Tuesday, February 28, 2006

மாமன்னர் சாட்சாத் ஜார்ஜ் புஸ் வருகை!

நாளை காலை உலகமகா யோக்கியர், சமாதானத் தூதுவன், உலகின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம், மக்களாட்சியை பீரங்கிமுனயில் வரவழைக்கும் வித்தகர், தான் சிரிக்க உலகை அதிர வைக்கும் ஆற்றலாளர், உலகின் மாமன்னர் சாட்சாத் ஜார்ஜ் புஸ் அவர்கள் இந்தியா என்கிற நாட்டில் விஜயம் செய்யவிருக்கிறார். யார் இவர் என்று மட்டும் கேட்காதீங்க! இவரது அப்பர் (மரியாத தானுங்கோ, இல்லைன்னா நம்ம தலைக்கும் கண்டம் தான்) ஜார்ஜ் புஸ் கனவை ஈராக்கில் நனவாக்கி தினமும் சராசரி 50 பேரை கொல்லுமளவு சமாதானத்தை விதைத்தவர்.

இவர் அனுப்பிய சமாதானப்படை டிப்ளீட்டட் யுரேனியம் கலந்த வெடிகுண்டுகளில் சமாதானம் விதைத்தனர். விளைவு, இன்னும் 4.5 பில்லியன் ஆண்டுகள் அதன் கதிரியக்கம் இருக்கும். அங்கு காற்று, நீர் அனைத்திலும் இந்த கதிரியக்கம் மாசுபடுத்தும். இந்த அபாயகரமான ஆயுதத்தை பயன்படுத்திய 159,238 படையினருக்கு உடல்பலவீனம் ஏற்பட்டிருக்கிறது. பாதுகாப்பாக ஆயுதம் கையாளுகிற படைகளுக்கே இப்படியானால், ஆயுதத்தையும் அதன் வீரியத்தையும் சந்திக்கிற மக்கள் நிலை நினைக்கமுடியவில்லை. புற்றுநோயுடன் குழந்தைகள் பிறக்கிறது, புற்றுநோயால் இறப்பவர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. கருவில் இருக்கும் குழந்தை அமெரிக்காவிற்கு செய்த கொடுமைதான் என்ன? அது ஈராக்கிய குழந்தையாக பிறப்பது என்ன தீவிரவாதமா?

பேரழிவு ஆயுதங்களை ஈராக் முழுவதும் தேட படையெடுத்த ஜார்ஜ் புஸ் வகையறாக்கள் பயன்படுத்திய ஆயுதங்களின் பெயர் என்ன? சமாதானத்திற்கான பூச்சொரிதலா? அபுக்ரேவ் சிறைச்சாலையில் அமெரிக்காவின் மக்களாட்சி, மனித உரிமை, விடுதலை, சுதந்திரம், சமத்துவம் எல்லாம் அம்மணமாகி நிற்கிறது. சித்திரவதை செய்து ரசிக்கும் வக்கிரகுணம் படைத்த போர்வெறி அமெரிக்கா என்கிற தேசத்தை ஆட்டிவைக்கிறது.

