Saturday, December 30, 2006

சென்னை வலைப்பதிவாளர்கள் சந்திப்பு - எனது பார்வை

வலைப்பதிவாளர்கள் சந்திப்பிற்கான நாளான டிசம்பர் 17 காலையில் தம்பி அகிலன் தொடர்பு கொண்டு ஒரு பேட்டிக்காக கேட்டிருந்தார்.

நண்பர் பாலபாரதியிடம் தொலைபேசியில் சந்திப்பு பற்றிய தகவல்கள் அறிந்து கொண்டேன். தி.நகர் பகுதியில் சுமார் 3.45க்கு சென்று சேர்ந்தேன். தம்பி அகிலன் தொடர்பு கொண்டு தான் வந்து சேர்ந்து விட்டதாக தகவலை தந்ததால் பனகல் பூங்கா பக்கம் செல்ல, பாலபாரதியின் அழைப்பால் சந்திப்பு இடம் மாற்றப்பட்டிருபது தெரிந்து கொண்டு தம்பி அகிலனை தேடி கண்டுபிடித்தேன். உருவத்தில் தம்பி இளையவராக இருந்தாலும் கருத்துக்களில் அனுபவத்தில் பெரியவர் என்பது அவரது பதிவுகளை படிப்பவருக்கு தெரியும்.

இயல்பாகவே உள்ள கூச்சம், முதல் சந்திப்பு நடக்கப் போகிறது பற்றிய ஆர்வம் என கலவையான நிலையில் நடேசன் பூங்காவில் சென்றதும் பாலபாரதி இருந்த பக்கமாக நகர, சில நண்பர்கள் இருப்பதை அடையாளம் காணமுடிந்தது. நண்பர்கள் வந்து சேர துவங்க பூங்காவில் இயல்பாகவே வட்ட வடிவமாக அமர்ந்து கொண்டோம். லக்கிலுக் அவர்களை அறிமுகத்தை துவங்க 'கலாய்த்தலும், கலாய்க்கப்படுதலும் நாயகன்' பாலபாரதி சொன்ன வேளை "அடடா நாம தான் கடைசியா" என கெட்டுக்கொண்டேன். ஒவ்வொருவரும் புன்னகையுடன் தங்களைப் பற்றியும் அவர்களது வலைப்பூக்கள் பற்றியும் சொல்லிக்கொண்டே வந்தனர் (பொன்ஸ் பக்கங்களில் அறிமுகம் பற்றிய குறிப்பை காணலாம்). அந்த மாலை கருக்கல் நேரத்தில் "இதற்கு முன்னரே சந்தித்து பழகிய நண்பர்களை மீண்டும் பார்ப்பது போன்று" எனக்குள் உணர்வு ஏற்பட நாம் சக மனிதர்கள் என்பதை கடந்து காரணம் எது என தெரியவில்லை.

இடையில், வசந்தன் தொலைபேசியில் அழைத்து வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டு அகிலனுடன் உரையாடினார். கலையின் அழைப்பு வந்திருந்தது கவனிக்காமலே என்னை அறிமுகம் செய்து கொண்டு ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான கையெழுத்து இயக்கத்தின் அவசியம் பற்றி பேசிக்கொண்டிருந்தேன்.

பதிவர்கள் அனைவரிடமும் ஒருவித சமூக அக்கறை/ பிறரது துன்பத்தை எண்ணி வருந்தும் மனநிலையை காண முடிந்தது.

தாயக பயணத்தின் போது ஈழத்தமிழர்களது நிலை பற்றி தமிழக மக்கள் கிணற்றில் இடப்பட்ட கல் போன்ற மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை உணர முடிந்தது. அவற்றிற்கு சில காரணங்கள்:

