Tuesday, April 03, 2007

சேகுவேரா வரலாற்றின் நாயகன்-1

17 ஆண்டுகளுக்கு முன்னர் சேகுவேரா பற்றி முதலில் படிக்கத் தொடங்கியது முதல் என்னை விடாமால் துரத்திய இந்த வரலாற்று நாயகனை, வாழ்வை, அவரது போராட்ட வரலாற்றை, அவரது தாக்கத்தை தேட ஆரம்பித்தேன். அவரைப் பற்றிய புத்தகங்கள், ஒலி மற்றும் ஒளிப்பதிவுகள் என தொடர்ந்த தேடலின் விளைவு இந்த தொடர். கடந்த வருடம் பனித்துளி என்ற வலைப்பதிவில் சேகுவேரா பற்றி எழுத துவங்கினேன். வேறு பதிவுகளில் கவனம் செலுத்தியதால் வரலாற்றின் நாயகனை பற்றி எழுதுவதில் தடங்கல் ஏற்பட்டது. தொடர்ந்து சே வரலாறை ஆலமரத்தில் எழுதுவேன்.

இந்த தொடர் முழுவதும் சே அவர்களை பற்றியதாக இருந்தாலும் சேகுவேராவின் கொள்கையை ஆதரிக்கிற பல சாதாரண மனிதர்களை உலகின் சில பகுதிகளிலிருந்து அவ்வப்போது அறிமுகம் செய்கிறேன். அது சேகுவேரா என்ற வரலாற்று நாயகனின் தாக்கத்தை அறிந்துகொள்ள உதவும். உங்களது அரிய ஆலோசனைகள், தகவல்கள், திருத்தங்களை ஆவலுடன் எற்க தயாராக காத்திருப்பேன்.

விடுதலை வேள்வியில் ஒளி சேர்க்கிற அனைவருக்கும் இந்த தொடர் அர்ப்பணம்.

சேகுவேரா - வரலாற்றின் நாயகன் - 1

ஜனவரி1, 1959 உலகமே புத்தாண்டு கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்தது. குயூபா அதிபர் பாட்டிஸ்டா தனது பணிதுறப்பு (இராஜினாமா, resignation) செய்தார். பணிதுறப்பு செய்ததும் இரவோடு இரவாக தனது குடும்பம், உறவினர்கள், நண்பர்கள் புடைசூழ அதிகாலை 3 மணிக்கு கேம்ப் கொலம்பியா விமானதளத்திலிருந்து நாட்டை விட்டு வெளியேறினார். அவர் அடைக்கலமாய் சேர்ந்த இடம் டொமினிக்கன் குடியரசில். அதே வேளை ஹவானா முதல் குயூபாவின் தெருக்களில் புரட்சியாளர்கள் மக்கள் வரவேற்புடன் கூடிய நடமாட்டங்கள் அதிகரிக்கத் தொடங்கியது. பாட்டிஸ்டாவின் அரசில் அதிகாரம் செலுத்தியவர்களை காப்பாற்றி ஐக்கிய அமெரிக்க தேசத்தின் (USA) மயாமி, நியூ ஓர்லியன்ஸ், ஜாக்ஸன்வில் நகரங்களுக்கு கொண்டு செல்ல அன்று இரவு பல விமானங்கள் கேம்ப் கொலம்பியாவிலிருந்து பறந்துகொண்டிருந்தது. தன்னையும், தனது நெருங்கிய சகாக்களையும் காப்பாற்றுமளவு வல்லமை பொருந்திய அமெரிக்காவின் ஆதரவு தனக்கிருந்தும் பாட்டிஸ்டா எதற்காக நாட்டை விட்டு வெளியேறினார்? அவரை வெளியேற்றுமளவு வீறுகொண்ட புரட்சிக்கு காரணமென்ன? விடைகாண இன்னும் 26 வருடங்களுக்கு பிந்தைய கியூபாவுக்கு வாருங்கள்.

