கல்வி வாங்கலையோ கல்வி!
ஒரு காலத்தில் அறிவை தூண்டவும், மழலைகளாய் இருக்கிற மேதைகளை வளர வைக்கவும் பயன்பட்ட பள்ளிக்கூட கல்வி இன்று பரிதவித்து பாழாகிக்கிடக்கிறது. 1980களில் தமிழகத்தில் ஏழைகளின் வள்ளல்(!) திரு.எம்.ஜி.ராமச்சந்திரன் ஆட்சியில், திரு.அரங்கநாயகம் கல்வி அமைச்சராக இருந்தார். பலருக்கு அந்த காலகட்டத்தின் கல்வித்திட்டங்கள் இன்று மறந்திருக்கும். அந்த புண்ணியவான்கள் ஆட்சியில் தான் கல்வி வியாபார பொருளாக கடை விரிக்க துவங்கி சமூகத்தில் சாக்கடை வீசும் சரக்குகளை உதிர்த்தது.
ஆசிரியர் பணி என்பது மனிதர்களை செம்மைப்படுத்தி அறிவு நிரம்புபவர்களாக இருந்த காலத்தில், முறைப்படுத்தப்பட்ட நிறுவனங்களால் தரமான ஆசிரியர்களை உருவாக்க பயிற்சி மையங்கள் மட்டுமே இயங்கிய காலம். கல்வின் நோக்கமும், தரமும் அதிகமாக கவனிக்கப்பட்டு பேணப்பட்டதன் விளைவு அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும், தரமான கல்விப்பணியை சேவையாக கருதியவர்கள் மட்டும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை நடத்திய வேளை அது. திடீரென வந்த ஆட்சி அதிகாரத்தால் கொள்கைகளும் தொலைநோக்குமற்ற எம்.ஜி.ஆர் ஆரசின் கல்வி கொள்கை எந்த வரைமுறையும் இல்லாமல் தனியாருக்கு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை திறக்க அனுமதி வழங்கியது.
கல்விப்பணிக்கு சம்பந்தமே இல்லாத கட்சிக்காரர்கள் கடை திறந்து கொல்லைப்புறம், மாட்டுத்தொழுவம் என கொட்டைகளை பரப்பி அதில் வருங்கால ஆசிரியர்களை உருவாக்கும் பெயரில் கல்வியை கொள்ளையிட துவங்கினர். அவர்களது கல்வி மீதான காதலில்(!) பல லட்சம் ரூபாய்களை தொலைத்து, சட்டப்போராட்டங்களில் மூழ்கி வேலையும் கிடைக்காமல் அலைந்தவர்கள் எண்ணிக்கை பல்லாயிரம் பேர்கள். வேலை கிடைத்தவர்களில் பலருக்கு கல்வியின் மகத்துவத்தையும், ஆசிரியர்கள் பணி பற்றிய அறிவையும் விட சட்டைப்பையை நிரப்புதலே தொழிலானது.
ஆசிரியர் பயிற்சி நிறுவன (தொழில்) அதிபர்கள் செல்வம் பெருக அடுத்த அடி செவிலியர்கள் பணிக்கு. கொட்டோ கொட்டு என கொட்டிய கரன்சி மழையில் நனைந்த வள்ளல் ஆட்சி செவிலியர் பயிற்சி பள்ளி, பி.எட் பயிலரங்கங்கள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் என தனியாருக்கு எந்த அடிப்படை அம்சங்களையும் பாராமல் லட்சக்கணக்கான பணத்தை பெற்று அனுமதி தந்தது. கரன்சி வெள்ளத்தில் திகைத்த கரைவேட்டிகள் தொழிற்கல்வி பக்கம் கரன்சி கட்டுகளை வீசி அனுமதி வாங்கினர். கல்வி தந்தைகள் என்ற பெயரில் முளைத்த பலர் பாலிடெக்னிக் என்ற பல்முனை தொழிற்கல்வி கூடங்களை திறந்து கேரளா, வட நாடு, பிறமாநில மாணவரக்ளை வேட்டையாடி பணம் சம்பாதித்தனர்.
ஆசை அடங்காத கல்வி நாயகர்கள் அடுத்த குறி பொறியியல் கல்லூரிகளில் பதிய கரன்சி, சட்டப்போர் என தொடர்ந்ததன் விளைவு புதிய சில பொறியியல் கல்விகள் முளைத்தன. கடவுள்களை மொத்த மற்றும் சில்லறை விற்பனை செய்யும் மடங்கள்(எல்லா மதமும் தான்), சகோ.தினகரன் என எல்லோருக்கும் அடித்தது பரிசு.
