Tuesday, February 28, 2006

மாமன்னர் சாட்சாத் ஜார்ஜ் புஸ் வருகை!

நாளை காலை உலகமகா யோக்கியர், சமாதானத் தூதுவன், உலகின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம், மக்களாட்சியை பீரங்கிமுனயில் வரவழைக்கும் வித்தகர், தான் சிரிக்க உலகை அதிர வைக்கும் ஆற்றலாளர், உலகின் மாமன்னர் சாட்சாத் ஜார்ஜ் புஸ் அவர்கள் இந்தியா என்கிற நாட்டில் விஜயம் செய்யவிருக்கிறார். யார் இவர் என்று மட்டும் கேட்காதீங்க! இவரது அப்பர் (மரியாத தானுங்கோ, இல்லைன்னா நம்ம தலைக்கும் கண்டம் தான்) ஜார்ஜ் புஸ் கனவை ஈராக்கில் நனவாக்கி தினமும் சராசரி 50 பேரை கொல்லுமளவு சமாதானத்தை விதைத்தவர்.

இவர் அனுப்பிய சமாதானப்படை டிப்ளீட்டட் யுரேனியம் கலந்த வெடிகுண்டுகளில் சமாதானம் விதைத்தனர். விளைவு, இன்னும் 4.5 பில்லியன் ஆண்டுகள் அதன் கதிரியக்கம் இருக்கும். அங்கு காற்று, நீர் அனைத்திலும் இந்த கதிரியக்கம் மாசுபடுத்தும். இந்த அபாயகரமான ஆயுதத்தை பயன்படுத்திய 159,238 படையினருக்கு உடல்பலவீனம் ஏற்பட்டிருக்கிறது. பாதுகாப்பாக ஆயுதம் கையாளுகிற படைகளுக்கே இப்படியானால், ஆயுதத்தையும் அதன் வீரியத்தையும் சந்திக்கிற மக்கள் நிலை நினைக்கமுடியவில்லை. புற்றுநோயுடன் குழந்தைகள் பிறக்கிறது, புற்றுநோயால் இறப்பவர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. கருவில் இருக்கும் குழந்தை அமெரிக்காவிற்கு செய்த கொடுமைதான் என்ன? அது ஈராக்கிய குழந்தையாக பிறப்பது என்ன தீவிரவாதமா?

பேரழிவு ஆயுதங்களை ஈராக் முழுவதும் தேட படையெடுத்த ஜார்ஜ் புஸ் வகையறாக்கள் பயன்படுத்திய ஆயுதங்களின் பெயர் என்ன? சமாதானத்திற்கான பூச்சொரிதலா? அபுக்ரேவ் சிறைச்சாலையில் அமெரிக்காவின் மக்களாட்சி, மனித உரிமை, விடுதலை, சுதந்திரம், சமத்துவம் எல்லாம் அம்மணமாகி நிற்கிறது. சித்திரவதை செய்து ரசிக்கும் வக்கிரகுணம் படைத்த போர்வெறி அமெரிக்கா என்கிற தேசத்தை ஆட்டிவைக்கிறது.

குவேன்றனாமோ பே என்ற தீவில் இருக்கிற அமெரிக்க கடற்படை தளத்தில் ஜனவரி 2002 முதல் 520 கைதிகளை அடைத்து வைத்து எந்த வித நீதிமன்ற விசாரணையுமில்லாமல் சித்திரவதை செய்து வருகிறது மனித உரிமை பற்றி சவடால் விடுகிற ஜார்ஜ் புஸ் அரசு. எத்தனை கொடிய குற்றம் புரிந்தாலும் குற்றம் சுமத்தப்பட்டவர்களை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்துவது தான் நியாயம், உலகநியதி. ஆனால் அமெரிக்காவுக்கு? எல்லா அரசுகளும் தங்களது ஆளுகைக்குட்பட்ட பகுதிகளின் எல்லா தனிநபர்களையும் மரியாதையுடன் சட்டத்தின் முன் அவர்களுக்கு வளங்கப்பட்டுள்ள உரிமையுடன் இன, நிற, பாலியல், மொழி, மத, அரசியல் அல்லது பிற கருத்துக்கள், தேசியம் அல்லது சமூக தோற்றம், பிறப்பு அல்லது அந்தஸ்து அடிப்படையில் எந்த பாகுபாடுமற்று நடத்தப்படவேண்டும் என்கிறது சர்வதேச மனித உரிமை சட்டம். ஆனால் எந்த சட்டத்தின் முன்னரும் நிறுத்தப்படாமல் தீவிரவாதி என்ற சந்தேகத்தின் பெயரில் அடைத்து வைத்து மனித உரிமையை சிறைக்கம்பிகளுக்கிடையில் சித்திரவதை செய்கிறது அமெரிக்கா. இந்த சிறைக்கு பார்வையிட ஐ.நா பிரதிநிதிகளை கூட அனுமதிக்க மறுக்கிறது. இப்படி திட்டமிட்டு சர்வதேச சட்டங்கள் அனைத்தையும் மீறிவிட்டு தீவிரவாதம், பக்கவாதம் என்று கதையளக்கிறது அமெரிக்கா. உலகத்தில் அமெரிக்காவிற்கு மட்டுமென்ன தனி சட்டமா?