செப்டெம்பர் 4, 1933 கியூபாவில் 'சிப்பாய்கள் கலகம்' என்ற இராணுவ புரட்சி நடந்தது. ஜெரால்டொ மசாடோ தலைமையிலான அரசு அன்றைய இராணுவ புரட்சியில் வீழ்ந்தது. 33 வயது நிரம்பிய பாடிஸ்டா கியூபாவின் அரசு அதிகாரத்தை கைப்பற்றினார். அப்போது முதல் இராணுவத்தின் விளையாட்டுகள் அரச அதிகாரத்தில் ஆரம்பமானது. பாடிஸ்டா தன்னை இராணுவத்தலைவராக, அரசை உருவாக்கும் வல்லமையுள்ளவரா, அமெரிக்காவின் ஆதரவு பெற்றவராக உயர்த்தினார். பின்னர் அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்டின் அன்பிற்குரியவராக மாறிய இந்த பாடிஸ்டா யார்?

********
பாடிஸ்டா பிறந்தது கியூபாவின் ஓரியன்டே மாகாணத்தில் ஜனவரி 16, 1901. இனக்கலப்பு (வெள்ளை, இந்திய, சீன, கருப்பின) கொண்ட கரும்பு விவசாய குடும்பத்தில் மகனாக பிறந்த இந்த சிறுவனின் பெயர் ரூபன் புல்ஜென்சியோ பாட்டிஸ்டா சால்திவர். சிறுவயதிலேயே பொருளாதார பிரச்சனைகளை சந்தித்த பாடிஸ்டா பகலில் வேலைக்கு சென்று இரவில் பள்ளிக்கு சென்றார். புத்தகங்கள் படிப்பதே தனது பொழுதுபோக்காக கொண்டிருந்தவர் பாடிஸ்டா. 1921 இல் இராணுவத்தில் சேர்ந்தார். இராணுவத்தில் சேர ஹவானாவுக்கு செல்ல பயணம் செய்வதற்காக கைக்கடிகாரத்தை அடகுவைத்தார். பொருளாதார பிரச்சனையான பின்னணியிலிருந்து வந்த பாடிஸ்டா 1932இல் சார்ஜெண்டாக பதவியுயர்வு பெற்று மறுவருடத்தில் ஆட்சியை கைப்பற்றுமளவு வளர்ந்தார். அதே நேரம் பாடிஸ்டாவின் அதிகாரத்தையே அப்புறப்படுத்த போகிற ஒருவர் பிறந்து ஆறு வருடங்கள் கடந்திருந்தது பாடிஸ்டாவின் கழுகுப்பார்வையில் தெரியவில்லை. அதுவும் தனது மாகாணத்தில் மிக அருகில் அவர் இருப்பதை. யார் அவர்?

*********
பாடிஸ்டா பிறந்த அதே ஒரியன்டே மாகாணத்தில் மயரி என்கிற நகரிய எல்லைக்குட்பட்ட ஒரு பண்ணைக் குடும்பத்தில் ஆகஸ்டு 13, 1926இல் பிறந்த அந்த குழந்தையின் பெயர் பிடல் அலெஜண்டோ காஸ்ரோ ரூஸ். காஸ்ட்ரோவின் தந்தையார் காலனியாதிக்கத்தில் ஸ்பானிய சிப்பாயாக இருந்தவர். தாயார் தந்தையாருக்கு சமையல் வேலையாக வந்த பெண். காஸ்ட்ரோவுக்கு இரு சகோதரர்களுண்டு. மிகவும் வசதியான பண்ணைக் குடும்பத்தில் பிறந்ததால் காஸ்ட்ரோவுக்கு பொருளாதார பிரச்சனைகளில்லை. அமெரிக்க டாலரை பார்க்கும் ஆர்வ மிகுதியால் அமெரிக்க அரச அதிபர் ரூஸ்வெல்ட்டிற்கு கடிதம் எழுதியதாக நம்பப்படுகிறது (உண்மை கடிதமா தெரியவில்லை, யாரவது தெரிந்தால் உறுதிபடுத்துங்கள்). அந்த சிறுவயது காஸ்ட்ரோவுக்கு தெரியாது அமெரிக்காவை அலற வைக்கிற வலிமை தன்னிடமிருப்பது. குடும்பத்தின் அரவணைப்பில் கியூபாவின் சந்தியாகு, ஹவானாவில் உயர்தர கிறிஸ்தவ பள்ளிகளில் கல்வி கற்றார். 1945இல் சட்டம் பயில துவங்கி 1950இல் ஹவானா பல்கலைப்பட்டம் வாங்கினார். 1948இல் மிர்றா டியஸ் பலர்ட் என்ற பெண்ணை மணந்தார். அவரது திருமணத்திற்கு பாடிஸ்டா கணிசமான தொகையில் பரிசனுப்பினார். இருந்தும் பாடிஸ்டாவின் ஆட்சியை அப்புறப்படுத்த இளைஞர்களை திரட்டி புரட்சிக்கு புறப்பட்டார் பிடல் காஸ்ட்ரோ. அவரை இந்த புரட்சிகர நிலைக்கு தள்ளியது எது? இதனால் கியூபாவின் சரித்திரம் மட்டுமல்ல, உலகின் பார்வையும், விடுதலைப்போரியலில் புதிய வழிமுறையும் பிறக்கபோவது அப்போது அவருக்கு தெரியுமா? அவருக்கு துணையாக புறப்பட்டு உலகத்தின் பார்வையை தனது பக்கம் திருப்பிய அந்த சரித்திர மனிதன் யார்?