  • ஈழத்தின் சமகால நிகழ்வுகளும், ஈழமக்கள் படுகிற வேதனை பற்றிய தகவலும் தமிழகத்தில் மிக குறைவாகவே காணப்படுகிறது.
  • கடந்த கால அரசுகள் எழுப்பிய அச்ச உணர்வுகளால் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான குரல்கள் கொடுப்பதோ அமுக்கப்பட்டிருப்பது.
  • ஈழ மக்களின் அவலநிலை பற்றி தமிழக/இந்திய ஊடகங்களில் பெரியதாக செய்திகள் காணப்படுவதில்லை. அப்படி வருகிற செய்திகளும் பெரும்பாலும் இராணுவ, அரச செய்திகளாக அமைகிறது.
  • ஈழப்பிரச்சனை என்றாலே சில தமிழக அரசியல் கட்சிகளுக்கு மட்டுமான 'உரிமம்' என்றாகிவிட்டதோ?
பல நாட்களாக வலைப்பூக்களில் கருத்துக்களை பகிர்ந்து அடையாளம் கண்டுகொண்ட பல முகம் தெரியாத பதிவர்களை ஒரே இடத்தில் சந்தித்தது ஒருவித இனிய உணர்வை தந்தது. கருத்துக்களில், கொள்கையில் மாறுபாடு கொண்டிருக்கலாம் ஆனால் மனிதர்கள் என்ற விதத்தில் நாம் இணைய வேண்டியவர்கள் என்பதை இந்த சங்கமம் மீண்டும் ஒலித்தது. மூத்த பதிவர்கள் முதல் புதிதாக வந்த பதிவர்கள் வரை கூடி கலந்துரையாடும் இந்த பண்பு வளரவேண்டும். இவற்றிலிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.

சந்திப்பு பற்றியும் அதன் உரையாடலையும் சிவஞானம்ஜி அய்யா, தமிழ்நதி, பொன்ஸ், தமிழி என பலரும் அழகாக எழுதியுள்ளனர். அதனால் அது பற்றி எழுதுவதை தவிர்த்துவிட்டேன்.

சென்னை வலைப்பதிவாளர் சந்திப்பில் அருள்குமார், வீரமணி, லக்கிலுக், பகுத்தறிவு, ரியோ, சுந்தர், விக்கி, தமிழ்நதி, சிவஞானம்ஜி, துளசிகோபால், பொன்ஸ், மா.சிவகுமார், யெஸ். பாலபாரதி, ப்ரியன், த. அகிலன், கோ. இராகவன், ஓகை நடராஜன், தமிழி, We the people, நிர்மலா, அன்புடன் ச.சங்கர், சுகுணா திவாகர் என வலைப்பதிவாளர்கள் அனைவரையும் சந்திக்க கிடைத்த வாய்ப்பு அருமை. ஒவ்வொருவரைப் பற்றியும் பொன்ஸ் தனியாக எழுதியுள்ளமையால் என் அறிமுகம் அவசியமில்லை. எல்லோரும் திறைமையான, அக்கறையான இயல்பான சகமனிதர்கள். இவர்களிடமிருந்து தனிப்பட்ட விதமாக கற்றுக்கொள்ள எனக்கு பல விடயங்கள் இருந்தன.

சந்திப்பின் முடிவில் ஈழத்தமிழர் அகதிகள் முகாம் பற்றிய செயலுக்கான திட்டத்துடன் கலந்தபோது மனம் கனமாகவும் ஒரு வித அமைதியாகவும் இருந்தது.

கூட்டம் பற்றிய எனது பார்வை:
  • குறுகிய கால அறிவிப்பாக இருப்பினும் 23 பேர் கூடி கலந்துரையாடியது வலைபதிவாளர் ஒன்று கூடலில் இருக்கிற ஆர்வத்தை உணர்த்தியது.
  • ஈழத்தமிழர்கள் மீது திணிக்கப்பட்டுள்ள பொருளாதார தடை, அகதிகள் நிலை போன்ற சமகால நிகழ்வுகள் பற்றிய கருத்து பரிமாறல்கள் துவக்கம் வலைப்பதிவாளர்கள் பரந்த சமூக தளத்தில் சிந்திக்க, இயங்க வாய்ப்பு வளர்கிறது. நமது சமூகத்தில் காணப்படுகிற பல அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார நிகழ்வுகளையும் தொடர்ந்து விவாதிப்பது வலைப்பதிவாளர்களிடையே சிந்தனைகளை வளர்க்க உதவலாம்.
  • பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வை எதிர்பார்க்கும் தன்மை வலைப்பதிவாளர்களிடமும் இருப்பதை காணமுடிந்தது (நாமும் சமுதாயத்தில் ஒரு அங்கம் என்பதில் அது சரியே). சமூகப்பிரச்சனைகளில் மாற்றம் என்பது ஒரு செயல்பாட்டால் மட்டும் நிகழ்ந்துவிடாது. இணைந்து செயல்படும் தொடர் செயல்பாடால் மட்டுமே மாற்றங்கள் பல நிகழ்ந்திருக்கிறது. குடிதண்ணீர் பிரச்சனை முதல் லஞ்சம், ஊழல், வேலையில்லா திண்டாட்டம் என அனைத்து பிரச்சனைகளுக்கும் இது பொருந்தும் (இது பற்றி இன்னொரு தலைப்பில் விரிவாக எழுதுகிறேன்).
  • அகதிகள் முகாமை பார்வையிட்டு அறிக்கை தயாரிக்கவும் முடிவானது இந்த சந்திப்பின் முத்தாய்ப்பான நிகழ்வு.

