அய்யாவழி வரலாறு
தென்தமிழகத்தில் நாகர்கோயிலிலிரிருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் வழியில் பச்சை பசேலாக காட்சி தரும் செழிப்பான பகுதியில் சாமிதோப்பு என்னும் அழகிய கிராமம். இந்திய அளவில் அவ்வளவாக பேசப்பாடாத இந்த ஊர் இந்துமதத்தின் வர்ணாஸ்ரம சாதிக்கொடுமைகளுக்கு எதிராக தனிக்களத்தை அமைத்த "அய்யாவழியின்" முக்கிய பதியாக இருக்கிறது. அய்யாவழியினர் கூடும் இந்த இடங்கள் கோவில் என அழைக்கப்படுவதில்லை; மாறாக 'பதி', 'நிழல்தாங்கல்' என அழைக்கப்படுகிறது.
திருவிதாங்கூர் மன்னர்களால் கன்னியாகுமரி மாவட்டம் ஆட்சி செய்யப்பட்டு வந்தது. இந்த பகுதியில் சாணார், பரவர், மூக்குவர், என 18 வகை சாதி மக்கள் ஆதிக்க சாதியினரால் மனிதனை விட கேவலமாக நடத்தப்பட்டனர். பட்டன், தம்புரான், தம்பி, நம்பூதிரி, பிள்ளைமார், நாயர் (மேனன்), பிராமணர் என பல பல ஆதிக்கசாதியினர் திருவிதாங்கூர் மன்னனின் அதிகாரத்தை பயன்படுத்தி கொடுமைகளை மக்கள் மீது நடத்தினர். மன்னன் செல்லுகிற பகுதிகளில் ஆதிக்கசாதியினரை சார்ந்த பெண்கள் சிலரது வீடு 'அம்ம வீடு' என அறியப்பட்டது. இந்த 'அம்ம வீடு', 'உள்ளிருப்பு வீடு' களில் தான் மன்னன் ஓய்வெடுப்பது வழக்கம். கைமாறாக அந்த பகுதி நிலங்கள், வருவாய் துறை, நிர்வாகம் இவர்களது 'ஆதிக்கத்தில்' இருந்தது. மன்னனுக்கும் பார்ப்பனீயத்திற்குமான தொடர்பு இந்த உறவு முறைகளில் இருந்ததை பயன்படுத்தி ஆதிக்கசாதியினர் குறுநிலமன்னர்கள் போல தீர்ப்பு, தண்டனை வழங்குதல் என தொடர்ந்தனர்.
1809ல் பொன்னுநாடார், வெயியேலாள் தம்பதியினருக்கு கன்னியாகுமரி மாவட்டம், சாமிதோப்பில் ஒரு குழந்தை பிறந்தது. அன்றைய சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டவர்களாக கருதப்பட்ட சாணார் சாதியை சார்ந்தவர்கள் அவர்கள். அந்த சிறுவனுக்கு பெற்றோர் இட்ட பெயர் முடிசூடும் பெருமாள். "திருமுடியுடன் விஷ்ணு" என்னும் பொருள் படும் இந்த பெயரை கீழ்சாதி சாணார் குடும்பம் சூட்டியதும் பார்ப்பனீய ஆதிக்கசாதியினர் கடுமையாக எதிர்த்தனர். பெற்றோர் அந்த பெயரை முத்துகுட்டி என மாற்றினர். தாழ்த்தப்பட்ட குழந்தைக்கு பார்ப்பனீய தெய்வத்தின் பெயரை கூட சூட்ட அனுமதிக்காத இந்துத்துவ சாதிவெறியின் மத்தியில் பிறந்த இந்த குழந்தை தான் வளர்ந்து "அய்யா வைகுண்டர்" ஆகி, சாதி எதிர்ப்பை ஆயுதமாக எடுக்குமென்பது அன்றைய ஆதிக்கசாதியினருக்கு தெரியவில்லை. 17 வயதில் தனது வீட்டிற்கு அருகேயுள்ள புவியூர் என்னும் ஊரை சார்ந்த திருமாலம்மாள் என்பவரை மணந்தார் முத்துகுட்டி. இதுபற்றி திருமாலம்மாளை அவர் திருமணம் செய்யவில்லை, அவருக்கு பணிவிடை செய்ய வாழ வந்தார் என மாறுபட்ட தகவலும் உள்ளது. திருமாலம்மாள் ஏற்கனவே திருமணாமனவர், முத்துகுட்டியை திருமணம் செய்ய கணவனை விட்டு வெளியேறினார் என்ற தகவலும் காணப்படுகிறது.
அய்யாவழியினரின் நூல் 'அகிலம்', 'அகிலத்திரட்டு அம்மானை' அல்லது 'அகிலதிரட்டு' என அழைக்கப்படுகிறது. அகிலத்தின் படி திருமலையம்மாளுக்கு முதல் திருமணத்தின் வழி ஒரு ஆண்குழந்தை இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முத்துகுட்டி பனையேறுதல், விவசாய கூலி வேலை வழி தனது வருமானத்தை தேடிக்கொண்டார். சாதாரண மக்களில் ஒருவராக காணப்பட்ட இவர் உருவாக்கிய வழிமுறை 'அய்யாவழி' என அழைக்கப்படுகிறது. இது ஒரு தனிமதம் என்கிறார் இன்று அய்யாவழியின் தலைமை பதியை நிர்வகித்து வருகிற பாலபிரஜாதிபதி அடிகளார் (அய்யாவின் வாழ்க்கை பற்றி தனிப்பதிவில் பார்க்கலாம்).
