ஆணும், பெண்ணும் சமமா?
ஜார்கண்ட் மாநிலத்தை சார்ந்த 17 வயதான அபர்ணா குமரி தனது காதலனை திருமணம் செய்ய பணம் சேர்க்க வேலை தேடி பாட்னாவிற்கு சென்றாள். காலை 8 மணி துவங்கி இரவு 11 மணிவரை வீட்டுவேலை செய்ய மாதம் 500 ரூபாய் சம்பளம் பேசப்பட்டிருக்கிறது; இரண்டு வருடமாகியும் இன்னும் பணத்தை பார்க்கவில்லை. சமையல்கட்டில் ஒரு போர்வையும், சமுக்காளமும் தான் தூங்க உதவுகிறது. வீட்டு முதலாளியம்மா இல்லாத வேளை அவர்களது 20 வயதான மகனின் பாலியல் தொந்தரவுகள் பதட்டத்தை அதிகரிக்கிறது. எந்த நேரத்தில் இந்த நரிக்கு வேட்டையாவோமோ என்ற நிலை. முதலாளியம்மாவின் அடியும், உதையும் வேறு ரணமாய் உடலையும், மனதையும் வாட்டுகிறது.
******
ஆந்திராவை சார்ந்த 45 வயதான லட்சுமி சுகோல் பள்ளிக்கு சென்றதே இல்லை. 15 வயதில் தன்னைவிட 20 வயது அதிகமான ஒருவருடன் திருமணமானது. 17 வயதில் முதல் குழந்தையும்,23 வயதில் இரண்டாவது குழந்தையும் பிறந்த பின்னர் லட்சுமி வேலைக்கு செல்ல துவங்கினார். மாதம் 70 ரூபாய் கூலி பேசப்பட்டு வீட்டுவேலை கிடைத்தது. ஆனால் பணம் ஒழுங்காக கிடைக்கவில்லை. வீட்டு முதலாளியால் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். 35 வயதில் கண்பார்வை குறைந்ததால் அறுவை மருத்துவம் செய்தவேளை பார்வை பறிபோனது. மகளும் வீட்டு வேலைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை.
*******
இது கற்பனை கதையல்ல. ஒவ்வொரு நிமிடங்களிலும் நடந்துகொண்டிருக்கும் உண்மை வாழ்க்கை. உலகமெங்கும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நிறைந்திருக்கிறது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் பல வடிவங்களில் காணப்படுகிறது:
- உடல் ரீதியான வன்முறைகள்.
- பாலியல் அடிப்படையிலானவை.
- உளவியல் அடிப்படையிலானவை
- பெண்ணை விற்பனை பொருளாக்குவது
பெண்களை (கணவன் உட்பட) அடிப்பது, உதைப்பது, பாலியல் அத்துமீறல், வரதட்சணை தொடர்பான கொடுமைகள், மனைவியின் சம்மதமில்லாத பலாத்கார உறவு, பெணுறுப்பை சிதைத்தல் மற்றும் இது போன்ற பழக்கங்கள், உழைப்பை சுரண்டுவது, கேலி பேசுவது, குழுவாக கிண்டலடிப்பது (ஈவ்டீசிங்??), உணவிற்கும் அடிப்படை தேவைக்குமான பணம் கிடைக்காமல் தடுப்பது, வீட்டில் அடைத்து வைப்பது, கட்டாய திருமணம் செய்து வைப்பது என கொடுமைகள் என பல வடிவங்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் கண்டனத்திற்கும், தண்டனைக்குரியதுமான மனித நாகரீகமற்ற குற்றங்கள். இந்த குற்றங்கள் வேலையிடங்கள், பொதுஇடங்கள், வீடு என எல்லா இடங்களிலும் நிறைந்து காணப்படுகிறது.
