இலங்கையின் இராஜதந்திரம் தோல்வியா?
அதிகாரத்தின் பிடி சறுக்கும் வேளை தறிகெட்டு ஆடுவது அடக்குமுறையாளர்களுக்கான பொதுவான இலக்கணம் என்பதை இலங்கை அரசும், அதன் படைகளும் உறுதிப்படுத்தி வருகிறது. இலக்குகளும், கட்டுப்பாடுகளும் இல்லாத மத யானை போல தனது மக்களை தானே கொன்று, தனது தலையில் தானே வெடிகுண்டை போட்டு மகிழ்கிறது மகிந்த ராஜபக்சே அரசு. பாவம் அரச அணுகுமுறையற்ற ஒரு அரசிடம் நாம் வேறு எதை எதிர்பார்க்க இயலும்?
திரிகோணமலைப் பகுதியில் மாவிலாறு அணைக்கட்டு மதகுகளை மூடி சிங்களப் பகுதி வாழ் மக்களின் பயிர் விளைச்சலுக்கு தண்ணீர் கிடைக்காமல் செய்திருக்கிறார்கள். இதை திட்டமிட்டு செய்தது புலிகள் என்கிறது அரசு. இலங்கை அரசின் அடக்குமுறையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களே இதை செய்தனர் என்கிறார்கள் புலிகள். புலிகளின் துணையில்லாமல் இந்த நடவடிக்கை நடக்க வாய்ப்பில்லை. இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள் என கொழும்பு முதல் புதுடில்லி வரை அதிகார இரத்தம் கொதிக்கிறது. எதற்காக இந்த நடவடிக்கை?
பல வருடங்களாக தமிழ் மக்களுக்கு உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், உரம், சிமெண்ட், முதலிய அடிப்படை பொருட்களை கூட அனுமதிக்காது பொருளாதார தடையை வைத்திருக்கிறது இலங்கை அரசு. சுனாமி பேரழிவில் பாதிக்கப்பட்ட பல்லாயிரம் தமிழ் குடும்பங்களுக்கு எந்த உதவியும் அனுமதிக்காது அவர்களை பேராபத்தில் தள்ளியது அரசு. உலக நிறுவனங்களும், நாடுகளும் அனுப்பிய உதவித்தொகை, பொருட்கள் தவறாக பயன்படுத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களை பெருந்துயரில் ஆழ்த்தியது அரசு. சுனாமி பேரழிவு நடந்து சுமார் 17 மாதங்கள் கடந்த பின்னரும் வடகிழக்கில் சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழர்களது நிலையில் எந்த மாற்றமும் இல்லை. பயிருக்கு தண்ணீர் விடாமல் தடுக்கிறார்கள் என கவலைப்படுகிறவர்கள் இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற செயல்களை கண்டிக்க தவறியதன் விளைவு இலங்கை அரசை இன்று இந்த நிலைமைக்கு தள்ளியிருக்கிறது.
சுனாமி பேரழிவு புனரமைப்பு, மறுவாழ்வு ஆகியவற்றை பயன்படுத்தி இந்தோனேசிய அரசு ஆச்சே பகுதியில் நல்லெண்ண நடவடிக்கைகள் ஏற்படுத்தி போராளிகளுடன் சமாதானத்தை நிறுத்தியதிலிருந்து கூட நல்ல பாடம் கற்றுக்கொள்ள சிங்கள தலைவர்கள் தவறிவிட்டனர். இனவாதமும் ஒற்றையாட்சி முறையும் ஆட்டி வைக்க மக்களது வாழ்வு புறந்தள்ளப்பட்டது. தமிழ் மக்களின் நம்பிக்கையை பெறவேண்டிய மிக அரிய வாய்ப்பை தென்னிலங்கையின் அதிகாரப் போட்டியில் அரசு தவறவிட்டது.
