பார்வை: மண்டைக்காடு கலவரம்
ஒரே குடும்பத்தில் உள்ளவர்கள் பல்வேறு மதங்களையும், வழிமுறைகளையும் பின்பற்றுவது குமரிமாவட்டத்தின் பண்பாட்டு சிறப்பு இயல்புகளில் குறிப்பிடத்தக்க விசயம். தங்களுக்குள் எந்தவித மத வேறுபாடுகளும் பாராமல் இயல்பான வாழ்க்கை வாழ்ந்த இந்த மக்களது மனிதத்தன்மையில் பார்ப்பனீயம் தொடுத்த தாக்குதல் தான் மண்டைக்காடு. மதவெறியை அறியாத மக்களிடம் மண்டைக்காடு கலவரத்தின் மூலம் இந்துமுன்னணியும், ஆர்.எஸ்.எஸ்ஸும் பிரிவினையை உருவாக்கியது. மண்டைக்காடு கலவரமும், அதன் தொடர்ச்சியான இந்துத்துவ தீவிரவாத அமைப்புகள் ஏற்படுத்திய சமூக தீங்கின் பின்னரும் பல குடும்பங்கள் ஒற்றுமையாக தான் வாழ்ந்து வருகிறார்கள்.
உதாரணமாக எனக்கு தெரிந்த நண்பர் ஒருவரது குடும்பத்தில் கிறிஸ்தவ மதத்தில் தாயார் இருக்கிறார். தகப்பனார் நாட்டார் வழக்கியல் வழிபாட்டுமுறையில் மாடனை கும்பிடுகிறார். மகன் பொதுவுடமை இயக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார். சித்தப்பா அய்யப்பசாமிக்கு மாலை போட்டு விரதம் இருக்கிறார். பெரியம்மா குடும்பம் அதற்கு எதிர்திசையில் அய்யாவழியை பின்பற்றுகிறார்கள். அவர்களுக்குள் மதச்சண்டை தோன்றியதில்லை. எந்த தெய்வம் உயர்ந்தது, எந்த வழிமுறை சிறந்தது என சண்டையோ, விவாதங்களோ எழுந்ததில்லை. இப்படித்தான் இன்றும் பல குடும்பங்கள் ஒற்றுமையாக வாழுகின்றன. திருமணங்கள் முதல் அனைத்து விசயங்களிலும் எந்த பிரச்சனையுமில்லாது கலந்துகொள்கிறார்கள். அய்யப்பசாமிக்கு மாலையிட்டு விரதம் இருக்கும் ஒரு மனிதரை சிறுவயது முதல் எனக்கு தெரியும். வாழைப்பயிர் செய்து, கூலி வேலை செய்யும் அந்த தொழிலாளியின் பெயர் சாமுவேல். கிறிஸ்தவ பெயராக இருந்தாலும் அவர் கிறிஸ்தவனாக இருந்ததே இல்லை என்பதை அவரே கூறியிருக்கிறார். உழைக்கும் மக்களுக்குள் இந்த மதவேறுபாடுகளை விட உறவுமுறையும், மனிதபண்பாடும் தான் முக்கியமாக இருக்கிறது. வெற்றிலையை மென்றபடியே ஆற்றங்கரையோரம், பெட்டிக்கடை என நண்பர்களாக சேர்ந்து சொந்த சோகங்களை பேசி, கிண்டலடித்தபடியே வாழும் அவர்களுக்குள் யார் எந்த மதம் என்ற கேள்வி எழுந்ததே இல்லை.