அய்யா தனது வழியினருக்கு வகுத்த விதிமுறைகள்
- பூசை செய்யக்கூடாது.
- பூசாரி வைத்துக்கொள்ளக்கூடாது
- யாகம், ஹோமம் கூடாது
- மாயை உங்களை ஆளாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
- எந்த தேர்த்திருவிழாக்களும் கூடாது.
- எந்த வழிபாடும் கூடாது
- ஆரத்தி எடுப்பதும், ஏற்பதும் கூடாது
- காணிக்கை பெறுவதும், கொடுப்பதும் கூடாது
- மாலையிடுதல் கூடாது
- யாரையும் உங்கள் காலில் விழ விடாதீர்கள்
- லஞ்சத்தை ஏற்காதீர்கள்
- ஆசைகளை துறந்துவிடுங்கள்.
- உண்மையாக இருங்கள்
இவை அனைத்தும் அய்யா தனது வழியை பின்பற்றும் மக்களுக்கு கொடுத்த ஒழுங்குமுறைகள். இதன் வழி அய்யாவழி தனியொரு மதமாகவே இருப்பதை காணலாம்.
"கலியென்பது எலியல்ல, கணையாழி வேண்டாமே" என கலி பற்றியும் அதை அணுகும் முறை பற்றியும் அகிலம் கூறுகிறது.
கலி (தீமை) என்பது எலி போன்ற உருவ அமைப்பு உடையதல்ல. அதனால் ஆயுதம் வேண்டாம். அன்பை அடிப்படையாக வைத்து ஆயுதமே கூடாது என மக்களுக்கு அன்பு போதனையை உருவாக்கியது தான் அய்யாவின் வழி.
"இந்த நாள் முதல், உங்களது நம்பிக்கையை வைகுண்டம் மீது மட்டும் வையுங்கள், வேறு எதற்கும் அச்சம் கொள்ளாதீர்கள். கோயில்களுக்கு காணிக்கை கொடுக்காதீர், நீங்கள் கடுமையாக உழைத்து சேர்த்த பணத்தை உண்டியலில் போடாதீர், உங்களது செல்வத்தை உங்களுக்காகவே வைத்துக்கொள்ளுங்கள்" என்கிறது அகிலத்திரட்டு.
அச்சம் தவிர்த்து நிமிர்ந்து நில்
"நீங்கள் தன்மானத்தோடும், சுயமரியாதையுடனும் வாழ்ந்தால் கலி (தீமை/கொடுமைகள்) தானாகவே அழியும்" என அகிலத்திரட்டில் அடிக்கடி வலியுறுத்தப்பட்டுள்ளது. மனிதனை சுயமரியாதையுடனும், தன்மானத்துடனும் அடிமையற்ற நிலையில் நிமிர்ந்து நடக்க வைப்பது அய்யாவின் முக்கிய பணியாக அமைந்துள்ளது. அகிலத்திரட்டில் இதை பல பகுதிகளில் காணலாம்.
இந்துமதம் கீழ்சாதி என தீட்டாக வைத்திருந்து ஆடை அணிந்துகொள்ள கூட வரிவிதித்த காலத்தில்; ஆண்கள் தலையில் தலைப்பாகை அணியவும், பெண்கள் தோழ்ச்சீலை அணியவும் வழியை உருவாக்கி மக்களுக்கு அடிமைத்தனத்திலிருந்து விடுதலையை உருவாக்கியது. இந்த அடையாளங்கள் "மனிதனாக பிறந்த எவனும் எவனுக்கு முன்னும் அடிமையில்லை" என்ற சுயமரியாதையை ஒடுக்கப்பட்ட மக்கள் மனதில் விதைத்தது. மனித மாண்பை உன்னதமாக மக்களுக்கு எளிய வழியில் இந்த முறைகள் உணர்த்தின.
சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக
அய்யாவழியை சாதி ஒடுக்குமுறையை கடைபிடிக்காத ஒரு லட்சிய சமுதாயத்தை உருவாக்கும் நோக்கத்தை கொண்டது. சாதிகளற்ற, ஒரே குடும்பமாக வாழ்ந்த பண்டைய சமுதாயத்தைப் பற்றி அகிலத்திரட்டில் சொல்லப்பட்டுள்ளது. சாதியை உருவாக்கியவர்களை 'கலிநீசன்' என கடுமையாக சாடுகிறார் அய்யா. "18 சாதிகளையும், தீயசக்திகளையும் மலைகளிலும், தீயிலும், கடலிலிலும் எறிந்துவிடுங்கள்", "பலமுள்ளவர்கள், பலமிழந்தவர்கள் மத்தியில் அடக்குமுறைகள் கூடாது", "சாதி தானாகவே அழியும்" என பல இடங்களில் சாதி அமைப்பை பற்றி அகிலத்திரட்டில் சொல்லப்பட்டுள்ளது.