தொடர்ந்து அரசு எடுத்த நடவடிக்கைகளின் எதிர்விளைவு புலிகள் தரப்பில் பலத்தை உருவாக்கியது. வடகிழக்கு பகுதியில் இராணுவமும், துணை குழுக்களும் நடத்திய படுகொலைகள் இலங்கை அரசு சமாதானம் மீது கொண்ட நம்பிக்கையை கேள்வியெழுப்பியது. பதிலுக்கு புலிகளின் தாக்குதல்களும் அதன் விளைவான உயிரிழப்புகளும் சமாதானத்தின் இருப்பை கேள்வியெளுப்ப வைத்தது. புலிகளை ஐரோப்பிய யூனியன் தடை செய்ததன் விளைவு புலிகளுக்கும் அரசிற்கும் சமாதான மேசை மீது நீங்காத பிளவை ஏற்படுத்தியது. அரசு தரப்பு அதை வெற்றியாக கொண்டாடினாலும், இனப் பிரச்சனையை தீர்ப்பதில் மிக பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழர் குடியிருப்பு பகுதிகளில் அரசு விமான தாக்குதல்களை மீண்டும் துவங்கியது. புலிகளின் இராணுவ, இராஜதந்திர வலையில் அரசின் உள்நாட்டு நடவடிக்கைகள் சிக்கி தவிக்கிறது. தமிழ் மக்கள் அரசையும் இராணுவத்தையும் நம்ப முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இந்த நிலையில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வண்ணமாக மாவிலாறு மதகு மூடப்பட்டது. பேச்சுவார்த்தையில் பிரச்சனையை முடிப்பதற்கு பதிலாக அரசு புலிகளின் பொறியில் சிக்கி இராணுவத் தீர்வு மீது நம்பிக்கை கொண்டு வான்வெளி தாக்குதலை தொடர்ந்து அப்பாவிகளை கொன்று குவித்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக புலிகளுக்கும் இராணுவத்திற்கும் நடந்த சண்டையில் இராணுவம், புலிகள், பொதுமக்களுக்கு என அளவற்ற உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டிருக்கிறது.
இந்த யுத்தம் தண்ணீருக்கானதா இல்லை அதற்கும் மேலாக வேறு அம்சங்களை உள்ளடக்கியதா? தண்ணீருக்கான யுத்தமாக இருந்தால் நார்வே தூதரின் பேச்சுவார்த்தைக்கு இணங்கி மாவிலாறு மதகுகளை திறக்க சென்ற புலிகள் தளபதி.எழிலன் மற்றும் நார்வே கண்காணிப்பு குழுத் தலைவர் மீது இலங்கை படைகள் செல் குண்டுகளை வீச அவசியமென்ன? மாவிலாற்று அணைக்கட்டை இராணுவ நடவடிக்கை மூலம் கைப்பற்றினால் இலங்கை அரசுடன் ஜே.வி.பி கட்சி இணைந்து கொள்ளும் என அக்கட்சியின் தலைவர் சோமவன்சா தெரிவித்ததை அடுத்தே அரசு இராணுவ நடவடிக்கையை மீண்டும் ஆரம்பித்துள்ளது என தமிழர் தரப்பு நம்புகிறது.
கண்காணிப்பு குழுத் தலைவர் இருந்த பகுதியில் இராணுவம் குண்டு வீசிய பிரச்சனை அடங்கும் முன்னர் பதினைந்து தனியார் தொண்டு நிறுவன ஊழியர்களை தரையில் படுக்க வைத்து சரமாரியாக சுட்டு இராணுவம் நிகழ்த்திய படுகொலை வெளிவந்திருக்கிறது. இந்த இரத்தவெறிக்கு மகிந்த ராஜபக்சா அரசு என்ன பதில் சொல்லப்போகிறது?
