கண்ணீருடன் அனைவரின் ஆதரவிற்காக!
கண்ணீருடனும் ஆழ்ந்த கவலையுடனும் இந்த பதிவை எழுதுகிறேன். நாம் வசதியாக வேளா வேளைக்கு நல்ல உணவை சாப்பிடுகிற இந்த வேளைகளில் தமிழீழ மண்ணில் பட்டினியால் குழந்தைகள், தாய்மார்கள், வயோதிகர்கள் என செத்துக்கொண்டிருக்கிறார்கள். யாழ்பாணம் பகுதிக்கு செல்லுகிற பிரதான சாலையான A9ஐ மூடி வைத்தி தமிழர் பகுதிகளுக்கான உணவு பொருட்கள் செல்லாது இலங்கை அரசு தடுத்து வைத்திருக்கிறது. தொடர்ந்து மாற்று சாலைகளும் மூடப்பட்டு வருவதாக தமிழீழத்திலிருந்து வருகிற செய்திகள் தெரிவிக்கின்றன.
வாகரையில் இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கான உணவுப் பொருட்கள் செல்லாது போனால் பாரிய மனித அவலங்கள் ஏற்பட்டுவிடும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐ.நா. பேச்சாளர் ஓர்லா கிளிண்டன் இது தொடர்பில் கூறியுள்ளதாவது:
வாகரையில் இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கான உணவுப் பொருட்கள் அவசியத் தேவையாக உள்ளது. ஒக்ரோபர் 31 ஆம் நாளுக்குப் பின்னர் எதுவித உணவுப் பொருட்களும் அங்கு சென்றடையவில்லை. ஏற்கனவே வாகரை நிலைமை மிகவும் மோசமடைந்திருப்பதை நாம் அறிவோம். பாரிய மனித அவலம் ஏற்படுவதைத் தடுக்க வாகரைக்கு ஐ.நா. மற்றும் இதர நிறுவனங்கள் தொடர்ந்து அங்கு சென்றடையவேண்டும்.
நவம்பர் 20 ஆம் நாளன்று இரு வாகனத் தொடரணிகள் மூலம் உணவுப் பொருட்கள் சென்றிருந்த போதும் மேலதிகமாக செல்ல வேண்டிய தேவை உள்ளது.
வாகரைக்கு உணவுப் பொருட்களின் வாகனங்கள் செல்வது தாமதமடையும் போது பொதுமக்களுக்கு பாரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்றார் ஒர்லா கிளிண்டன்.
அண்மையில் வாகரைப் பிரதேசத்துக்கு உணவுப் பொருட்களுடன் சென்ற பாரஊர்திகளை மாங்கேணி சிறிலங்கா இராணுவ முகாமில் தடுத்து இராணுவத்தினர் திருப்பி அனுப்பி வைத்தனர். தொடர்ச்சியாக இராணுவத்தினர் அந்த அடாவடித்தனத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் ஏ-9 பாதையை சிறிலங்கா இராணுவம் மூடியதற்கும் அதன் பின்னருமான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை விவரம்:
(இரண்டாவதாக தரப்பட்டுள்ள விலை முன்னையது- மூன்றாவதாக உள்ளவை தற்போதைய விலை)
அரிசி 1 கிலோ- ரூ. 35 - ரூ. 180
மா 1 கிலோ - ரூ. 40 - ரூ. 150
சீனி 1 கிலோ - ரூ. 60 - ரூ. 400
பால் மா 400 கிராம் ரூ. 145- ரூ. 400
1 தேங்காய் - ரூ. 15- ரூ. 90
தேங்காய் எண்ணெய் 1 லிற்றர்- ரூ. 75- ரூ. 450
செத்தல் மிளகாய் 1 கிலோ - ரூ. 160 - ரூ. 480
புளி 1 கிலோ - ரூ. 60- ரூ. 150
வெள்ளைப்பூடு 1 கிலோ - ரூ. 60- ரூ. 2,000
கொத்தமல்லி 1 கிலோ- ரூ. 180 - ரூ. 600
தேயிலைத் தூள் 1 கிலோ - ரூ. 300- ரூ. 800
மிளகு 1 கிலோ - ரூ. 280- ரூ. 450
கறுப்புக் கடலை 1 கிலோ ரூ. 70- ரூ. 250
பச்சைகடலை 1 கிலோ ரூ. 80- ரூ. 250
1 முட்டை - ரூ. 6 - ரூ. 55
சன்லைட் 1 ரூ. 19- ரூ. 60
பேபி சோப் 1 ரூ. 23- ரூ. 60
சம்பூ 1 பைக்கட் ரூ. 2.50 - ரூ. 10.00
சோப் தூள் 20 கிராம் ரூ. 6- ரூ. 16.00
இஞ்சி 1 கிலோ ரூ. 100- ரூ. 2,500
பெற்றோல் 1 லிற்றர் ரூ. 100 - ரூ. 650
டீசல் 1 லிற்றர் ரூ. 45- ரூ. 150
மண்ணெண்ணெய் 1 லீற்றர்- ரூ. 40- ரூ. 190
1 தீப்பெட்டி - ரூ. 2.50- ரூ 40
பாதியாக வேக வைக்கப்பட்ட அரிசி 1 கிலோ ரூ. 35- ரூ. 220
1 ரின் மீன் - ரூ. 75- ரூ. 225
எள் எண்ணெய் 1 லீற்றர் ரூ- 250 ரூ. 600
தற்போது..