திருவிதாங்கூர் மன்னனை 'கலிநீசன்' எனவும், ஆங்கிலேயர்களை 'வெண்நீசன்' எனவும் அகிலத்திரட்டில் சொல்லப்பட்டுள்ளது. கலிநீசனை பிரதான அடக்குமுறையாளனாகவும், அவனே மக்களின் உழைப்பை சுரண்டும் ஊழியம், வரிகள், சாதி அடக்குமுறைகளை கட்டிக்காப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது. அய்யா வைகுண்டர் "மன்னனின் ஆட்சியை அகற்றி விட்டு நாட்டை ஒரே குடையின் கீழ் ஆளப்போவதாக" அகிலத்திரட்டில் பல இடங்களில் சொல்லப்பட்டுள்ளது. இது அன்றைய திருவிதாங்கூர் மன்னனின் சாதி அடக்குமுறைக்கு எதிராக எழுந்த குரலாக காணலாம். அய்யா வைகுண்டர் மீது மன்னனின் ஆட்சியை கவிழ்க்க திட்டமிடுவதாக குற்றம் சாட்டப்பட்டது. இதன் வழி எங்கெல்லாம் அரச அதிகாரம் மக்களை அடக்குகிறதோ அங்கே மக்களுக்கு அரச அடக்குமுறையை எதிர்க்க மன உறுதியை அய்யாவழி தருகிறது.
பொருளாதார அடிமைத்தனத்திற்கு எதிராக
உழைக்கும் மக்களை சுரண்டுவதையும், ஏமாற்றி பிழைப்பதையும் அய்யாவழியில் கடுமையாக கண்டிக்கப்படுகிறது. உழைக்கும் மக்களுக்கு எதிராக இருந்த உழைப்பு அடிப்படையிலான அடக்குமுறைகளை எதிர்த்து 3 முழு பக்கங்கள் அகிலத்திரட்டில் கண்டிக்கப்பட்டுள்ளது. நிலம், விவசாயம் மற்றும் பிற வகைகளில் வாங்கப்பட்ட கொடுமையான வரிகளை எதிர்க்கிறது அகிலத்திரட்டு. "மக்களின் உழைப்பையும், செல்வத்தையும் வரி என்ற பெயரில் வசூலிக்கிற கொடுமையான நீசன்" என மன்னனை அகிலத்திரட்டு குறிப்பிடுகிறது. "யார் உழைத்து வருமானம் சேர்க்கிறார்களோ அவர்களே அதை அனுபவிக்கட்டும்; வேறு யாருக்கும் அதை அனுபவிக்க அதிகாரமில்லை", "எந்த வரியும் இனிமேல் கொடுக்க அவசியமில்லை" என்கிறது அகிலத்திரட்டு. அந்த காலகட்டத்தில் சாணார் சாதி மக்கள் பனையேற பயன்படுத்தும் மிருக்குத்தடி என்கிற துணைக்கருவிக்கு கூட வரி கட்டவேண்டியது இருந்தது என்பதை இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும்.
பூசை, காணிக்கை, யாகங்களுக்கு எதிராக
அய்யாவழி பூசை, சிலைவழிபாடு, பேய்வழிபாடு, பலியிடுதல், காணிக்கை செலுத்துதல், யாகம் முதலியவற்றை நடத்தக்கூடாது. இவைகளினால் எந்த பலனும் இல்லை. மக்களின் உழைப்பை யாரோ பூசாரிகள் அனுபவிக்க கொடுக்ககூடாது என அய்யா மக்களுக்கு அறிவுறுத்தினார்.
"வேத பிராமணர்களுக்கு தொல்லை தர நாம் வந்தோம்", "பூணூல் அணிபவர்கள் இந்த பூமியில் இனிமேல் இருக்கமாட்டார்கள்" என புரோகிதர்களை கண்டிக்கிறார் அய்யா. ஸ்ரீரங்கம், திருச்செந்தூர் போன்ற இடங்களில் பிராமணர்கள் கடைபிடித்து வரும் மனிதத்தன்மையற்ற செயல்களை அய்யா கண்டித்தார். அய்யாவழி மக்களுக்கு பூசாரி எதுவும் வைத்துக்கொள்ளக்கூடாது என்ற கட்டளை பிறப்பித்தார்.
அய்யா வழிமுறை
அய்யாவழியினர் கூடி "அகிலத்திரட்டு" வாசித்து ஒன்றாக கலந்து வணக்கம் செலுத்தும் இடங்களின் பெயர் 'பதி' அல்லது 'தாங்கல்' என அழைக்கப்படுகிறது. சாமிதோப்பில் அமைந்துள்ள பதியின் கிணற்றில் அனைத்து சாதியினரும் சேர்ந்து குளிக்க, அதே கிணற்று தண்ணியை எடுத்து சமைத்து சேர்ந்து உணவருந்த என சாதிபேதமற்ற வழிமுறையை உருவாக்கினார்.
ஆண்பெண் சமஉரிமை:
அய்யாவழியினரின் பதிகளிலும், தாங்கல்களிலும் ஆணும், பெண்ணும் சமம். இருபாலருக்கும் பதியினுள் சென்று வணக்கம் செலுத்தல், ஏடுவாசித்தல் என எதற்கும் தடையில்லை. ஏராளமான தாங்கல்கள் பெண்களாலே நடத்தப்படுகின்றன.
அய்யாவழியில் கணவன் இறந்தால் பெண்ணுக்கு மறுமணம் செய்துகொள்ள உரிமையுண்டு.