எனது நண்பர் ஒருவர் கல்யாணம் குரவை, கெட்டிமேளம் சகிதம் நடந்தது. அவர் தீவிரமான நாட்டார் வழக்கியல் ஈடுபாடுடையவர். அவரது பெரியப்பா மகன் திருமணம் அய்யாவழியில் நடந்தது. அவரது பெரும்பாலான உறவினர்கள் நட்டார் தெய்வங்களை வழிபடுபவர்கள். இன்னும் பலர் எந்த மதத்தையோ, வழிபாட்டையோ, கொள்கையையோ பின்பற்றாத இயல்பான மனிதர்கள். சிலர் சி.எஸ்.ஐ, பெந்தேகோஸ்தே, கத்தோலிக்க மதத்தவர். உறவினரில் ஒரு பெண் இஸ்லாமியர் ஒருவரை நிக்காஹ் செய்திருக்கிறாள். நண்பர்களில் பலர் இஸ்லாமியர்கள். சிலர் பொதுவுடமைவாதிகள் மற்றும் பகுத்தறிவாளர்கள். இவர்களில் எவரும் இன்னொருவரிடம் மத சண்டைகளில் ஈடுபட்டதில்லை.
உள்ளூர்களில் வாழ்ந்த மக்களும், கடற்கரையில் வாழ்ந்த மக்களும் தங்களுக்குள் அன்னியோன்னியமாக நல்ல உறவுடனே வாழ்ந்தனர். உடல் உழைப்பில் சிறந்த மீன்பிடித்தொழில் செய்யும் மக்கள் பரந்த கடலைப் போல கள்ளங்கபடமற்றவர்கள். எந்த மதத்தில் இருந்தாலும் கடலை நம்பி வாழ்க்கை நடத்தும் இந்த மக்களுக்கு கடல் தான் தாய். மற்ற மதத்தவர்களின் கடவுள்களைப் பற்றியோ, வழிபாட்டுமுறைகளைப் பற்றியோ இவர்கள் கவலைப்படுவதில்லை. கடற்தொழிலில் ஈடுபடுவதால் பெரும்பாலான நேரம் உழைப்பிலும், மீதி நேரம் குடும்பம், உறக்கம், கள்ளுண்டு நண்பர்களுடன் சீட்டாடுதல் என்று இயல்பான உழைக்கும் மக்களது வாழ்க்கை. மண்டைக்காடு கலவரத்திற்கு முன்னர் குமரிமாவட்ட உழைக்கும் மக்களிடம் இப்படியான உறவுமுறை மிக பலமாக பரவலாக இருந்தது.
மா.சிவகுமார் எழுதிய ஆர்எஸ்எஸ் என்ற அபாயம் - 3 பதிவில் ஜோ எழுதிய பின்னூட்டத்தில் உண்மையை அப்படியே பதிவு செய்திருக்கிறார். //மண்டைக்காடு அருகிலுள்ள அந்த மீனவ கிராமம் புதூர் .அந்த மக்கள் கத்தோலிக்கர்களாக மாறி 450 வருடங்கள் கடந்து விட்டன. ஆனாலும் மண்டைக்காடு கலவரம் 1982-ல் வருவதற்கு முன்பு வரை அந்த மக்கள் மண்டைக்காடு பஹவதி அம்மன் கோவில் திருவிழாவுக்கு வரும் பக்தர்களை விருந்தினர்கள் போல உபசரித்தே வந்தனர். அது போல மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடலுக்கு புதூரில் கடலுக்கு சென்று நீராடி விட்டு அருகிலுள்ள மேரி மாதா குருசடிக்கும் சென்று வணங்குவது வழக்கம். இன்னும் சொல்லப் போனால் மண்டைக்காடு பகவதி அம்மனும் மாதாவும் சகோதரிகளாக சாதாரண மக்கள் மனதில் பதிந்திருந்தார்கள்.//