குடும்பங்களில் ஆண்களின் குரல்களே முடிவாகி போவதும், பெண்ணுக்கு கருத்து சொல்லும் உரிமை இல்லாமல் இருப்பதும் தான் நிதர்சனமான உண்மை. திருமணம், கல்வி போன்ற முக்கிய முடிவுகளில் கூட பெண்ணின் விருப்பத்திற்கு விடுவதில்லை. அதே வேளை வயதில் இளைய ஆண்களின் விருப்பங்கள் நிறைவேறிவிடும். 'என்ன இருந்தாலும் அவன் ஆண்பிள்ளை' என ஆணாதிக்க குரல் சிறுவயதிலேயே புகுத்தப்படுகிறது. கிராமங்களில் பல வீடுகளில் பெண் குழந்தைகளுக்கு போதிய உணவளிக்காமல் ஆண் குழந்தைகளை மட்டும் சத்தான உணவளித்து வளர்க்கும் முறை இயல்பாகவே இருக்கிறது. பெண் குழந்தைகளை வேலைக்கு அனுப்பி அந்த பணத்தில் ஆண் பிள்ளைகளை படிக்க வைக்கிற நிலை இன்றும் இருக்கிறது. மனைவியை கணவன் அடிப்பதும் உதைப்பதுமான வன்முறை இந்திய சமூகத்தில் அதிகமாக காணப்படுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த கொடுமைகளில் படிக்காதவர்கள் முதல் மேற்படிப்புகள் படித்தவர்கள் ஈடுபடுகிறார்கள். குடும்பம் பெண்ணுக்கு அடிமை விலங்கு பூட்டி அழகு பார்க்கிறது.
மதங்கள் அனைத்தும் பெண்ணுக்கு வழங்கி இருக்கும் இடமானது கொடுமையானது. வழிபடும் உரிமை, வழிபாடு நடத்தும் உரிமை, சுதந்திரமாக ஆடைகள் அணியும் உரிமை இவை அனைத்தும் மதங்களின் சட்டங்கள் கட்டுப்படுத்துகின்றன. இந்த விடயத்தில் ஆபிரகாமிய மதங்களும், இந்து மதமும் ஒன்றுக்கொன்று குறைந்ததல்ல. மதம் பெண்ணை உரிமைகளற்ற அடிமையாக நடத்துகிறது.
திரைப்படம், பத்திரிக்கை, தொலைக்காட்சி, விளம்பரங்கள் என ஊடகங்கள் பெண்ணை விலை பொருளாக, கேவலமாக சித்தரிப்பதும், ஆணாதிக்கத்தை ஊக்குவிக்கும் போக்குமே காணப்படுகிறது.
பணியிடங்களில் பெண் என்பதால் நிர்வாக பதவிகளுக்கு பதவி உயர்வு மறுக்கப்படுவது, ஊதியத்தை குறைப்பது, பாலியல் வன்கொடுமைகள் என பலவிதமான பாதிப்புகள்.
சமூக அமைப்புகளில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் முறையாக இல்லை. இந்திய பாராளுமன்றத்தில் பெண்ணுக்கு 30% இடப்பங்கீடு சட்டம் கொண்டுவருவதில் கூட முடிவற்ற நிலையாக ஆணாதிக்கம் மலிந்து காணப்படுகிறது. தொழிற்சங்கங்களில் பெண்ணுக்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு.
காரணங்கள்:
- பெண்களாக பிறந்த காரணத்தால் பாலியல் வன்புணர்ச்சி, பிறப்புறுப்பு சிதைத்தல் (circumcision/genital
mutilation), பெண்சிசுக்கொலை, பாலியல் அடிப்படையிலான குற்றங்கள் பெண்களுக்கு எதிராக நடத்தப்படுகிறது. இதற்கான அடிப்படை காரணம் சமூகம் பெண்கள் மீது திணித்திருக்கும் பாலியல் பார்வையும் அது சார்ந்த கடமைகளுமான சமூக ஆதிக்கம். - ஆணோடு ஏற்படுத்தப்படுகிற உறவினால் பெண் குடும்ப வன்முறை, வரதட்சணை, சதி போன்றவைக்கு பலியாகிறாள். பெண்ணை உடமையாகவும்; தகப்பன், கணவன், மகன், சகோதரன் என ஆண்களின் 'பாதுகாப்பில்' அடங்கி நடக்க வேண்டியவளாக சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் பார்வையினால் இந்த வன்முறைகள் உருவாகின்றன.
