மனிதாபிமான உதவி கேட்கிறேன்!
நண்பர்களே,
நம் அருகில் ஒருவர் உணவில்லாமல் தவித்து சாகும் தருவாயில் இருக்க நம்மால் நிம்மதியாக சாப்பிட இயலுமா? இந்த நேரம் அதை தான் செய்து கொண்டிருக்கிறோம் நாம்.
நமக்கு அருகில் தமிழ் ஈழத்தில் சக மனிதர்கள் உணவு இல்லாமலும், மருந்து பொருட்கள் இல்லாமலும் செத்துக் கொண்டிருக்கிறார்கள். பஞ்சமும், பட்டினியும், நோயும், சாவுமாக ஆப்பிரிக்க நாடுகளில் இருப்பதை விட நமக்கு அருகில் ஒரு தேசத்தின் மக்கள் செத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தியன் என்றோ, தமிழன் என்றோ உங்களை அடையாளப்படுத்துங்கள். எந்த அரசியல் கட்சியையோ, கொள்கையையோ ஆதரிக்கக் கூடியவர்களாகவும் இருங்கள். யாராக இருப்பினும் முதலில் நாம் மனிதர்கள்.
பாதுகாப்பு என்ற பெயரில் ஏ9 சாலையை மூடி சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் வாழ்வை புதைகுழிகளுக்கு கொண்டு செல்கிறது இலங்கை அரசு. சாலை மூடப்பட்டதிலிருந்து அத்தியாவசிய பொருட்கள் விலை ஏறி இருக்கிறது. அதன் விளைவு மிகப்பெரிய மனித அவலத்தை அப்பாவித் தமிழர்கள் சந்திக்கிறார்கள்.
"மட்டக்களப்பு ,அம்பாறை மாவட்டங்களிலுள்ள சில பிரதேசங்களில் பரவி வரும் சிக்குன்குனியா என கருதபப்டும் வைரஸ் காய்ச்சல் காரணமாக அந்தப் பிரதேசங்களிலுளள் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் கூறுகின்றன.
ஆசிரியர்களும், மாணவர்களும் இந்நோயின் தாக்கத்திற்குள்ளாகி வருவதால், வழக்கமான நாட்களை விட இவர்களது வரவு 25 முதல் 40 சத வீதம் வரை வீழச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது."
வேகமாக பரவுகிற வைரஸ் காய்ச்சலில் போதிய மருத்துவ பொருட்களும், மருத்துவர்களும் இல்லாமல் மக்கள் துன்புறுகிறார்கள். "மானிப்பாயைச் சேர்ந்த கிராம அபிவிருத்தி உத்தியோகத்தரான கந்தையா ஸ்ரீபதி (வயது 52), மல்லாகம் மில் ஒழுங்கையைச் சேர்ந்த சிவகுரு கமலாதேவி (வயது 56) ஆகியோர் இந்த நோயினால் உயிரிழந்தனர்." யாழ்குடாவில் மட்டும் இதுவரை சுமார் 5000 பேருக்கு மேல் இவ்வித வைரஸ் காய்ச்சல் பரவியிருப்பதாக ராயிட்டர் செய்தி நிறுவனம் வழி அறிய முடிகிறது.
6 லட்சம் மக்கள் உணவு பொருட்கள் இல்லாமல் யாழ் தீபகற்பத்தில் மட்டும் சிறை போன்ற வாழ்வில் தினமும் பட்டினியால் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் பட்டினியால் ஒருவர் சாவடைந்ததாக செய்திகள் கூறுகிறது. பட்டினிச்சாவுகலுக்கு பெரும்பாலும் பலியாவது குழந்தைகள், பெண்கள், வயோதிகர்களாக தான் இருப்பார்கள்.
வாகரையில் மட்டுமே சுமார் 12000 குடும்பங்களை சார்ந்த 40,000 மக்கள் தினமும் பட்டினியிலும்,நோயிலும் எல்லா உதவிகளும் வாய்ப்புகளும் மறுக்கப்பட்ட நிலையில் அபலைகளாக வாழ்கிறார்கள். இவர்களில் சுமார் 8500 குடும்பத்தினர் இலங்கை அரசின் ஆர்டிலரி கணைகளுக்கும், விமானத்தாக்குதலுக்கும் அஞ்சி இடம்பெயர்ந்தவர்கள். தமிழர் தரப்பு கொடுத்த அரசியல் அழுத்தங்களால் அரசு பிரதிநிதிகளுடன் 10 லாரிகளில் மட்டகளப்பிலிருந்து பொருட்கள் வாகரைக்கு நவம்பர் 17 அன்று அனுப்பப்பட்டுள்ளது.அவற்றை மாங்கேணி சோதனைச் சாவடியில் வைத்து பிரிகேடியர் இரத்தினநாயகா தலைமையிலான படைகள் மறித்து திருப்பி அனுப்பியுள்ளது. மீண்டும் தமிழர் தரப்பு கொடுத்த அழுத்தம் காரணமாக 18 நவம்பரில் 8 லாரிகளில் பொருட்களுடன் அரசு அதிகாரிகளும் சர்வதேச செஞ்சிலுவை சங்கமும் சென்ற வாகன தொடரணியை மாங்கேணியில் தடுத்து அரசு படைகள் திருப்பி அனுப்பியிருக்கிறது.
