தேச ஒற்றுமையும் ரத யாத்திரையும்
"வாரணாசி குண்டு வெடிப்பை கண்டித்து நான் நடத்த இருக்கும் பாரத் கரக்ஷா ரத யாத்திரையால் எந்த கலவரமும் ஏற்படாது. நாட்டு ஒற்றுமையை வலியுறுத்தவே இந்த யாத்திரை நடக்கிறது. காங்கிரஸ் மற்றும் சில கட்சிகள்தான் தவறான பிரசாரம் செய்து பீதியை ஏற்படுத்துகிறார்கள்." என்கிறார் பா.ஜ.கா முன்னாள் தலைவர் அத்வானி. நாட்டின் பாதுகாப்பிற்காக என ரதயாத்திரைக்கு திரு.அத்வானி அவர்கள் புறப்படுகையில் ஏன் இப்படி ஒரு 'பீதி' அவரை குறிவைத்து கிளப்பப்படுகிறது?
கடந்த காலங்களில் அத்வானி ரதயாத்திரை சென்ற போது ஏதாவது குழப்பங்களோ அல்லது கலவரங்களோ நடந்ததுண்டா? இல்லை யாருடைய உடமைகளாவது சூறையாப்பட்டதா? பாலியல் வன்முறைகள், கொலைகள் நடந்தனவா?
1990ல் பிரதமர் திரு.வி.பி.சிங் அவர்கள் மண்டல் கமிசன் அறிக்கையை ஏற்று பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுகீடு சட்டமாக்கினார். இந்த இடஒதுக்கீடு சட்டம் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களை கல்வி, வேலைவாய்ப்பில் சமநிலைக்கு கொண்டுவருவதற்கான் ஒரு முயற்சி. இடஒதுக்கீட்டு திட்டத்தால் உயர்சாதியினர் காலங்காலமாக அனுபவித்து வந்த கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அதிகார பீடங்களில் தாழ்த்தப்பட்ட மக்களா? இதை அனுமதிப்பது உயர்சாதியினருக்கு இயலாத விடயமானது. வடமாநிலங்களின் கல்வி நிலையங்களில் கலவரங்களும், தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கெதிரான அடக்குமுறையும் உயர்வகுப்பு மாணவர்களால் துவங்கப்பட்டது. அரசு தனது திட்டத்தில் விடாப்பிடியாக இருந்தது.
இந்த அரசியல் மாற்றங்களை திசை திருப்பவும், ஆட்சியை ஆட்டம் காண வைக்கவும் திரு.அத்வானி அவர்கள் ராம ரத யாத்திரை துவங்கினார். அதற்கு அவருக்கு கிடைத்த ஆயுதம் பல ஆண்டுகளாக சர்ச்சையிலிருந்த பாபர் மசூதி X இராமர் கோவில் விவகாரம். அயோத்தி நகரில் (உத்தரபிரதேசம்) இராமர் பிறந்த இடமாக கருதப்படுகிற இடத்தில் இருந்த கோவிலை இடித்து பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் பாபர் என்ற மொகலாய மன்னர் மசூதி கட்டியதாக சர்ச்சை. நீதிமன்றத்தில் பாபர்மசூதி X ராமர் கோவில் வழக்கு நடைபெற்று வந்தது. (இந்த கட்டுரையின் நோக்கம் கருதியும் நீண்ட பதிவாகிவிடும் என்பதாலும் வழக்கு மற்றும் சர்ச்சை பற்றி இங்கு பதியவில்லை)
கன்னியாகுமரி முதல் மாநில எல்லைகளை கடந்து சென்ற ராம ரத யாத்திரையில் ஒளிபரப்பப்பட்ட குறும்படங்களும், செய்திகளும், உரைகளும் மக்களை மதப்பிரிவினையில் கூறுபோட துவங்கியது என்பது மறக்க முடியாத உண்மை. சகோதரர்களாக இருந்த மக்களிடம் "பாபர் மசூதியை இடித்து இராமர் கோவில் கட்ட வேண்டும்" என்ற பெயரில் மதவெறியை விதைத்தது திரு. லால் கிசன் அத்வானியின் ரதயாத்திரை. ரத யாத்திரை மாநிலங்கள் பல கடந்து பீகாரில் நுளைந்தபோது அன்றைய முதல்வர் திரு. லல்லு பிரசாத் அவர்களது அரசால் கைது செய்யப்பட்டார். இந்த கைது அரசியலாக்கப்பட்டு கலவரங்கள் வெடித்தது. திரு.வி.பி.சிங் ஆட்சியும் கவிழ்ந்தது. திரு.அதிவானி அவர்களின் கைதை தமிழகத்தின் நடுநிலை நாளிதழ் ஒன்று சிறப்பு பதிப்பு வெளியிட்டு மூன்று சக்கர வண்டியில் வைத்து மூலை முடுக்கெல்லாம் இலவசமாக கட்டு கட்டாக பத்திரிக்கை வீசி மதவெறிக்கு மேலும் உரமூட்டியது.
இந்த ரதயாத்திரையின் முடிவும் அதன் தொடர்ந்த நிகழ்வுகளும் இந்து மற்றும் பிறமத மக்களிடம் ஒருவருக்கொருவர் எதிரி போன்ற மனப்பான்மையும், பிற மதங்கள் தங்கள் நம்பிக்கைகளுக்கு எதிரானது என்ற பார்வையும் வலுப்பெற வைத்தது. இராமாயண காதையை நம்பிக்கைக்காக இல்லாவிடினும் அதன் சொற்சுவை, பரவச தன்மைக்காக படித்தவர்கள் கூட இந்த ரதயாத்திரையின் தொடர் நிகழ்வுகளின் பின்னர் இராமன் கதை என்றாலே மனம் சுழிக்கவும், புண்படவும் செய்தனர்.