- தான் சாந்திருக்கும் சமூக அடையாளத்தினால் பெண்கள் அடக்குமுறையை சந்திக்கிறார்கள். குழப்பம், கலவரங்கள், மோதல்களின் போது அவள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை, சாதியை, மதத்தை, இனத்தை, கலாச்சாரத்தை சார்ந்தவள் என்பதால் பாலியல் வன்புணர்ச்சி, கொலை, சித்திரவதை செய்வது. இதற்கு காரணம் சமூகம் பெண்ணை, ஆணின் உடமையாகவும், அவள் மீது திணித்திருக்கும் பாலியல் பார்வையும் சார்ந்தவை
இந்த நிலையில் பெண்கள் மீதான குடும்ப வன்முறையை தடுக்கும் சட்டமொன்றை இந்திய அரசு நிறைவேற்றியது. இந்த சட்டங்கள் சரியாக நிறைவேற்றப்பட வேண்டியது அவசியம். அதேவேளை, பெண்கள் மீதான பார்வையை, அணுகுமுறையை சமூகம், குடும்பம், மதங்கள், நிறுவனங்கள், ஊடகங்கள், அமைப்புகள் என அனைத்தும் மாற்ற அடிப்படை சமூக மாற்றம் அவசியமானது. பெண், ஆண் சமஉரிமை பற்றிய விழிப்புணர்வு கல்வி இன்றைய காலத்தில் மிக அவசியமாகிறது.
பெண்ணுக்கு வழங்கும் கல்வியும், உயிமையும் நமது சமூகத்தின் அவலங்களை துடைத்தெறியும். ஆணாதிக்க சிந்தனையால் பின்னப்பட்டிருக்கும் உலகை விடுவிக்க பெண், ஆண் சமஉரிமை மிக அவசியம்.
_____
டிஸ்கி: ஆணாக பிறந்த ஒருவன் பெண்களின் பிரச்சனையை அணுகுவதில் குறைபாடுகள் இருக்கலாம். குறைகள் இருப்பின் சுட்டுங்கள் என் கண்களையும், மனதையும் திறக்கிறேன்.
19 பின்னூட்டங்கள்:
சம உரிமை அவசியம் தான்.யார் யாரிடம் இருந்து பெற்றுக்கொள்ள?பெண்கள் தங்களையே தாங்கள் சிறைவைத்துக்கொள்ளாமல் இருந்தால் மட்டுமே முடியும்.
எனக்கென்னவோ இந்த சதவீதத்தில் எல்லாம் நம்பிக்கை இல்லை.படிப்பை மட்டும் இலவசமாகக்கொடுத்து படித்தால் தான் முன்னேற்றம் என்று தாய் தகப்பன் முன்னுரைத்தால் மட்டுமே மனிதன் முன்னேற வழி உண்டு.
இதே தான் உங்கள் முன் பதிவுக்கு போட நினைத்தேன்.காலம் கடந்துவிட்டது.
சாட்டையடியான பதிவு...உங்கள் டிஸ்கி தவறு....பெண்ணுரிமைக்காக போராடி குறிப்பிடத்தக்க வெற்றி கண்டவர்கள் ஆண்களே...ஒரு உதாரணம் : பாரதி !!!!
i am aasath
in our indian feudal system, all male genders have treate them as a PROPERTY.
If we will ready to struggle against, we find the solution. But if the victory shold be sustain, it depends of liberation of whole society
நல்ல பதிவு. இது தொடர்ச்சியாக நான் எழுதிய பதிவுகளுள் சிலவற்றை கொடுத்திருக்கிறேன். தங்களுக்கு சாதகமாக விளைவுகள் வரும்போது முடிவெடுக்க தயங்கி, எல்லா பழியையும் அம்மாவின் மேல் போடும் சிலர் இருக்கும்போது வந்த ஒரு பதிவு.
http://reallogic.org/thenthuli/?p=114
http://reallogic.org/thenthuli/?p=116
http://reallogic.org/thenthuli/?p=117
http://reallogic.org/thenthuli/?p=118
வடுவூர் குமார்:யாரும் யாருக்கும் உரிமை தரவும் முடியாது. உரிமை கொடுத்து வருவதில்லை.