வரலாறு விரியும்...

திரு

படங்கள் உதவி: latinamericanstudies, கியூபாவின் வரலாறு

9 பின்னூட்டங்கள்:

Anonymous said...

muthal pakuthiyilye neriya visayangal.

arinthu kolla aarvamai irukkern.

-prakask

தென்றல் said...

சேகுவேரா பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற என் எண்ணம் இந்த தொடரின் மூலம் நிறைவேறும் என நம்புகிறேன்.

மிக்க நன்றி, திரு!

வினையூக்கி said...

செகுவேராவைப் பற்றி அடிக்கடி இணையத்தில் தேடி படிப்பது வழக்கம். தமிழில் தருவதற்கு மிக்க நன்றி

வினையூக்கி said...

விருவிருப்பான வரலாற்று தொடருக்கான அட்டகாசாமான முதற்பகுதி. தொடருங்கள் சார்.

Unknown said...

தோழர் சே குவேராவின் புரட்சிகரப் பார்வையின் பரிணாமத்தில் சிக்குண்டவர்களில் நானும் ஒருவன், இவரைப் பற்றிய பரிபூரண தகவலையும் அறிய ஆவலாக உள்ளேன், எழுதுங்கள். உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

இரண்டு நாள் முன்ன தான் The motorcycle diaries படம் பார்த்தேன். சே குவேரா மீதான மலைப்பு, ஈர்ப்பு தொடர்கிறது. விரிவாக எழுதுங்கள்.

வெற்றி said...

திரு,
அருமையான தொடர். தொடருங்கள். உலகில் எந்த மூலையில் ஒடுக்கப்பட்ட மக்கள் இருந்தாலும் இன, மத, சாதி பேதம் பாராது அவர்களுக்காகப் பாடுபட்ட உன்னத மனிதன்.

இன்று அவர் உயிருடன் இருந்திருந்தால் ஈழத்தில் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனோடு தோளோடு தோளாக நின்று போராடியிருப்பார் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

அடுத்த தொடரை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்.

கிருபா said...

சேகுவேரா பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற என் எண்ணம் இந்த தொடரின் மூலம் நிறைவேறும் என நம்புகிறேன்.விரிவாக எழுதுங்கள்.அடுத்த தொடரை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்

dam said...

மனித விடுதலையை மட்டுமே தன் வாழ்வின் ஒரே குறிக்கோளாக கொண்டு, சுய நலமற்று, தேடி வந்த பதவி சுகங்களையும் மறுத்து, இறுதி வரை மனித குல விடுதலைக்கான போராட்டத்தையே தன் மூச்சாக கொண்டிருந்த, நிஜ புரட்சித்தலைவனை பற்றிய இத்தொடருக்கு என் வாழ்த்துக்கள்.

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com