Monday, September 11, 2006

புதிய உலக ஒழுங்குமுறை?

உலக நடைமுறைய மாற்றிய செப்டம்பர் 11 தாக்குதலின் 5வது வருடம் இன்று. ஒரு காலைப் பொழுதில் அலுவலகம் சென்ற பல ஆயிரம் அப்பாவிகளை பலி வாங்கிய நாள். இந்த சதியை செய்தது யார் என்பதில் இன்னும் பல குழப்பமான ஆய்வுகள் முன் வருகின்றன. எப்படி ஒசாமா பின்லேடன் என்கிற உலக தீவிரவாதியை நோக்கி கைகளை அமெரிக்கா நீட்டுகிறதோ அதே போல அமெரிக்க மக்களில் பலர் அமெரிக்க அரசின் மீதும் இந்த தாக்குதலை திட்டமிட்டதாக சுட்டுகிறார்கள். யார், எதற்காக செய்திருந்தாலும் அப்பாவி மக்கள் மீது உலகமெங்கும் நடைபெற்று வருகிற அனைத்து தாக்குதல்கள் கண்டிக்கப்படவேண்டிவை தான்.

செப்டெம்பர் தாக்குதல் உலகின் ஒழுங்குமுறையை மாற்றியிருக்கிறது. அமெரிக்காவை சர்வதேச காவல்காரனாக உயர்த்துகிற ஒழுங்குமுறையை உருவாக்க தந்தை அப்பா புஸ் ஆரம்பித்தார். அந்த கனவை மகன் ஜார்ஜ் புஸ் முடித்து வைத்திருக்கிறார். ஜனநாயகம், அமைதி என்பது அனைத்தும் அமெரிக்கா சொல்லுகிற விளக்கமே என தலையாட்ட உலகில் பல கூட்டணி நாடுகளை தன்னருகே ஒன்று சேர்க்க அமெரிக்காவிற்கு செப்டெம்பர் தாக்குதல் உதவியிருக்கிறது. இந்த தாக்குதலில் இழந்த உயிர்களை தவிர, அமெரிக்கா பெற்ற இலாபம் அதிகம் எனலாம். உலக அரங்கில் தனது எதிர்கொள்கை கொண்டவர்களை அடக்கி வைக்க பயங்கரவாத அழிப்பு நடவடிககை என்ற ஆயுதம் அமெரிககவிற்கு கிடைத்திருக்கிறது. அவை இராணுவ ஆதிக்கம், பொருளாதார ஆதிக்கம் என பரந்து விரிந்து எழுகிறது. அமெரிக்கா இன்று உருவாக்கி வைத்திருக்கிற புதிய உலக ஒழுங்குமுறை உலகில் அமைதியையும், ஒழுங்குமுறையையும் உருவாக்கவும் கண்காணிக்கவும் செயல்பட்டு வருகிற ஐக்கிய நாட்டு சபையின் இருப்பையே கேள்வியெழுப்பியிருக்கிறது.

செப்டெம்பர் தாக்குதல் நடந்த சில மணி நேரங்களில் ஜார்ஜ் புஸ் உலக நாடுகளின் அரசுகளை பார்த்து எச்சரிக்கையாக உதிர்த்த வார்த்தைகள் சாதாரணமானவையல்ல. “நீங்கள் எங்களோடு இருக்கிறீர்களா? இல்லை அவர்களொடு இருக்கிறீர்களா?“ இதன் பொருள் என்ன? எங்களோடு இல்லாவிட்டால் அவர்களோடு இருக்கிறீர்கள் என்பதா? இரண்டும் ஆதிக்கத்தின் உச்சம், ஒன்று அமெரிக்காவின் அரசியல், இராணுவ, பொருளாதார ஆதிக்கம், இன்னொன்று ஒரு பயங்கரவாத கும்பலின் பயங்கரம். இதில் ஒன்றை தேர்ந்தெடுங்கள் என கூவியழைக்க அதிபர் ஜார்ஜ் புஸ்க்கு அதிகாரமளித்தது யார்? பயங்கரவாதமும் வேண்டாம், ஆதிக்கமும் வேண்டாம் மக்களை அவர்களது வழியில் வாழ விடுங்கள்!

