Saturday, March 24, 2007

சுடர்: அஞ்சலி தந்த தீப்பந்தம்!

எனக்கு மிகவும் நேசத்திற்குரிய அஞ்சலியிடமிருந்து திடீரென தொலைபேசி அழைப்பு வந்தது. "நான் உங்களுக்கு சுடர் கொடுத்திருக்கேன். நீங்க எழுதுவீங்க தானே" என அன்பான உத்தரவு :).

நடனம், இசை, விளையாட்டு, ஓவியம், படிப்பு, பல மொழிகள் என திறமையாக வளர்வதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்குது. அஞ்சலியின் விண்வெளி விஞ்ஞானியாகும் கனவு நிறைவேற வாழ்த்துக்கள்.

அஞ்சலி நெருப்பை கொடுத்த போது கேட்டிருந்த கேள்விகள் இனிமை. ஒரே கேள்வியில் துணைக்கேள்விகளாக பல கேள்விகளை கேட்டிருக்கும் அழகு அருமை. கேள்விகள் கொஞ்சம் கடினமாக தான் இருக்கிறது :). முடிந்த அளவு எனது பதில்களை தருகிறேன்.

1. நீங்க எதுக்கு blog எழுத choose பண்ணினீங்க?
தமிழில் ஒரு வலை மன்றத்தில் பொது விசயங்களை பற்றி எழுதியதை படித்த ஒரு நண்பர் வலைப்பதிவு துவங்க சொன்னார். எனக்கு தெரிந்ததை மற்றவங்களுக்கு சொல்லவும், மற்றவங்களுக்கு தெரிந்ததை அறிந்துகொள்ளவும் வலைப்பதிவு செய்ய ஆரம்பித்தேன்.

2. தமிழ் உங்களுக்கு நல்ல விருப்பமா?
ஆமாம், தமிழ் மொழி மீது விருப்பம் அதிகமுண்டு. பிறந்தது முதல் அறிந்த, பேசிய, பழகிய மொழி தமிழ் தானே அதனால் இயல்பாக அதிக விருப்பம். மலையாளம் மற்றும் ஆங்கிலம் சரளமாக பேச தெரியும். பிரெஞ்சு படித்து வருகிறேன். பழக்கமாகி போனதாலோ என்னவோ எந்த மொழியில் பேசினாலும் தமிழில் தான் முதலில் சிந்தனை வருது.

3. இந்தியாவில எப்படி இருக்குது? அங்க நிறைய elephants இருக்கா? அங்க நல்ல sunny யா இருக்குமா? நிறைய beaches இருக்கா? உங்களுக்கு இந்தியா நல்ல விருப்பமா? ஹொங்கொங் ல முந்தி இருந்தீங்கதானே? ஹொங்கொங் உம் உங்களுக்கு விருப்பமா?
இந்தியாவில் பார்க்க அழகான இடங்கள் நிறைய இருக்கு.பெரிய யானை, குட்டி யானை என நிறைய யானைகள் இருக்கு.யானைகளுக்கு பெரிய சரணாலயம் கூட இருக்கு. அங்கே போனா யானைகளை பார்க்கலாம். சில கோயில்கள்ல கூட யானை வளர்க்கிறாங்க. வலைப்பதிவாளர்கள் சிலர் யானை இரசிகர்களாக இருக்காங்க :).

இந்தியாவில் வெயில் காலம், மழைக்காலம் என உண்டு. நார்வே மாதிரி பனி பொழிகிற பகுதிகளும் உண்டு. ஒரு பகுதியில் சூடாக இருக்கிற அதே நேரம் இன்னொரு பகுதியில் குளிரா இருக்கும்.

இந்தியாவில் அழகான கடற்கரைகள் நிறைய இருக்கு. சுமார் 5700 கிலோமீட்டர் நீளம் கடலோர பகுதிகள் மட்டும் இந்தியாவில் (அஞ்சலி பேசும் தமிழ் 'மட்டும் இந்தியா' :) ) இருக்கு. இரண்டு பெரிய தீவுகளையும் சேர்த்தால் அது 7500 கிலோமீட்டர் தூரம்.

எல்லா நாடுகளையும் பிடிக்கும். இந்தியாவில் பிறந்து, வளர்ந்ததால் கொஞ்சம் கூடுதலாக இந்தியா பற்றி தெரியும்.

ஆமா ஹாங்காங் பிடிக்கும். அழகான சின்ன கடற்கரைகள் உள்ள இடம்.

4. நீங்க என்னோட Sri Lanka க்கு வந்தீங்கதானே? உங்களுக்கு திருப்பியும் என்னோட Sri Lanka வர விருப்பமா? Sri Lanka ல உங்களுக்கு என்ன விருப்பம்?