இந்த சந்திப்பின் பின்னர் சென்னையில் முத்துதமிழினி சந்திப்பு. மதுரை, இராசபாளையம், நெல்லை என பயணித்து தருமி அய்யா, லிவிங் ஸ்மைல் வித்யா, மதுமிதா, ஆழியூரான், வரவனையான் ஆகியோரை சந்தித்தது பற்றி அடுத்த பதிவில்.

சென்னை வலைப்பதிவாளர் சந்திப்பின் விளைவாக நண்பர்கள் ஆழியூரான், வரவனையான் ஆகியோருடன் இணைந்து நெல்லையில் தாழையுத்து அகதிகள் முகாமை பார்வையிட்டோம். இது பற்றிய விரிவான அறிக்கையை இன்னும் சில நாட்களில் படங்களுடன் பதிவிடுகிறேன்.

குறவர் இன மக்களின் நிலை பற்றி அறிய எடுத்த முயற்சி இன்னும் முற்றுப்பெறாதது வருத்தம்.

செங்கல் சூழையில் வேலை செய்ய்யும் தொழிலாளர்கள், குழந்தை தொழிலாளர்கள் பற்றி ஆய்வு, அய்யாவழி மதத்தினரின் தலைமை பதியான சாமிதோப்பில் பாலபிராஜாதிபதி அடிகளாருடன் நேர்முக பேட்டியை ஒளிப்படத்தில் பதிவு செய்தது என விடுமுறை நிறைவாய் அமைந்தது. அதற்குள் விடுமுறை முடிந்து மறுபடியும் பெல்ஜியம் பயணம். அனைத்தையும் கோர்வையாக எழுதவேண்டும்.

அனைத்து சந்திப்புகளிலும் நல்ல பல விடயங்களை கற்றுத்தந்த வலைப்பதிவாளர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல.

வருகிற புத்தாண்டு அனைவருக்கும் மனநிறைவையும், உலக அமைதியையும், ஏழைகளின் வாழ்வில் ஏற்றத்தையும் தரட்டும்!

(விரைவில் வருகிறேன் சந்திப்புகளின் இனிய செய்திகளுடன்)

15 பின்னூட்டங்கள்:

Anonymous said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள், 'திரு'.

உங்களின் சீரிய முயற்சி கண்டு வியக்கிறேன்.

//பதிவர்கள் அனைவரிடமும் ஒருவித சமூக அக்கறை/ பிறரது துன்பத்தை எண்ணி வருந்தும் மனநிலையை காண முடிந்தது.//

உண்மை. இது இன்னமும் மேலோங்க பாலபாரதி போன்ற மூத்த (வயதில் அல்ல) பதிவாளார்கள் முன்வர வேண்டும்.


வரும் ஆண்டில் உங்கள் கனவுகள் நனவாகும். ஆகத் துணையிருப்போமென நம்புகிறோம்.

வாழ்த்துகள்.

Anonymous said...

திரு.திரு நலமாய் ஊர் திரும்பி விட்டீர்களா ?

பயணம் இனிதாய் அமைந்திருக்கும் என நம்புகிறேன்

siva gnanamji(#18100882083107547329) said...

மகிழ்ச்சி!

புத்தாண்டு வாழ்த்துகள்!

தமிழ்நதி said...