1 கிலோ மீன் - ரூ. 1,000
வெங்காயம் 1 கிலோ ரூ. 30
வெண்டைக்காய் 1 கிலோ ரூ, 320
தக்காளி 1 கிலோ ரூ. 400
முட்டைகோஸ் ரூ. 80
ரொட்டி 1 பைக்கட் ரூ. 30
இந்த நிலையில் இந்திய அரசாங்கத்திடமிருந்து தென்னிலங்கைக்கு இராணுவ, தொழில்நுட்ப உதவிகளை பெற இலங்கை அரச அதிபர் மகிந்த ராஜபக்ச புதுடில்லி வருகிறார். தமிழகத்திலிருந்து வருகிற எதிர்ப்பு குரல்களை வெறியில் கிண்டலடித்து பேசியிருக்கிறார் இலங்கை அதிபர். தனது ஆளுகைக்கு உட்பட்டதாக கூறுகிற நாட்டில் ஒரு பகுதி மக்களை பொருளாதார தடைகளால் கொன்று குவிக்கிற அதிபரை வரவேற்க, வழக்கம் போல ஆதரவு வழங்க நமது அரசும் கதவுகளை திறந்து வைத்திருக்கிறது.
மனிதாபிமான அடிப்படையில் அப்பாவி ஈழத்தமிழர் வாழ்வை காப்பாற்ற நாம் என்ன செய்யப்போகிறோம்? வலைப்பதிவாளர்கள் நாம் கொள்கை, குழப்பங்களை நீக்கி வைத்திவிட்டு மனிதாபிமான அடிப்படையில் இந்த பட்டினி படுகொலைகளுக்கு எதிராக குரல்கொடுக்க உங்களது ஆலோசனைகளை எதிர்பார்க்கிறேன்.
கண்ணீருடனும், கவலையுடனும்,
திரு
நன்றி: செய்திகள் தந்த ஊடகங்களுக்கு!
27 பின்னூட்டங்கள்:
மிகவும் கொடுமையான செய்தி.... என்ன செய்யலாமென மற்றவர்களின் ஆலோசனைகளுக்காக நான் காத்திருக்கிறேன்...
ராஜபக்சே கூட்டும் ஆசிய மேயர்கள் மாநாட்டிற்கு தமிழக மேயர்கள் செல்லாததையே சிங்களர்களுக்கான ஆகப்பெரிய எதிர்ப்பாய் சித்தரிக்கிற நம் அரசியல்வாதிகள் அனைவரையும் தூக்கில் போடவேண்டும்.
மிகப்பெரிய மீடியா நெட்வொர்க்கை கையில் வைத்திருக்கும் சன் குழுமம், ஈழத்தமிழர்களின் துன்பங்களையும்,துயரங்களையுமம் கண்டுகொள்ளாமல் இருப்பது எதேச்சையானது அல்ல.
வலியை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி திரு..
திரு!
இறுதியாக நான் அறிந்து கொண்ட தகவலின்படி, தாவடி, கோண்டாவில், இணுவில், ஆகிய சில ஊர்களில், ஒருவகைக் காச்சலும் பரவத் தொடங்கியுள்ள நிலையில், உணவு, மருத்துவப் பொருட்கள் இல்லாமை மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பதாகும்.