உங்களோட 2002 டிசம்பர் உங்களோட இலங்கை வந்தது ரொம்ப சந்தோசம். இன்னமும் வாய்ப்பு கிடைத்தால் உங்களோடு இலங்கை வர விருப்பம். அங்கு நாம் பார்த்த மக்களின் எளிமையான வாழ்க்கை பிடித்திருக்கு. பனைமரம் பிடிக்கும். இயற்கை கொஞ்சும் அழகிய ஒழுங்கைகள், வேலிப்படல்கள், கடற்கரை, யானை என நிறைய பிடிக்கும்.

உங்களோடு குழந்தைகள் காப்பகமான 'குருகுலம்' சென்று, அங்கு குழந்தைகளிடம் பேசியது மறக்கமுடியாத நிகழ்வு. அது பற்றியும் வலைப்பதிவில் எழுதியிருக்கிறேன். யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அப்பா, அம்மா, உறவுகள் அனைவரையும் இழந்த அந்த மழலைகள் பிடித்திருந்தார்கள். யுத்தம் நின்று தமிழர்களின் விடுதலையும், உரிமையும் கிடைக்க வேண்டும்.

5. ஐந்தாவது கேள்வி என்ன கேக்கிறது எண்டு நிறைய யோசிச்சன். எனக்கு படுக்கிற நேரமும் வந்திட்டுது. அதால நிறைய யோசிக்கவும் முடியெல்லை. அம்மா சொன்னா, கஷ்டமா இருந்தா பெயரிலி மாமா என்னட்டை கேட்ட கடைசி கேள்வியையே (மேலதிகக் கேள்வி), உங்களிட்டையும் கேக்கச் சொல்லி. அதால அந்த கேள்வியையே கேக்கிறன். உங்களிட்டை வேறை என்ன கேள்வி கேட்டிருக்கலாம் எண்டு நீங்க நினைக்கிறீங்க. அந்த கேள்விக்கு பதிலென்ன?

ஆங், இது கொஞ்சம் கஸ்டமான கேள்வி! என்ன கேள்வி கேட்டிருக்கலாம்? (சரி கேள்வி நீங்க கேட்பதால் உங்கள் வழக்கமான கேள்வியில் ஒன்றை கேட்கிறேன்.)

என்னோடு விளையாட பிடிக்குமா? இந்த கேள்வியை கேட்டிருக்கலாம்.
உங்களோடு விளையாட பிடிக்கும். அதுவும் நீங்கள் விளையாட்டுக்கு சொல்லும் புதிய விதிமுறைகள் பார்க்க பிடிக்கும். விளையாட்டில் நீங்க வெற்றி பெறும் வரைக்கும், தொடர்ந்து விளையாடிக் கொண்டே இருப்பது பிடிக்கும்.

யப்பா...கேள்விகள்ல இருந்து கடந்து வந்தாச்சு. இனி யாரு மாட்டப்போறாங்க....நம்ம பத்மா அர்விந்த் வாங்க. தீப்பந்தத்தை பிடியுங்க. என்ன கேட்கலாம் உங்க கிட்டே? ....

சரி ரொம்ப எளிமையான கேள்விகளாக கேட்கிறேன்.

  1. அமெரிக்காவில் விளிம்புநிலை மனிதர்கள் நிலை பற்றி சொல்லுங்களேன்.

  2. சமூக நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அரசு குறைத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பாதிப்பு விளும்புநிலை மனிதர்கள் மீது எப்படி இருக்கிறது/இருக்கும்?

  3. சமீபத்தில் உங்களை பாதித்த நிகழ்வு எது? ஏன்?

  4. மூன்றாம் உலக நாடுகளின் பெண்கள் விடுதலைக்கும், வளர்ந்த நாடுகளது பெண் விடுதலைக்கும் மத்தியிலான ஒற்றுமை என்ன? வேறுபாடுகள் இருப்பின் அவை என்ன?

  5. சுடர் உங்களிடம் கிடைத்தால் நீங்கள் சொல்ல வேண்டுமென நினைத்தது என்ன?

4 பின்னூட்டங்கள்:

அஞ்சலி said...

பதிலுக்கு நன்றிகள் திரு அங்கிள். என்னோட Sri Lanka க்கு summer ல வாறீங்களா? எனக்கும் உங்களோட விளையாட விருப்பம். நான் அந்தக் கேள்வி கேக்க மறந்திட்டன். :)

Unknown said...

//
வலைப்பதிவாளர்கள் சிலர் யானை இரசிகர்களாக இருக்காங்க :).//

:-))

வசந்தன்(Vasanthan) said...

//உங்களோட 2002 டிசம்பர் உங்களோட இலங்கை வந்தது ரொம்ப சந்தோசம்//

அஞ்சலியின் 'மட்டும்' தமிழ்போல இது உங்கள் தமிழா?
;-)

பத்மா அர்விந்த் said...

அழைப்புக்கு நன்றி திரு. இன்றுதான் பார்த்தேன். இரவு எழுதுகிறேன்.

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com