மண்டைக்காடு கலவரம் வழி கடற்கரை மக்களுக்கும், உள்ளூர் மக்களுக்கும் மத்தியின் மத அடிப்படையில் பிளவை விதைத்தன இந்துத்துவ அமைப்புகள். மண்டைக்காடு கலவரம் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட ஒரு வன்முறை. ஆர்.எஸ்.எஸ், இந்துமுன்னணி அமைப்புகளால் இந்த திட்டமிடுதல் செய்யப்பட்டு அரங்கேற்றப்பட்டது. இதன் விளைவாக ஒட்டுமொத்த சமூகத்தில் மத பிரிவினைகள் உருவானது. மண்டைக்காடு கலவரத்தை தொடர்ந்து பல ஊர்களில் கலவரங்கள் பல காலகட்டங்களில் உருவாக்கப்பட்டன. மக்களின் வாழ்வில் இந்த திட்டமிடப்பட்ட கலவரங்கள் ஏற்படுத்திய பண்பாட்டு தாக்கமும், இழப்பும் சாதாரணமானதல்ல. மதவெறியை விதைத்த இந்துத்துவ இயக்கங்களுக்கு உழைக்கும் மக்களின் வலி அரசியல் இலாப கணக்காக பயன்படுகிறது. மண்டைக்காடு கலவரம் தன்னிச்சையாக திடீரென வெடித்ததா? மண்டைக்காடு கலவரம் பொறுத்துக்கொள்ளமுடியாத 'இந்துக்களின் அறசீற்றமா'?
பார்ப்பனீய நலனை காக்க உருவாக்கப்பட்ட மத தீவிரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ் கிளைகள் வடஇந்தியாவிலிருந்து பார்ப்பன, பானியாக்களால் தமிழகத்தில் பரப்பப்பட்டது. வடஇந்தியாவிலிருந்து வந்து வியாபாரம் செய்யும் சாதியினர் சிலரது ஆதரவுடன் இந்த கிளைகள் ஏற்கனவே பார்ப்பனீய ஆதிக்க மையங்களில் உருவாகியிருந்தாலும், தமிழகத்தை பொறுத்தவரை ஆர்.எஸ்.எஸ் என்றால் ஒடுக்கப்பட்ட மக்கள் எதிரியாகவே பார்த்தனர். தந்தைப் பெரியார் அவர்கள் ஏற்படுத்திய பகுத்தறிவு விழிப்புணர்வே இதற்கான அடிப்படை காரணங்களில் ஒன்று. மேலும் காந்தியின் கொலை, ஆதிக்கச்சாதி அடையாளம் என பல காரணங்களால் பெரும்பாலான மக்களால் ஆர்.எஸ்.எஸ் புறக்கணிக்கப்பட்டே வந்தது. ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் பார்ப்பனீய அரசியல் கொள்கையை பரப்ப மக்களிடம் செல்வாக்கு அவசியமானது. ஆர்.எஸ்.எஸ்க்கு ஆள் பிடிக்க இந்துமுன்னணி போன்ற துணை அமைப்புகளை உருவாக்கினர். இந்துமுன்னணி என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ்க்கு ஆள் பிடிக்கும் வேலையில் இராமகோபாலன் போன்றவர்கள் ஈடுபட்டனர்.
