Thursday, January 18, 2007

இடப்பங்கீடு சில நியாயங்கள்!

இந்திய அரசியலில் இடப்பங்கீடு (இடஒதுக்கீடு) பல விளைவுகளையும், மாற்றங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. இடப்பங்கீட்டினை எதிர்ப்பவர்கள், ஆதரிப்பவர்கள் என இரு பக்கங்களாக பிரிந்து நிற்கிறது இந்தியர்களது வாழ்வு. பெரும்பான்மை தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் தங்களது வாழ்வில் இடப்பங்கீடு சமூகநீதியை கொண்டுவரும் என நம்பிக்கை கொள்கின்றனர். அதே வேளை இடப்பங்கீடு கொள்கை நாட்டின் வளர்ச்சியை பாதிக்க வைக்கும் செயல் என ஆதிக்க சாதியினர் கொதிக்கின்றனர். இடப்பங்கீடு நாட்டின் வளர்ச்சியை பாதிக்குமா இல்லை ஒரு சிலரின் ஆதிக்கத்தை மாற்றி எல்லோரின் வளர்ச்சியையும் உருவாக்குமா? இது தான் இன்றைய தலைமுறை இந்தியர்களின் விவாதப்பொருள். இந்தியாவின் உள்நாட்டு அரசியல் இடப்பங்கீட்டை மையமாக வைத்தே நகர்கிறது.

இடப்பங்கீடு உருவாக காரணமான சூழல்:மன்னர் ஆட்சிக்குப் பின்னரான ஆங்கிலேய காலனியாதிக்க ஆட்சியிலும் பிராமணர்களது செல்வாக்கு உயர்ந்திருந்தது. சுமார் 3.2 சதவிகிதம் மட்டுமே இருந்த பிராமணர்கள் சகல துறைகளிலும் பெரும்பான்மையான வாய்ப்புகளை தாங்கள் மட்டுமே அனுபவித்தனர். ஆங்கில வழிக் கல்வியும், முன்னர் மன்னர் காலங்களில் இருந்த அதிகாரமும் அவர்களுக்கு இந்த நிலையை கொடுத்தன. சுதந்திரப் போராட்டத்தின் போதும் அதன் பின்னரான நாட்டின் தலைமையும் அவர்களிடமே இருந்தன. அடுத்த நிலைகளில் சத்திரியர்கள், வைசியர்கள் பதவிகளில், கல்வியில் இடம்பெற்றனர்.

ஆங்கிலேய ஆட்சியின் அரசு உத்தரவுகளிலும் இதற்கான ஆதாரங்களைக் காணலாம். "மாவட்டங்களில் உள்ள சார்புநிலைப் பணிகளில் சில குறிப்பிட்ட குடும்பங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. எனவே அந்த பகுதிகளில் முதன்மை சாதிகளுக்குப் பதவிகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்" (அரசு உத்தரவு எண். 128 (2), வருவாய்த்துறை, 1854).

"பெரும்பான்மை மக்கள் எவ்வித உதவியுமின்றிக் கற்றுக்கொள்ள இயலாத நிலையில் இருக்கிறார்கள்" (இந்திய அரசு, கல்விக் குழுவின் அறிக்கை, அத்தியாயம்1, 1883 ஆம் ஆண்டு).

இந்த இரண்டு குறிப்புகளும் ஆங்கிலேய ஆட்சியில் யார் அதிகமாக பயனடைந்தனர் என்ற தகவலை தருகின்றன. மன்னர் கால பட்டயங்கள் யாருக்கு நிலம் அதிகமாக தானமாக வழங்கப்பட்டன என்பதை தெளிவுப்படுத்துகின்றன. தரமான வேலையும் கல்வியும் பெறும் உரிமை, நில உரிமை, அரசியல் உரிமை, சமூக பங்கேற்பு உரிமை, அரசியல் அதிகாரம் என எல்லாவற்றிலும் சாதி ஆதிக்கத்தின் தாக்கத்தைக் காணலாம்.

இதற்குச் சான்றாக சில புள்ளி விபரங்களை காணலாம்.