தனது நாட்டின் குடிமக்களை நெருக்கடியில் தள்ளி பட்டினியில் சாக வைத்து, உதவி செய்ய வருகிற அமைப்புகளையும் முடக்கி வைத்திருக்கிறது இலங்கை அரசு. இதன் மூலம் சர்வதேச மனிதநேய சட்டங்களை மீறியது மட்டுமல்லாமல், உணவை ஆயுதமாக பயன்படுத்தி தமிழ் மக்கள் மீதான யுத்தத்தை தொடர்கிறது இலங்கை அரசு.
சர்வதேச நாடுகள் இது பற்றிய கண்டனங்களை இலங்கை அரசிற்கு தெரிவிக்காமல் மௌனம் சாதிக்கிறது. இலங்கை வடகிழக்கில் நடந்து வருகிற மனித அவலம் பற்றி ஐ.நா. பேச்சாளர் ஓர்லா கிளிண்டன் கூறியுள்ளதாவது "வாகரையில் இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கான உணவுப் பொருட்கள் அவசியத் தேவையாக உள்ளது. ஒக்ரோபர் 31 ஆம் நாளுக்குப் பின்னர் எதுவித உணவுப் பொருட்களும் அங்கு சென்றடையவில்லை. ஏற்கனவே வாகரை நிலைமை மிகவும் மோசமடைந்திருப்பதை நாம் அறிவோம். பாரிய மனித அவலம் ஏற்படுவதைத் தடுக்க வாகரைக்கு ஐ.நா. மற்றும் இதர நிறுவனங்கள் தொடர்ந்து அங்கு சென்றடையவேண்டும்.
வாகரைக்கு உணவுப் பொருட்களின் வாகனங்கள் செல்வது தாமதமடையும் போது பொதுமக்களுக்கு பாரிய ஆபத்தை ஏற்படுத்தும்".
இந்த நிலையில் நமது நாட்டிற்கு வருகை தந்துள்ள இலங்கை அதிபர் இந்திய அரசிடம் இராணுவ, தொழில்நுட்ப, பொருளாதார உதவிகளை தென்னிலங்கைக்கு பெறுவதில் தான் கவனம் செலுத்தி வருவதாக செய்திகள் வருகின்றன. இலங்கை அதிபரின் இராஜதந்திர வலையில் வீழ்ந்து நமது வரிப்பணம் இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் வாழ்வை பட்டினியில், இராணுவக் கொடுமைகளுக்கு உதவ வேண்டுமா? இந்த கேள்விகளுக்கு விடை காண்பது மனிதநேயமுள்ள ஒவ்வொருவரின் கடமை.
இங்கு அப்பாவித் தமிழர்கள் வாழ்வை பற்றி நமது கவலையும் அக்கறையும் இருத்தல் அவசியம். நமது தமிழக தொலைக்காட்சிகளும், அரசியல் அரங்கும் இந்த பிரச்சனைஅயி முன்னெடுத்து செல்வதில் கவனம் செலுத்த தவறி வருவதாகவே அறிகிறோம். இந்த நிலையில் நமது செயலை பொறுப்புடன் ஆற்ற அழைக்கிறேன்.
பொருளாதார உதவி
நண்பர்களே, தடைகளினால் நம்மால் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் வழியாக கூட பொருளாதார உதவிகளை கொண்டு சேர்க்க இயலாத நிலை. நீங்கள் கொடுக்க விரும்புகிற பொருளாதார உதவிகள் கீழ்காணும் நிறுவனங்கள் வழியாக செய்யலாம். அது இப்படியான இக்கட்டான காலங்களில் உதவும்.
http://www.troonline.org/volunteer.htm
http://www.opusa.org/
இந்த அமைப்பு பற்றி சுந்தரவடிவேல் அவர்களது பதிவை காண அழுத்தவும்
சர்வதேச அழுத்தம்
முந்தைய பதிவில் வந்த ஆலோசனைகளின் அடிப்படையில் ஒரு முறையீட்டு கடிதத்தை கீழ்காணும் அமைப்புகளுக்கு அனுப்பலாம்.
U.N. Secretary General,
Heads of the world’s democratic states,
The European Parliament,
UN Commission on Human Rights,
Amnesty International,
Human Rights Watch
முடிந்த வரையில் நம்மால் இயன்ற அளவு ஆதரவை திரட்டலாம். இதற்கென ஒரு ஆன்லைன் முறையீட்டை உருவாக்கி உடனடியாக தெரிவிக்கிறேன். நாம் திரட்டுகிற ஆதரவுடன் கடிதத்தை மேற்காணும் அமைப்புகளுக்கும் அரசுகளுக்கும் அனுப்பலாம். அரசுகளுக்கும், அமைப்புகளுக்கும் அந்த நாடுகளிலேயே நேரடியாக கொடுப்பது இன்னும் முறையாக இருக்கும். இதற்கு உங்களது ஆதரவும் ஈடுபாடும் மிக மிக அவசியம்.
