Sunday, April 09, 2006

டெஸ்மா வீராங்கனை!

தமிழகத்தில் டெஸ்மா (Tamil Nadu Essential Services Maintenance Act (TESMA), 2002) என்கிற கொடிய சட்டத்தை 2002ல் இயற்றியது அ.தி.மு.க அரசு. இந்த சட்டத்தின் படி வேலைநிறுத்தம் தடை செய்யப்பட்டது, வேலை நிறுத்தம் செய்ய தூண்டுபவர்கள் சிறையிலடைக்கப்படுவார்கள். போராட்டங்களில் கலந்து கொள்பவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள். அரசு இந்த சட்டத்தை அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் போராட்டங்களை குறிவைத்து கொண்டு வந்தது. துவக்கத்திலேயே சட்டவல்லுனர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், தொழிற்சங்கங்கள் என அனைவரும் எதிர்த்தனர். (TESMA), 2002, considered one of the most repressive pieces of legislation in labour history என்கிறது ஹிந்து நாளிதழ்.

ஜெயலலிதாவின் இந்த சட்டமானது நமது நாட்டின் தொழிலாளர் சட்டங்களுக்கு மட்டுமல்ல சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (International Labour Organisation - ILO) International Labour Convention க்கும் எதிரானது. ILOவின் Declaration on Fundamental Principles and Rights at Work என்ன சொல்கிறது?
http://www.ilo.org/dyn/declaris/DECLARATIONWEB.static_jump?var_language=EN&var_pagename=DECLARATIONTEXT

Freedom of association and the effective recognition of the right to collective bargaining ஐ நிறைவேற்ற அரசுகளுக்கு கடமையுண்டு என்பதை மேற்காணும் பிரகடனம் வலியுறுத்துகிறது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள சங்கம் அமைத்தல், ஒருங்கிணைந்து உரிமைக்காக போராடுதல் என்பது தொழிற்சங்க நடவடிக்கை சார்ந்த உரிமை. இது தொழிலாளர்களுக்கே உரிய போராட்ட வழிமுறை. இந்த உரிமையில் அரசு பணியாளர், தனியார் பணியாளர் என்ற வாதத்திற்கே இடமில்லை. இந்த கோரிக்கைகளுக்கான போராட்டங்களை முன்னெக்க தொழிலாளர்களது பிரதிநிதிகளுக்கு (representatives of employees) உண்டு. இந்தியாவும் ILO வில் ஒரு உறுப்பினர் நாடு என்ற அடிப்படையில் இந்த சர்வதேச விதிமுறைகளை செயல்படுத்த இந்தியா கடமையுடையது. ஜெயலலிதா இந்த உரிமையை பறிக்கும் விதமாக வேலை நிறுத்தங்களையும் தொழிலாளர் போராட்டங்களையும் தடை செய்யும் டெஸ்மா சட்டமியற்றி நீதியையும், உரிமையையும் அதிகாரம் என்ற காலில் போட்டு மிதித்தார்.

தமிழகத்தில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் முறையாக தங்களது கோரிக்கைகளுக்காக போராட்டம் அறிவித்து அரசுக்கும் தெரிவித்தார்கள். அரசுக்கு பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பையும் வழங்கினார்கள். ஆனால் நமது அதிகாரத்திறன் (!) படைத்த முதல்வர் ஜெயலலிதா போராடும் அமைப்புகளுடன் பேசி தீர்க்காமல் வீண் பிடிவாதத்துடன் ஏற்கனவே இருந்த உரிமையையும் பிடுங்கினார். அதன் விளைவு இழந்த உரிமைகளுக்காக ஜூலை 2003 ல் போராட்டங்களை நடத்தியது அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள். டெஸ்மா சட்டத்தை காட்டி போராடுவபர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என மிரட்டியது அரசு.