  • சென்னை பல்கலைகழகத்தில் 1918ல் இளங்கலை படிப்பில் மொத்த மாணவர் எண்ணிக்கை 15,209. அதில் பிராமணர்கள் 10269. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பெரும்பான்மை மக்கள் 3,213. மற்றவர்கள் எண்ணிக்கை 1,748.
  • முதுகலை படிப்பில் மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 511. அதில் பிராமணர்கள் 389. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பெரும்பான்மை மக்கள் 65. மற்றவர்கள் 53.
  • ஆசிரியப் பயிற்சியில் மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 1,498. பிராமணர்கள் 1,094. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பெரும்பான்மை மக்கள் 163. மற்றவர்கள் 241.
  • சட்டக்கல்வியில் மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 54. பிராமணர்கள் 48. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பெரும்பான்மை மக்கள் 4. மற்றவர்கள் 2.
  • பொறியியல் கல்வியில் (சிவில்) மொத்தம் 120 இடங்களில் பிராமணர்கள் 21. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பெரும்பான்மை மக்கள் 15. மற்றவர்கள் 23.
கல்வியில் பெற்ற பெரும்பான்மை இடங்களை பயன்படுத்தி அரசு சார்ந்த நிர்வாகப்பணிகள் சிலரின் நன்மைக்காகவே பயன்பட்டது. அந்த நிர்வாக பதவிகள் மேலும் மேலும் அவர்கள் சொத்து சேர்க்க, கல்வி, வேலைவாய்ப்பை பெற பெரும் துணையாக இருந்தன. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆதிக்கசாதியினரின் நிர்வாகத்தின் முன் கைகட்டி, வாய்பொத்தி சேவகம் செய்யும் எடுபிடி வேலைகளில் மட்டுமே வரமுடிந்தது. இந்த சாதி அரசியல் சுழலில் சிக்காமல் தப்பிய பிற்படுத்தப்பட்ட மக்களின் அறிஞர்கள் உயர் பதவிகளை பெற பல தடைகள் ஏற்படுத்தப்பட்டன.
சுதந்திரத்திற்கு முன்னர் சென்னை மாகாண அளவிலான நிர்வாகப் பணிகளில் ஆதிக்க சாதியினரின் நிலை பற்றிய சான்றுகள் கீழே:
  • 1912ல் அரசு துணை ஆட்சியாளர்கள் பதவியில் 77 இடங்களில் பிராமணர்கள் (55%). 30 இடங்களில் (21.5 சதவிகிதம்) மட்டுமே தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பெரும்பான்மை மக்கள்.
  • 1912ல் நீதிபதிகளாக இருந்தவர்களில் மொத்தம் 83.3 % பேர் பிராமணர்கள். 16.7 சதவிகிதம் மட்டுமே தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பெரும்பான்மை மக்கள்.
  • 1912ல் அரசு மாவட்ட முன்சிப் பதவிகளில் 72.6 % இடங்களில் பிராமணர்கள் அனுபவித்தனர்.
  • 1917ல் முக்கிய ஆரசு பதவிகளில் தாசில்தாராக 59.7 %, துணை தாசில்தாராக 69.1 சதவிதம், ஆங்கில தலைமை எழுதராக 66.7 சதவிகிதம், மாவட்ட வழக்குமன்ற சிரஸ்தாராக 59.1%, சார்பு வழக்குமன்ற சிரஸ்தார் 75% இடங்கள் என பெரும்பான்மையான பதவிகளை அனுபவித்தது பிராமணர்கள்.
  • 1844ல் உருவாக்கப்பட்ட சென்னை மாகாண சபையில் பார்ப்பனர்கள் ஆதிக்கமே நிலைத்திருந்தது. 1885ல் இந்திய தேசிய காங்கிரஸ் முதல் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்ற 5 பேர்களில் 4 பேர் பிராமணர்கள். பின்னர் அமைக்கப்பட்ட மாநில காங்கிரஸ் குழுவில் 15 பேரில் 14 பேர் பிராமணர்கள்.
  • 1904ல் மொத்த 16 இந்திய சிவில் சர்வீஸ் பதவிகளில் 15 பேர் பிராமணர்கள்.
  • 1914ல் மொத்த 128 மாவட்ட முன்சிப் பதவிகளில் 93 பேர் பிராமணர்கள்.
  • 1944ல் மொத்த 650 பட்டதாரிப் பணியாளர்களில் 452 பேர் பிராமணர்கள்.
இடப்பங்கீட்டிற்கான குரல்களும் எழுச்சிகளும்
நியூட்டனின் இயக்கவியல் விதிக்கு ஏற்ப ஆதிக்க சாதியினரின் இந்த போக்கு இந்திய சமூகத்தில் எதிர்விளைவுகளை உருவாக்கியது. பாதிக்கப்பட்ட மக்களின் தலைமை அரசியல் அரங்கில் தனது குரலை உயர்த்தத் துவங்கியது. அதன் துவக்கம் சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சியின் வெற்றியிலிருந்து ஆரம்பித்தது. 1920ல் சென்னை மாகாண தேர்தலில் வெற்றிபெற்று நீதிக்கட்சி ஆட்சியில் வந்ததும் சில முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொண்டது. நீதிக்கட்சியின் ஆட்சியில் எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகள் பிற்படுத்தப்பட்ட, தலித் மக்களுக்கு மிகவும் முக்கியமானவை.