'மாவிலாற்று அணைக்கட்டை திறப்பதற்கு இலங்கை அரசு மேற்கொண்டிருக்கும் இராணுவ நடவடிக்கை முழுமையான யுத்த நிறுத்த மீறல் என கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகள் மாவிலாற்று நீரை திறந்து விடுவதற்கு முன் வந்த வேளையில் இலங்கை அரசு விடுதலைப்புலிகள் மீது வலிந்த தாக்குதலை மேற்கொண்டிருப்பதாக கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் றொபினேர் ஒமன்சன் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண இலங்கை அரசு விரும்பவில்லை எனவும் மக்களுக்கு நீர் கிடைப்பதை விட இந்த அணைக்கட்டு விவகாரம் மூலம் யுத்தம் செய்யவே சிறீலங்கா அரசு விரும்புவதாகவும் தெரிவித்த கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் றொபினேர் ஒமன்சன் தற்போதைய நிலைக்கு சிறீலங்கா அரசாங்கமே பொறுப்பு எனவும் தெரிவித்துள்ளார். '
நீண்டகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர கூட்டணி கட்சிகளின் நெருக்கடிகளுக்கு இடம் கொடுக்காமல் அரசு பேச்சுவார்த்தைகளில் முழு கவனம் செலுத்தி இருதரப்பு நம்பிக்கை நடவடிக்கைகளை உருவாக்கினால் மட்டுமே நிரந்தர சமாதானத்தை உருவாக்க இயலும். அரசிற்கும் அதன் அதிகார தலைமைக்கும் சமாதானம் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை அவசியம்.
இலங்கை அரசுக்கு சமாதானம் மீது பற்று வர இந்திய அரசும், அதன் உளவு அமைப்புகளும் வழங்குகிற ஆலோசனை, இராணுவ உதவி நிறுத்தப்பட்டு சமாதானத்தை நோக்கிய அரசியல் மற்றும் துறை ரீதியான அழுத்தம் கொடுக்கப்படவேண்டும். பேச்சுவார்த்தை நடைபெறும் முன்னரே இந்தியா போன்ற ஒருங்கிணைந்த தீர்வு, ஒன்று பட்ட இலங்கையில் தமிழர்களுக்கு சமாதானம் என தனது சொந்த பூகோள அரசியல் நலனை திணிப்பதை இந்திய அரசு நிறுத்துவது மிக அவசியம். பிரச்சினையின் தன்மை, அதன் இன்றைய நிலமைகள் இவற்றை கணக்கிலெடுத்து சண்டையிடும் இருதரப்பினருக்கும் நம்பிக்கையுள்ள நாடாக இந்தியா உருவாவது மிக அவசியம். இரு தரப்பையும் கலந்து பேச வைத்து தீர்வை அவர்களே இணைந்து உருவாக்க உதவுவது மட்டுமே நன்மை தரும். இந்தியாவின் சொந்த தீர்வு திட்டங்களை திணிப்பது புதுடில்லியின் ஆதிக்கவெறி சிந்தனையாளர்களால் பூகோள அரசியலில் இந்தியாவிற்கு என்றும் நீங்காத தோல்வியை தேடி தரும்.
இலங்கை இனப் பிரச்சனையில் இருதரப்பு பிரச்சினைகள், அதன் அடிப்படை காரணங்கள், இருதரப்பு உரிமை மீறல்களை பக்க சார்பற்ற செய்தியாக மக்களுக்கு வழங்கும் கடமை இந்திய பத்திரிக்கைகளுக்கு உண்டு. இந்து போன்ற பத்திரிக்கைகள் இனப் பிரச்சினையில் இலங்கை அரசின் அறிவிக்கப்படாத நாளேடாக செயல்படுவதை நிறுத்துவது தமிழ் மக்களுக்கும், சிங்கள மக்களுக்கும் அவர்களது வாழ்வை அழிக்காமல் செய்யும் பேருதவியாக இருக்கும்.