அய்யாவழி ஒரு தனிமதம்:
கலி பற்றிய விடயத்திலும், அதை எதிர்கொள்ளுவதிலும் அய்யாவழி மற்ற இந்துமதத்திலிருந்து முரணானது. கலியை (தீமையை) அழிக்க ஆயுதங்கள் தாங்கி கடவுள்கள் அவதரிக்கும் இந்துமதத்திலிருந்து வேறுபட்ட பார்வையை அணுகுமுறை வழியாக அய்யாவழி மதம் உருவாக்கியது.
இந்துமதம் தனது நம்பிக்கையை வர்ணாஸ்ரம சாதி அடித்தளத்திலிருந்து கட்டி பரவலாக்கி வைத்திருக்கிறது. அது கோயில்கள் பிரதான இடங்களாகவும், கடவுள் வழிபாடு, காணிக்கை, வழிபாடு, யாகம், விக்கிரகம், அபிசேகங்கள், யாகம், பூசாரி என அதன் ஆதாரங்களாக விளங்குகிறது. பெண்ணுக்கு இந்துமத கோவில்களில் வழிபாட்டில் உரிமையில்லை.
அய்யாவழி ஆரிய இந்துமதத்திலிருந்து எதிரான திசையில் மக்களை ஒன்று திரட்டியது. அய்யாவழியை தனிமதமாக பதிய இந்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையையும் சாதகமாக செய்யவில்லை. மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது அய்யாவழி மக்களை இந்துமதம் என கணக்கில் சேர்க்கும் மோசடி கடந்த காலங்கள் தொட்டு நடந்து வருகிறது. அய்யாவழியினர் தங்களை தனிமதமாக அடையாளம் காணவே விரும்புகின்றனர்.
சமீபகாலங்களாக இந்துமதத்தில் ஒரு பிரிவு தான் அய்யாவழி என பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்கள். இந்துமதத்தின்(வைணவ) சாதி ஆதிக்கத்திற்கு எதிராக எழுந்த புதிய சமயங்களையும், வழிபாடுகளையும் (புத்தம், சமணம், நாட்டார் வழக்கியல் வழிபாடுகள், வள்ளலாரின் வழி, அய்யாவழி...) இந்துத்துவவாதிகள் ஒரே குடையின் கீழ் இந்து என முழக்கமிடுவது அனைவருக்கும் தெரிந்ததே. ஆதிக்க எண்ணமுடைய சில வலைப்பதிவாளர்களும் இந்த முயற்சியை தொடர்ந்து செய்து வருகின்றனர். அய்யாவழியைப் பற்றி பரப்புகிற பொய்யான புழுகு வரலாற்றை எதிர்ப்பதும், உண்மையை பதிவு செய்வதும் மட்டுமே இந்த பதிவின் நோக்கம்.
எப்படி ஒரு கையின் விரல்கள் பல வடிவங்களில் பன்முக தன்மையுடன் இருக்கிறதோ அதுபோல பன்முக சமயங்கள் அதன் கூறுகளோடும், காலத்திற்கேற்ற மறுமலர்ச்சியுடனும் எதிர்கால தலைமுறைக்கும் எடுத்து செல்லப்பட வேண்டும். இந்துத்துவம் என்கிற புளியமர நிழலில் அழிந்துபோகும் அழகிய ரோஜாசெடியாக நமது பண்பாடு ஆபத்தை சந்திக்கிறது. இந்த முறை பண்பாட்டை அழிப்பவர்கள் இந்துத்துவவாதிகள். அவர்களது எழுத்துக்கள் பொய்யையும் உண்மையாக நம்ப வைக்கும் கலையில் கைத்தேர்ந்தது. விழிப்பாக இருப்போம்.
________
குறிப்பு:
அய்யாவழி பற்றிய சில வரலாற்று உண்மைகளை பதிய வைக்கும் நோக்கத்தில் பாலபிரஜாதிபதி அடிகள் அவர்களை சந்தித்து உரையாடினேன். அந்த உரையாடல்கள் ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு செய்யப்பட்டாலும், தொழில்நுட்ப விடயங்கள் இன்னும் இறுதி வடிவம் பெறாத காரணத்தால் பதிவு செய்ய இயலவில்லை. பாலபிரஜாதிபதி அடிகளாரின் பேட்டியை வெகுவிரைவில் பதிவு செய்ய முயல்கிறேன்.
24 பின்னூட்டங்கள்:
நன்றி திரு.
அருமையாக விளக்கியிருக்கிறீர்கள்.
ஒரு விஷயம். அய்யா வழி மக்கள் பதிக்குச்சென்று திரும்புகையில் நெற்றியில் தீபக்குறி அணிந்து வருவார்கள். (அதாவது ஒளி) அதை நீறு அல்லது நாமம் என்று பலர் கருதிக் கொள்கிறார்கள். இதைப்பற்றிய விளக்கமும் சேர்க்க முடியுமா என்று பாருங்கள்
இதுவரை கேள்விப்பட்டிராத புதிய விஷயங்கள்.
தகவல்களுக்கு நன்றி.
இன்னும் தொடரும் எனப்து குறித்து மகிழ்ச்சி
அய்யாவழி பற்றி எதுவும் தெரிந்து கொள்ளாதவர்கள் கூட இலகுவாக புரிந்துகொள்ளும்படியாக மிகவும் அருமையாகவும், எளிமையாக எழுதியிருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள் திரு.
திரு,
தெரியாத பல தகவல்களை தந்ததற்காக நன்றி..
பதிவு மிகச் சிறப்பான வடிவில் வந்துள்ளது..