கிராமப்புறங்களில் ஆயிரக்கணக்கான துவக்கப் பள்ளிகள் நிறுவப்பட்டன.
ஆதிதிராவிடரின் குழந்தைகளைக் கட்டிடத்திற்குள் அனுமதியாத பொதுப் பள்ளிகளுக்கு அரசு மானியம் அளிக்கப்படமாட்டாது என்று 1923 இல் ஆணைப் பிறப்பித்தது.
வகுப்புவாரி உரிமையை அரசின் கொள்கையாக ஏற்று 1921 செப்டெம்பர் 16ம் நாள் முதல் முறையாக வகுப்புவாரி சட்டம் பிறப்பித்தது. அதன்படி அரசுப்பள்ளிகளில், வேலைவாய்ப்பில் 12 இடங்களில் 2 பிராமணரும், 6 பிராமணர் அல்லாதவர்களுக்கு, 1 ஆதிதிராவிடர்களுக்கு, 2 இஸ்லாமியர்களுக்கு, 2 ஆங்கிலோ இந்தியர்களுக்கு என முதல் இடப்பங்கீடு உருவாக்கப்பட்டது.
1942ல் சட்ட அமைச்சராக இருந்த அண்ணல் அம்பேத்கார் அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இடப்பங்கீட்டிற்காக முன்வரைவை வைசிராய் லின்லித்கோவிடம் சமர்ப்பித்தார். அதனடிப்படையில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 8.33% பணியிடங்கள் ஒதுக்கப்பட்டன. 1946ல் அந்த இடப்பங்கீடு 12.33% என உயர்த்தப்பட்டது. 1947ற்கு பின்னர் அது 16.66% என உயர்த்தப்பட்டது. அதே போன்று 1950ல் பழங்குடி மக்களுக்கு 5% இடப்பங்கீடு உருவாக்கப்பட்டது.

தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் இடப்பங்கீடு வழங்க 26, ஜனவரி 1950ல் இந்திய அரசியல் சாசனம் வழி உரிமை ஏற்பட்டது. சுதந்திரமடையும் எந்த நாடும் விளிம்புநிலை மனிதர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்துவது இயல்பு. அந்த அடிப்படையில் தான் இந்த அரசியல் சட்ட உரிமையும் அமைந்தது.

அரசியல் சட்டம் வழங்கிய அந்த உரிமையை எதிர்த்து அதுவரை பெரும்பங்கை அனுபவித்து வந்தவர்களான பிராமணர்கள் சென்னை உயர்நீதிமன்றத்திலும் பின்னர் உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தனர். 'கல்வி நிலையங்களில் இடப்பங்கீடு' என்பது violated the fundamental right to non-discrimination (முறையாக புரிந்துகொள்ள ஆங்கில வார்த்தைகளில்) ஆகவே அதை நீக்கவேண்டும் அந்த வழக்கு தொடுக்கப்பட்டது. "சமூகநீதியை நிலைநாட்ட உருவாக்கப்பட்ட அரசியல் உரிமையை" அரசியல் சட்டத்திற்கு முரணானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பெரியாரின் இயக்கப் பணிகள் அந்த காலகட்டத்தில் தமிழகத்தில் சாதி ஆதிக்கத்தை கடுமையாக எதிர்க்க துவங்கியிருந்தது. நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பெரியார் தலைமையில் போராட்டங்கள், கூட்டங்கள் என எதிர்ப்புகள் கிளம்பியது. நாடெங்கிலும் எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. பிரதமர் ஜவஹர்லால் நேரு தலைமையிலான அரசு அரசியல் சட்டத்தை திருத்தி Clause 4 to the Article 15: "Nothing in this article or in clause (2) of Article 29 shall prevent the State from making any special provision for the advancement of any socially and educationally backward classes of citizens or for the Scheduled Castes and the Scheduled Tribes." என்ற பகுதி அரசியல் சட்டத்தில் சேர்த்தது. சமூகநீதியை காப்பற்றவே முதல் முறையாக அரசியல் சட்டம் திருத்தப்பட்டது (தற்போதைய உச்சநீதிமன்றத்தின் அரசியல் சட்டத்தின் 9வது அட்டவணை பற்றிய தீர்ப்பு இந்த திருத்தத்துடன் தொடர்புடையது).

கொள்கை அளவில் தாழ்த்தப்பட்டவர்களுக்கான இடப்பங்கீடு மத்திய, மாநில அரசுபணிகளில் கட்டாயமாக்கப்பட்டது. அதே வேளை பிற்படுத்தப்பட்ட மக்களின் இடப்பங்கீடு மாநில அரசின் நல்லெண்ண நடவடிக்கைக்கு விடப்பட்டது. 1953ல் பிற்படுத்தப்பட்டோர் நிலை பற்றி ஆராய ஸ்ரீ காகா கலேல்கர் ஆணைக்குழு ஏற்படுத்தப்பட்டது. இந்த ஆணைக்குழுவின் அறிக்கை 1955ல் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கையில் "பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் இடப்பங்கீடு அளிக்கப்படவேண்டும்" என பரிந்துரைக்கப்பட்டது. ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி இந்த அறிக்கையின் பரிந்துரைகளை முறையாக அமல்படுத்தவில்லை.

