Wednesday, August 24, 2005

வேலியே பயிரை மேயும் கொடுமை!

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு! இது தான் காவல்துறையின் அடிபடைப் பண்பு என சின்ன வயதில் பலமுறை நினைத்துப் பார்த்து என்னை காக்கி உடைக்குள் திணித்து கனவுகள் கண்டிருக்கிறேன்! தமிழ்படங்களில் வரும் வில்லனை காவல்துறை அதிகாரி விரட்டி பிடிப்பது போல நானும் பிடித்திருக்கிறேன் பல சமூகவிரோதிகளை... எல்லாம் கனவில் மட்டும்தான்! சமீபத்தில் தெற்கு ஆஸ்திரேலிய காவலர் பயிற்சி மையத்தில் சில நாட்கள் தங்கியிருக்க வாய்ப்பு கிடைத்தது! அப்போது அங்கு பழகிய காவலர்களுக்கும், நான் தமிழ்நாட்டில் சந்தித்த காவலர்களுக்கும் பணியில் இருக்கும் வேறுபாட்டை கண்டதன் விளைவு என் நினைவலைகள் எனது அனுபவத்தை நோக்கி சென்றது!

எல்லோரையும் போல எனக்கும் சிறுவயதில் காக்கி உடைகளை பார்த்தாலே பயம். குடும்பத்தில் வேறு யாருமே (சில போராட்டங்களில் சிறைபட்டது தவிர) மழைக்காக கூட காவல்நிலையம் பக்கம் போனதில்லை. வளரும் போது நான் சந்தித்த அனுபவங்கள் என்னையும் காவல்நிலையத்திற்கு செல்லவைத்தது. சில அனுபவங்கள் நல்ல மனிதர்களை காக்கி சட்டைக்குள் எனக்கு அடையாளம் காட்டியது, பல அனுபவங்கள் காக்கி உடைக்குள் நெளிந்து புரண்டு வாழ்கிறதுகளை காட்டியது!

1. எனக்கு சுமார் 16 வயதிருக்கும் போது அது ஒரு தேர்தல் நேரம். வாடகைக்கு எடுத்த மிதிவண்டியை (அதுதாங்க தமிழில் சைக்கிள்) நிறுத்தியபடி நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும் வேளை, வெள்ளை வண்டி (காவல்துறை வாகனம் தான்) வந்து என்னருகில் நிற்கவும் எல்லோரும் தலைதெறிக்க ஓட்டமெடுக்க.... நடக்கபோவதை சரியாக உணராமல் நானும் வண்டியை விட்டு கீழே இறங்கி கொஞ்சம் நகர்ந்து நின்றேன்! வண்டியை விட்டு வந்த "கடமை தவறாத" அதிகாரி சைக்கிளில் கைத்தடியால் அடித்து து}க்கி வீசி காற்றையும் பிடுங்கி விட்டார். அதை பார்த்துகொண்டே பொருமிய கடைகார நண்பரிடம் வாங்கி கட்டிக்கொண்டது மட்டுமல்ல, பட்ட கடனை அடைக்க பல மாதங்கள் ஆனது எனக்கு! இன்றுவரை நான் செய்த சட்டம் ஒழுங்கு குற்றம் பற்றி சிறிதும் விளங்கவில்லை!

2. முதல் அனுபவத்தால் நடுங்கியவாறு அணுஆலை எதிர்ப்புப்போராட்டம் நடத்த அனுமதி கேட்டு மாவட்ட தலைமை காவல்நிலைய அதிகாரியை சந்திக்கபோனேன். சிகரெட் புகைக்கும், அணு-உலை கதிர்வீச்சுக்கும் தொடர்புபடுத்தி "அணு-உலை எதிர்ப்பு போராட்டத்தை" கொச்சைபடுத்திய அந்த "அறிவியல் அனுபவசாலியை" காவல்துறை அதிகாரியாக கண்ட எனக்கு சளைக்காமல் பதில் சொல்லி அனுமதி வாங்கிய போதுதான் புரிந்தது காவல்துறையின் இன்னொரு குணம்!

