Saturday, September 03, 2005

ஒரு நதியின் கதை

ஜூலை மாதம் G8 என்று சொல்லப்படுகிற மிகப்பெரிய பொருளாதார ஆதிக்க நாடுகளின் கூட்டம் பிரித்தானியா நாட்டில் நடந்து வழக்கமான அறிக்கைகளுடனும், விருந்துகளுடனும் முடிந்திருக்கிறது. சுற்றுப்புறசூழலைப் பற்றிய எந்த பொறுப்பும், நடவடிக்கைகளும் இல்லாமல் கலைந்திருக்கிற இந்த உலகமகாசக்தி(?!) மிக்க கூட்டம் என் மனதில் நினைவுகளுக்கு இழுத்து செல்கிறது.

அழகிய தென்னை மரக்கீற்றுகள் சலசலக்க, நெற்கதிற்கள் வெட்கத்தால் தலை சாய்ந்து ஒரப்பார்வையில் காதல் தென்றலை வருடும் அந்த வசந்தகாலம். வயலோடை, குளக்கரை, ஆற்றுநீரின் சலசலப்பு, மென்மையாய் மேனியை வருடும் தென்றல் காற்று. இயற்கை வழங்கிய இனிய கொடைகள். இதை சிறு வயதில் அனுபவித்தது இன்னும் மனதில்.

அப்போதெல்லாம் அம்மாவின் முந்தானையை பிடித்துகொண்டு ஆற்றங்கரைக்கு குளிக்கபோவது ஒரு சொல்லயியலாத இனிய சுகம். அந்த பரளியாற்றங்கரையின் மணற்பரப்பிய இரு கரைகளும், ஒரு கரையிலிருந்து மறுகரைக்கு பயணம் செய்யும் அழகிய கறுப்பு நிற தோணி, கரையோரமாய் சுவர்கட்டிய கைதை, காட்டுகரும்பு, கொன்றை, புங்கு மரங்கள். தோணிகளில் வெற்றிலை சிவக்கும் சிரித்த முகத்துடன் பயணம் செய்த உறவு சொல்லும் கருப்பு முகங்கள். பொன்னிற மணற்பரப்பிய கரையோரம் வண்ணங்களில் தாவணி போட்ட குமரிகள் குழிபறித்து மண்குடங்களில் தண்ணீர் சேமிக்கும் காட்சிகள். துணிகளை துவைக்கும் இசையும், துவைத்த துணிகளை காய்ந்த மணற்பரப்பில் அழகு ஓவியமாய் பரப்பிய விதமும், துரத்தியபடி ஓடி தண்ணீரில் குதித்து விளையாடும் சிறுவர்கள் என கண்ணில் விரிகிற அழகு காட்சிகள். நம் அனைவருக்கும் இப்படி விதவிதமாய் கடந்தகால அனுபவ நினைவுகள் இருக்கும்.

பல ஆண்டுகளாய் வாழ்க்கை நீரோட்டத்தில் பயணம் செய்ததில் இந்த இயற்கை இன்பங்கள் மனதில் மங்கிப்போனது. பல வருட இடைவெளிக்கு பின்னர் அந்த அழகிய நினைவுகளை புதுப்பிக்க ஆற்றோரமாய் பயணம் செய்தவேளை திடுக்கிட்டு நின்றேன். மிக ஆழமாய் பெயற்கப்பட்ட கரையோரங்கள், பயமுறுத்தும் ஆழத்தை விழுங்கிய சுழல்களுடன் ஓடும் நதி. மனிதர்கள் நடமட்டமோ, குளிக்க இடமோ, மணற்பரப்போ இல்லாத களையிழந்த நதி. கவலை தோய்ந்த கண்களுடன் மீண்டும் பார்க்கையில் தோணிகளில் நதிமங்கையின் மணற்கொங்கைகளை அள்ளுகிற கொள்ளைக்கூட்டம். இயற்கையை இப்படி கூறுகட்டி கொள்ளையடித்து சிதைக்க அரசு அனுமதி வருடம் தோறும் புதுப்பிக்கபடுகிறது. கொள்ளைபணம் காவல் நிலையம் முதல் அரசு பொறுப்பாளர்கள் வரை போய் சேர்கிறது. ஆனால் இந்த நதி எங்கே போகிறது? கடலைத்தேடியா? இல்லை அழிவை நோக்கி. நதியோரமாய் இருக்கிற கிணறுகளில் கூட தண்ணீர் இல்லை. விவசாய நிலங்கள் காய்ந்த தரிசுகளாய், மழைக்காலங்களில் பாதுகாப்பில்லா கரையோர நிலப்பரப்புகள் என அழிவுகளின் பட்டியல் நீழ்கிறது. இது ஒரு நதியின் கதை.

கடந்த நூற்றாண்டில் பூமியில் வெப்பம் அதிகரித்திருக்கிறது என்பதை ஆராய்ச்சிகள் நிரூபிக்கின்றன. கடந்த பத்தாண்டுகளில் வெப்பத்தின் அளவு மிகவும் அதிகரித்திருக்கிறது. இதற்கு காரணம் என்ன? வீட்டு சமையலறை முதல் அன்றாடம் வெளியில் வீசும் குப்பை வரை, பெரிய தொழிற்சாலை முதல் தினமும் பயன்படுத்துகிற வாகனங்கள் வரை உற்பத்தி செய்யும் கரியமில வாயு. கரியமில வாயு அதிகரித்தால் உலகின் வெப்பம் அதிகரிக்கும். உலக வெப்பத்தின் விளைவு மலைமுகடுகளில் உள்ள பனிப்பாளங்கள் உருக ஆரம்பித்து விட்டது. கடந்த 40 வருடங்களின் ஆர்டிக் பெருங்கடலின் பனிப்பாளங்களின் 40% தடிமன் குறைந்துள்ளது. கடந்த 3000 ஆண்டுகளை விட கடந்த 100 ஆண்டுகளில் கடலின் அளவு 3 மடங்கு உயர்ந்திருக்கிறது.

விலங்குகள், மரங்களின் குணங்களில் மாற்றங்கள் தென்படுகிறது. வெப்பக்காற்று, வறட்சி, புயல், வெள்ளப்பெருக்கம் என அழிவுகள் அதிகரிக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் வெப்பகால நோய்கள் வேகமாக பரவும். பல நாடுகள் கடலுக்கடியில் மூழ்கிவிடும். நமது நகரங்கள், தோட்டங்கள், கடற்கரைகள் என அழகாக ரசித்து அனுபவித்த இடங்களையெல்லாம் கடல் விழுங்கும். ஒரு சுனாமி வந்து விழுங்கிய மனிதர்களின் வாழ்வே பதற்றமடைய வைக்கிறது.

இதற்கு தீர்வு தான் என்ன? இதை மனித சமுதாயம் எதிர்கொள்ள முடியுமா? வல்லரசுகள் இயற்கை அழிவில் தப்புமா? வட அமெரிக்காவில் காதரினா என்ற சூறாவளிப்புயல் தந்த அழிவை பார்கையில், பதற்றம் மட்டுமே மனதில்.

அடுத்த இணைப்பில்...வருகிறேன்...

நினைவுகளுடன்
திரு