சமூக மாற்றத்தை உருவாக்கிய மண்டல் விசாரணைக்குழு அறிக்கை:20.01.1978ல் பிரதமர் மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா ஆட்சியில் "சமூக அடிப்படையிலும் கல்வி அடிப்படையிலும் பின்தங்கிய மக்களை அடையாளம் காண" பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் என்ற பாராளுமன்ற உறுப்பினர் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. பிற்படுத்தப்பட்ட மக்களின் வளர்ச்சிக்கான பரிந்துரைகளை பெற அரசு அமைத்த இரண்டாவது விசாரணைக்குழு இது. சமூக, பொருளாதார, கல்வி அடிப்படையில் பின்தங்கிய மக்களை அடையாளம் காண 8 அணுகுமுறைகளை இந்த விசாரணைக்குழு கையாண்டது.
  • நாடெங்கும் மக்களிடமும், அமைப்புகளிடமும் கேள்வித் தொகுப்பைக் கொடுத்து தகவல்களை திரட்டியது.
  • இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 84 மாவட்ட தலைநகரங்கள், 87 கிராமங்கள், 171 முறையான கருத்தமர்வுகள் நடத்தப்பட்டன. மக்களிடமிருந்தும், அமைப்புகளிடமிருந்தும் நேரடி வாக்குமூலங்கள் பெறப்பட்டன. அரசு துறை நிறுவனங்களின் அதிகாரிகள், அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உற்றுப்பினர்கள் கருத்துக்கள் சேகரிக்கப்பட்டன.
  • பத்திரிக்கையாளர்கள், 6வது பாராளுமன்ற உறுப்பினர்கள் சாட்சியம் நேரடியாக பெறப்பட்டன.
  • பேராசிரியர் M.V சீனிவாசன் அவர்கள் தலைமையில் 15 அறிஞர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு நாடு முழுவதும் சமூக, கல்வி நிலை பற்றிய ஆய்வு கணனி மூலம் செய்யப்பட்டது.
  • வட இந்தியா, தென்னிந்தியா என இரண்டாக பிரித்து ஒரு ஒப்பீட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. டாட்டா சமூகவியல் நிறுவனம் இந்த ஆய்வை நடத்தியது.
  • 1891 முதல் 1931 வரையில் சாதி அடிப்படையில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பை வைத்து, சாதிகளின் சமூக வளர்ச்சி பட்டியலிடப்பட்டது. இதில் சாதிக்கும், பரம்பரை தொழிலுக்குமான தொடர்பு கவனத்தில் எடுக்கப்பட்டது.
  • இந்திய மானுடவியல் அளவை மையம், கல்கத்தா, உதவியுடன் கிராமங்களில் ஆய்வு செய்யப்பட்டு சமூக, பொருளாதார வாழ்வு பற்றிய செய்திகள் திரட்டப்பட்டன. இது தவிர அகில இந்திய நிறுவனங்களிடமிருந்தும் செய்திகள் சேகரிக்கப்பட்டன.
  • இந்திய சட்ட நிறுவனத்தின் உதவியுடன் 20 வருடங்களாக வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்புகள் பரிசீலிக்கப்பட்டு பிற்படுத்தப்பட்டவர்களின் வளர்ச்சி மற்றும் இடஒதுக்கீடு சம்பந்தமான சட்ட நுணுக்கங்கள் கணிக்கப்பட்டன.
மண்டல் குழு சமூக மற்றும் கல்வி அடைப்படையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை வரையறை செய்ய மூன்று அடிப்படை காரணிகள் நிர்ணயம் செய்தது.
அவை:
  1. சமூக அடிப்படைக் காரணிகள்: சாதி, குடும்பம், திருமணம், பெண்கள் உழைப்பு.
  2. கல்வி அடிப்படைக் காரணிகள்: எந்த சாதியினர் 5-15 வயது வரை பள்ளிக்கு செல்லாதவர்கள் மாநில படிப்பறிவற்றவர்கள் சராசரியை விட 25% அதிகம் உள்ள சாதியினர். எந்த சாதியினர் 5-15 வயது வரை பள்ளிப்படிப்பை பாதியில் கைவிட்டவர்கள், இதில் மாநில சராசரியை விட 25% அதிகம் உள்ள சாதியினர். எந்த சாதியில் பள்ளிப்படிப்பை முடித்தவர்கள் மாநில சராசரியை விட 25% குறைவாக உள்ள சாதியினர்.
  3. பொருளாதார அடிப்படைக் காரணிகள்: எந்த சாதியில் மாநில சராசரிக் குடும்ப சொத்தை விட 25% குறைவாக குடும்பச் சொத்து வைத்துள்ளனரோ அவர்கள். எந்த சாதியில் குடிசையில் வசிப்போர் மாநில குடிசைவாசிகளின் சராசரியை விட 25% அதிகமாக உள்ளனரோ அவர்கள். எந்த சாதியில் அரை கிலோமீட்டருக்கு மேல் நடந்து சென்று குடிநீர் எடுப்பவர்கள் 50% உள்ளனரோ அவர்கள். எந்த சாதியில் நுகர்கடன் வாங்குவோர் மாநில சராசரியை விட 25% அதிகமாக உள்ளனரோ அவர்கள்.
வகுப்புவாரியாக முற்படுத்தப்பட்ட சாதியினர் மொத்தமாக 17.58%, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் 22.56%, சிறுபான்மையினர்கள் 16.16%, பிற்படுத்தப்பட்டவர்கள் 52.10%. இந்திய மக்கள் தொகையில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் மொத்தம் 74.66 சதவிகிதம் பேர். இவர்களுக்கு சமூகநீதி வழங்க அறிவியல் ஆய்வு அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட மண்டல் குழு தனது அறிக்கையை பரிந்துரைகளுடன் 31.12.1980ல் அரசிடம் சமர்ப்பித்தது. அவற்றில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27% இடப்பங்கீடு வழங்கப்படவேண்டும் என்ற பரிந்துரையும் அடங்கும்.
மண்டல் குழு விசாரணை அறிக்கையை காங்கிரஸ் கட்சியில் இருந்த ஆதிக்க சாதியினர் எதிர்த்தனர். அதோடு மண்டல் அறிக்கையை பரணில் போட்டது காங்கிரஸ் அரசு.

பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் காவலன் வி.பி.சிங்:
1989ல் நான் பள்ளி இறுதியாண்டை கடந்திருந்த வேளை இந்திய அரசியலும் சூடாக ஆரம்பித்தது. இந்திய அரசியலில் "மண்டல் கமிசன்" என்ற வார்த்தை அதிகம் உச்சரிக்கப்பட்டது இந்த காலத்தில் தான். தொடர்ந்த ஆண்டுகளில் இடஒதுக்கீடு பற்றியும் அதை சார்ந்த அல்லது எதிர்ப்பு அரசியலை அனுபவிக்க நேர்ந்தது. பிரதமர்.வி.பி.சிங் அவர்களது ஆட்சியை இழக்க வைத்தது மண்டல் விசாரணை அறிக்கை. மதவெறியில் மக்களை திரட்டும் "ராமர்கோவில் அரசியலை" பாரதீய ஜனதா கட்சியும், சங்பரிவாரங்களும் முன்னெடுக்கக் காரணமும் இந்த மண்டல் அறிக்கை தான்.

இவை நடந்தது எப்படி?

1989ல் மண்டல் கமிசன் அறிக்கையை நிறைவேற்றி தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவதாக இந்திய நாடாளுமன்றத்தில் பிரதமர். வி.பி.சிங் அறிவித்தார். வடஇந்தியா முழுவதும் அரசிற்கு எதிரான எதிர்ப்புகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டன. மாணவர் விடுதிகளில் தங்கியிருந்த தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் ஆதிக்கசாதியினரால் மிரட்டப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டனர். இடப்பங்கீட்டை எதிர்த்து மாணவர் கிளர்ச்சியை உருவாக்க 'திட்டமிட்டு' மாணவன் ஒருவனை தீக்குளிக்க வைத்தனர். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களை தங்களுக்கு சாதகமாக ஒன்று திரட்ட "இராமர்கோயில்" விவகாரத்தை உணச்சிகரமாக்கி மதவெறி அரசியலை சங்பரிவார அமைப்புகள் துவங்கின. இவை அனைத்தையும் ராஜீவ்காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி வேடிக்கை பார்த்தது. இப்படியான நெருக்கடி நிலையை சந்தித்த பின்னரும் இடப்பங்கீடு கொள்கையை அரசு அமல்படுத்தியது. இராமர்கோவில் ரத யாத்திரையை அத்வானி தலைமையில் துவக்கி சங்பரிவார அமைப்புகள் வி.பி.சிங் அரசை கவிழ்த்தது. இந்திய அரசியலில் பதவி சுகங்களுக்காக கொள்கையில் சமரசம் செய்யாத மனிதராக வி.பி.சிங் அவர்களை உயர்த்தியது இந்த நிகழ்வுகள். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் மனங்களில் வி.பி.சிங் இதன் மூலம் சிறப்பான இடத்தை பெற்றார்.