3. வேலையும் தேடிக்கொண்டே சமூகபணியில் இருந்தவேளை 1993ம் ஆண்டு. மூன்று தலைமுறையாக 10 குடும்பத்தினருக்கு கிடைக்காத பாதை, மின்சாரம் போன்ற வசதிகளுக்காக செயலில் இறங்கிய எனது கிராமத்திற்கு முன்னால் நான். எதிர்ப்பாளர்கள், அடியாட்கள் தொல்லை, அரசியல் நெருக்கடி, உயிருக்கு அச்சுறுத்தல் என அனைத்தையும் மீறி அமைதியான பாதையில் சென்றவேளை ஒரு அசம்பாவிதம். எங்கள் பகுதியிலிருந்து சில இளைஞர்கள் (சம்பவம் நடந்த நேரம் நான் காவல்துறை அதிகாரியின் முன் பேச்சுவார்த்தையில் இருந்தேன்) எதிரணியில் ஒருவரை தாக்கியதன் விளைவு என்னையும் சில முதியவர்களையும் காவல்நிலையத்தில் வைத்து தலைமைக்காவலர் பேசிய பேச்சின் நச்சுத்தன்மையுன், வக்கிரமும் இன்னும் என் நினைவில். அந்த காவல்நிலைய அதிகாரி கடமை தவறாதவர். அப்போதைய ஜெயலலிதா அரசின் வனத்துறை அமைச்சர் கொடுத்த நெருக்கடிகளையும் சந்தித்து நேர்மையாக இருந்ததால், காவல்துறையின் அடியும், பொய்வழக்குமில்லாமல் தப்பித்தேன். இப்போது பெரியசாலையே கிடைக்கபெற்று வண்டிகள் வந்து போவதையும், தெருவிளக்கு எரிவதையும் பார்க்கையில் அந்த வயது அனுபவம் இனிதாக வந்து என்னை தொட்டுச்செல்லும்.

4. தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த ஒரு பிரச்சனையில் எனது தவறான முடிவு காரணமாக சம்பந்தபட்டவர்களோடு தீர்க்கமுடியாமல் அனுபவித்த கொடுமையும் அதன் தொடராக நான் எடுத்த முடிவுகளும் பரிதாபமானது. அது நான் வாழ்க்கையை தொலைத்த நிகழ்வு! சம்பந்தபட்டவர்கள் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க இந்தமுறை குற்றவாளியாக காவல்நிலையத்தில் 24 மணிநேரம் அனைத்து உளவியல் சித்திரவதைக்கும் ஆளாக்கப்பட்டேன். ஆனால் எனது மனதுக்கு மட்டும் தெரியும் நான் குற்றவாளியல்ல! என்னால் மற்றவர்களுக்கு வந்த பாதிப்பை போக்க எடுத்தமுயற்சியில் நான் பலியிடப்பட்டேன். காவல்நிலையத்தில் சிறை வைத்து விட்டு பொய்வழக்கு போடுவேன் என சொல்லி பேரம்பேசி ஒரு பெரும்தொகையை எனது விருப்பம் இல்லாமலே, சிலரிடமிருந்து இழப்பீட்டு தொகை என வாங்கி பங்கு போட்ட அந்த "கண்ணியம் மிக்க காவல்துறை அதிகாரி" திரு.ஜெயபிரகாஷ் அவர்களை இன்றும் மனதில் தேடுகிறேன். அந்த பெரும்தொகையை நான் இழக்க நேர்ந்ததால் அல்ல, மனதை சித்திரவதை செய்து பொய்யான காரணம் சொல்லி அபகரித்ததால். அன்று அந்த காவல்துறை அதிகாரிக்கு நான் சொன்னது "நல்லவர்களும், நேர்மையும் வரவேண்டிய இடம் இதுவல்ல".