வாழ்த்துக்கள்
ராஜாவனஜ்
திரு ,
இப்படி இந்துமதத்தின் புரையோடிய வர்ணாசிரம சிந்தனைகளிலிருந்து, ஒடுக்கப்பட்டோரை மீட்பதற்க்காக மறு சிந்தனை வைத்த மற்றவர்களையும் (அய்யன்காளி, நாராயண குரு ) பாசிச இந்துத்துவாத நீலகண்டன்கள் இந்து முலாம் பூச எத்தனிப்பதுதான் உச்சபட்ச கேலிக்கூத்து.
திரு,
எனக்கு ஒரு சந்தேகம். முன்னமே கேட்டேன்.
அய்யாவழி இந்துமதத்தினின்று வர்ணாசிரமக் கொடுமையினின்று மகக்ளுக்கு முற்றிலும் புதிய பாதைகாட்டுபவரது பெயர் பாலபிரஜாதிபதி என்றிருப்பது ஏன்?
பாலபிராஜாதிபதி என்பது 100% தமிழ்ச் சொல்லா?
இல்லை பாலபிரஜாதிபதியின் வழி என்பது 100% தமிழர்களுக்கானதில்லையா?
திரு,
நான் ஐயா வைகுண்டரைப் பற்றி சமீபத்தில் தான் படித்தேன். மதத்தில் இருந்து கொண்டே களையெடுத்தவர்களில் வள்ளலாரைப் போல அவரும் ஒருவர். ஐயா வைகுண்டருக்கு முன் திருவாங்கூரில் (கேரளா) நாடார் பெருமக்கள் தலித் பெருமக்களைப் போலவே கீழாகவே நடத்தப்பட்டனர். ஐயா வைகுண்டர் நாடார் பெருமக்களுக்கு விழிப்பூட்டி முன்னேற வைத்தார். பெரும் தலைவர் காமராஜருக்குப் பிறகு தங்கள் சமூகத்தால் சாதிக்க முடியும் என்று நாடார் பெருமக்கள் தன்னம்பிக்கைப் பெற்று பல்வேறு துறைகளில் கனனி முதல் காய்கறி கடை வரை அனைத்திலும் சாதித்து வருகின்றனர். நாடார் பெருமக்கள் பெரும்பாலோருக்கு ஐயா வைகுண்டரை தெரிந்திருக்க வில்லை என்பது உண்மை.
திண்ணை இணைய தளத்தில் திரு கற்பகவினாயகம் நிறைய கட்டுறைகள் எழுதியுள்ளார். ஐயா வைகுண்டர் சிறந்த ஆன்மிக வாதி. சிலர் விஷ்னுவின் அவதாரம் என்று சொல்கிறார்கள். செய்தி என்ற அளவில் அதுபற்றிய கதைகளையும் படித்திருக்கிறேன். ஐயா வைகுண்டர் 'அன்பு வழி' என்ற மதம் உருவாக்க மூயற்சித்தார். அவர்கள் சீடர்களின் ஆர்வமின்மையால் அது பெரும் வெற்றி அடையவில்லை.
நல்லதொரு பதிவு. நன்றி திரு.
திரு
நல்ல பதிவு!
பல விசயங்களை அறிந்துகொண்டேன்.
மிக்க நன்றி
// Hariharan # 26491540 said...
திரு,
எனக்கு ஒரு சந்தேகம். முன்னமே கேட்டேன்.//
சந்தேகத்தை தீர்க்க முயல்கிறேன் :)
//அய்யாவழி இந்துமதத்தினின்று வர்ணாசிரமக் கொடுமையினின்று மகக்ளுக்கு முற்றிலும் புதிய பாதைகாட்டுபவரது பெயர் பாலபிரஜாதிபதி என்றிருப்பது ஏன்?//
இதற்கு நேரடியான பதில் அவரது அப்பாவிடம் தான் கேட்கமுடியும். பாலபிரஜாதிபதி என்பது பட்டமல்ல. ஒரு நபரின் பெயர். சாமிதோப்பு பதியின் தலைவர்களை 'பட்டத்து அய்யா' என அழைப்பது வழக்கம்.
1. 'பட்டத்து அய்யா'. பொடுகுட்டி
2. 'பட்டத்து அய்யா'. கிருஸ்ண நாராயண வடிவு
3. 'பட்டத்து அய்யா'. செல்லவடிவு
4. 'பட்டத்து அய்யா'. பாலகிருஸ்ணன்
5. 'பட்டத்து அய்யா'.செல்லராஜ்
6. 'பட்டத்து அய்யா'. பாலபிரஜாதிபதி அடிகளார்
என வரிசையாக பட்டத்து அய்யா பதவியை பெற்றனர்.
பெற்றோர் இட்ட பெயர்கள் அவர்களுக்கு நிலைத்திருக்கிறது. எல்லா இடங்களிலும் வடமொழியின் தாக்கம் இருப்பது போல குமரிமாவட்ட பெயர்களிலும் இருக்கிறது. தூயதமிழ் பெயர் இட அய்யாவழி எந்த பிரச்சாரத்தையும் எடுக்கவில்லை. அய்யாவழியில் தமிழ்தான் அதன் ஆன்மீக மொழியாக இருக்கிறது.