1990ல் இந்திய அளவில் அரசுதுறைகளில் ஆதிக்க சாதியினர்:
கல்வியிலும், வேலைவாய்ப்புகளிலும் பெரும்பான்மை இடங்களை அனுபவித்தது யார் என சண்டே வார இதழில் 1990 டிசம்பர் 23ல் வெளிவந்த சில தகவல்கள். இவை அனைத்தும் இடப்பங்கீட்டிற்கு எதிர்ப்பை ஆதிக்கசாதியினர் அதிகமாக்கிய 1990ஆம் ஆண்டின் புள்ளிவிபரங்கள்.
  • துணைச் செயலாளர்கள் 500 பேரில் 310 பேர் (62%) பிராமணர்கள்.
    மாநில தலைமைச் செயலாளர்கள் 26 பேரில் 19 பேர் (73.07%) பேர் பிராமணர்கள்.
  • ஆளுநர்கள் மற்றும் உதவி ஆளுநர்கள் 27 பேரில் 13 பேர் (48.15%) பிராமணர்கள்.
  • உச்சநீதிமன்ற நீதிபதிகள் 16 பேரில் 9 பேர் ( 56.25%) பிராமணர்கள்.
    உயர்நீதிமன்ற நீதிபதிகள் 330 பேரில் 166 பேர் (50.30%) பேர் பிராமணர்கள்.
    தூதுவர்கள் 140 பேரில் 58 பேர் (41.42%) பிராமணர்கள்.
    பல்கலைக்கழக துணைவேந்தர்கள் 98 பேரில் 50 பேர் (51.02%) பிராமணர்கள்.
  • மாவட்ட நீதிபதிகள் 438 பேரில் 250 பேர் (57.07%) பிராமணர்கள்.
  • ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 3300 பேரில் 2376 பேர் (72%) பிராமணர்கள்.
  • பாராளுமன்ற லோக்சபை உறுப்பினர்கள் 530 பேரில் 190 பேர் (35.85%) பிராமணர்கள்.
  • பாராளுமன்ற மேலவை உறுப்பினர்கள் 244 பேரில் 89 பேர் ( 36.48%) பேர் பிராமணர்கள்.
நாடு விடுதலையடைந்து 43 ஆண்டுகளுக்கு பின்னர் இருந்த நிலை இது. மன்னர் கால ஆட்சியிலும், ஆங்கிலேய காலனியாதிக்க ஆட்சியிலும் ஆதிக்க சாதியினரின் அதிகாரம் எவ்வளவு இருந்ததோ அதற்கு சற்றும் குறையவில்லை. தொடர்ந்து சட்டப்போராட்டங்கள் நடந்தன. இந்த சட்டப்போராட்டத்தில் திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீரமணியின் பங்கு குறிப்பிடத்தக்கது. அதன் விளைவாக இடப்பங்கீட்டிற்குப் பாதுகாப்பை சட்ட வடிவில் கொடுப்பதற்காக அரசியல் அமைப்பின் 9வது அட்டவணையில் சேர்க்கப்பட்டது (9 அட்டவணை பற்றி தனிப்பதிவாக பார்க்கலாம். யாராவது இது பற்றி வலைப்பதிவில் எழுதியுள்ளார்களா தெரியவில்லை). அன்றைய தமிழக முதல்வர் என்ற முறையில் இடப்பங்கீடு அரசியல் சட்ட பாதுகாப்பை அடையும் பணியில் ஆதரவு வழங்கியதற்காக செல்வி. ஜெயலலிதாவிற்கு "சமூகநீதி காத்த வீராங்கனை" பட்டத்தை வீரமணி வழங்கினார்.

எதிர்ப்பாளர்களின் "திறமை" விளக்கங்கள்:
இடப்பங்கீடு அமல்படுத்தப்பட்ட பின்னரும் இந்திய உயர்கல்வி கழகங்களான ஐ.ஐ.டி (Indian Institue of Technology), ஐ,ஐ.எம் (Indian Institute of Management) போன்றவைகளில் ஆதிக்க சாதியினரின் கரங்களே வலுவாக இருந்தன; இருக்கின்றன. இந்த நிறுவனங்களே நாட்டின் உயர்ந்த தொழில்நுட்ப, பொருளாதார, அறிவியல் வல்லுநர்களை உருவாக்கி வருகிறது. ஆதிக்க சாதியினரின் உயர்கல்வி நிலைய ஆதிக்கத்தின் விளைவு அனைத்து உயர் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி துறைகளிலும் குறிப்பிட்ட சாதியினரை அதிமாக காணமுடிகிறது.

இடப்பங்கீட்டை உயர்கல்வி நிலயங்களில் அமல்படுத்த நடந்த அரசியல் போராட்டங்களின் விளைவாக திரு.மன்மோகன் தலைமையிலான தற்போதைய காங்கிரஸ் அரசு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உயர்கல்வியில் 27% இடப்பங்கீடு அறிவித்தது. மருத்துவர் சங்கங்களையும், மருத்துவக் கல்வி மாணவர்களையும் கிளர்ச்சியில் ஈடுபட வைத்து மக்களாட்சி அமைப்புகளையே மிரட்டினர் உயர்பதவிகளில் இருந்த ஆதிக்கசாதியினர். "உயர்கல்வி கழகங்களில் இடப்பங்கீடு வழங்குவதால் கல்வியில் தரம் அழிந்துவிடும்", "ஆராய்ச்சிகளில் ஈடுபடுபவர்களுக்கு தகுதி மற்றும் திறமை அடிப்படையில் தான் இடம் வழங்கவேண்டும். இதில் இடப்பங்கீடு என சமரசம் செய்தால் நாட்டின் எதிர்கால அறிவியல் வளர்ச்சிக்கு தடையாகும்", " என 'அறிவுசீவிகள்' தங்களது வாதங்களை முன்வைத்தனர். இந்த வாதங்களுக்கு பின்னால் தாங்கள் மட்டுமே திறமையானவர்கள் என்னும் ஆதிக்கமன அரசியல் வெளிப்பட்டது.