தமிழர்களுக்காகவே வாழும்(!) தலைவர் திரு.மு. கருணாநிதி ஆட்சியில் பேரா.அன்பழகன் கல்வி அமைச்சரானார். பழைய அதே தனியார்மய கொள்கைகள் மட்டுப்படுத்தலுடன் தொடர்ந்ததே தவிர மாற்றப்படவில்லை. தொடர்ந்தது பழைய ஒழுங்கீனங்கள். அதற்குள் ஆட்சியும் கவிழ்ந்தது.
கல்வியை கண் போல போற்றும் காவல் தெய்வம் செல்வி. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார். ஏற்கனவே அரசு நிலத்தை அபகரித்து கல்வியை வியாபாரம் ஆக்கிய திரு.தம்பிதுரை கல்வி அமைச்சரானர். சென்னை முதல் கன்னியாகுமரி வரை காளான்கள் போல முளைத்தன புது பொறியியல் கல்வி நிலையங்கள். பெரும்பாலான் கல்வி நிலையங்களில் போதிய ஆசிரியர்கள், கருவிகள், கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள் என எதுவும் இல்லை. தொடர்ந்த இந்த வியாபாரம் பள்ளிக்கூடங்கள், ஆங்கில பள்ளிகள், துவக்கப்பள்ளிகள், பாலர் பள்ளிகள் என விரிந்து கிளை பரப்பியிருக்கிறது. அடுத்து வந்த தி.மு.க ஆட்சியிலும் எந்த மாற்றமும் இல்லாமல் கல்வி தனியார் உடமையானது. மீண்டும் வந்த அ.தி.மு.க ஆட்சியில் தொடர்ந்தது பழைய வேகத்தில் அதே முறைகேடுகள்.
தென்மாவட்டத்தில் இப்படி கல்வி (விற்ற) தந்தை முன்னாள் அமைச்சரை தொழில் போட்டியில் கொலை செய்ததாக இன்று சிறைக்குள் இருக்கிறார். வடமாவட்டத்தில் கல்வி வியாபரி ஒருவர் சிலை கொள்ளை வழக்கில் சிக்கினார். சென்னையில் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக ஒரு கல்வி வியாபாரி. இப்படி பரந்து கிடக்கிற இவர்களது தனி மனித ஒழுக்கம் கொடிகட்டி பறக்கிறது.
இப்படிபட்ட ஒரு நிர்வாகம் செய்ய கல்வித்துறையும் அரசும் அவசியமா? இந்த முறைகேடுகளின் விளைவு தான் கும்பகோணத்தில் பிஞ்சு மழலைகள் பள்ளியில் தீயில் வெந்து செத்த கொடுமை. இந்த முறைகேடுகளை தவிர்க்க தனியார் பள்ளிகள் பற்றி ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட திரு.சிட்டிபாபு அவர்கள் தலைமையிலான விசாரணை அறிக்கையை அமல்படுத்துவதாக செல்வி.ஜெயலலிதா அறிவித்து சட்டமன்றம் கரவொலி எழுப்பியதுடன் முடிந்தது. இன்னும் மாறாமல் முறையற்ற விதமாக நடக்கிற கல்வி வியாபாரத்தை நிறுத்த யார் வருவார்? கல்விக்கு என தனி தெய்வமும், வழிபாடும் நடைபெறும் நாட்டில் கல்வி காலில் மிதிபடும் கடைச்சரக்கானது. சாராய வியாபாரிகளை கல்வி தந்தை ஆக திட்டங்கள் தந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவரின் ஆட்சிக்கே இது சமர்ப்பணம். அன்று முதல் இன்று வரை தொடரும் இந்த வேதனை என்று தான் தீருமோ?
4 பின்னூட்டங்கள்:
சுடுகின்ற உண்மை..
- குப்புசாமி செல்லமுத்து
இந்தக் கேள்விகளை தி.க,தி.மு.க,பா.ம.க கேட்காது.அமைச்சர் தண்டராம்பட்டு வேலு குடும்பம் இரு பொறியியல் கல்லூரி உட்பட ஆறு கல்வி நிறுவனங்களை நடத்துகிறது.ராமதாஸ் வன்னியர் நிகர்நிலை பல்கலை ஆரம்பித்துள்ளார். வீரமணி தாளாளராக பெரியார்,மணியம்மை பெயரில் உள்ள பல கல்வி நிலையங்களை தன் நிர்வாகத்தில் வைத்திருக்கிறார். இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக குரல் கொடுப்பார்கள், கல்வித் துறையில் தனியாரின் கொள்ளையை இவர்கள் எதிர்க்கமாட்டார்கள்
Unmai thann.mmmm
pavithra.
நல்ல பதிவு திரு ஒரு சின்ன திருத்தம்.
//தமிழர்களுக்காகவே வாழும்(!)//
இல்ல தமிழர்களுக்காக கழுவேறவும் தயாராக இருக்கும்.
Post a Comment
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com