புலிகள் தரப்பு தமிழர்களது லட்சியமான தமிழீழம் வேண்டுமென்கிறார்கள். இனப் பிரச்சனைக்கு அரசு தரும் தீர்வு என்ன? ஒன்று பட்ட இலங்கை என்று சொன்னதை திரும்ப திரும்ப சொல்லி சிறுபான்மை இனத்தவர்களுடன் அதிகாரத்தை பகிர்ந்துகொள்ள தாயாரில்லை என்பதை தெளிவுபடுத்தி வருகிறது சிங்கள ஆதிக்கம். இனப் பிரச்சனைக்கு எந்த அரசியல் தீர்வுகளும் இல்லாமல் நாளுக்கொரு விதமான பேச்சும் அறிக்கை என லகான் இல்லாத குதிரை போல தறிகெட்டு ஓடுகிறது இலங்கை அரசு. இராணுவத் தீர்வை மட்டுமே நம்பி அரசியல் சுழலும் நாடு அழிவில் தான் முடிந்திருக்கிறது. 'இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன் கெடுப்பாரினாலும் கெடும் ' இந்த குறள் இனப் பிரச்சனையில் இலங்கை அரசுக்கு பொருத்தமாக அமையும். இந்த உண்மையை புதுடில்லியின் ஆலோசகர்களும், திட்ட வரைவாளர்களும் உணர்வார்களா? இல்லையேல் இலங்கை அரசின் நடவடிக்கைகள் சாதாரண மக்களது வாழ்வில் பெருந்துயரை உருவாக்குது தொடரும். இலங்கை தேசத்தில் ஒரு தோல்வியான அரசை உருவாக்கிய பெருமை இலங்கையின் நெருங்கிய நட்பு நாடு என்ற அடிப்படையில் இந்தியர்கள் அனைவருக்கும் கிடைக்கும். ‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே’ என்ற வரிகளின் வீரிய சிந்தனை நமக்கு எப்போது விளங்கும்?
சமாதானத்திற்கான குரலுடன்,
திரு
5 பின்னூட்டங்கள்:
நல்லதொரு பார்வை தொடர்ந்தும் எழுதுங்கள்.
விரிவான அதே சமயம் விசாலமான அலசல். தொடருங்கள்.
நல்ல அலசல் தொடருங்கள்
//இலங்கை அரசுக்கு சமாதானம் மீது பற்று வர இந்திய அரசும், அதன் உளவு அமைப்புகளும் வழங்குகிற ஆலோசனை, இராணுவ உதவி நிறுத்தப்பட்டு சமாதானத்தை நோக்கிய அரசியல் மற்றும் துறை ரீதியான அழுத்தம் கொடுக்கப்படவேண்டும். பேச்சுவார்த்தை நடைபெறும் முன்னரே இந்தியா போன்ற ஒருங்கிணைந்த தீர்வு, ஒன்று பட்ட இலங்கையில் தமிழர்களுக்கு சமாதானம் என தனது சொந்த பூகோள அரசியல் நலனை திணிப்பதை இந்திய அரசு நிறுத்துவது மிக அவசியம். பிரச்சினையின் தன்மை, அதன் இன்றைய நிலமைகள் இவற்றை கணக்கிலெடுத்து சண்டையிடும் இருதரப்பினருக்கும் நம்பிக்கையுள்ள நாடாக இந்தியா உருவாவது மிக அவசியம். இரு தரப்பையும் கலந்து பேச வைத்து தீர்வை அவர்களே இணைந்து உருவாக்க உதவுவது மட்டுமே நன்மை தரும். இந்தியாவின் சொந்த தீர்வு திட்டங்களை திணிப்பது புதுடில்லியின் ஆதிக்கவெறி சிந்தனையாளர்களால் பூகோள அரசியலில் இந்தியாவிற்கு என்றும் நீங்காத தோல்வியை தேடி தரும்.//
If INDIA will take steps like the above,definitely the Problem will come to end.If Possible Send this article to all leading News Papers and other Magazins.Regards Mr.Thiru.
//
பேச்சுவார்த்தை நடைபெறும் முன்னரே இந்தியா போன்ற ஒருங்கிணைந்த தீர்வு, ஒன்று பட்ட இலங்கையில் தமிழர்களுக்கு சமாதானம் என தனது சொந்த பூகோள அரசியல் நலனை திணிப்பதை இந்திய அரசு நிறுத்துவது மிக அவசியம்.
//
மிகத் தெளிவான நல்ல கட்டுரை.
பாராட்டுக்கள்.
Post a Comment
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com