பெண்ணுக்கு ஒருவிதமான
பிரச்சனை என்றால்
ஆணுக்கு இன்னொருவிதமான
பிரச்சனை.
இருபாலாருக்கும் எப்பொழுதும்
எங்கும் பிரச்சனை இருந்து
கொண்டுதான் இருக்கிறது.
அவற்றிலிருந்து
தனது நம்பிக்கையாலும்
தனது வைராக்கியத்தாலையுமே
மாத்திரமே மீளமுடியும்.
//சம உரிமை அவசியம் தான்.யார் யாரிடம் இருந்து பெற்றுக்கொள்ள?//
குமார்,
நமது சமூக அமைப்புகள் (குடும்பம் துவங்கி பாராளுமன்றம் வரை மட்டுமல்ல; ஐ.நா.சபை வரை), நெறிகள் அனைத்தும் ஆண்களின் ஆதிக்க சிந்தனைமயமாகவும், அதிகாரமுமாகவும் இருக்கிறது. சமூகத்தில் சரிபாதியாக இருக்கும் பெண்களுக்கு விடுதலை சமூகம் சார்ந்தது. இதில் யரும் விருப்பப்பட்டு அடிமையாவதில்லை.
யார் தானாகவே அடிமையாக விரும்புகிறார்கள்? பெண்கள் அடிமையாக்கப்பட்டார்கள். எப்போது பெண்தலைமை மனிதகுழுக்களிலிருந்து அகற்றப்பட்டு பொருள், உடமை சார்ந்த உலகை உருவாக்க ஆரம்பித்தோமோ அப்போதே இந்த அடிமைத்தனமும் உருவாகி தொடர ஆரம்பித்தது. குடும்பம், மானம், கௌரவம் என அனத்தும் பெண்ணை சுற்றி அடிமைத்தன கருத்துக்களாகவே பின்னப்பட்டிருக்கிறது.
பெண் அதிர்ந்து பேசக்கூடாது, சிரிக்கக்கூடாது, வீட்டில் கருத்து சொல்லக்கூடாது. இது யார் வைத்திருக்கும் விதி? நமது குடும்பங்களில் ஆண்களிடம் கருத்து கேட்கும் போது பெண்களுக்கு ஏன் அந்த உரிமை வழங்கப்படுவதில்லை?
****
பெண்ணை கடத்தி விலைமாதர்களாக, அடிமைகளாக விற்கும் அயோக்கியத்தனங்களை செய்வதும் அதற்கு காரணங்களும் என்ன? யார்?
இன்னும் பல பல கேள்விகள்...
//Anonymous said...
i am aasath
in our indian feudal system, all male genders have treate them as a PROPERTY.
If we will ready to struggle against, we find the solution. But if the victory shold be sustain, it depends of liberation of whole society //
நன்றி ஆசாத். பெயருக்கு ஏற்ப காரமாகவே சிந்திக்கிறீர்கள்.
//Padma said...
நல்ல பதிவு. இது தொடர்ச்சியாக நான் எழுதிய பதிவுகளுள் சிலவற்றை கொடுத்திருக்கிறேன். தங்களுக்கு சாதகமாக விளைவுகள் வரும்போது முடிவெடுக்க தயங்கி, எல்லா பழியையும் அம்மாவின் மேல் போடும் சிலர் இருக்கும்போது வந்த ஒரு பதிவு.
http://reallogic.org/thenthuli/?p=114
http://reallogic.org/thenthuli/?p=116
http://reallogic.org/thenthuli/?p=117
http://reallogic.org/thenthuli/?p=118//
//
பத்மா! வருகைக்கு நன்றி! சில சுட்டிகளை படித்திருக்கிறேன். முழுவதும் படிக்கிறேன்.
//யாரும் யாருக்கும் உரிமை தரவும் முடியாது. உரிமை கொடுத்து வருவதில்லை.//
உண்மையை நச்னு சொல்லியிருக்கீங்க.