இந்த பதிவு அய்யாவழி என்கிற ஆன்மீகம் உருவான பின்னணி, அதன் தனித்தன்மை, அதன் இயங்குதளத்தை விவரிப்பது. இன்றைய அய்யாவழியிலும் பண்பாட்டு படையெடுப்பின் இடைச்சொருகல்கள் இல்லாமல் இல்லை.
பாலபிரஜாதி அடிகளாரின் தனிப்பட்ட வாழ்வை அலசுவதல்ல எனது பதிவின் நோக்கம். பாலபிரஜாதிபதியின் சகோதரர் அரசியலில் ஈடுபாடுள்ளவர் அவரது பெயர் பாலஜனாதிபதி. இன்னும் பெயரில் சந்தேகம் இருப்பின் ஏன் இந்த பெயரை வழங்கினீர்கள் என அவரது தந்தையாரை தான் கேட்கவேண்டும். :))
//பாலபிராஜாதிபதி என்பது 100% தமிழ்ச் சொல்லா?
இல்லை பாலபிரஜாதிபதியின் வழி என்பது 100% தமிழர்களுக்கானதில்லையா?//
இந்த ஆராட்சியில் எதை நிறுவ முனைப்பாக இருக்கிறீர்கள்? :)))
//இந்த ஆராட்சியில் எதை நிறுவ முனைப்பாக இருக்கிறீர்கள்?//
அக்மார்க் தமிழர்களாகக் கதைவிடும் அரசியல் திரா"விட" பகுத்தறிவாளர்களின் கூப்பாடான சமஸ்கிருதம் ஏமாற்று மொழி என்பதை அய்யாவழி பாலபிராஜாதிபதி அவர்கள் நினைக்கவில்லை என்பதை.
// Hariharan # 26491540 said...
//இந்த ஆராட்சியில் எதை நிறுவ முனைப்பாக இருக்கிறீர்கள்?//
அக்மார்க் தமிழர்களாகக் கதைவிடும் அரசியல் திரா"விட" பகுத்தறிவாளர்களின் கூப்பாடான சமஸ்கிருதம் ஏமாற்று மொழி என்பதை அய்யாவழி பாலபிராஜாதிபதி அவர்கள் நினைக்கவில்லை என்பதை.//
ஹரிஹரன்,
நீங்கள் மட்டுமல்ல, இன்னும் பலர் சேர்ந்தாலும் சமஸ்கிருதம் தான் உயர்ந்த மொழி! அது தான் தேவபாடை என நிரூபிக்க இயலாது. இதற்கு திராவிடர்களோ, ஆரிய (அ)யோக்கிர்களோ அவசியமில்லை. மனித அறிவு ஒன்றே போதுமானது. பாலபிரஜாதிபதி எந்த இடத்திலும் தமிழை தாழ்த்தி,சமஸ்கிருதத்தை உயர்த்தவில்லை. அய்யாவழியில் தமிழ் தான் பேச்சு, வழிபாட்டு மொழி.
ஒருவருக்கு பெயர் வடமொழியில் இருப்பதால் அவர் வடமொழியை புகழ்பாடுகிறார் என்ற உங்கள் அறிவை மெச்சுகிறேன். கன்னியாகுமரி மாவட்ட பெயர்கள் வடமொழியின், ஆங்கிலேய, மற்றும் பிற மொழிகளின் தாக்கத்தில் உள்ளது. இது ஒரு பண்பாட்டு படையெடுப்பின் தாக்கமும், சாட்சியும் தானே தவிர வடமொழி உயர்ந்தது என்ற ஆதிக்க வெளிப்பாடல்ல.
அங்கு மலையாளம் கலந்து தமிழ் பேசுகிறார்கள். அதனால் மலையாளம் தான் உயர்ந்தது என்றாகிவிடுமா?
இன்னும் நீங்கள் பிடித்த முயலுக்கு 3 கால் என்றால்; வாருங்கள் உண்மையை கண்டறிவோம். பொய்யை பரப்பி உங்களது நம்பிக்கையும், மொழிகளும், அடையாளங்களும், தெய்வங்களும் தான் உயர்ந்தவை அல்லது சிறந்தவை என பரப்பும் இந்த போக்கு கண்டிக்கப்படவேண்டியது.
ஒடுக்கப்பட்ட மக்களை நிம்மதியாக அவர்கள் போக்கில் வாழவிடுங்கள்! அவர்கள் வாழ்வை தீர்மானிக்க மற்றவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?
//பொய்யை பரப்பி உங்களது நம்பிக்கையும், மொழிகளும், அடையாளங்களும், தெய்வங்களும் தான் உயர்ந்தவை அல்லது சிறந்தவை என பரப்பும் இந்த போக்கு கண்டிக்கப்படவேண்டியது.//
கிழிஞ்சுது கிருஷ்ணகிரி.
ஆரியப் படைஎடுப்பு என்பதே மகாபுரட்டான அரசியல் நிலைப்பாடு!
மெக்காலே கல்வியில் படிக்கத் தரப்பட்ட, அரசியல் மதசார்பின்மை மதம் சார்ந்த சிந்தனைகளின் தொகுப்பு இந்தியவரலாறு அல்ல!
மாக்ஸ்முல்லரும், கால்டுவெல்லும் அவர்களது காலாவதியாகிய புரட்டை மேற்கத்திய உலகமே உண்மையல்ல என ஒத்துக்கொண்டுவிட்ட உண்மையறியாமல் அரசியல், அதிகாரம்,ஆதாயத்துக்காக பிரிவுகள்,பிளவுகள் ஏற்படுத்தும் போங்கு பாராட்டப்படவேண்டியதோ?