குவேன்றனாமோ பே என்ற தீவில் இருக்கிற அமெரிக்க கடற்படை தளத்தில் ஜனவரி 2002 முதல் 520 கைதிகளை அடைத்து வைத்து எந்த வித நீதிமன்ற விசாரணையுமில்லாமல் சித்திரவதை செய்து வருகிறது மனித உரிமை பற்றி சவடால் விடுகிற ஜார்ஜ் புஸ் அரசு. எத்தனை கொடிய குற்றம் புரிந்தாலும் குற்றம் சுமத்தப்பட்டவர்களை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்துவது தான் நியாயம், உலகநியதி. ஆனால் அமெரிக்காவுக்கு? எல்லா அரசுகளும் தங்களது ஆளுகைக்குட்பட்ட பகுதிகளின் எல்லா தனிநபர்களையும் மரியாதையுடன் சட்டத்தின் முன் அவர்களுக்கு வளங்கப்பட்டுள்ள உரிமையுடன் இன, நிற, பாலியல், மொழி, மத, அரசியல் அல்லது பிற கருத்துக்கள், தேசியம் அல்லது சமூக தோற்றம், பிறப்பு அல்லது அந்தஸ்து அடிப்படையில் எந்த பாகுபாடுமற்று நடத்தப்படவேண்டும் என்கிறது சர்வதேச மனித உரிமை சட்டம். ஆனால் எந்த சட்டத்தின் முன்னரும் நிறுத்தப்படாமல் தீவிரவாதி என்ற சந்தேகத்தின் பெயரில் அடைத்து வைத்து மனித உரிமையை சிறைக்கம்பிகளுக்கிடையில் சித்திரவதை செய்கிறது அமெரிக்கா. இந்த சிறைக்கு பார்வையிட ஐ.நா பிரதிநிதிகளை கூட அனுமதிக்க மறுக்கிறது. இப்படி திட்டமிட்டு சர்வதேச சட்டங்கள் அனைத்தையும் மீறிவிட்டு தீவிரவாதம், பக்கவாதம் என்று கதையளக்கிறது அமெரிக்கா. உலகத்தில் அமெரிக்காவிற்கு மட்டுமென்ன தனி சட்டமா?

இவை அனைத்தையும் செய்கிற ஜார்ஜ் புஸ் தான் இந்தியாவிற்கு வருகை.

**உலகமயமாக்கல் பொருளாதார திட்டம் ஏழை நாடுகளின் விவசாயிகளது வாழ்வாதாரங்களை பிடுங்கி அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களின் செல்வத்தை பெருக்குகிறது. இதற்கு வசதியாக உலக வர்த்தக நிறுவனத்தில் தனது கொடிய கரங்களை பரப்பி ஏழை நாடுகளை சுரண்டுவது அமெரிக்காவின் பொருளாதார ஆதிக்கம். ஜார்ஜ் புஸ் வருகையின் போதும் நமக்கு அப்படிப்பட்ட பல திட்டங்கள் வரப்போகிறது. புஸ் பயணத் திட்டத்தில் ஆந்திர மாநில விவசாயிகளுடன் உரையாடல் நடைபெற இருக்கிறது. கடன் தொல்லையாலும், வறுமையாலும் தற்கொலைக்கு தள்ளப்பட்ட விவசாயிகள் ஜார்ஜ் புஸ்ஸின் அமெரிக்க அரசால் வஞ்சிக்கப்படுவதை உணர்வார்களா?

**அணுசக்தி ஒப்பந்தம் மட்டுமல்ல, காஷ்மீர் பிரச்சனைக்கும் தீர்வுடன் வருகிறாராம் புஸ். அமெரிக்க படைகளின் அடுத்த நிலை காஷ்மீரா?

திரு

2 பின்னூட்டங்கள்:

b said...

காந்தி சமாதி மற்றும் தாஜ்மஹால் போன்ற இடங்களுக்கு அவுக போக மாட்டாங்களாம்ல?!!!

thiru said...

//மூர்த்தி said...
காந்தி சமாதி மற்றும் தாஜ்மஹால் போன்ற இடங்களுக்கு அவுக போக மாட்டாங்களாம்ல?!!! //

சமாதானம், அன்பு, காதல் எல்லாம் தான் பெரியண்ணனுக்க்கு பிடிக்காதே! என்ன பண்ண கோட்சேயின் சமாதி அவ்வளவுக்கு பிரபலமானதோ, வரவேற்ககூடியதாகவோ இல்லை, இருந்தா போயிருக்கவேண்டிய இடம். மோடியை பார்த்து பேசி ஒப்பந்தம் போட்டுகிட்டா நல்ல கூட்டணியா இருக்கும். இனம் இனத்தோடு சேர்ந்த மாதிரியும் இருக்கும்... ஹி ஹி ஹி

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com