இந்திய சமூக அமைப்பில் காலங்காலமாக சமூக, பொருளாதாரம், கல்வி, அரசியல் சுகங்களை அனுபவிப்பவர்களுக்கு திறமை உருவாக்க பொருளாதார, அரசியல், பின்புலங்கள் என வாய்ப்புகள் அதிகம். கல்வி, வேலைவாய்ப்பில் புறக்கணிக்கப்பட்ட மக்களின் சந்ததிகள் "திறமை" என்ற இவர்களின் அளவுகோலில் வர தலைமுறைகளுக்கு கல்வி, பொருளாதார பின்புலங்கள் அவசியமாகிறது.

இன்றைய ஆதிக்க சாதியினர் குறிப்பிடும் 'திறமைகள்' அவர்களது தலைமுறை கல்வியால், அரசியல் பலத்தால், பெரும்பான்மை இடங்களை தாங்களே அனுபவித்து வந்த பெரும்பான்மை வாய்ப்புகளில் கிடைத்தவையே. வேதம் படித்தவர்களுக்கும் மன்னர்களிடம் செல்வாக்கு இருந்தது. அவர்களுக்கு நிலம், பொருள், அதிகார பதவிகள் கிடைத்தன. இரு பிறப்பாளர்கள் மட்டுமே பிறப்பில் உயர்ந்தவர்கள் என்ற மனுதர்மத்தை பயன்படுத்தி சூத்திரர்களும், பஞ்சமர்களும் வேதம் படிக்கவோ, படிப்பதை கேட்கவோ தடை விதிக்கப்பட்டன. வேதம் படிப்பதை கேட்ட காதில் ஈயம் அல்லது மெழுகு காய்ச்சி ஊற்றவேண்டும் என்ற சட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதனால் கல்வி அவர்களுக்கு மட்டுமான ஏகபோக உரிமையானது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வியறிவு மறுக்கப்பட்டவர்களாக அடிமை நிலையில் தள்ளப்பட்டனர். எல்லாம் தங்களுக்காக மட்டுமே வைத்துக்கொண்டவர்கள், அனைத்தும் மறுக்கப்பட்டவர்களிடம் "திறமை" என தங்களது அளவுகோலை காட்டுவது மனித நாகரிகமற்ற சாதி ஆதிக்கத்தின் புதிய வடிவம்.

இன்றைய சூழலிலும் புதிய கல்வித்துறைகளில் குறிப்பிட்ட ஆதிக்க சாதிகளின் மேலாதிக்கமே காணப்படுகிறது. வளம் குன்றிய துறைகள் மட்டும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வந்து சேர்கிறது. கல்வியின் பணி மனிதனை மனிதனாக மாற்றுவது, அறிவு வளர்ச்சியடைந்தவர்களாக்குவது என்ற அடிப்படையில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வியில், வேலைவாய்ப்பில் இடப்பங்கீடு அவசியமாகிறது. பாதிப்படைந்தவர்களுக்கான ஊன்றுகோல் தான் இடப்பங்கீடு.

இடப்பங்கீடும் நாராயண மூர்த்திகளும்:
இந்தியாவின் உயர்கல்வி நிலையமான ஐ.ஐ.டி முழுவதும் ஆதிக்கசாதியினர் மயமாகவே இருந்து வருகிறது. செல்வாக்கைப் பயன்படுத்தி உயர்கல்வி, வேலைவாய்ப்பை உருவாக்கியவர்கள் இன்று திறமை பற்றி பேசுவது கேவலமானது. 'இன்போசிஸ்' நிறுவனர் திரு. நாராயணமூர்த்தி இடப்பங்கீடு எதிர்ப்பாளர் வரிசையில் முன்னணியில் இருக்கிறார். தலைமுறைகளாக அதிகாரமும், கல்வியும், வளமும் பெற்ற ஆதிக்க சாதியிலிருந்து 'நாராயணமூர்த்தி' போன்றவர்கள் உருவாக முடிகிறது. 38 ஆண்டுகளுக்கு முன்னர் திரு. நாராயணமூர்த்திக்கு ஐ.ஐ.டியில் கிடைத்த கல்வியும், பொருளீட்டும் வாய்ப்புகளும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டனவா? இது அடிப்படையான கேள்வி.

சந்தையையும், போட்டியையும் மையமாக வைத்து பணம் குவிப்பது மட்டுமே வாழ்வியல் கொள்கை என நினைத்தால், சமூகம் அழிவுநிலைக்கு தள்ளப்படும். மனிதர்களை அவர்களது சுயமரியாதையுடனும், தன்மானத்துடனும் வாழ வழி ஏற்படுத்துவது ஒரு நல்ல அரசின் கடமை. சமூகநீதிக்கான போராட்டத்தில் முதலாளித்துவ, பார்ப்பனீய சிந்தனைகளுக்கு எதிர்சிந்தனைகளை உருவாக்குவதன் வழியாகவே சமத்துவ சமுதாயம் என்ற இலக்கை அடையமுடியும் என்பதை பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் உணரும் காலம் நெருங்குகிறது.