30, ஜூன் 2003ல் ஜாக்டோ-ஜியோ மற்றும் கோட்டா-ஜியோ கூட்டமைப்புகளின் தலைவர்களை கைது செய்தது அரசு. அந்த மிரட்டல்களை மீறி 2, ஜூலை 2003 முதல் வேலைநிறுத்த போராட்டம் துவங்கியது. வேலைநிறுத்த போராட்டங்களில் கலந்து கொள்ளாவிட்டாலும் பணிக்கு வராத அரசு உழியர்கள் மற்ரும் ஆசிரியர்களை அனைவரையும் பணிநீக்கம் செய்யும் விதமாக அவசரமாக டெஸ்மா சட்டத்தை திருத்தியது அரசு. சில நாட்களிலேயே 2 லட்சத்திற்கும் மேல் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் ஒரு உத்தரவில் ஒரே நாளில் எந்த வித விளக்கமும் கேட்கபடாமல் பணிநீக்கம் செய்யப்பட்டனர். டெஸ்மா சட்டத்தை பயன்படுத்தி ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு இந்த உலக சாதனையை செய்தது. அரசு அதிகாரத்தை வைத்திருந்த ஜெயலலிதாவின் ஆணவத்தின் ஒரு கையெழுத்தில் 2 லட்சம் குடும்பங்கள் தெருவுக்கு வந்தது. போராட்டக்களங்களில் இருந்த சங்கத் தலைவர்களையும், ஊழியர்களையும் கள்வர்களைப் போல காவலர்களை வைத்து கைது செய்தது அரசு. குடும்பங்களை குடியிருப்புகளை விட்டு வெளியேற்றியது, குடிநீர், மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. அரசு அதிகாரத்தின் சித்திரவதை தொடர்ந்தது.

தொழிலாளர் நல சட்ட விதிப்படி ஒருவரை பணிநீக்கம் செய்ய முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். பணிநீக்கம் செய்வதற்கு முன்னர் 14 நாட்கள் கால வரையறையுடன் கடிதம் கொடுத்து விளக்கம் தர வாய்ப்பு கொடுக்க வேண்டும். அவர் தரும் விளக்கம் சரியில்லாவிட்டால், மீண்டும் பதில் கூற கால வரையறை கொடுக்கப்பட வேண்டும். அதற்கு பின்னர் நிறுவனத்தின் விதிகளின் படி அந்த ஊழியரை முறைப்படியாக கடிதம் வழி தகவல் தெரிவித்து பணிநீக்கம் செய்யலாம். இந்த முறைப்படி பணிநீக்கத்தை எதிர்த்து வழக்கு போட அந்த தொழிலாளருக்கு வாய்ப்பு உண்டு. இத்தனை பாதுகாப்புகளும் எதற்காக என்றால், தொழிலாளர்களின் பணி பாதுகாப்பிற்காக. இது அரசு மற்றும் தனியார் துறைகளுக்கும் பொருந்தும். இந்த பாதுகாப்பு மட்டும் இல்லாவிட்டால் நாளை வேலையிருக்குமா இல்லையா என்பதை அனைவரும் அறிவிப்பு பலகையில் பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டும். யார் வேண்டுமானாலும் விருப்பம் போல் வேலையை விட்டு எந்த உத்தரவாதமும் இல்லாமல் நீக்கலாம் என்ற நிலை ஆகிவிடும்.

பாதிக்கப்பட்ட ஊழியர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். விளக்கம் எதுவும் கேட்காமல் ஆணவத்துடன் அதிகார வரம்பு மீறல்கள் செய்ததன் பலன் அரசுக்கு இன்னும் அதிகபடியான செலவும் நீதீமன்ற நடவடிக்கைகளுமே. உயர்நீதிமன்றம் வழங்கிய அறிவுரைகள் புறக்கணிக்கப்பட்டு, அடக்குமுறையை தொடர்ந்தது அரசு. வருகை பதிவேடுகள் அனைத்தும் மாவட்ட ஆட்சித்தலைவரின் கட்டுப்பாடில் வைக்கப்பட்டு, ஜூலை 3 முதல் பணிக்கு வந்தவர்களை வருகைப்பதிவேட்டில் கையொப்பமிடாதவாறு பார்த்துக்கொண்டது. வார விடுமுறையில் கூட முறையீட்டை வீட்டில் வைத்து கேட்டு வழக்கில் கவனம் செலுத்தி ஊழியர்களை வேலைக்கு திரும்பவும், பணிநீக்கத்தை கைவிடவும் ஊழியர்களை விடுதலை செய்யவும் உயர்நீதிமன்ற அறிவுறுத்தியது. அந்த உத்தரவை மதிக்காமல் உயர்நீதிமன்ற முதன்மை பெஞ்சில் அரசு முரையிட்டது, தொடர்ந்து சட்டத்தின் போராட்டம் துவங்கியது. டெஸ்மா சட்டத்தை செல்லுபடியாகாது என உச்சநீதிமன்றம் பின்னர் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு டெஸ்மா சட்டம் நமது நாட்டின் தொழிலாளர் நடைமுறை சட்டங்களுக்கு முரணானது அல்லது எதிரானது என்ற முடிவை தருகிறது. படிப்படியாக் மீண்டும் ஊழியர்களை வேலையில் சேர்க்க நிற்பந்ததிற்குள்ளானது அரசு விளைவு வேலைநிறுத்தத்தை தூண்டியதாக 999 பேரை நிரந்தர பணிநீக்கம் செய்தது. பணிநீக்கத்திலும் ஜெயலலிதாவின் இராசி எண் 9 கூட்டுத்தொகை வரும்படி பார்த்துக்கொண்டது அரசு. ஜோதிடர்களுக்கு இருக்கும் சிறப்பும் மரியாதையும் மக்களுக்கும் ஊழியர்களுக்கும் இல்லை என்று வெளிப்படுத்துகிறதா ஜெயலலிதா அரசு?