தொடர்ச்சியாக பகை, அச்சம் என பிளவுபட்டுகிடக்கிறது இந்தியா. 1990 ராம ரத யாத்திரையின் விளைவாக நடந்த கலவரங்களில் மட்டும் சுமார் 564 பேர் கொல்லப்பட்டனர். திரு.அத்வானி, திரு.அசோக்சிங்கால், திரு.முரளிமனோகர் ஜோசி, செல்வி.உமாபாரதி தொடர்ச்சியாக எடுத்த போராட்டங்களும், பேச்சுக்களும் மக்களை சட்டத்தை தன் கயில் எடுக்க வைத்தது. டிசம்பர் 6, 1992ல், திரு அத்வானி, சிங்கால், ஜோசி, உமாபாரதி அவர்களது நேரடிப்பார்வையில் வழி நடத்தப்பட்ட பக்தர்கள் கடப்பாரைகளுடன் சென்று 400 ஆண்டுகள் பழமையான மசூதியை இடித்தனர். (ரத யாத்திர, பாபர் மசூதி இடிப்பு இவை அனைத்தின் உண்மை நிலையை In the name of God என்ற குறும்படம் வெளியிடுகிறது, காண கிடைப்பின் பாருங்கள்). அன்று ஆட்சியில் இருந்த திரு.கல்யாண் சிங் தலைமையிலான மாநில பாரதீய ஜனதா கட்சியின் நிர்வாகம், காவல்துறை வேடிக்கை பார்த்தது. திரு. நரசிம்மநாவ் அவர்களை பிரதமராக கொண்ட மத்திய காங்கிரஸ் அரசும் வேடிக்கைப் பார்த்தது. இவை அனைத்தும் நீதிமன்றத்தில் வழக்கின் தீர்ப்பு வருவதற்கு முன்னரே நடந்து முடிந்திருக்கிறது. தொடர்ந்து நாடெங்கும் நடந்த கலவரங்களில் பல்லாயிரம் இஸ்லாமிய மற்றும் இந்து மத நம்பிக்கை கொண்ட மக்கள் கொல்லப்பட்டனர். பாலியல் வன்முறைகள், சூறையாடல், குண்டுவெடிப்பு என பம்பாய் கலவரம் துவங்கி குஜராத், கோயம்புத்தூர், பாராளுமன்றம், டெல்லி, வாரணாசி என நாடெங்கும் மத தீவிரவாதம் தேசியமாக்கப்பட்டிருக்கிறது.
"இதற்கு முன்பும் நான் ரத யாத்திரை நடத்தி இருக்கிறேன். அப்போது சிறு அசம்பாவிதம் கூட ஏற்பட்டது இல்லை." பா.ஜ.கா முன்னாள் தலைவர் அத்வானி (மாலைமலர் 02.04.2006). என்று திரு.அதிவானி அவர்கள் கூறினாலும் பழைய நினைவுகள் வரத்தானே செய்கிறது.
அன்னை பூமியே கலவரத்தாலும் குண்டுவெடிப்புகளாலும் வெடித்து சிதற, அன்னையின் மக்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் கொல்லவும் பாலியல் வன்முறையில் ஈடுபடவும், மதப்பிரிவினை பேசியும் சிதறிக்கிடக்கிறார்கள். இது தான் அத்வானி அவர்கள் தந்த ரதயாத்திரையின் பலனான தேச ஒற்றுமை.
திரு
4 பின்னூட்டங்கள்:
Ultimate pathivu,
Valthukkal !!!
Miga cherantha pathivu.
நன்றி அகிலன். தொடர்ந்து இணைந்திருங்கள்
திரு,
சிறப்பான கட்டுரைகளை எழுதி வெளியிட்டு கொண்டிருக்கிறீர்கள். அந்த வகையில் இந்த கட்டுரையும் ஒன்று.
16 ஏப்ரில் 2007 தேதியிட்ட Outlook இதழில், குஷ்வந்த்சிங் பற்றிய விரிவான கட்டுரையும் பேட்டியும் வெளியீட்டிருக்கின்றனர். அதில் அவர் தனக்குப் பிடித்த / பிடிக்காதா 5 நபர்களைக் குறிப்பிட்டிருக்கிறார்.
பிடிக்காத 5 நபர்களில் ஒருவர் - அத்வானி.
இத்தனைக்கும் ஒரு சமயத்தில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் என்று கூறி, அவருடைய மனுதாக்கல் பத்திரத்தில் எல்லாம் கையெழுத்து இட்டுப் பாராட்டியவர், பின்னர் ஏன் இவ்வாறு மனம் மாறினார் தெரியுமா? அவருடைய ரத யாத்திரை. சிங், வேண்டாம், போகாதீர்கள் என்று அறிவுறுத்தி இருந்திருக்கிறார். 'இந்த யாத்திரை மூலம் ரத்த ஆறு ஓடும். தேவையற்ற பீதியையும், வெறுப்பையும் ம்மக்களிடையே அவநம்பிக்கையும் உண்டாக்கும் என்று கூறி இருக்கிறார். ஆனாலும் அத்வானி அறிவுரையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. இறுதியில், குஷ்வந்த் சிங் சொன்னது போலவே ஆகியது. அன்றிலிருந்தே தனக்குப் பிடிக்காத ஒரு மனிதராக குஷ்வந்த் சிங் அத்வானியைக் குறிப்பிடுகிறார்.
இதே கருத்தை உங்கள் கட்டுரையும் பிரதிபலிக்கிறது. மிக்க நன்றி.
அன்புடன்
நண்பன்
Post a Comment
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com