தமிழகத்தின் தென்காசிக்கு அருகேயுள்ள மீனாட்சிபுரம் என்னும் ஊரில் 1981ல் தேவர் சாதியினரின் ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்ட தலித் மக்களில் பெரும்பான்மையினர் இஸ்லாமியர்களாக மாறினார்கள். பார்ப்பனீய சாதி ஆதிக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் பார்ப்பனீய மதத்திலிருந்து வெளியேறியதும் வடநாட்டு இந்துத்துவ தலைவர்கள் மீனாட்சிபுரத்திற்கு படையெடுத்தனர். வாஜ்பாய் போன்றோர் அந்த மக்களுக்கு ஆளுக்கு ஒரு இலட்சம் ரூபாய் தருவதாக ஆசை காட்டினர். இந்திய அரசின் விசாரணை கமிசன், தமிழக அமைச்சர் என பலர் பேசியும் எடுத்தமுடிவில் மாறாமலே இருந்தனர் மக்கள். மீனாட்சிபுரத்தை முன்மாதிரியாக எடுத்து மேலும் பல ஊர்களில், பகுதிகளில் மக்கள் பார்ப்பனீய மதத்திலிருந்து வெளியேறிவிடுவார்கள் என்ற நிலை ஏற்பட்டது. ஆர்.எஸ்.எஸ் தனது நடவடிக்கைகளை எடுக்கத்துவங்கியது. மக்களை மத அடிப்படையில் வெறியுணர்வூட்டுவதும், மத அடிப்படையில் ஒருங்கிணைப்பதும் அதில் ஒரு யுக்தியானது. உழைக்கும் மக்களிடையே மத பிளவுகளை ஏற்படுத்த கலவரம் உருவக்க மீனாட்சிபுரம் இருக்கும் நெல்லை மாவட்டத்திற்கு அருகிலுள்ள கன்னியாகுமரி தேர்வு செய்யப்பட்டது. சென்னையிலிருந்து இல.கணேசன், இராமகோபாலன் போன்ற இந்துத்துவவாதிகள் மண்டைக்காடு கலவரத்திற்கு 8 மாதத்திற்கும் முன்னரே கன்னியாகுமரி மாவட்டத்தின் பல ஊர்களில் சுற்றித்திரிந்து ஆர்.எஸ்.எஸ் கிளையை உருவாக்கினர். ஆர்.எஸ்.எஸ் சாகாக்களில் சிலம்பம், கராத்தே, அடவு மட்டுமல்லாது மதவெறியும், பிற மதத்தவர் மீது பகையுணர்வும் பரப்பப்பட்டது. அதை தொடர்ந்த கூட்டுமுயற்சியும், விளைவும் தான் மண்டைக்காடு கலவரம்.
மண்டைக்காடு கலவரம் நடந்தபோது எம்.ஜி.ஆர் ஆட்சியில் இருந்தார். ஆட்சியின் மறைமுக ஆதரவு இந்துத்துவ இயக்கங்களுக்கு இருந்தது. கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வெளியிலிருந்து வந்த பலரால் இந்த கலவரம் வளர்க்கப்பட்டது. இவற்றில் சில பத்திரிக்கையாளர்களும் அடங்குவர். கலவரத்திற்காக மண்டைக்காடு தேர்ந்தெடுக்கப்பட காரணம் என்ன? தொடர்ந்து நடந்தவை பற்றி அடுத்த பதிவில்.
11 பின்னூட்டங்கள்:
நல்ல பதிவு அண்ணா, அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன். முன்ன்னமே இந்த கலவரம் குறித்து வீட்டில் சொல்ல கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் அதற்கு சம்பந்தமே இல்லாமல் வலை உலகில் பல புரட்டுக்களோடு வரும் செய்திகளை படிக்கும் போது கொஞ்சம் குழம்பிப் போனது உண்மை.
குழப்பத்தை தெளியவைக்கும் நடை.
( புதிய டெம்ளேட் நல்லா இருக்கு. ஆனா.. வாசிப்புக்கு இடையூராக எழுத்து சின்னதாக இருக்கே.. மாத்தப்பிடாதா?)
ஆர்.எஸ்.எஸ் மட்டுமா காரணம். நீதிபதி வேணுகோபால கமிஷன் அறிக்கை என்ன சொல்கிறது என்பதை விளக்குவீர்களா. கிறித்துவ அமைப்புகளுக்கும், திருச்சபைக்கும் இதில் பங்கில்லையா. தொடர்ந்து ஒரே பல்லவியை எத்தனை முறைதான் பாடுவீர். இப்படி ஆர்.எஸ்.எஸ் என்று ஒரே காரணியை காட்டுவதால் உண்மை மறைந்துவிடுமா. ஆலமர விழுதுகள் போல் உங்கள் பதிவுகளில்
பொய்கள் உள்ளன
Thiru,
You are keep giving us informative articles.