இந்த காலகட்டத்தில் ஹிந்து நாளிதள் தலையங்கம் ‘substance of the ruling in this landmark case amounts to denial of justice’. It described the AIADMK government’s actions as “an extraordinary case of deployment of State power against its own employees” and “summary dismissal and the overnight arrest of hundreds of thousands of employees … are in profound conflict with fundamental rights, the basic norms of democracy, and enlightened self-interest” என்கிறது. ஜெயாலிதாவின் ஜனநாயகம், அரசியல் சட்டத்தை மதித்து நடக்கும் தன்மைக்கு இது ஒரு உதாரணம் மட்டுமே.

இவை அனைத்தையும் நிதிப்பற்றாக்குறை என காரணம் காட்டி செய்தது அதிமுக அரசு. நிதிப்பற்றாக்குறை என்பதை ஏற்றுக்கொண்டால் கூட அந்த காலகட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஊதியம் அதிகரிக்கப்பட்டது ஏன் என்கிற கேள்வியும் சேர்ந்து வருகிறது. அதே கால கட்டத்தில் ஆடம்பர அரசு விழாக்கள் நடத்தப்பட்டன. சென்னையிலிருந்து செங்கல்பட்டு அளவு தூரத்தில் கூட ஹெலிகாப்டரில் பறந்தார் ஜெயலலிதா. அப்படியானால் எதற்காக ஜெயலலிதா இந்த முறைகேடான கடும் நடவடிக்கை எடுத்தார்?

அது தான் ஜெயலலிதாவின் அதிகார துஸ்பிரயோகம், ஈகோ. உரிமைகளை எச்சரித்து காலில் போட்டு மிதிக்க யாருக்கும் அதிகாரமில்லை என்பது கவனத்தில் கொள்ளவேண்டும். ஜெயலலிதா என்ற தனிநபரை விட மக்களின் உரிமை மரியாதைக்குரியது, அதை மதித்து நடக்கவேண்டிய கடமை முதல்வருக்கு உண்டு. மக்களுக்காக தான் முதல்வரே தவிர, முதல்வருக்காக மக்களில்லை. அதற்கு இது மன்னர் குடும்ப ஆட்சிமுறையுமில்லை, மக்களாட்சி முறை. ஜெயலலிதா அரசின் அதிகாரத்தின் முன் அடிப்படை உரிமைகளும், ஜனநாயகமும் கால்பந்தாக உதை படுகிறது.

மீண்டும் வாக்குகள் கேட்டு வீதியில், குடிசையில், வயற்பரப்பில் என வலம் வருகிறார் ஜெயலலிதா. வெற்றிபெற்றால் 4 ஆண்டுகளுக்கு மக்களை நசுக்கும் காட்சியும், கடைசி வருடத்தில் திருந்தியது போன்ற நடிப்பாட்சியும் காத்திருக்கும். தமிழ் மக்கள் மறதி மிக்கவர்களாயிற்றே. உதைக்கப்பட்ட பந்து அதற்கு இணையான அல்லது அதைவிட வேகமாக ஆடுகளத்தில் மேலெளும்பும், உதை வாங்கிய மக்கள்? மீண்டும் தேர்தலில் வீதிகளில் வருகிறார் டெஸ்மா வீராங்கனை.

கட்டுரையும் படமும்: திரு

உங்கள் கருத்து என்ன?

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com