செப்டம்பர் 11 தாக்குதலை காரணமாக வைத்து இன்னொரு நாடு மீது போர் தொடுத்து அந்த மக்களின் வாழ்வை வீதிக்கு கொண்டுவந்து பயங்கரவாதத்தை விளைவிக்க களத்தை உருவாக்கிய பெருமை இன்று அமெரிக்காவிற்கு கிடைத்திருக்கிறது. ஈராக்கில் இருந்த கட்டமைப்பு, ஆட்சியதிகாரத்தை அப்புறப்படுத்த இரசாயன ஆயுதம், பேரழிவு ஆயுதங்கள் என்ற பெயரில் கதை கட்டி யுத்தம் தொடுத்தது அமெரிக்கா. ஈராக்கின் ஆயுதங்களை அழிக்காவிட்டால் அமெரிக்கவிற்கும் உலக்த்திற்கும் சதாம் உசேனால் ஆபத்து என கதைகளை கிழப்பி விட்டனர் ஜார்ஜ் புஸ் மற்றும் அரச அதிகாரத்தில் இருந்தவர்கள். அதன் விளைவாக அமெரிக்க மக்களின் அச்ச உணர்வை உருவாக்கி எடுத்த இராணுவ நடவடிக்கை இன்று அமெரிக்காவை உலகில் நிர்வாணமாக்கியிருக்கிறது. எங்கே இரசாயன ஆயுதங்களும், உயிர்கொல்லி ஆயுதங்களும், பேரழிவு ஆயுதங்களும்? எதையாவது கண்டுபிடிக்கவோ அழிகக்வோ முடிந்ததா? இல்லை இதி உளவு நிறுவனங்களின் குழறுபடி என்ற ஒற்றை வரியில் பதில் முடிகிறது. இந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வை திருப்பி தர இயலுமா?

சதாம் உசேனுக்கும் அல்கொய்தா இயக்கத்துக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட காரணமும் பொய்யாகியிருக்கிறது. அடுக்கடுக்காக பொய்களை கூறி இன்னொரு நாட்டின் மீது படையெடுத்து அந்த நாட்டு மக்களின் வாழ்வையும் அழித்து, அழிவு பாதையில் தள்ளிய குற்றத்தின் சொந்தக்காரர்கள் அமெரிக்கா மற்றும் கூட்டணி நாடுகளும். அமெரிக்க மக்களின் பாதுகாப்பு மட்டுமா உயர்ந்தது? ஈராக்கிய மக்கள் மனிதர்களில்லையா? இது தானா அந்த புதிய உலக ஒழுங்குமுறை? ஆதிக்கமே உன் வேர் தான் எங்கே? மனிதகுலத்தின் முதல் எதிரி ஆதிக்கம்! பயங்கரவாதம் பிறப்பதும் ஆதிக்கமனங்களிலிருந்து தான்! அது அமெரிக்காவிற்கும் பொருந்தும்!

விடுதலையை மட்டும் திருப்பி தந்துவிடு!

நிச்சயமற்ற பொழுதில்
பதுங்கு குழியில் பதறும் - என்
நெஞ்சம் - பேரழிவே!
நீ தான் விடுதலையா?
பிணம்தின்னி கழுகின்
கொடிய அலகிலிருந்து
பாம்பின் நச்சு பற்களில் - எங்கள்
எதிர்காலம்!

விடியலைத் தேடி
விம்மி அழுத
நெஞ்சம் – படைகளை
கண்டு பதறுகிறது!
கனகுண்டுகளை கண்டு
கணங்கள் உறைகிறது...

கண் விழித்து பார்க்கும்
போதெல்லாம்
உலங்கு வானூர்திகளும்
கனல் குண்டுகளும்…

கனவில் கூட
புதைகுழிகள்...
பேரழிவே!
உன் பெயர் தான்
சுதந்திரமா?

அழிவே எங்கள்
தாயகத்தின்
தேச அடையாளமாய்...
ஆயுதங்கள் மட்டுமா
பேரழிவு? - உந்தன்
தடைகளில் மடிந்தவர்
எதனால்....?

உனக்கும், அவனுக்கும்
வேறுபாடென்ன?
ஆடிப்படையில் கொள்கை
ஒன்று தானே!
மரணம்
மரணத்தை நிறுத்துமா?
பேரழிவாளன்
அழிவை
தடுக்க முடியுமா?

கருப்பு தங்கம் மீதினில்
கதற வைத்த
காலதேவனே - வந்துவிடு
அழிந்த - எந்தன்
மழலை வேண்டாம்...
விடுதலையை மட்டும்
திருப்பி தந்துவிடு!


திரு

2 பின்னூட்டங்கள்:

Anonymous said...

அருஇமையான பதிவு.

Anonymous said...

அருமையான பதிவு.

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com