உலக இரட்சகன் அமெரிக்கா!
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் வான்வெளி தாக்குதலில் குழந்தைகள் உட்பட 18 அப்பாவி மக்களை கொன்றிருக்கிறது அமெரிக்கா. உலகத்தையே தீவிரவாதத்தின் பிடியிலிருந்து இரட்சிக்கப் போவதாக சின்னவர் (!) ஜார்ஜ் புஸ் கொக்கரித்து கிழம்பியது முதல் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை பல்லாயிரம். இந்த கொலைப்பட்டியல் ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என நீளுகிறது.
நியூயார்க் நகரில் இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்ட பின்னர் அமெரிக்காவின் பார்வை ஆசியாவின் பக்கம் திரும்பியது. குறிப்பாக இஸ்லாமிய நாடுகளை குறிவைத்து. ஜனநாயகத்தை (அது என்ன வெங்காயமோ?) உருவாக்க போகிறோம் என்ற போர்வையில் தனது இராணுவ கொடுக்குகளை திசைகளெல்லாம் பரப்பியது. உலகத்தின் சமாதானம் அமெரிக்கா கதையளக்கிற ஜனநாயகத்தின் சட்டைப்பையில் இருப்பது போல நாமும் நம்பினோம். அது சரி, அமெரிக்கா பெயரளவிலாவது ஜனநாயகம் உள்ள நாடு இல்லையா? அப்போ அமெரிக்கா ஏன் மற்ற நாடுகள் விவகாரத்தில் தலையிடணும்? ஜனநாயகம் என்பது "மக்களால், மக்களுக்காக" என்பது தானா? இல்லை அமெரிக்காவால் உலகத்துக்காக என்பதா? தனது வீட்டு கொல்லைப் புறத்தில் கறுப்பின மக்களின் உயிரை, உணர்வை அடக்கி அடிமையாக வைத்திருக்கும் அமெரிக்கா என்கிற அடக்குமுறை தேசமா விடுதலை, சமாதானம், சுதந்திரம் பற்றி பேசுவது. அதுவும் மனித உரிமை, சட்டம், நாடுகளின் சுதந்திரம் இவற்றை மதிக்காத "ஜார்ஜ் புஸ்கள்" எல்லாம் இப்படி புறப்பட்டால்?
ஈராக்கில் சதாம் உசேன் என்கிற அடக்குமுறை ஆட்சியாளனால் மடிந்த மக்களை விட, அமெரிக்க பொருளாதார தடைகளில் மடிந்த குழந்தைகள், கற்பிணி பெண்கள், அபலைகள் எண்ணிக்கையில் அதிகம். சதாமுக்கு எதிரான யுத்தத்தில் ஐ.நா சபை தடை செய்த 'டிப்ளீட்டட் யுரேனியம்' கலந்த ஆயுதங்களை ஈராக் முழுவதும் பயன்படுத்தியது அமெரிக்கா. இது காற்று, குடிநீர், நிலம் அனைத்தையும் கதிர்வீச்சில் பரப்பியது. அதன் விளைவாக எண்ணற்ற சிறு குழந்தைகள் லூகீமியா என்கிற இரத்தப்புற்று நோயால் அவதியுறுகின்றனர்.
வியெட்னாம் யுத்தத்திற்கு பிறகு தனது படைகள் கொல்லுகிற மக்களின் எண்ணிக்கைகளை அமெரிக்கா வெளியிடுவதில்லை. தனது இரத்தக்கறை படிந்த கரங்களை உறைக்குள் ஒளித்து வைக்கிற அமெரிக்க யுக்திகளுள் இதுவும் ஒன்று. நடுநிலையளர்கள் கணக்கில் 50,000க்கும் மேற்பட்ட ஈராக்கியர்களை யுத்தம் பலிவாங்கியது. ஈராக்கில் பல்லாயிரகணக்கான சிறுமழலைகளின் உயிரை, உறவினர்களை, தாய் தந்தையரை பலிவாங்கி அனாதையாக்கியது தான் அமெரிக்காவிற்கு ஜனநாயகம் என்றால், இந்த வெங்காயம் (?) இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? இல்லாத ஆயுதத்திற்காக ஈராக் மக்களின் மன அமைதியை, வாழ்வை, உயிரை பலிவாங்கிய அமெரிக்காவை எந்த சர்வதேச ஒழுங்குமுறை தண்டிக்கும்?
அமெரிக்கா என்ற அடக்குமுறை தேசத்தின் இரத்தகறை படிந்த வரலாற்றில் இது ஒன்றும் புதிதல்ல. எல்சால்வடோர், பொலிவியா, கொலம்பியா, சிலி, பிஜி என பல லத்தீன் அமெரிக்க நாடுகளில் அமெரிக்க தேசமும் அதன் ராணுவ, அரசியல் தலைமையும் நடத்திய படுகொலைகள் எண்ணிலடங்காதவை.
ஆப்பிரிக்க நாடுகளின் கனிம வளங்களை கொள்ளையக்க வசதியாக பொம்மை அரசுகளை உருவாக்கியதும், சர்வாதிகாரத்தை உருவாக்கி உரமூட்டி வளர்த்த ரத்தசகதி நிறைந்த வரலாறும் ஏராளம். உலகமே இன்று அமெரிக்க தேசத்தின் கொலைக்களமாக மாறியிருக்கிறது.
3 பின்னூட்டங்கள்:
நல்லதொரு பதிவுக்கு நன்றி திரு.. என்னமோ உலகத்தையே காப்பதற்கு(?) மட்டுமே பிறவி எடுத்தது போல நெஞ்சு நிமிர்த்துப் பேசும் அமெரிக்காவின் நற்செயல்களுக்கு(?) கொடிபிடிக்கும் சமுத்ரா போன்ற புஷ் அடிவருடிகளும் இருக்கிறார்கள். உங்கள் பதிவுக்கு புள்ளி விவரக் கணக்கோடு அவர்கள் வருவார்கள்.. என்ன சொல்கிறார்கள் பார்ப்போம்.
நல்லதொரு பதிவு திரு.
நன்றி அட்றா சக்கை அண்ணே! எத்தனை புள்ளிவிவரக் கணக்கோடு யார் வந்தாலும், அமெரிக்க கொடுமைகளை மறைக்க முடியுமா என்ன? வரட்டும்...ம்..
நன்றி கலை!
Post a Comment
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com