Thank you and keep it up!
Nanban
//தமிழகத்தின் தென்காசிக்கு அருகேயுள்ள மீனாட்சிபுரம் என்னும் ஊரில் 1981ல் தேவர் சாதியினரின் ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்ட தலித் மக்களில் பெரும்பான்மையினர் இஸ்லாமியர்களாக மாறினார்கள். பார்ப்பனீய சாதி ஆதிக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் பார்ப்பனீய மதத்திலிருந்து வெளியேறியதும் //
தேவர் சாதி = பார்ப்பனீய சாதி ?
from when ?
திரு,
நீங்கள் மட்டுமல்லாமல் அந்த வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் மண்டைக்காடு கலவரத்தைப் பற்றிய தங்கள் அனுபவத்தை, பார்வையை எழுதுதல் வேண்டும். அது மதவெறி சக்திகளின் செயல்பாட்டை அனைவரும் அறிந்துகொள்ள உதவும்.
நன்றி!
//யெஸ்.பாலபாரதி ♠ said...
நல்ல பதிவு அண்ணா, அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன். முன்ன்னமே இந்த கலவரம் குறித்து வீட்டில் சொல்ல கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் அதற்கு சம்பந்தமே இல்லாமல் வலை உலகில் பல புரட்டுக்களோடு வரும் செய்திகளை படிக்கும் போது கொஞ்சம் குழம்பிப் போனது உண்மை.
குழப்பத்தை தெளியவைக்கும் நடை.
( புதிய டெம்ளேட் நல்லா இருக்கு. ஆனா.. வாசிப்புக்கு இடையூராக எழுத்து சின்னதாக இருக்கே.. மாத்தப்பிடாதா?)//
தம்பி,
உங்கள் ஆலோசனைப்படி எழுத்து பெரிதாக்கப்பட்டிருக்கிறது.
//Anonymous said...
ஆர்.எஸ்.எஸ் மட்டுமா காரணம். நீதிபதி வேணுகோபால கமிஷன் அறிக்கை என்ன சொல்கிறது என்பதை விளக்குவீர்களா. கிறித்துவ அமைப்புகளுக்கும், திருச்சபைக்கும் இதில் பங்கில்லையா. தொடர்ந்து ஒரே பல்லவியை எத்தனை முறைதான் பாடுவீர். இப்படி ஆர்.எஸ்.எஸ் என்று ஒரே காரணியை காட்டுவதால் உண்மை மறைந்துவிடுமா. ஆலமர விழுதுகள் போல் உங்கள் பதிவுகளில்
பொய்கள் உள்ளன //
அன்பின் அனானி,
நீதிபதி வேணுகோபால் விசாரணை அறிக்கை மண்டைக்காடு கலவரத்தின் காரணமானவர்கள் யார் என சுட்டியதை எழுதுவேன். ஏன் பதட்டமடைகிறீர்கள்? 'உண்மையை' சொல்லுவதாக வந்திருக்கும் நீங்கள் ஏன் மறைந்து வருகிறீர்கள்? அவ்வளவுதான் உங்கள் 'உண்மை' மீதான நம்பிக்கையா?
//Anonymous said...
//தமிழகத்தின் தென்காசிக்கு அருகேயுள்ள மீனாட்சிபுரம் என்னும் ஊரில் 1981ல் தேவர் சாதியினரின் ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்ட தலித் மக்களில் பெரும்பான்மையினர் இஸ்லாமியர்களாக மாறினார்கள். பார்ப்பனீய சாதி ஆதிக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் பார்ப்பனீய மதத்திலிருந்து வெளியேறியதும் //
தேவர் சாதி = பார்ப்பனீய சாதி ?
from when ? //
அனானி,
இந்துமதத்தில் பார்ப்பனீய சாதி ஆதிக்கம் இல்லாமல் வேறு என்ன இருக்கிறது? மனுதர்மம் பற்றிய எனது முந்தைய பதிவின் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் விவாதிப்போம்.