தங்கள் அக்கறையான பதிவுக்கு நன்றி
என்ன செய்யவேண்டும் என சொல்லுங்கள் திரு, காத்திருக்கிறேன். தயாராயிருக்கிறேன். இலங்கை பதிவர்கள் தயவு செய்து வழிகாட்டுங்கள். எப்படியாவது எமது சகோதரர்க்கு கடமையாற்ற காத்திருக்கிறோம். எப்படி, எவ்வழியில் என்பதை மட்டும் சொல்லுங்கள்.
ஏ-9 சாலையடைப்பு மொத்த மக்களின் பட்டினிக்கு மூலகாரணமாகிற கொடுமையை தமிழகத்தின் ஜெயா / சன் ஊடகங்கள் மக்களிடத்தும் மத்திய அரசின் கவனத்திற்கும் ஏன் எடுத்துச்செல்லாமல் மௌனம் காக்கிறார்கள்?
இவர்களது தேவையற்ற தாயாதி சண்டையை மாற்றி மாற்றி காட்டுவோர் ஏன் இச்செய்தியை மறைக்கின்றார்கள்?
கொடுமையில் பெரிய கொடுமை பசிக் கொடுமை! என்ன செய்யலாம்?
75 million tamils showing very meager interest about starving fellow tamils...
same feelings here.
Akilan
திரு அவர்களே,
வாகரைக்கு எப்படி உதவிகளை கொண்டுச் செல்வது? நிதி அல்லது பொருள் உதவிகளை எப்படி செய்வது? கொஞ்சம் தெளிவுப்படுத்துங்கள்.
வலைப்பதிவர்களும் சாதரண மக்களும் ஆன
நாம் நமது துயரத்தையும் கண்ணீரையும்
மட்டுமே பகிர்ந்து கொள்ள முடிகிறது.
தமிழீழப் பட்டினிச் சாவுகள் நிற்கும் வரையேனும், வலைப்பதிவுகளில் அனைத்து
வலைப்பதிவர்களையும் தமிழீழ மக்களுக்கு
வாஞ்சையானவற்றை மட்டுமே எழுதும் படியாகக் கேட்டுக் கொள்ளலாம்.
அசைவற்றுக் கிடக்கும் பன்னாட்டுக் குமுகம்,
அசிங்கமாக உறங்கிக் கிடக்கும் தமிழகம்,
நாடகம் ஆடும் இந்தியா என்ற நிலையில்
குறைந்தது நல்ல மனம் கொண்டோர் இந்தப் பகிர்வினைச் செய்ய முன் வரவேண்டும்.
கண்ணுக்கு முன்னால் படு பாதகம் நடக்கையிலே, வலைப்பதிவர்கள்,
கோழைகளாக, ஊதாரித்தனமாக காதலிலும், கிசு கிசு, வெட்டி அரட்டை இவற்றில் மட்டும் கவனம் செலுத்திக் கொண்டிருக்க தமிழர்களுக்கு மனம் சற்று உறுத்த வேண்டும்.
ஒரு 500 பதிவர்கள் ஓயாது இந்த எழுத்துப் பணியை, கண்டனப் பணியை செய்வார்களானால், அதுவே மற்றவர்களுக்குப் பாடமாக இருக்கும்.
நிச்சயம் வலைப்பதிவர்களில் 500 பேர் தமிழர்களாகப் பிறந்தவர்களாக இருப்பார்கள் என்று நம்பிக்கை எனக்கு உண்டு.
நண்பர்களே அனைவருக்கும் கருத்துக்களுக்கு நன்றி! வாகரை பகுதி மக்களுக்கு உணவு, அடிப்படைப் பொருட்கள் கிடைக்க உங்களால் தெரிந்த வழிகளையும் சொல்லுங்கள்!
உதவி பணம், பொருளாக இருக்க வேண்டுமென்பதில்லை. இலங்கை அரசு, இந்திய அரசு, ஐ.நா ஆகிவற்றிற்கு கொடுக்கிற அழுத்தம் வழியாகவும் அமையலாம்.
நாம் அனைவரும் சேர்ந்து தீர்வுகளை, திட்டங்களை உருவாக்குவோம். இந்த பதிவு பாதிக்கப்படுகிற அபலை மக்களுக்காகவே! யாருக்காகவும் காத்திருக்காமல் வேற்றுமைகளை கழைந்து ஆலோசனைகளை ஒன்று சேர்ப்போம்.