காவலர்களுக்கு மட்டும் இதயம் இருக்கவேண்டிய இடத்தில் இரும்பா இருக்கிறது? இந்தியாவில் காவல்துறையில் அதிகாரிகளின் கட்டளைக்கு கீழ்படிதல் என்ற பெயரில் அடிமை கூட்டத்தை வளர்க்கும் முறை தான் இருக்கிறது. அதிகாரி முதல் அமைச்சர் வரை வரும் போது காவலுக்கு பலமணி நேரம் அடிமைகளை விட கேவலமாக காத்திருப்பதும், எடுபிடி வேலை பார்ப்பதும் தான் தலையாய கடமை. ஒரு ஆட்சி மாறி மற்றொரு ஆட்சி வரும்போது காவல்துறையும் கட்சி மாறிவிடுகிறது. மனிதனை மனிதனாக மதிக்கும் பழக்கமும், மனித உரிமைகளும் மதிக்கப்படுவதில்லை. காவல் நிலையத்திற்கு செல்பவர்கள் குற்றாவாளி தானா என அறியும் முன்னரே கொடுமையான அடக்குமுறைகளும், நெருக்கடிகளை கொடுப்பதும் வாடிக்கை. பணம், பதவி எங்கு இருக்கிறதோ அந்த பக்கம் சார்பாக சாய்ந்து கிடக்கிறது காவல்நிலையங்கள். காவல் நிலைய பாலியல் கொடுமைகள், கொலைகள், பொய்வழக்குகள் என காவல்துறையின் இதயமும், கரங்களும் துற்நாற்றம் வீசுகிறது. பதவியில் இருப்பவர்களும், செல்வாக்கு மிக்கவர்களும் கொடும்குற்றச்செயல்கள் புரிந்தாலும் அதிக பாதுகாப்புடன் வலம் வரலாம் என்ற நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறது.

நீதிக்கு துணையாக இருந்து அநீதியை அழித்தொழிக்க வேண்டிய காவல்துறை, அடக்குமுறையாளர்களின் வீட்டை காவல் காக்கும் விசுவாசம் மிக்க ஊழியனாக. கடந்த சில மாதங்களில் மட்டும் தமிழகத்தின் காவலர் பற்றிய பத்திரிக்கை செய்திகள் அச்சத்தை அதிகமாக்குகிறது!

போலி முத்திரைத்தாள் அச்சடித்த கும்பலுக்கு உதவியாக இருந்தது கன்ணியம் மிக்க காவல்த்துறை அதிகாரி ஒருவர், இன்று அவர் சிறையில். ஒரு பெண்ணை துன்பத்தின் எல்லைக்கே துரத்தி துரத்தி சிதைத்த குற்றத்தில் 23க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள்! கடந்த பல வருடங்களில் பாலியல் வன்கொடுமை, கொலை, கொள்ளை கும்பலுடன் தொடர்பு என குற்றச்செயலில் காவல்துறையினரின் பங்கு அதிகமாகி வருகிறது!

நீதிக்காக காவல் நிலையங்களிலும், சிறைக்கொட்டடிகளிலும் அடைந்து கிடக்கும் அபலைகளுக்கு நீதி எப்போது கிடைக்குமோ? ஆங்கிலேயர்கள் ஆட்சியில் வதைக்கப்பட்டதும், கொல்லப்பட்டதும் கொடுமை என்ற எங்கள் தலைவர்கள் ஆட்சியில் நடக்கும் அடக்குமுறைக்கு என்ன பெயரோ? காவல்துறையில் களையெடுப்பதும், கவலர்களுக்கு மனிதநேயம் பற்றி புரிய வைப்பதும் நமது சமூக கடமை! காவல் நிலையங்களை குற்றங்களுக்கான காரணங்களை கழைகிற குற்றச்செயல்களின் தடுப்பு மையங்களாக மாற்றுவோம். மக்களிடம் பண்பாக, நாகரீகமாக நடந்துகொள்ளும் தன்மை காவலர்களுக்கு வழங்கப்படவேண்டும். இல்லையேல் காவலர் குடியிருக்கும் தெருவில் மனித உரிமையும், மனிதநேயமும் முழுதாக துகிலுரியப்படும்! வருகிறேன் என் நினைவுகளோடு...

நினைவுகளுடன்...
திரு