராக அவரை அடையாளப்படுத்தியிருக்கிறது. எவ்வகையிலும் அது மிகையான தேர்வில்லை என்பது தமிழ் ஆழிக்கு சுப. உதயகுமார் வழங்கியுள்ள நேர்காணலில் நீங்கள் உணர முடியும். அவரது விசாலமான பார்வை, மக்கள் மீதான ஆழமான நம்பிக்கை, சமூக உரிமைகள், சனநாயகம் குறித்து தன்னலமில்லாத அக்கறையை அவரது நேர்காணல் பதிவு செய்திருக்கிறது. தமிழ் மக்களுக்கான அரசியலை அடையாளப்படுத்துகிறது. இந்த நேர்காணலை நிச்சயம் தவறாமல் வாசியுங்கள்.

இழந்து போன செல்வாக்கை எப்படியாவது தேர்தலுக்கு முன்னர் திரட்டி பதவி நாற்காலியை பிடிக்க வேண்டுமென்பதற்காக ஆதிக்கசாதி, இடைநிலை சாதி அமைப்புகளை கூட்டணி சேர்த்து சாதிவெறியை தூண்டி “காதல்” நாடக அரசியல் நடத்துகிற ராமதாசின் முகத்தை பேரா. தீரனின் நேர்காணல் பதிவு செய்துள்ளது. இந்த சாதிவெறி அரசியலின் பரிணாமத்தை ஆழமாக புரிந்துகொள்ள செய்கிற வகையில் சிந்தனையாளரும், விமர்சகருமான ஸ்டாலின் ராஜாங்கத்தின் கட்டுரை பல கேள்விகளை, குறிப்பாக திராவிட இயக்கத்தினருக்கு எழுப்புகிறது.

குஜராத் தேர்தல் வெற்றியை வைத்து மோடி டில்லியின் மகுடத்தை சூட்டுவாரென்று ஊடகங்கள் செய்தி பரப்புகிற சூழலில், விசயம் அவ்வளவு எளிதா என்கிற கேள்வி கே.கே.சிங் எழுதியுள்ள கட்டுரையில் உள்ளது. டில்லி பாலியல் பலாத்காரக் கொலையை தொடர்ந்து எழுந்த எழுச்சியை குறித்த கட்டுரையுடன், பாலியல் வன்முறை குறித்து ஆழமான கேள்விகளை கவிஞர் மாலதி மைத்ரியின் பதிவும் எழுப்புகின்றன. அணுக்கழிவுகள் அரசியலை ஐ.ஐ.டி மாணவர் பிரதீப் குமாரின் பத்தி நறுக்கென்று அம்பலப்படுத்துகிறது.

கடந்த நவம்பரில் பாலஸ்தீன அரசிற்கு ஐ.நாவில் உறுப்பினரல்லாத பார்வையாளர் இருக்கை கிடைத்துள்ளது உலகமெங்கும் பாலஸ்தீன மக்களின் விடுதலையை கொண்டாடுகிறவர்களுக்கு மகிழ்ச்சியை தந்தது. இஸ்ரேலுக்கும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் எரிச்சலையும் ஏற்படுத்தியது. கனவு தேசம் அமைய பாலஸ்தீன மக்கள் எதிர்கொள்ளுகிற சவால்களை தாவூத் குத்தாப் என்கிற பாலஸ்தீனிய பத்திரிக்கையாளர் கட்டுரையில் பதிவு செய்துள்ளார். அவசியம் வாசிக்க வேண்டிய கட்டுரை.