எங்கள் ஊருக்கு அருகில் கூட 'அம்பலபதி' என்னும் ஊர் உள்ளது
//Hariharan # 26491540 said...
//பொய்யை பரப்பி உங்களது நம்பிக்கையும், மொழிகளும், அடையாளங்களும், தெய்வங்களும் தான் உயர்ந்தவை அல்லது சிறந்தவை என பரப்பும் இந்த போக்கு கண்டிக்கப்படவேண்டியது.//
கிழிஞ்சுது கிருஷ்ணகிரி.
ஆரியப் படைஎடுப்பு என்பதே மகாபுரட்டான அரசியல் நிலைப்பாடு!
மெக்காலே கல்வியில் படிக்கத் தரப்பட்ட, அரசியல் மதசார்பின்மை மதம் சார்ந்த சிந்தனைகளின் தொகுப்பு இந்தியவரலாறு அல்ல!
மாக்ஸ்முல்லரும், கால்டுவெல்லும் அவர்களது காலாவதியாகிய புரட்டை மேற்கத்திய உலகமே உண்மையல்ல என ஒத்துக்கொண்டுவிட்ட உண்மையறியாமல் அரசியல், அதிகாரம்,ஆதாயத்துக்காக பிரிவுகள்,பிளவுகள் ஏற்படுத்தும் போங்கு பாராட்டப்படவேண்டியதோ?//
சங்கப் பரிவாரங்களில் சமையலறையில் உருவாக்கும் வரலாறு தான் உண்மையா? நண்பரே!
வரலாற்று பிரச்சனைகளை மெக்காலே கல்வித்திட்டத்தின் முதுகில் போட்டு எளிதாக தப்பிவிட இயலுமா? அது பற்றிய விரிவான விவாதம் தேவை. அது பற்றி பல அறிவியல், வரலாற்று அறிஞர்களது கருத்துக்கள் பலவிதமாக இருக்கின்றன. இன்னும் நீங்கள் குறிப்பும் தியரி முடிவாக ஏற்கப்படவில்லை. இந்த ஆரிய, திராவிட வரலாறு பற்றிய பிரச்சனையை விவாதிக்க சில பின்னூட்டங்கள் மட்டும் போதாது. அதை இன்னொரு பதிவில் வைத்துக்கொள்ளுவோம். உண்மையை அறியும் மனதுடன் தேடுவோம். எது உண்மையாக இருப்பினும் ஏற்பதில் தவறில்லை.
அய்யாவழி பற்றி மட்டுமே இந்த பதிவில் பேசுவோம். அய்யாவழி பற்றிய அடுத்த பதிவையும் படியுங்கள்! பாதிக்கப்பட்ட மக்களின் வலி புரியுமா?
திரு,
அருமையான கட்டுரை.
பாலபிரஜாதிபதி மட்டும் ஏன் அடிகளார் என்று சேர்த்து அழைக்கப்படுகிறார்.அவர் பெயர் வெரும் பாலபிரஜாதிபதி தானே? பாலபிரஜாதிபதி யாகவே அழைக்கலாம்.இப்படியே போனால் பாபா/பெரியவாள்/சாமி/மகா பெரியவா என்று காலப்போக்கில் சுயம் இழக்க வாய்ப்புகள் அதிகம்.
'பட்டத்து அய்யா'. பொடுகுட்டி
'பட்டத்து அய்யா'. கிருஸ்ண நாராயண வடிவு
'பட்டத்து அய்யா'. செல்லவடிவு
'பட்டத்து அய்யா'. பாலகிருஸ்ணன்
'பட்டத்து அய்யா'. செல்லராஜ்
'பட்டத்து அய்யா'. பாலபிரஜாதிபதி அடிகளார்
*--------*
ஹரிகரன்,
இங்கே திரு சொன்னதில் இருந்து நான் அறிவது.
1.'பட்டத்து அய்யா' என்பது சாமிதோப்பு பதியின் தலைவர்களை விளிக்கும் குறிச்சொல்.
2. சாமிதோப்பு பதியின் தலைவர்கள் பதவி ஏற்றவுடன் பூர்வா'சிரமப்' பெயரை மாற்றிக்கொண்டு பெரியவாளாக அழைக்கப்படுவது இல்லை.
'பட்டத்து அய்யா' என்பது பதவி.அதை ஏற்பதால் பெயரை மாற்றுவது இல்லை.
3. பாலபிரஜாதிபதி என்ற பெயரில் உள்ள சமஸ்கிருத எழுத்துக்களை அல்லது சம்ஸ்கிருத வாடையை வைத்து அவரும் சனாதன வழியில் சேர்க்க முயலவேண்டாம்.
அதற்கு இந்தியாவில் தோன்றிய/தோன்றும் மதங்கள் எல்லாம் இந்துமதம் என்று சொல்லிவிட்டுப் போலாம். ரொம்ப சுலபம்.