பெல்ஜியத்திற்குத் திரும்பிவிட்டீர்களா…? உங்களோடு பேசவேண்டுமென்றிருந்தேன். அதற்குள் நானும் இலங்கைக்குச் செல்ல வேண்டியதாகிவிட்டது. ஒரு வாரம் கழித்து நேற்றுத்தான் திரும்பினேன். தெனாலி சொல்வதுபோல ஊரில் ஒரே ‘பயமயமாக’இருக்கிறது. எத்தனையோ நாட்களுக்கு முன்பு எழுதிய பதிவர் வட்ட சந்திப்புக்கு இன்று பின்னூட்டம் வந்திருக்கிறதே என்று உங்கள் மின்னஞ்சலைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். உங்களைப் போன்ற, எங்கள் (ஈழத்தமிழர்) பிரச்சனை குறித்து அக்கறையோடிருப்பவர்களைச் சந்திக்கும்போது, சகமனிதர் மீதான அன்பு இன்னும் இந்த உலகத்தில் இருக்கிறதே என்றெண்ணி ஆறுதலடைகிறோம்.

Anonymous said...

நன்றாக இருக்குகிறது.தொடர்ந்து பதியுங்கள்.வாழ்த்துகள்.

இளங்கோ-டிசே said...

/சென்னை வலைப்பதிவாளர் சந்திப்பின் விளைவாக நண்பர்கள் ஆழியூரான், வரவனையான் ஆகியோருடன் இணைந்து நெல்லையில் தாழையுத்து அகதிகள் முகாமை பார்வையிட்டோம். இது பற்றிய விரிவான அறிக்கையை இன்னும் சில நாட்களில் படங்களுடன் பதிவிடுகிறேன்./

/செங்கல் சூழையில் வேலை செய்ய்யும் தொழிலாளர்கள், குழந்தை தொழிலாளர்கள் பற்றி ஆய்வு, அய்யாவழி மதத்தினரின் தலைமை பதியான சாமிதோப்பில் பாலபிராஜாதிபதி அடிகளாருடன் நேர்முக பேட்டியை ஒளிப்படத்தில் பதிவு செய்தது... /

அவசியமான விடயங்களைச் செய்திருக்கின்றீர்கள். உங்கள் பகிர்தலை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றேன். நன்றி.

வெற்றி said...

திரு,
சென்னை ஒன்றுகூடலை அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

/*(விரைவில் வருகிறேன் சந்திப்புகளின் இனிய செய்திகளுடன்) */

ஆவலுடன் காத்திருக்கிறேன்.

நன்றி.

-/பெயரிலி. said...

நன்றி.

ச.சங்கர் said...

நன்றி திரு..

முயற்சியை முன்னெடுத்துச் செல்வோம்

Anonymous said...

திரு,

உங்கள் முயற்சிக்கும் ஆர்வத்திற்கும் பாரட்டுக்கள்

Honestly speaking, சென்னையில் உங்களை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியான தருணம்.

தொடர்ந்து இந்திய பயணத்தின் மற்ற நிகழ்வுகளை எழுதுங்கள்.

நேரம் கிடைக்கும் போது ஈழம் குறித்த தொடர் கட்டுரையை தொடங்குங்கள்

புத்தாண்டு வாழ்த்துக்கள் :)

மலைநாடான் said...

திரு!

நலமே திரும்பிவிட்டதை அறிய முடிகிறது. சொநந்த வேலைகளுடன், சமுக அக்கறை குறித்த செயற்பாடுகளிலும் தாயகப் பயனத்தில் செயற்பட்டிருக்கின்றீர்கள். பாராட்டுக்கள். பின்பு தொடர்பு கொள்கின்றேன்.
நன்றி!

கலை said...

முயற்சிகள் வெற்றி அடைய வேண்டும்.

Sivabalan said...

திரு,

வாழ்த்துக்கள்

பயன களைப்பு காரணமாக சந்திப்புக்கு வரமுடியவில்லை.. மிக அருகில் இருந்தும்...

தருமி said...

// இணைந்து செயல்படும் தொடர் செயல்பாடால் மட்டுமே மாற்றங்கள் பல நிகழ்ந்திருக்கிறது//

மிகச்சரியான ஒரு கருத்து. தொடர்ந்து செயல்பட/போராட நமக்குத்தான் பொறுமை வேண்டும்...

thiru said...

அனைவருக்கும் நன்றியும் புத்தாண்டு வாழ்த்துக்களும்!

சிவா உங்களை சந்திக்க ஆவலாய் இருந்தேன். தொடர்பு கொள்ள தொலைபேசி எண்ணும் இல்லாமல் போயிற்று. :(

அடுத்தமுறை சந்திப்போம் :)

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com