அமெரிக்காவின் அரசு செயலாளராக ஜான் கெர்ரி வருவாரானால் ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ள இருக்கிற சவால் குறித்த கிர்ஸன் பேட்மேனின் கட்டுரை, வால்மார்ட் போன்ற பெரிய பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களை சில்லறை வர்த்தகர்கள் எதிர்கொள்ள வழிமுறைகள் குறித்து மா. ஃபா.கே பாண்டியராஜனின் நேர்காணல், சோம. வள்ளியப்பனின் பொருளாதார அலசல், வேகமாக வளருகிற தொழில்நுட்ப சாதனங்கள் பற்றிய என்.சொக்கனின் கட்டுரை, தொழில் வணிகம் பகுதியில் கிராமத்து குளிர்சாதனப்பெட்டி, புகையில்லா விறகடுப்பு, சினிமா பகுதி, பிரபாகரன், உமா மகேஸ்வரன் மோதல் பற்றி வழக்கறிஞர் எஸ்.ராதாகிருஷ்ணனின் நினைவலையிலிருந்து, ஒருநாள் போட்டியிலிருந்து சச்சினின் விலகலை அலசுகிற அரவிந்தனின் கட்டுரை, விஷ்ணுபுரம் சரவணனின் புத்தக விமர்சனம், தமிழ் ஸ்டுடியோ அருணின் நீர்ப்பறவை திரைப்பட விமர்சனம் என தமிழ் ஆழியின் உள்ளடக்கம் பரந்துபட்டது.

இருபது ரூபாய் கொடுத்து இதழை வாங்குகிற வாசகர்களை ஏமாற்றாத தரமும், உள்ளடக்கமும் கொண்டுள்ளது தமிழ் ஆழி.
 

நிறைகள்:

  • உள்ளூர், இந்திய, உலக நிகழ்வுகளை, கொள்கைகளை, செய்திகளை ஆழமாக, நேர்மையாக பதிவு செய்துள்ளது.
  • பல்வேறு வகைப்பட்ட பிரிவுகளில் துறைசார்ந்த பிரச்சனைகளையும், கொள்கைகளையும் அலசுகிற உள்ளடக்கம்.
  • வடிவமைப்பும், அட்டைப்படமும் நேர்த்தியான தரம்.
  • மேக்ஸ்டர் வழியாக மின்வடிவிலும் வாசிக்கலாம்.

எதிர்பார்ப்பு: ஒரே இதழில் அனைத்தையும் எதிர்பார்க்க இயலாது. ஆனாலும் எதிர்காலத்தில் தமிழ் ஆழியில் எதிர்பார்ப்பவை…

  • நலவாழ்வு மற்றும் மருத்துவத்திற்கான பகுதி,
  • அரோக்கியமான உணவு வகைகள் பகுதி
  • அனைத்து வகை விளையாட்டுகளுக்கும் செய்தியில் இடம்.

சனநாயகமும், மக்களின் உரிமைகளும், இயற்கை வளங்களும் அரசாலும், கார்ப்பரேட் நிறுவனங்களாலும் முடக்கப்பட்டு அழிக்கப்படுகிற சூழலை நாம் இன்றைக்கு சந்திக்கிறோம். சுயநலமும், நுகர்வு எந்திரத்தன்மையும் சேர்ந்து நமது மனங்களை ஒவ்வொரு நொடிப்பொழுதும் செல்லரிக்கிற இக்கட்டான நிலையில் வாழுகிறோம். நம் வருங்கால வாழ்க்கைப் பாதுகாப்பு, பொருளாதாரம், மொழி, பண்பாடு, இயற்கை ஆகியவற்றின் மீதான தாக்குதல்களால் கவலை தருகிற கேள்விக்குறிகள் எழுகின்றன. அறமற்ற ஊடகங்கள் கட்டமைக்கிற செய்திகளால் நாம் சிலந்தி வலைக்குள் சிக்கிய நுகர்வு புழுக்களாக்கப்படுகிறோம். பேரச்சமும், இருளும் கண்ணுக்கெதிரே அச்சுறுத்துகிற காலப்பகுதியில் நெஞ்சில் நேர்மையுடன், வஞ்சகமில்லா அறமுடன் செயல்படும் ஊடகங்கள் தமிழ் மக்களுக்கு அவசியமாகின்றன.

தரமான, நேர்மையான செய்திகளை தருகிற இதழ்களை ஆதரித்து, வளர்த்தெடுப்பது நமது சமூக, அரசியல், பொருளாதார உரிமைகளை பாதுகாக்கவும், வென்றேடுக்கவும் அவசியமானது. உள்ளூர் முதல் உலகம் வரை கச்சிதமாக செய்திகளை ஆழமாக, நேர்மையாக பதிவு செய்துள்ளது தமிழ் ஆழி!

நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும். தமிழ் ஆழியை வாங்கி வாசியுங்கள். நண்பர்களுக்கும் பரிந்துரையுங்கள்.