எனக்கு அடிக்கடி வருகிற கேள்விகளில் ஒன்று. பெண்ணுரிமைக்கு மட்டுமல்ல; இதர உரிமைகளுக்கும் தான். "உரிமை இருக்குதுன்னு தெரியாமலே வாழுறதோ நமது சமுதாயம்?". கல்வி, உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு இன்னும் அவசியம். அனைவருக்கும்!
//Anonymous said...
பெண்ணுக்கு ஒருவிதமான
பிரச்சனை என்றால்
ஆணுக்கு இன்னொருவிதமான
பிரச்சனை.
இருபாலாருக்கும் எப்பொழுதும்
எங்கும் பிரச்சனை இருந்து
கொண்டுதான் இருக்கிறது.
அவற்றிலிருந்து
தனது நம்பிக்கையாலும்
தனது வைராக்கியத்தாலையுமே
மாத்திரமே மீளமுடியும்.//
அனானி,
முதல் பகுதி சரியாக விளங்கவில்லை. விரிவாக சொல்லுங்களேன்!
பெண்களுக்கான சுதந்திரம் ஆண்களால் தீர்மானிக்கப்படும் வரை, இதற்கு தீர்மானமான தீர்வு கிடைக்காது.
கட்டுரை சிறப்பாக வந்திருக்கிறது.நட்சத்திர வாழ்த்துக்கள்.
கட்டுரையின் நோக்கங்கள் பாராட்டுக்குரியன.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை இழைப்பதில் பெருமளவு பெண்களும் இருக்கிறார்கள் என்பதும் இவ்விடத்தில் உற்று நோக்கப் பட வேண்டியுள்ளது. தாங்கள் சொன்ன பெண்ணை வேலைக்கு அமர்த்தியது முதலாளியம்மாவான ஒரு பெண்தான்.
பாலியல் விவகாரத்தை தள்ளி வைத்துப் பார்த்தால் ஆண் பெண் சந்திக்கும் பிரச்சனைகள் (சம்பளம் முதலியன) பெருமளவு ஒத்துப்போவதையே காணலாம்.
இங்கு பெண்களுக்கான சுதந்திரத்தை ஆண்கள் தீர்மானிப்பதில்லை. சுதந்திரமான பெண்ணை புறம் பேசும் மற்ற பெண்கள் தீர்மானிக்கிறார்கள்.
முன்னேறிய பெண்களும் நுகர்வு கலாச்சார சந்தையின் சகல மயக்கங்களுக்கும் ஆளாவது கண்கூடு.
முன்னேற்றமும் ஒருவகையில் பெண்களை சீரழிப்பதை காண்கிறோம்.
ஆணோ பெண்ணோ குடும்பம் என்ற அமைப்பு இருவரையும் கட்டி வைக்கிறது. ஆணால் அதை எளிதில் உடைக்க முடியும். பெண்ணால் அதை எளிதில் உடைத்து வெளியேற முடியாது.
பெண் முன்னேற்றம் என்பது பெண்ணாலும் குடும்ப அமைப்பை எளிதில் உடைக்கும் படியாக செய்வதுதான் என்ற தவறான புரிதல்கள் இங்கு உள்ளன.
ஆணோ பெண்ணோ அனைவரும் தத்தமது சமூகப் பொறுப்புணர்வை உணர்ந்து செயல்படும் சமூகமே நமது தேவை.
திரு,
//உரிமை இருக்குதுன்னு தெரியாமலே வாழுறதோ நமது சமுதாயம்?". //
எல்லா அடிமைத்தனத்துக்கும் பொருந்தும் ஒரு வார்த்தை.
&&இங்கு பெண்களுக்கான சுதந்திரத்தை ஆண்கள் தீர்மானிப்பதில்லை. சுதந்திரமான பெண்ணை புறம் பேசும் மற்ற பெண்கள் தீர்மானிக்கிறார்கள்&&
மற்ற பெண்கள் புறம்பேசுவதற்கான காரணம் நமது சமூக அமைப்பு முறையும், இதுதான் சரியென்று ஏற்கனவே மனதில் விதைக்கப்பட்டிருக்கும் நிலையும்தான் என நினைக்கிறேன்.