இவை அனைத்தையும் செய்கிற ஜார்ஜ் புஸ் தான் இந்தியாவிற்கு வருகை.

**உலகமயமாக்கல் பொருளாதார திட்டம் ஏழை நாடுகளின் விவசாயிகளது வாழ்வாதாரங்களை பிடுங்கி அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களின் செல்வத்தை பெருக்குகிறது. இதற்கு வசதியாக உலக வர்த்தக நிறுவனத்தில் தனது கொடிய கரங்களை பரப்பி ஏழை நாடுகளை சுரண்டுவது அமெரிக்காவின் பொருளாதார ஆதிக்கம். ஜார்ஜ் புஸ் வருகையின் போதும் நமக்கு அப்படிப்பட்ட பல திட்டங்கள் வரப்போகிறது. புஸ் பயணத் திட்டத்தில் ஆந்திர மாநில விவசாயிகளுடன் உரையாடல் நடைபெற இருக்கிறது. கடன் தொல்லையாலும், வறுமையாலும் தற்கொலைக்கு தள்ளப்பட்ட விவசாயிகள் ஜார்ஜ் புஸ்ஸின் அமெரிக்க அரசால் வஞ்சிக்கப்படுவதை உணர்வார்களா?

**அணுசக்தி ஒப்பந்தம் மட்டுமல்ல, காஷ்மீர் பிரச்சனைக்கும் தீர்வுடன் வருகிறாராம் புஸ். அமெரிக்க படைகளின் அடுத்த நிலை காஷ்மீரா?

திரு

Saturday, February 25, 2006

விஜயகாந்த்: இந்த நட்சத்திரம் மின்னுமா? விழுமா?

நடிகர்கள் அரசியலுக்கு வருவதும் அவர்களை பதவியிலமர்த்தி அழகு பார்ப்பதும் தமிழகத்திற்கு புதிதல்ல. எம்.ஜி.ராமச்சந்திரன் துவங்கி சரத்குமார், எஸ்.எஸ். சந்திரன் என பட்டியல் நீளுகிறது. நிகரில்லாத மக்கள் ஆதரவு தனக்கிருந்தும் சிவாஜி கணேசன் அவர்கள் அரசியலில் வெற்றிபெற முடியவில்லை. இதையெல்லாம் உணர்ந்ததாலோ என்னவோ ரஜினிகாந்த்க்கு அரசியல் என்பது எப்போதுமே தடுமாற்றமான நடனம்.

அரசியலில் தற்போதைய புதுவரவு விஜயகாந்த். "லஞ்சம் இல்லாத நாட்டை உருவாக்கி காட்டுகிறேன். கிராமங்களை நகரங்களாக மாற்றுவோம், வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிக்கப்படும். ரேஷன் பொருட்கள் அனைத்தும் வீடு வந்து சேரும்". என பட்டி தொட்டியெல்லாம் கீறிய கிராமபோன் போல முழங்குகிறார்.

