சே குவேரா: வரலாற்றின் நாயகன் - 2
ஜூன் 14, 1928 அர்ஜென்டினாவின் தலைநகர் புயெனெஸ் எயர்ஸ்லிருந்து (Buenos Aires)400 கிலோமீட்டர் தூரத்திலுள்ள ரொசாரியோவிலுள்ள ஒரு வீடு. ஏர்னெஸ்டோ குவேரா லின்ஞ், சிசிலியா டெ ல செர்னா தம்பதியர் தங்களுக்கு அன்று பிறந்த தலைப்பிள்ளையை முத்தமிட்டு மகிழ்ந்தனர். அளவற்ற மகிழ்ச்சிக்கு அடையாளமாக தங்களது பெயர்களின் பாதியை இணைத்து ஏர்னெஸ்டோ குவேரா டெ ல செர்னா என பெயர் சூட்டினர்.
அப்போது குவேரா தம்பதிக்கு தெரிந்திருக்கவில்லை தனது மகனுக்கு வரலாற்றில் வேறு பெயர் பதிவு செய்யப்படும் என்பது. குட்டிப்பையனாக இருந்த ஏர்னெஸ்டோவுக்கு குறையற்ற விதத்தில் குழந்தை பருவம் அமைந்தது. சொந்தமாக மூலிகை தேயிலை பண்ணையிருக்குமளவு வளமானது ஏர்னெஸ்டோவின் குடும்பம். ஏர்னெஸ்டோவுக்கு ஒரு வயதிருக்கும் பொழுது ரோசாரியோவிலிருந்து அந்த பண்ணைக்கு குடிபுகுந்தார்கள் அங்கு ஏர்னெஸ்டோவுக்கு தங்கை ஒருவர் கிடைக்கப்பெற்றார். அவரது 2வது வயதில் விளையாடிக் கொண்டிருந்த நேரம் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில் ஆஸ்துமா நோயிருப்பது கண்டறியப்பட்டது. ஏர்னெஸ்டோவின் மூன்றாவது வயதில் அவரது குடும்பத்தினர் தலைநகர் புயெனெஸ் எயர்ஸ்க்கு இடம் பெயர்ந்தார்கள். அங்கு அவருக்கு தம்பியொருவர் பிறந்தார். ஏர்னெஸ்டோவின் ஆஸ்துமா அதிகமானதால் அவரது உடல் நலனுக்கேற்ற காலநிலையுள்ள அல்டா கிரேசியா என்ற நகரில் குடிபெயர்ந்து, சுமார் 10 வருடங்கள் அங்கு வாழ்ந்தார்கள்.
நோய்வாய்ப்பட்டதால் அதிகமாக புத்தகம் படிப்பதும், சிறு வயதிலேயே அறிவுக்கருத்துக்களால் நிரம்பிய சிந்தனைவாதியாகவுமே காணப்பட்டார் ஏர்னெஸ்டோ. சிறு வயதில் ஏர்னெஸ்டோ தனது தாயாருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தார். தாயார் அவரை சுயமாக சிந்தித்து வளரும் தன்மை மிக்கவராக வளரத் தூண்டினார். விடுமுறையில் குடும்பம் சந்தோசமாக பொழுதை கழித்துவந்தனர். தந்தையார் வைத்திருந்த படப்பிடிப்பு கருவியால் ஏர்னெஸ்டோவை படம் பிடிப்பது வாடிக்கை. அவரது 9வது வயதில் ஸ்பெயினில் உள்நாட்டு யுத்தம் ஏற்பட்டது. அவரது மாமா அர்ஜெண்டினாவில் ஒரு பத்திரிக்கைக்கு யுத்தச்செய்திகள் சேகரித்து வந்தார். அதனால் சிறுவயதிலேயே யுத்தம் சம்பந்தமான நேரடி செய்திகளை மாமாவிடமிருந்து கேட்டு தெரிந்துகொண்டார் ஏர்னெஸ்டோ. அது தான் ஏர்னெஸ்டோவின் அரசியல் பாடத்தின் துவக்கம். அங்கிருந்து துவங்கிய இந்த அலை அவரை சமூகத்தின் அவலங்களை தேட வைத்தது.