//உரிமை இருக்குதுன்னு தெரியாமலே வாழுறதோ நமது சமுதாயம்?". //
சுதந்திரம், உரிமை என்பதை புரிந்து கொள்ளாமலே இருக்கும் பெண்கள் புறம்பேசத்தான் செய்வார்கள்.
//முன்னேற்றமும் ஒருவகையில் பெண்களை சீரழிப்பதை காண்கிறோம்.//
முன்னேற்றத்தினால் பெண்களை
சீரழிக்க முடியாது,
அப்படிச் சீரழிபவர்கள்,
அவர்கள் தங்கள்
உண்மையான நல்லறிவை
வளர்த்துக் கொள்ளவில்லை
என்பது உறுதியாகிறது.
//பெண், ஆண் சமஉரிமை பற்றிய விழிப்புணர்வு கல்வி இன்றைய காலத்தில் மிக அவசியமாகிறது. //
நன்றாக சொன்னீர்கள் திரு.
பெண்ணுரிமைக்கு பாரதி பாடுபட்டார்தான் ஆனால் அவராக தானாக அதை உணர வில்லை நிவேதிதா என்னும் பெண் உணர்த்திய பின் தான் பாரதியே உணர்ந்தார் .
எனவே இது அறிவுறுத்தப்பட வேண்டிய ஒன்றே.
ஏற்படுத்தப்பட்ட சமூக கட்டுபாடுகள் தான் பெண்ணடிமைக்கு காரணம்.
பெண்ணே பெண்ணுக்கு எதிரியாக இருப்பது ,சமூக அமைப்புக்குமீறி செயல்களை
செய்யும் பெண்ணை கட்டுக்குள்
இருக்கும் பெண் தவறாகப் புரிந்து
கொள்ளுவதால் அறியாமையால்
நிகழும் நிகழ்வுகளாக தான் இருக்கிறது.
//ஆணும் பெண்ணும் சமமா?//
திரு அய்யா,
எனக்கு கொஞ்ச நாளா ஒரு சின்ன சந்தேகம் இருந்துகிட்டே இருக்கு.நகர் புறத்தில், ஆண்களை விட, பெண்களே மறு காலனி ஆதிக்க சக்தியின் மோகினி ஆட்டத்தில்(?) மயங்கி விழறாங்களோன்னு தோணுதய்யா.இது நிஜமா அல்லது மாயையா?
பாலா
//லட்சுமி said...
//பெண், ஆண் சமஉரிமை பற்றிய விழிப்புணர்வு கல்வி இன்றைய காலத்தில் மிக அவசியமாகிறது. //
//நன்றாக சொன்னீர்கள் திரு.
பெண்ணுரிமைக்கு பாரதி பாடுபட்டார்தான் ஆனால் அவராக தானாக அதை உணர வில்லை நிவேதிதா என்னும் பெண் உணர்த்திய பின் தான் பாரதியே உணர்ந்தார் .
எனவே இது அறிவுறுத்தப்பட வேண்டிய ஒன்றே.//
உங்கள் பதிவைப் படித்ததும் நான் சொல்ல நினைத்தேன், லட்சுமி சொல்லி விட்டார். தன் மனைவியை கைநீட்டி அடித்ததை பாரதி சகோதரி நிவேதிதாவிடம் சொல்லி, பெண்ணியக் கல்வி பெறுவதாக படித்திருக்கிறேன். அறிவுறுத்தப் பட வேண்டியது - ஆண், பெண் இருபாலாருக்கும். கல்விக்கு சமமாக, வேலைவாய்ப்பு (financial independence) பெண் விடுதலைக்குக் காரணமாவதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். பணிக்குச் செல்வது யார், குடும்பத்தைக் கவனிப்பது யார் என்று கணவன் மனைவி இருவருக்குள் தீர்மானித்துக் கொள்ளலாம். ஆனால், உன் இடம் இது என்று சொல்லுவதற்கு (பெண்ணிடம்) ஆணுக்கோ, (ஆணிடம்) பெண்ணுக்கோ அதிகாரம் இல்லை. அந்த விழிப்புணர்வு வர காலம் பிடிக்கும். பெண் விடுதலையை (call center case) பலாத்காரம் மூலம் வென்று கொ(ல்)ள்ளும் ஆண்களும், மற்றவழி (முதலாளியம்மா போல்) அதிகாரம் மூலம் வெல்லும் பெண்களும் இருக்கும் வரை கடினம் தான்.
