மனித மனதை நேசியுங்கள்! (மீள்பதிவு)
இப்போதெல்லாம் தற்கொலைகள் நாட்டில் பெருகி வருகின்றன. அந்த நிலையில் தற்கொலை பற்றிய ஒரு மீள் பதிவு இங்கே! இந்த பதிவில் தற்கொலை பற்றிய சமூக, பொருளாதார காரணங்களை தொடவில்லை.
________
மூன்று வருடங்களுக்கு முன்னர், நெருக்கமான ஒருவரின் தற்கொலை முயற்சி என்னை மிகவும் பிசைந்தது. அதன் விளைவு தற்கொலை செய்ய இருந்த சிலரை சந்தித்தது பற்றி நினைவுகள் மீண்டது.
1997ன் இறுதி காலம் அது. நான் கலந்துகொண்ட வளமையான கூட்டம். எப்போதும் போல இளைஞர்கள் பலருடன் சமூகப் பிரச்சனைகளை பற்றி கருத்துக்களை பகிர்ந்து கொண்ட பின்னர் தேனீர் இடைவேளை. என்னருகே ஒடி வந்த தோழி ஒருத்தி, "அண்ணா! நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன்! வாழ்வின் அனைத்து வழிகளும் எனக்கு அடை பட்டுவிட்டது!" என்றாள். அவளது கதையை கேட்க உட்கார்ந்த போது தான் புரிந்தது. அம்மாவின் இழப்பு, சித்தியின் கொடுமை, பெரியப்பா மகனின் காமத்துரத்தல், குடும்பத்தின் சுமை, அக்கா கணவரின் அடங்க மறுக்கும் வெறி என இடியப்ப சிக்கல்களே வாழ்கையாக மாறிப்போனது. பொறுமையாக அவளது பிரச்சனைகளை கேட்டு சில ஆறுதல் வார்த்தைகளை மட்டும் என்னால் அந்த தங்கைக்கு சொல்ல முடிந்தது. காலங்கள் சென்றது; இன்று அவள் ஒரு கிராமத்தில் தனது இனிய கணவருடன்... ஒரு உயிரை காப்பற்றிய நிம்மதி எனக்கு! அவளுக்கு ஆறுதலாக நான் சொன்ன கதை இப்போதும் என் நினைவில்.
அடுத்த அனுபவம்!
2000 ம் ஆண்டின் தொடக்க காலம் அது.! தமிழகத்தின் புதுகோட்டையில் ஒரு கருத்தரங்க கூட்டத்தில் பேசிகொண்டிருந்தேன். கூட்டதிலிருந்த ஒரு இளைஞன் தனியாக பேச அழைத்தான்! அவனோடு அந்த உச்சி வெயிலில் மண்ணில் உட்கார்ந்து கதையை கேட்டேன். தற்கொலை என்ற முடிவுக்கே வந்துவிட்டதாக அவன் சொன்னபோது வெயிலை விட அவன் வாழ்வின் கொடுமை என்னை கொடூரமாய் சுட்டது. தாய் தந்தையின் அழுத்தமும், ஒரு நல்ல விளையாட்டு வீரனாய் இருந்தும் வேலையில்லை என்ற அவமானமும் பிசைந்தெடுக்க சாவது என்ற முடிவுடன் வந்தவன் அவன். எங்கள் உரையாடலுக்கு பின்னர் சில நாட்கள் என்னோடு தங்கிய பின்னர் திரும்பி போனது "ஆலமரம்" என்ற சமூக நிறுவனத்தில் ஆதரவற்றவர்களை கவனிக்க. அவன் எனக்கு நேசிக்க கற்று தந்தான் பிந்தைய காலத்தில். உலகின் ஒரு மூலையில் அவன் பயணம் நம்பிக்கையுடன் தொடர்கிறது...
தற்கொலைகள் ஏன் நடக்கிறது? வாழ்வின் விளிம்பில் இந்த உலகமே தள்ளிவிடும் வேளைகளில் வாழ்வை முடித்துக்கொள்வது ஒன்று தான் இயலாமையின் முடிவா? நம்பிக்கை வெளிச்சமே இல்லாமல் மனதின் சன்னல்களும், கதவுகளும் மூடிய நிலையில் சாவது தான் தீர்வா? புறக்கணிப்பின் வலி கொடியது தான்! எல்லைகளற்ற இந்த பரந்த உலகில் ஒளிந்துகொள்ள மனிதனுக்கு இடமும், இதயமுமா இல்லை?
மரணத்தை துரத்தி வெற்றி கொள்வது சுலபமானதல்ல! அது சிலருக்கு மட்டும் தான் கிடைக்கும் வாய்ப்பு. சிறைச்சாலையில் மரணதண்டனைக்கு காத்திருக்கும் கைதிக்கும் வாழவே ஆசை! ஆனால் சுதந்திரமாக சுற்றித் திரியும் பலருக்கு சாவு தான் எதிர்பார்ப்பு. முரண்பாடுகள் தான் நமது உலகமா?
எழு!!! பரந்த உலகில் கால்கள் அழுந்த நட... நீ இந்த பூமியின் பிள்ளை...மனித மனதை நேசி!
திரு
3 பின்னூட்டங்கள்:
திரு
நல்ல கருத்து!
நல்ல பதிவு!
நல்ல கருத்துள்ள பதிவு திரு.
நீங்கள் சொன்னதுபோல பெரும்பாலும் புறக்கணிப்புத்தான் தற்கொலைக்குத் தூண்டுகிறது. அண்மையில் நெருங்கிய உறவைச் சேர்ந்த இளம்பெண் ஒருத்தியை இழந்தபோது 'மரணம் பற்றிய குறிப்பு'என்றொரு பதிவை நான் எழுத நேர்ந்தது. அவளை மரணத்திலிருந்து காப்பாற்றியிருக்கலாமோ என்ற குற்றவுணர்வு எனக்கு எப்போதும் உண்டு. ஓரிருவருக்காவது வாழ்வு குறித்த நம்பிக்கையைக் கொடுத்து எங்கோ வாழவைத்திருக்கும் உங்களுக்கு பாராட்டுக்கள்
Post a Comment
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com