அர்ஜென்டினாவில் ஏர்னெஸ்டோ வளர்ந்து கொண்டிருக்கையில், கியூபாவில், பாடிஸ்டா அதிகாரத்தை கைப்பற்றியதன் பின் அமெரிக்க வல்லரசு பாடிஸ்டாவின் எதிராளிகளை சரிகட்டி அமெரிக்க நிறுவனங்களை அங்கே நிறுவ ஆரம்பித்தது. இடைக்கால அதிபராக இருந்த ரமோன் கிரயு சன் மார்டினுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு, புதிய அதிபராக கார்லோஸ் மெண்டியெட்டா அமர்த்தபட்டார். அமெரிக்கா இந்த புதிய அரசை உடனடியாக அங்கீகரித்தது. மே 29, 1934 குயான்றனாமோ பே (Guantánamo Bay) தீவை பயன்படுத்த உடன்படிக்கையை கியூபாவுடன் எற்படுத்தியது அமெரிக்கா. அன்று முதல் இன்று வரை அந்த தீவு அமெரிக்காவின் வசம்.
தொடர்ந்து வந்த அமெரிக்க ஆதரவு பாடிஸ்டாவை பலம் மிக்கவராக மாற்றியது. பாடிஸ்டா பல நிழல் உலக வர்த்தக பிரமுகர்களுடன் தொடர்பை வலுப்படுத்தினார். இந்த தொடர்புகள் வழியாக பல சூதாட்ட விடுதிகள் ஹவானாவில் திறக்கப்பட்டது. அமெரிக்க நிறுவனங்களுக்கு பாடிஸ்டா அதிகாரத்திலுள்ள நண்பனாக இருந்தார். அரசு நிர்வாகம் லஞ்சமும், ஊழலுமாக மக்களுக்கெதிராக நடந்துகொண்டிருந்தது. மாணவர்களும், பொதுவுடமையாளர்களும் எதிர்ப்புகளை காட்டிய வண்ணமிருந்தனர். பல எதிர்ப்பாளர்கள் கொலை செய்யப்பட்டார்கள். பாடிஸ்டாவை கொல்லவும் முயற்சிகள் நடந்தன. மாணவர் தலைவர் ஒருவர் எழுதிய கடிதத்தில் பாடிஸ்டா பற்றி "புரட்சி என ஒன்று நடந்தால், தான் தப்பிச் செல்ல விமானம் ஒன்றை தயாராக வைத்திருக்கும் குணமுடையவர்" என்றார். கியூபாவில் அதிபருக்கான தேர்தலும் வந்தது.
(வரலாறு வளரும்)
திரு
6 பின்னூட்டங்கள்:
படித்தேன், அடுத்த பகுதியை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.
திரு,
மிகவும் எளிமையாக, இனிமையாக எழுதியுள்ளீர்கள். நீளமான பதிவாகப் போடாமல் இதே போல் அளவில் போட்டதால் உடனேயே படித்து முடித்து விட்டேன். மிக்க நன்றி.
அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
நல்ல தொடர் திரு. சேகுவராவின் இளமைக்காலப் புகைப்படங்களை இணைப்பதற்கும். எங்கு பிடித்தீர்கள் அவற்றை?
அடுத்த பதிவுக்காகக் காத்திருக்கின்றேன்.
திரு,
நான் வெகுநாட்களாக உங்களிடமிருந்து எதிர்பார்த்த நல்ல தொடர்.
சின்ன பரிந்துரை: கடினமான பொருட்பெயர்கள் வருமிடத்து அவற்றின் ஆங்கில உச்சரிப்பையும் அடைப்புக்குறிகளுக்குள் கொடுக்கலாமே..
தொடருக்கு நன்றி ..
நாடு விட்டு நாடு வந்து போராட்டம் செய்து , அடுத்த போராட்டத்தை நோக்கி ஓடிய போராளி என மட்டுமே கேள்விபட்டுள்ளேன் . அவருடைய வாழ்க்கை வரலாறை தமிழில் வாசிக்க ஆவலாய் உள்ளேன் .. தயவு செய்து தொடர்ந்து எழுதவும் .
Post a Comment
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com