கெ.பி.
மேலோட்டமானபுரிதலிலும், தன் சொந்த மனக்கணக்குகளை அடுத்தவரின் கருத்துக்களில் தேடி அவை கிடைக்காதபோது ஏற்படும் எரிச்சலிலும் "ஆண் பெண் பேதமற்ற நிலை" பற்றிய இடுகைகளுக்கு, அதிலும் குறிப்பாகப் பெண்கள் எழுதும் இடுகைகளுக்கு எதிர்வினைகள் எழுதுவதாக நினைத்துக்கொண்டு அங்கங்கு தத்தமது மனநிலையைக் கொட்டிக்காட்டுபவர்களைத் தாண்டும் அடுத்த கணத்தில் இப்படியான ஆரோக்கியமான பதிவுகளையும் காணமுடிவது உண்மையில் மிகுந்த மகைழ்ச்சியைத் தருகிறது திரு.
நல்ல புரிதல், கருத்துக்கள். உங்களின் நட்சத்திரவாரம் நல்ல சிந்தனைகளைத் தரும் விதமாக இருந்தது. நன்றி. இந்த இடுகையின் பின்னூட்டங்களிலும் சிலர் சொல்லியிருக்கும் கருத்துக்கள் ஆழமான சிந்தனையின் வெளிப்பாடாக அமைந்துள்ளன.
///பெண்ணே பெண்ணுக்கு எதிரியாக இருப்பது ,சமூக அமைப்புக்குமீறி செயல்களை
செய்யும் பெண்ணை கட்டுக்குள்
இருக்கும் பெண் தவறாகப் புரிந்து
கொள்ளுவதால் அறியாமையால்
நிகழும் நிகழ்வுகளாக தான் இருக்கிறது. ///
///ஆண், பெண் இருபாலாருக்கும். கல்விக்கு சமமாக, வேலைவாய்ப்பு (financial independence) பெண் விடுதலைக்குக் காரணமாவதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். பணிக்குச் செல்வது யார், குடும்பத்தைக் கவனிப்பது யார் என்று கணவன் மனைவி இருவருக்குள் தீர்மானித்துக் கொள்ளலாம். ஆனால், உன் இடம் இது என்று சொல்லுவதற்கு (பெண்ணிடம்) ஆணுக்கோ, (ஆணிடம்) பெண்ணுக்கோ அதிகாரம் இல்லை. அந்த விழிப்புணர்வு வர காலம் பிடிக்கும். பெண் விடுதலையை (call center case) பலாத்காரம் மூலம் வென்று கொ(ல்)ள்ளும் ஆண்களும், மற்றவழி (முதலாளியம்மா போல்) அதிகாரம் மூலம் வெல்லும் பெண்களும் இருக்கும் வரை கடினம் தான்.////
மிகச்சரி.
திரு,
"என் முதல் பின்னூட்டத்தில் தத்தமது மனநிலையைக் கொட்டிக்காட்டுபவர்களை" என்பதற்கு அருகில் அடைப்புக்குறி போட்டுச் சொல்ல விட்டுப்போனது "அந்தந்தப் பெண்களின் இடுகைகளிலேயே மாற்றுக்கருத்துக்களை நேர்மையாகவும், நல்லமொழியிலும் வைக்கிறவர்களைத் தவிர்த்து" என்ற வரி. அதைச் சேர்த்துவிடுவதற்காக இந்தப் பின்னூட்டம்:))
ஆழியூரான்,
உண்மைதான்!
-00-
//அரை பிளேடு said...