தமிழகத்திலும், இந்தியாவிலும் வாழுகிற நண்பர்கள் பொதுமக்களிடமிருந்து கையெழுத்துக்களை பெற்று கடித நகலுடன் நமது பிரதமருக்கும், தமிழக முதல்வருக்கும் அனுப்ப முயற்சி எடுக்கலாம்.
இது பற்றிய கடிதத்தை ஆங்கிலத்தில் எழுதியுள்ளேன். தகவல்களை சரி பார்க்கவும், ஆலோசனைகளுக்கும் ஒருங்கிணைக்கவும் உங்கள் உதவியும் தேவை! உதவ ஆர்வமுடையவர்கள் தயை கூர்ந்து தொடர்பு கொள்ளுங்கள் thirukk@gmail.com
அடுத்த பதிவில் online petition link வரும். அது வரை இணைந்திருங்கள். இது பற்றி பிரித்தானிய முறையிட ஏற்கனவே இருகிற திரட்டியில் உங்கள் ஆதரவை கொடுக்க இங்கே அழுத்தவும் We the undersigned petition the Prime Minister to Persuade the Sri Lankan government to open the A9 road and also alert Britain of the killings in Sri Lanka.
ஊடக செய்திகளுக்கு
உங்களது திறமையை, செல்வாக்கை பயன்படுத்தி பத்திரிக்கை, தொலைக்காட்சி, வானொலி மற்றும் இதர ஊடகங்களுக்கு இந்த மனித அவலம் பற்றிய செய்திகளை பரப்புங்கள்.
உங்கள் ஒருவரின் முயற்சியில் பல்லாயிரம் உயிர்கள் காப்பாற்றப்படலாம்.
அன்புடன் ஆதரவு கேட்டு,
திரு
13 பின்னூட்டங்கள்:
திரு அவர்களே,
தங்களின் இந்த உன்னதமான முயற்சி பல நல்ல உள்ளங்களின் ஆதரவோடு மிகப் பெரும் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.
விவரங்களுக்கு மிக நன்றி!
நல்லமுயற்சி திரு.
விவரங்களுக்கு நன்றி.
அன்புள்ளம் கொண்டவரே "வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வள்ளலாரும் வாடுவார்" என்று அறிந்திருக்கிறேன்.
"சொந்த சோதரர்கள் துண்பத்தில் உழல்தல் கண்டு சிந்தை இரங்கும்" உங்கள், உள்ளம்கண்டு தலை வணங்குகிறேன். உங்கள் முயற்சி வெற்றிபெற எனது ஆதரவும்,வாழ்த்துக்களும்.
உங்கள் அக்கறைக்கும், மூயற்சிக்கும் மிகுந்த நன்றிகள் திரு.
நெஞ்சார்ந்த நன்றிகள்
Thanks for the Information
தமிழ் ஊடகங்கள் நினைத்திருந்தால் தமிழ்க அளவில் இந்தப் பிரச்சினை பேசப்பட்டிருக்கும். இதன் விளைவுகள் மற்றும் துயரம் மக்களாலும் உணரப் பட்டிருக்கும். உள்ளூர் அரசியலுக்கே நேரம் போதாத நமது ஊடகங்கள் அதை ஒருபோதும் செய்யாது. சிறிய அளவிலான தமிழ் வலைப்பதிவர்கள் குறைந்த பட்ச அளவிலாவது இதுபோன்ற முயற்சிகளை எடுக்கிறார்கள்.
வலைப்பதிவர்கள் அளவில் பரவி இது சுற்றமும் நட்பும் என விரிந்தாலே ஓரளவுக்கு சமூகத்தின் பரவலான பார்வைக்கு இந்தப் பிரச்சினையை எடுத்து செல்ல முடியும். முயல்வோம்.
இந்தப் பதிவுக்கு சுட்டி தரப்பட்டுள்ளது.
http://valai.blogspirit.com/
ஐயா கட்டாயம் என்னால் முடிந்ததை நான் செய்கிறேன்.
தொடர்ந்து சேவை செய்து வரவும்.
நன்றிக பல.
மிக்க நன்றி திரு,
தங்கள் உதவும் உளப்பாங்கு என்னை மிகவும் நெகிழ்ச்சியடைய வைத்து விட்டது.
அப்படியே இந்த உரலை தெரிந்தவர்களுக்கு எல்லாம் அனுப்பி கையெழுத்திடுமாறு வலியுறுத்தியிருக்கின்றேன்
உங்கள் இந்த முயற்சிக்கும்...
உங்கள் நல்ல மனதிற்கும்...
என் மனமார்ந்த நன்றிகள் திரு.
நல்ல முயற்சி திரு. என்னாலன பங்களிப்பைச் செய்கிறேன்.
hats off
i will also try to do some thing regarding this
Post a Comment
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com