// நண்பன் said...
Thiru,
You are keep giving us informative articles.
Thank you and keep it up!
Nanban //
நன்றி நண்பன்.
// Thangamani said...
திரு,
நீங்கள் மட்டுமல்லாமல் அந்த வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் மண்டைக்காடு கலவரத்தைப் பற்றிய தங்கள் அனுபவத்தை, பார்வையை எழுதுதல் வேண்டும். அது மதவெறி சக்திகளின் செயல்பாட்டை அனைவரும் அறிந்துகொள்ள உதவும்.
நன்றி! //
தங்கமணி,
இதுவே மற்ற வலைப்பதிவர்களிடம் எனது வேண்டுகோளும்.
மண்டைக்காடு கலவரம் பற்றி அதில் மீனவ மக்கள் பற்றி உள்ளூர் மக்களின் பார்வை எல்லாம் பொதுப் புத்தியில் பதிந்து போன விஷயங்கள்தான்.
அவர்கள் வன்முறையாளர்கள் ,இந்து முன்னணி தொண்டர்கள் தேச பக்தர்கள்.மீனவர்கள் மீது நாற்றமடிக்கும் இந்து பரிவாரிகளின் மீது சைவ வாசம் வீசும் ....இதெல்லாம் காலம் காலமாக சொன்னது...
பொதுவாக் இந்து முன்னாணி தென் தமிழகத்தில் குறிப்பாக கன்னியாகுமரியில் யாரை தனது அடியாள் வேலைக்கு பயன் படுத்துகிறதோ,
அவர்களை 75 வருடங்களுக்கு முன்பு வரை அடிமைகளாக வைத்திருந்ததும் இதே இந்து முன்னாணி பரிவாரங்கள்தான்..ஐய்யா வைகுண்டசாமி இந்த பூணூல் பார்டிகளிடம் இருந்துதான் பிரிந்து போய் ''அய்யா வழியை''துவக்கினார்.இன்றைக்கு அவரது வழியில் வந்த பூஜித குரு பாலபிரஜாபதி அதை இந்து மதத்தின் இன்னொரு அங்கமாக மாற்றியது ....அய்யாவழிக்கு போட்ட பட்டை நாமம் என்பது தனிக்கதை...
இடுப்புக்கு மேலே எவன் தங்களை ஆடை அணியக்கூடாது என்றானோ அவனுக்கு த்தான் நமது நாடார் இன மக்கள் அடியாள் வேளை பார்க்கிறார்கள்.
எண்பதுகளுக்கு முன்னர்வரை மீனவ மக்களுக்கும் நாடார் இன மக்களுக்குமான உறவென்பது நட்பு ரீதியிலானது ..மீனவ மக்கள் நாடார்களை ''உயிரக்காரர்" அதாவது உயிரைக் காக்கிறவர் என்கிற பொருளப்படித்தான் அழைப்பார்கள்..உள்லூரில் விளைகிற கொல்லாம்பழத்தையும் மாமப்ழத்தையும் கருப்பட்டியையும் கொண்டு போய் கடற்கரையில் கொடுத்து விட்டு வெள மீனும் பாறையும் கணவாயும் வாங்கிப் போன உறவு இருந்தது .இதை எல்லாம் விட நாடார்மக்களின் வீடு தேடி மீனை கொண்டு கொடுக்கிற ப்ழக்கமும் மீனவ மக்களிடம் இருந்தது...அதே பாசத்தோடுதாம் நாடார்களும் இருந்தார்கள் ...
எண்பதுகளுக்கு பிறகு இந்து முன்னணிதான் மீனவ் மக்களுக்கும் நாடார்களுக்கும் இடையே நிரந்தர கசப்பை உண்டாக்கியது.