பெண்களுக்கு எதிரான குற்றங்களை இழைப்பதில் பெருமளவு பெண்களும் இருக்கிறார்கள் என்பதும் இவ்விடத்தில் உற்று நோக்கப் பட வேண்டியுள்ளது. தாங்கள் சொன்ன பெண்ணை வேலைக்கு அமர்த்தியது முதலாளியம்மாவான ஒரு பெண்தான்.//
நண்பரே,
பெண் ஆண் சமத்துவம் சார்ந்த பிரச்சனை சமூகம் சார்ந்தது. இதில் ஆணா பெண்ணா என்ற வாதமே சரியல்ல. ஆணுக்கு இந்த பிரச்சனையில் இருக்கும் அதிகபெரும்பான்மை பங்கை தட்டிக்கழிக்க முடியாது. முதலாளி இப்படித்தான் நடக்கவேண்டும் என்ற கோட்பாட்டின் உருவாக்கம் எங்கிருந்து வந்தது?
//பாலியல் விவகாரத்தை தள்ளி வைத்துப் பார்த்தால் ஆண் பெண் சந்திக்கும் பிரச்சனைகள் (சம்பளம் முதலியன) பெருமளவு ஒத்துப்போவதையே காணலாம்.//
இல்லை. இது சரியல்ல. ஒரே வேலைக்கு பெண்ணுக்கு குறைந்த கூலியும், ஆணுக்கு அதிக கூலியும் தருவது இன்னும் வழக்கத்தில் இருக்கிறது. இன்னும் பல... விரிவாக தனிப்பதிவில் எழுதுகிறேன்.
//இங்கு பெண்களுக்கான சுதந்திரத்தை ஆண்கள் தீர்மானிப்பதில்லை. சுதந்திரமான பெண்ணை புறம் பேசும் மற்ற பெண்கள் தீர்மானிக்கிறார்கள்.//
பெண்கள் இப்படித்தான் இருக்கவேண்டும் என 'மாதிரியை' தீர்மானிப்பது எது? அல்லது யார்?
//முன்னேறிய பெண்களும் நுகர்வு கலாச்சார சந்தையின் சகல மயக்கங்களுக்கும் ஆளாவது கண்கூடு.//
பெண்கள் மட்டும் நுகர்வுகலாச்சாரத்தில் சிக்காமல் 'புனிதமாக' இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பின் பொருள் என்ன?
//முன்னேற்றமும் ஒருவகையில் பெண்களை சீரழிப்பதை காண்கிறோம்.// பெண்களை மட்டுமா? இதில் பெண்களை மட்டும் குறிப்பிடுவது ஏன்? சீரழிவு என்னும் பதத்தின் பொருள் என்ன? அதற்கு வரையறை என்ன? சேலை கட்டியவள் ஜீன்ஸ் போட்டால் சீரழிவா? தலைமயிரை கத்தரிப்பது சீரழிவா? எது?
//ஆணோ பெண்ணோ குடும்பம் என்ற அமைப்பு இருவரையும் கட்டி வைக்கிறது. ஆணால் அதை எளிதில் உடைக்க முடியும். பெண்ணால் அதை எளிதில் உடைத்து வெளியேற முடியாது.//
ஆம். அடிமை சங்கிலியின் பிறப்பிடம் இது.
//பெண் முன்னேற்றம் என்பது பெண்ணாலும் குடும்ப அமைப்பை எளிதில் உடைக்கும் படியாக செய்வதுதான் என்ற தவறான புரிதல்கள் இங்கு உள்ளன.//
முந்தைய பகுதிக்கு இது முரணாக படுகிறதே. குடும்ப அமைப்பு உடைதல் என எதை குறிப்பிடுகிறீர்கள்?
//ஆணோ பெண்ணோ அனைவரும் தத்தமது சமூகப் பொறுப்புணர்வை உணர்ந்து செயல்படும் சமூகமே நமது தேவை.//
சமஉரிமையுடன் வாழும் சமூகமே நமது தேவை என சேர்த்துக்கொள்கிறேன். ஆணுக்கு இது பொறுப்பு, பெண்ணுக்கு இன்ன பொறுப்பு என ஏற்கனவே சமூகம் வரையறுத்து வைத்த்திருக்கும் பார்வை மாற்றப்படுதல் அவசியம்.
Post a Comment
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com