உங்களோட ரொம்ப இம்சையா இருக்கு. எதுனாலும் சனாதனம்/ இந்து தருமம்/சம்ஸ்கிருதம்/கீதை என்று ஏதாவது னொரு சோத்து மூட்டையை எல்லா இடங்களிலும் அவிழ்த்து பரிமாற ஆரம்பித்து விடுகிறீர்கள். :-))
//அதற்கு இந்தியாவில் தோன்றிய/தோன்றும் மதங்கள் எல்லாம் இந்துமதம் என்று சொல்லிவிட்டுப் போலாம். //
கல்வெட்டு,
போகிறபோக்கில் விளையாட்டாக கல்வெட்டில் பொறிக்கப் படவேண்டிய ஒரு உண்மையைச் சொல்லி இருக்கின்றீர்கள்.
இந்தியாவில் தோன்றும் எதுவும் சனாதனத்தினின்று விலகியதாகிடாது என்பது உண்மை.
Sanathanam is all about inclusivity. Estranged son may disown mother... but the Mother, her motherhood never disowns the son despite his reconition of HER.
மன்னிக்கணும் கல்வெட்டு. உங்களை இம்சைப் படுத்திட்டேன் :-)))
இதுவரை கேள்விப்பட்டிராத புதிய விஷயங்கள்.
தகவல்களுக்கு நன்றி.
அய்யாவழி பற்றி தெரிந்து இருந்தாலும் வலை உலகத்திற்கு இது புதிய ஒன்று தான் .கன்யாகுமரி மாவட்டத் தவிர வேறு யாருக்கும் அய்யா வைகுண்டரைத் தெரியாது .
இப்பொழுது காசு உள்ள நாடார்களே பெரும் மத்த்தில் இணந்து பெருந்தெய்வங்களயத் தானே கும்புட்டுகிறார்கள் .முன்னே மாதிரி அய்யாவழி யாட்க்கள் அவர்களை தனி மதமாக அடையாளப்ப்டுத்தலும் இல்லை .இந்துக்கள் என்று தான் சொல்லிக் கொள்கிற்றார்கள் ,அதூவும் இந்துத்துவக் கொள்கையைத் தூக்கிப் பிடிக்கும் பாஜாக ஆதரவாளர்களாக இருக்கிறார்களே ?
இன்றையப் பொழுதில் நாடார் சமுதாயம் பழைய திர்வாங்கூர் ஆட்சியில் நிலையில் இல்லை ,அவர்கள் பொருளாதார ரீதிய்யாகவும் சமூக்க ரீதியாகவும் நன்றாகவே வளர்ந்திருக்கிறார்கள் ,
அவர்கள் இப்பொழுதெல்லாம் ஆதிக்க சமூகம் போல் நட்க்கவே முயற்சிக்கிறார்கள் ,பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள நாடார்க்கள் மட்டுமே அய்யாவழி போன்ற ஆன்மீக சமுதாய இயக்கங்களின் உயிர்ப்பு இன்னமும் தேவையாயிர்க்கிறது .
கூத்தாடி கூறுவது உண்மை
அதனால் தான் ஹரிஹரன் போன்றவர்கள் நாடார்களை தங்கள் ஆதரவாளர்களாக காட்டிக்கொண்டு பதிவுகள் இட முடிகிறது. பார்ப்பனீயத்துக்கு வால்பிடித்து பாஜகவை அந்த மாவட்டத்தில் வளர்த்துக் கொண்டிருக்கும் சில நாடார்கள் இருப்பதால் தான் பார்ப்பனீயம் தமிழகத்தில் இன்னும் துளிர்த்துக் கொண்டிருக்கிறது.
நிறைய புதிய அரிய விடயங்களை தெரிந்துகொண்டேன். அறிய கொடுத்தமைக்கு நன்றி.
இதே கருத்தோட்டம் உள்ள உமது அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். தொடர்ந்து எழுதி வாருங்கள்.
"அய்யா உண்டு" என்று ஒருவருக்கொருவர் வணக்கம் செலுத்துவதைக் கண்டிருக்கிறேன்.
-பூபா
அய்யாவழி, அதன் சிறப்புடன் ஒப்பிடுகையில் வெளியுலகுக்கு இன்னும் சிறிதும் அறிமுகமாகவில்லை! அய்யாவழியை விடுங்கள், சமுதாயப் ப்பார்வையில், இந்தியாவின் முதல் புரட்சியாளர்; சமய-சமூக சீர்திருத்தவாதி, அய்யா வைகுண்டர்.
இந்தியர்கள் எத்தனை பேர் இவரை அறிந்திருக்கிறார்கள்?
அகிலத்திரட்டு, தமிழின்(ஒரே ஆசிரியரால் எழுதப்பட்டவைகளுள்) மிகப்பெரிய அம்மனை நூல்; தமிழர்கள் எத்தனை பேருக்கு இதன் பெயராவது தெரியும்?
அகிலத்திரட்டு, (புராணப் பார்வையில்) இந்து புராணங்களுள் மிக நுணுக்கமான, ஒன்றோடொன்று தொடர்புடைய நீண்ட கதியோட்டம் உள்ள நூல். இன்னூலைப் பற்றி எத்தனை இந்துக்கள் கேள்விப்பட்டிருக்கிறார்கள்?
அய்யாவழி வரலாற்று பூர்வமாக தென் திருவிதாங்கூரில் மிகப்பெரிய புரட்சியை (அப்போதைய அரசை எதிர்த்து) உருவாக்கியுள்ளது. எத்தனை இந்திய வரலாற்று ஆசிரியர்கள் இச்சமயத்தை தங்கள் குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளார்கள்?
அய்யாவழி வரலாறு நன்றி
Post a Comment
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com