இடப்பங்கீடு பயணம் செய்யவேண்டிய பாதை:உலகயமயமாக்கல், தனியார்மயம் பொருளாதார கொள்கையால் இன்று வேலைவாய்ப்புகள் தனியார்துறைக்கு நகர்ந்திருக்கிறது. செல்வாக்கு, அதிகாரத்தை பயன்படுத்தி தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவன வேலைவாய்ப்புகளை அதிகமாக அனுபவிப்பது பெரும்பாலும் ஆதிக்கசாதியினர்களுக்கானதாக மாறியிருக்கிறது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இளைய தலைமுறை தகுதி, திறமை என்ற முடிவற்ற அளவுகோல்களில் சிக்கிப் போராடுகிறது. கல்வி, வேலைவாய்ப்பு போன்றவை தனியார் துறைக்கு நகர்ந்திருக்கும் இன்றைய சூழலில் தனியார் துறையில் வேலைவாய்ப்பு மற்றும் தனியார் நிறுவனங்களில் கல்வியில் இடப்பங்கீடு சட்டம் அவசியாமாகிறது.

சாதி ஆதிக்கமற்ற சமுதாயம் படைக்க சாதி ஆதிக்கம் தடையாக இருக்கும் வரை இந்தியாவில் இடப்பங்கீடும் அவசியமாகிறது. சமீபத்திய உச்சநீதிமன்ற தீர்ப்பையொட்டி இடப்பங்கீடு பற்றிய அரசியல் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. சமூகநீதிப் போராட்டங்கள் தடைகளை தாண்டியே வளர்ந்தன. இடப்பங்கீடு என்னும் உரிமைக்கான போராட்டமும் தடைகளை உடைக்கும்.
___________

தகவல் பெற பயன்பட்ட நூல்கள் சில:
  1. Politics and Social Conflict in South India The Non-Brahmin Movement and Tanie Seperation (Berkeley: University of California Press, 1969) - Sundravadivelu.
  2. Great Britain parliamentary papers, Vol XXI (Reports from Commissioners etc. Vol XI).
  3. Caste in Indian Politics, Rajini Kothari

7 பின்னூட்டங்கள்:

கலை said...

உங்கள் கட்டுரையிலிருந்து நிறைய விடயங்களைப் புரிந்து கொள்ள முடிந்தது. நன்றி.

Anonymous said...

பிராமணர்கள்தான் திறமைமிக்கவர்கள் என்பதுபற்றி சில வார்த்தைகள்.

ஈழத்தில் பிராமணர்களின் எண்ணிக்கை 1% த்திலும் குறைவு. ஈழத்தில் சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு இல்லை. தமிழர்களுக்கிடையில் பொதுப்போட்டிதான்( open competition). ஆயினும் இங்கு பிராமணர்கள் எந்தத்துறையிலும்(மணியாட்டுவதைத் தவிர) அளவிற்கதிகமாக கோலோச்சவில்லை. சந்தர்ப்ப சூழ்நிலைகளினால்தான் இந்தியாவில் அவர்கள் திறமைமிக்கவர்களாக தோற்றமளிக்கிறார்களேயொழிய அவர்களிடம் அப்படி ஒரு விசேட திறமை என்று எதுவும் இல்லை, மற்ற சாதியினரும் தக்க வாய்ப்புக்கள் அளிக்கப்பட்டால் எதையும் சாதிக்கமுடியும் என்பதை இதிலிருந்து விளங்கிக்கொள்ளலாம். உரியவர்கள் புரிந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கை மட்டும் எனக்கு இல்லை :)

Sivabalan said...

திரு

மிக அருமையான பதிவு!!

சமுதாயத்திற்கு தேவையான பதிவு!!

ஒரு விசயத்தை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்பிகிறேன்.

சுதந்திரத்திற்கு முன் மருத்துவ படிப்பு படிக்க வேண்டுமானல் நிச்சயம் சம்ஸ்கிறதத்தில் நல்ல மதிப்பெண் இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இருந்த்தது. இதன் மூலம் ஆதிக்க சக்திகள் எப்படி அந்த துறையை ஆக்கிரமித்தார்கள் என்பது நன்றாக தெரியவரும்.

இது தினகரனில் வந்த கட்டுரையிலிருந்து..

கோவி.கண்ணன் said...

"இடப்பங்கீடு சில (அ)நியாயங்கள்!"
- நிறைய தகவல்கள் கொடுத்திருக்கிறீர்கள் திரு நன்றி !

ரவி ஸ்ரீநிவாஸ் said...

I have posted four responses to this blog post and an earlier one.
For reasons known best to you,
you have not published them.I am
no longer interested in responding
to your posts.

thiru said...

Ravi,

I didn't get any comments from you for this post. I checked in my mail and comment box, there is none from you for this post. It might be an error.

If you have it with you please repost I will see and post it if it is relevent to the topic.

There are two comments waiting under moderation since it was not related to the topic of my post "periyar kadavulukku ethiriya?"

Thanks.

Anonymous said...

Valuable information.

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com