எனது ஆலோசனைகளாக:
1) இலங்கை அரசுக்கு மின்னஞ்சல்கள் வழி அழுத்தம் கொடுப்பது
2) இந்தியா வருகிற இலங்கை பிரதமருக்கு அழுத்தம் கொடுக்குமாறு இந்திய, தமிழக அரசிற்கு நமது குரல்களை தெரிவிப்பது.
3) உதவிகள் வழங்குவதற்கான வாய்ப்புக குறித்து செஞ்சிலுவை சங்கம் போன்ற சர்வதேச தொண்டு நிறுவனங்களை தொடர்பு கொண்டு வலைப்பதிவாளர்கள் மத்தியில் முடிந்த அளவு உதவிகளை ஒன்று திரட்டுவது.
இவை அனைத்தும் தனி ஒரு நபரால் செய்வது எளிதானதல்ல. ஆகவே நமது திறமைகளை ஒன்று திரட்டி செயல்படுவோம்.
என் ஆலோசனைகளில் குறைகள் இருப்பின் மன்னித்து ஆக்கப்பூர்வமான தகவல்களை வழங்குங்கள். இதற்காக உங்களது பங்கு என்ன என்பதையும் தெரிவியுங்கள்.
அரசுகள், ஐநா முதலியவற்றிற்கு அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரிகளை ஒன்று திரட்ட ஆரம்பித்துள்ளேன்.
Sundar had created an online petition to UN a while ago. We can create one and have many people sign and submit it to UN general secretary.
நினைக்கையிலேயே நெஞ்சம் கனக்கிறது. தமிழக அரசும் என்னதான் செய்கிறது! மத்திய அரசில் முக்கியப் பங்கு மட்டும் போதுமா! என்ன பங்கோ போங்கள்!
என்ன செய்ய வேண்டும் என்று கூடத் தோன்றவில்லையே. மற்ற நண்பர்களின் ஆலோசனைக்களை எதிர் பார்க்கிறேன்.
திரு,
கொடுமையான விஷயம்...
நம் வலையுலகில் மீடியாவிலிருந்து இருக்கும் நபர்களிடம் இதை பற்றி விளக்கி அதை மக்களிடம் எடுத்து செல்ல செய்யலாம்.
பொது மக்களுக்கு அவேர்னஸ் இருந்தாலே எப்படியும் நம் அரசியல் தலைவர்கள் ஏதாவது நல்லது செய்ய முயலுவார்கள்.
எனக்கு தெரிந்த வகையில் நம் வலைப்பூ செய்திகள் தினமலர், விகடம், குங்குமம் ஆகிய இதழ்களில் வருகிறது...
நாம் அனைவரும் ஏதாவது ஒரு வகையில் முயற்சி செய்து மக்கள் மத்தியில் இலங்கையில் நடப்பதை எடுத்து சொல்லி விழிப்புணர்ச்சி ஊட்டவேண்டும்...
தமிழக அரசு தலையிட்டால் ஏதாவது நன்மை கிடைக்காதா?
வேறு ஏதாவது செய்ய வேண்டுமென்றாலும் செய்யலாம்...
எப்போதும்போல் ஊலைவிட்டுக்கொண்டிருக்கும் தொழிலை விட்டுவிட்டு, ஒரு படி மேலே சென்று, தமிழர்களை காப்பாற்ற தமிழ்நாட்டு தமிழர்களும் உயிர்விட தயாராகவேண்டும். சும்மா இப்படியே பிதற்றிக்கொண்டிருந்தால் சிங்களவர்கள் தமிழ் இனத்தை வேரோடு அழித்தபிறகுதான் சண்டைகளை நிறுத்துவார்கள். ராஜதந்திரம், பேச்சுவார்த்தை போன்ற இந்த ஜம்பம் எல்லாம் நேரத்தை ஓட்டுவதற்குத்தான் பயண். எல்லைகளையும், அரசாங்கங்களையும், சுவர்களையும் உடைத்துவிட்டு காரியத்தில் இரங்கவேண்டும்.
really sad to know.