தனது கல்யாணமண்டபம் இடிபட போகிறதை உணர்ந்ததும் தன் சொத்தை காப்பாற்ற புறப்பட்ட விஜயகாந்தா லஞ்சத்தை ஒழிக்கப்போகிற மகான்? கல்யாண மண்டபம், கல்லூரி ஆகியவற்றிற்கு அனுமதி பெற எவ்வளவு பேருக்கு லஞ்சம் கொடுத்தார் என்பது தனக்கு தெரியும் என முழங்கினார். அப்படியானால் முறைகேடாக சொத்தை சேர்த்துவிட்டு இப்படி முழங்கலாமா? அவர் தலைவராக இருக்கிற நடிகர் சங்கம் முதலில் நாட்டு மக்கள் பணத்தை அரசிடம் சுரண்டுவதை நிறுத்தட்டும். தனது சங்க உறுப்பினர்களாக இருக்கிற அனைவரையும் முறையாக வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வைக்கட்டும். இது தமிழக மக்களுக்கு அவர் செய்யவேண்டிய முதல் கடமை.

நகரங்களில் எல்லாம் இப்போது பாலாறு, தேனாறா ஓடுதா? சுத்தம் சுகாதாரமற்று, பாதுகாப்பற்று, சமூக உறவற்ற நகரங்களாக உருவாக்க அவர் வாக்குறுதி அளிப்பதே மிக ஆபத்தான அரசியல், சமூக, பொருளாதார பார்வை.

ரேசன் பொருட்கள் வீட்டில் கிடைக்காததா இப்போதைய பிரச்சனை? அப்படியானால் எப்போதும் போல ரேசன் அரிசி வாங்கி சாப்பிடும் அளவில் தான் தமிழக மக்கள் வாழ்க்கை தரம் இருக்குமா? இவரது ஆட்சி மட்டும் என்ன புதிய மாற்றத்தை கொண்டுவரும்? எல்லாம் பழைய கதை தானே! ஏழைகள் மீது புதிதாக தனக்கு பிறந்த அக்கறையுடன் கிழம்பியுள்ளார் விஜயகாந்த். கடந்த 5 வருடத்தில் 2 லட்சத்திற்கும் மேல் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் முறைகேடான பணி நீக்கம் செய்யப்பட்டபோது என்ன செய்தார் இவர்? ஏழை விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலைக்கு தள்ளப்பட்டபோதும், பசிக்கொடுமையால் எலி, நண்டு, நத்தை சாப்பிட வேண்டிய நிலைக்கு ஆழானபோதும் விஜயகாந்த் எங்கே? இந்த நிலமைக்கு ஆளாக்கிய பொருளாதார திட்டங்களை பற்றி இதுவரை வாய் திறக்காத விஜயகாந்த் எழைகளுக்கு திரையில் வில்லனாக வந்தால் என்ன கதாநாயகனாக வந்தால் என்ன?
கொள்கை பற்றி கேட்ட அவரது கட்சித்தொண்டர் மேல் சீறி விழுகிறார். வாக்கு கேட்கும் முன்னர் கொள்கை, திட்டங்கள் அனைத்தையும் தெரிவிப்பது தான் நியாயம். அவரது கொள்கைகள் முன் கூட்டியே தெரியக்கூடாத திரை மறைவு இரகசியங்களா? இல்லை, எல்லா கட்சி போல கொள்கை இல்லாத கட்சியா? தனக்கு வேண்டிய மட்டும் பொருள் சேர்த்துவிட்டு சொத்தைக் காப்பாற்ற அரசியல், பூசணிக்காய் என புறப்படுவது நடிகர்களுக்கு புது சுகமாக இருக்கலாம். அதனால் தமிழக மக்களுக்கு எந்த பலனும் இல்லை.

அரசியல் மேடைகளில் அவர் பேசும் வீரவசனங்கள் திரைப்படத்தில் வருகிற லியாகத் அலிகான் வசனம் போல இருக்கிறது. ஆனால் அவை வாழ்க்கைக்கு உதவாத பசப்பு வார்தைகள். நிஜத்தில் இவர் ஒன்றும் தமிழக மக்களின் வாழ்வை முன்னேறப்போகிற கேப்டனல்ல, மீண்டும் ஒரு அரசியல் நட்சத்திரம். இந்த நட்சத்திரம் மின்னுமா? இல்லை விழுமா? காலம் பதில் சொல்லும். விஜயகாந்த் கனவு காண்பது போல ஓட்டு என்பது 2 மணி நேர திரைப்படம் பார்க்க அனுமதி சீட்டு போன்றதல்ல. மக்களின் அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார வாழ்வை உயர்வடைய திட்டங்கள் செயல்படுத்த அனுமதி.

நினைவுகளுடன்,

திரு