எண்பதுகளில் நடந்த தாக்குதலில் போலீசும் குமரி மாவட்ட நிர்வாகமும் சேர்ந்து கொள்ள அடியாடகள் வெளியூர்களில் இருந்து கொண்டு வரப்பட்டார்கள் .கேரள குரூப்கள் லாறிகளில் கொண்டு வரப்பட்டார்கள்..
மண்டைக்காடு கலவரத்தில் இந்து முன்னணி மீனவ மக்களின் வீடுகளை வலைகளை கட்டுமரங்களை அழித்து அவர்களின் தொழிலை அழித்தது.போலீஸ் மீனவ மக்களை கொல்கிற வேலையை பார்த்தது.கடற்கரையில் வலைகளை காயப்போட்டுக்கொண்டிருந்தவர்களை சுட்டுக் கொன்றது....திமுகவாக இருந்தாலும் சரி அதிமுக வாக இருந்தாலும் சரி அரசு நிர்வாகம் இந்து மயமாகி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது...
உறவாடினார்களோ அதே பூவரச மர நிழலில் ஆதிக்க சாதியான நாடார் இன மக்கள் இப்போது கொஞ்சம் உறுத்தலோடுதான் மீனவ மக்களை பார்க்கிறார்கள்.காரணம் அவர்களும் கல்வியில் பொருளாதாரத்தில் வளர்ந்திருக்கிறார்கள்..இந்த இரண்டுமே கிறிஸ்தவம் கொடுத்ததல்ல?மேலை நாடுகளுக்கு போய் உளைத்து சேர்த்தது கல்வியின் அவசியத்தை எண்பதுகளுக்கு பின்னரே மீனவ மக்கள் உணர்ந்தார்கள்.மண்டைக்காடு கலவரம் கொடுத்த அனுபவமும் இதில் பிரதானமானது..ஆனால் ஒன்றை ,மட்டும் சொல்லியாக வேண்டும்.கிறிஸ்தவம் வளரவும் கோட்டார் மறைமாவட்டம் வளரவும் காரணமாக இருந்தது மீனவ மக்கள்தான்...பத்து ரூபாய் சம்பாதித்தால் அதில் எட்டு ரூபாயை கோவிலுக்கு கொடுக்கிற நம்பிக்கை மீனவ மக்களிடம் ஊறியிருந்தது.ஆனால் நாடார் இன மக்கள் அப்படியல்ல தங்களுக்கு போக அல்லது வருமானத்தில் ஒரு சிறு பங்கை மட்டுமே கோவிலுக்கு கொடுப்பார்கள்.கடலோர மீனவ கிராமங்களில் உள்ள கோவில்களில் பிரமாணடங்களையும்..நாடார் சகோதர்கள் வாழும் பகுதிகளில் உள்ள கோவில்களில் தன்மையையும் பார்த்தாலே தெரியும்...ஆனால் மறைமாவட்ட கல்வி நிறுவனங்களில் மீனவ மக்கள் புறக்கணிக்கப்பட்டார்கள் காலம் காலமாக்..வெள்ளைக்கார பாதிரியார்களுக்கு வேண்டுமானால் இந்த மக்களை முன்னேற்றும் அக்கரை இருந்திருக்கலாம் ஆனால் இப்போதுள்ள மறைமாவட்ட பாதிரிகளுக்கு அது கிடையாது..
இதெல்லாம் காலம் கொடுத்த அனுபவம்..இதயெல்லாம் மீறி மீனவ மக்கள் நாடார் சகொதரர்களோடு இன்றும் நெருக்கம் பேணீத்தான் வருகிறார்கள்.
கடற்கரையில் வளர்ந்த பூவரச மர நிழலில் தங்களில் உறவுக்காரர்களோடு கொண்டாடும் உறவில் இந்து முன்னணி இன்னொரு முறை விஷத்தை கலக்காமல் இருந்தால் சரி....
Post a Comment
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com