என்ன செய்வது என்பதுதான் புரியாமல் விழிக்கிறோம் அய்யா!!! உலகமே பாத்துகொண்டிருக்கிறது வாய்மூடி மைளனமாக, உங்களைப்போன்ற எத்தனையோ நல் உறவுகள், தமிழ்நாட்டில் இயன்றளவு போராடுகிறார்கள். மானில அரசு சொல்லியே கேளாத மத்திய அரசு, எமது தமிழக உறவுகள் சொல்லியா கேட்கபோகிறது. ஜக்கியநாடுகள் சொல்லியே சிங்கள அரசு கேட்கவில்லை. ஒருவேளை கஞ்சி ஊத்திய, புலம்பெயர் தமிழரின் வியர்வையில் இயங்கும் தமிழர் புனர்வாழ்வுகழகத்தின் கணக்குகளையே முடக்கிவிட்டது. பணம் இருந்தால் கூட வாங்கிகொடுக்க அனுமதியுமில்லை, வாங்க உணவும் இல்லை யாழ்ப்பானத்தில்.
நாளைய தலைவரின் பேச்சுக்காக காத்திருக்கிறோம். இலங்கை அரசின் மூலம் உணவு அனுப்புவதை விட, அனுப்பாமல் இருப்பது எமது தமிழக உறவுகளின் வரிப்பணத்தையாவது மீதப்படுத்த உதவும், தாங்களாக் முன்வந்து உதவுபவர்கள் இதன் மூலம் ஒரு ரூபா கொடுத்தாலும். அங்கு கஸ்ரப்படும் உறவுகளை போய்சேரும். அதற்கான இணைப்பு இங்கே.
http://www.troonline.org/volunteer.htm
நீங்கள் கொடுத்த விலைப்பட்டியலில் உள்ளவாறு அதிகவிலை கொடுத்துக்கூட பொருட்கள் வாங்க கிடைப்பதில்லை. முதலில் முதியவர்களும் குழந்தைகளும்தான் பாதிக்கப்படுவார்கள். ஏற்கனவே வடமராட்சிப்பகுதியிலுள்ள ஒரு முதியவர் பட்டினியினால் இறந்ததாக செய்தி வந்திருந்தது. உரக்க குரல் கொடுப்பதுதான் ஒரே வழி என்று நினைக்கிறேன்.
இலங்கை அரசுக்கு மின்னஞ்சல்கள் மூலம் அழுத்தம் என்பது போகாத ஊருக்கு வழி. அது போலவே நேரடையாக பணம் & பொருட்கள் அனுப்புவதும். இலங்கை அரசு பாதையை திறக்காத வரை அவர்களின் அவலம் தொடரத்தான் செய்யும்.
இலங்கை அரசுக்கு பன்னாட்டு அரசுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் அதன் மூலம் மட்டுமே தமிழர்களுக்கு தற்காலிகமாவது விடிவு கிடைக்கும்.
நாம் இந்திய , தமிழக, பன்னாட்டு அரசுகளுக்கு & அமைப்புகளுக்கு கொடுமையை விளக்கி உதவும் படி வேண்டுகோள் விடுவோம்.
தமிழர்கள் படும் இன்னல்களை விளக்கி பன்னாட்டு மிடையங்களுக்கு சொல்லவேண்டும், பன்னாட்டு நாளிதழ்களிலும் வார இதழ்களிலும் வரும் செய்தியானது மிகப்பெரும் பலம் உடையது.
தமிழக இந்திய மிடையங்களிலும் செய்தி வர வேண்டும் ஆனால் இங்கு புலி எதிர்ப்பு என்பது தமிழர் எதிர்ப்பாக உள்ளதால் பிரச்சனையின் தீவிரததை உணர்ந்திருந்தாலும் நமது இந்திய மிடையங்கள் கொள்ளாமல் உள்ளன என்பது வேதனையானது.
தமிழக மிடையங்களை நாம் தமிழர்களின் இன்னல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கச்சொல்லி கேட்டுக்கொள்ளலாம். வலைப்பதியும் தமிழக மிடைய நண்பர்கள் தங்கள் இதழ்களில் இப்பிரச்சனை குறித்து விரிவாக சொல்லவேண்டும்.
//பத்மா அர்விந்த் said...
Sundar had created an online petition to UN a while ago. We can create one and have many people sign and submit it to UN general secretary.
11/26/2006 04:35:52 PM//
குறிப்பிட்டுள்ள பதிவின் சுட்டியை தர இயலுமா? நமது முறையீடுகளை அனுப்ப அதை பயன்படுத்துவது உதவுமாயின் பயன்படுத்தலாம்
நண்பர்கள் அனைவரின் பரிவிற்கும், நல்ல மனதிற்கும் நன்றி!
கேட்கவே மிகவும் கஷ்டமாக உள்ளது திரு. நம் பதிவு உலகில் உள்ள பதிவர்களுக்கு மீடியாவுடன் நல்ல தொடர்பு உள்ளது அவர்கள் இந்த செய்தியை மீடியாவுக்கு எடுத்துச்செல்ல தங்களால் இயன்ற அளவு உதவ வேண்டும். என்னுடைய நண்பர் ஒருவருடன் பேசும் பொழுது அவர் பணம் கொடுக்க தயாராக உள்ள பொழுதும் பொருள்கள் கிடைப்பதில்லை என்று கூறி வருத்தப்பட்டார். பட்டினி சாவுகள் துவங்கிவிட்டதாகவும் மிகவும் வேதனையோடு கூறினார். கேட்பதற்கு மிகவும் வேதனையாக இருக்கிறது.
Irespective of the caste, religion and ethinicity, we should support the Sri lankan Thamiz people. Now they are in big trouble. Our Indian government should take a bold decision and support these people. Also the eldest Thamiz leader Mr.M.K should support these people without considering personal loss. If Mr.M.K can not do any good to these people then no one can do it. God bless Sri Lankan Thamiz people.
திரு,
தமிழர்களுக்குச் சென்று சேருமாறு உதவிகளைச் செய்வது இப்போதைக்குப் பயனுள்ளதாக இருக்கும். உதவிகளைச் செய்ய விரும்புவோர்
http://www.opusa.org/
என்ற நிறுவனத்தின் மூலமும் (இலங்கையின் வடக்கு-கிழக்குக்கு என்று குறிப்பிடவும்) உதவலாம். இதுகுறித்த என் முந்தைய பதிவு
http://bhaarathi.net/sundara/?p=294
இது தவிர பெட்டிஷன் ஆன்லைன் மூலமாகப் பல தலைவர்களுக்கும் கடிதங்களை அனுப்பலாம். உதாரணத்துக்கு,
http://www.petitiononline.com/UN061506/petition.html
திரு அவர்களே,
இது மிகவும் துயரமான செய்தி.
// தமிழர்கள் படும் இன்னல்களை விளக்கி பன்னாட்டு மிடையங்களுக்கு சொல்லவேண்டும், பன்னாட்டு நாளிதழ்களிலும் வார இதழ்களிலும் வரும் செய்தியானது மிகப்பெரும் பலம் உடையது. //
குரும்பன் அவர்களின் கூற்றை நானும் ஏற்கிறேன்.
பதிவர்கள் தாம் இருக்கும் நகரில் சிறு சிறு குழுக்கலாக கூடி போராட்டம் அல்லது ஊர்வலம் நடத்துவதும் பிறர் கவனத்தை ஈர்க்கும் என நினைக்கிறேன்.
நன்றி
வசந்த்
இந்த அவலத்தை பதிவாக்கினதுக்குு நன்றிகள் திரு. ஏதாவது செய்யணும்னு தோணுது ஆனா என்ன செய்றதுன்னு தெரியலை. இந்த விசயத்தில சர்வேதச சமூகத்தோட குள்ளநரித்தனத்தை இண்டர்நேஷனல் மீடியாவுக்கு கொண்டு போறதுக்கான வாய்ப்புகள் இருக்கா?
மனசு பதைக்குது. ஆனா என்ன செய்யணுங்கறது தெரியலையே(-:
நண்பர்களே,
உங்கள் அக்கறை, ஆலோசனை அனைத்தும் இன்னும் வேகமாக செயல்பட தூண்டுகிறது! இரவு தூங்க இயலவில்லை (அதிகாலை நேரம் இங்கே)... ஒரு முறையீட்டு கடிதம் தயாரித்து வருகிறேன். நாம் என்ன செய்யலாம் எபது பற்றி இன்று ஒரு தனிப்பதிவு எழுதுவேன். தொடர்ந்து ஈனைந்து செயல்படுவோம்... மனித நேயம்படைத்த உள்ளங்களுக்கு நன்றி!
பதிவை வாசித்து முடித்தபோது கண்களில் கண்ணீர். ஈழத் தமிழர்களுக்காக இத்தனை பேர் குரல் கொடுப்பதை அறிகின்றபோது மனதில் நெகிழ்ச்சி.
திரு மற்றும் தமிழக உறவுகளே,
உங்களின் ஈர நெஞ்சம் கண்டு உண்மையிலேயே எனக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை, நீங்கள் சொன்ன அனைத்தும் மிகைப்படுத்தாத உணமை.
Post a Comment
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com