Friday, April 27, 2007

இந்திய ஆயுதமும், ஈழப் போராட்டமும்!

கடனாகவும், நன்கொடையாகவும் கொடுக்கப்படும் ஆயுதங்களை விட மக்கள் மனதில் இருக்கும் விடுதலை என்ற கூரிய உணர்வு மிகச்செறிவான ஆயுதம். கடந்த காலங்களில் எரித்ரிய, பாலஸ்தீன விடுதலை போராட்டங்களின் வரலாறுகள் இந்த செய்தியை சொல்லியிருக்கிறது. இருந்தும், வல்லாதிக்க அரசுகள் மக்களின் இன விடுதலையை புரிந்து கொள்ள தவறியது அல்லது புரிய மறுத்தே வந்திருக்கின்றன. இந்தியா இலங்கை படைகளுக்கு பெருமளவில் ஆயுதம் கொடுத்ததாக வந்த செய்திகள் இப்படியான ஒரு வல்லாதிக்க நிலைபாட்டையே உணர்த்துகிறது. இதற்கு அடிப்படைக் காரணம் விடுதலை என்பது பற்றிய இந்தியர்களின் தவறான மனநிலையும், புரிதலும், அணுகுமுறையுமே. இந்தியா ஏன் ஈழத்தமிழர் இனப்பிரச்சனையை சரியாக அணுகவில்லை? இந்த கேள்விக்கு இந்திய துணைக்கண்டத்தின் அரசியலில் இதற்கான காரணம் இருக்கிறது.

ஆங்கிலேய காலனியாதிக்கம் முடிந்த பின்னர் அதிகாரங்கள் பார்ப்பன, பனியா கூட்டணியிடம் மாறியது. அந்த அதிகார மாற்றமே இந்திய அரசியல் ஆனது. அதனால் தான் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் சமூக, அரசியல், பொருளாதார விடுதலைக்கு இன்றும் போராடும் நிலையில் இருக்கிறார்கள். சமூகநீதி, அரசியல் நீதி, பொருளாதார நீதி அனைவருக்கும் கிடைக்கும் சமத்துவமான சமுதாயத்தை உருவாக்குவதற்கான விவாதங்கள், நிர்வாக அமைப்புமுறை, மக்கள்மயப்படுத்தப்பட்ட அதிகார பரவலாக்கம் போன்றவை உருவாகவில்லை. எல்லோருக்குமான சமஉரிமைகள் மற்றும் சமூகநீதி அடிப்படையில் இந்தியா கட்டியெழுப்பப்படவில்லை. அவ்வப்போது எழுந்த, எழுகிற முயற்சிகளும் நசுக்கப்பட்டன. தேசிய இன அடையாளங்களை அழிக்கும் முயற்சியில் இந்தியாவில் வாழும் அனைவரும் ஒரே தேசிய இனம் போன்ற தோற்றத்தை கடந்த 60 ஆண்டுகளாக உருவாக்கி வைத்திருக்கிறது.

1980கள் வரையில் மத்திய அரசாங்கத்தில் பெரும்பாலும் வடமாநிலங்களே அரசியல் ஆதிக்கம் செலுத்தி வந்தன. தென்னிந்தியர்களில் குறிப்பாக "மதராசிகள்" பிரிவினைவாதிகளாகவே புறக்கணிக்கப்பட்ட காலம். தமிழகம் இந்தி மொழி ஆதிக்கத்தையும், திணிப்பையும் எதிர்த்தது. திராவிட இன உணர்வை ஊக்கப்படுத்தியது என பார்ப்பனீய, பனியா கூட்டணிக்கு எதிரான அரசியல் துருவத்தில் தமிழகம் தலைமை வகித்தது. இதன் காரணமாகவே இந்திய துணைக்கண்ட அரசியலில் புதுடில்லி தமிழகம் மீது தனது கழுகு பார்வையை வைத்திருந்தது. நிர்வாக ரீதியாக பொறுப்புகளில் இடம்பெற்றவர்கள் இந்த புறக்கணிப்பை அதிகமாக்கினர். தமிழன் என்ற இன உணர்வு கூட குற்றமாக்கப்பட்டு கொடுஞ்சட்டங்களால் தண்டிக்கப்பட்டன. தமிழகத்திலிருந்து நிர்வாக, அதிகார பொறுப்புகளில் இடம் பெற்ற அதிகார கூட்டமும் திராவிட இயக்கத்தை எதிர்க்க நிர்வாக ரீதியான ஒடுக்குமுறைகளை பயன்படுத்தியது. இந்த நிர்வாக அடக்குமுறை வடிவம் பல்வேறு தேசிய இனங்களின் அடையாளங்களை அழிப்பதிலும், உரிமைகளை மறுப்பதிலும் இட்டு செல்கிறது.

தொடர்ந்து வந்த உலகமயமாக்கல் பொருளாதார சூழலில் அரசியல் உரிமைகள் சமரசம் செய்யப்பட்டு, பொருளாதார கட்டமைப்புகள் முன்னிறுத்தப்படுகின்றன. இதில் எல்லோருக்குமான பொருளாதார உரிமையோ, நீதியோ இல்லை. சமுகநீதி கூட அவ்வப்போது வந்து இடபங்கீடு கொள்கையாக முழக்கத்தில் எட்டிப்பார்த்து செல்கிறது. சமூகநீதி என்ற பரந்த சமநிலையை அடைய அணுகுமுறைகளும், திட்டங்களும் இல்லை. காஷ்மீரிகளின் உரிமையும், அசாமியர்களின் உரிமையும் இந்திய பாராளுமன்ற சுவர்களுக்குள் சிறைபட்டு கிடக்கிறது. தேசிய இனங்களை அவற்றின் அடையாளங்கள் மற்றும் சுய உரிமைகளுடன் புரிந்து கொள்ள "இந்தியர்களால்" இயலாத விசயம்.

இந்த அடிப்படையில் தான் இந்திய அரசின் கொள்கையாக இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்குவதில்லை என வெளிப்படையான அறிவிப்பும், நிழல் நடவடிக்கைகள் வழி இலங்கை படைகளுக்கு பயிற்சி, ஆயுதங்கள் என வழங்குவதும் நடக்கிறது. இந்திய துணைக்கண்டத்தின் பார்ப்பனீய, பனியா ஆதிக்க அரசியலும் இலங்கையின் சிங்கள பேரினவாதமும் சகோதர புரிதல் கொண்டவை. இந்தியாவில் ஆட்சியில் எந்த கட்சி இருந்தாலும் அதிகார மையங்கள் ஆதிக்க கொள்கை கொண்ட அதிகாரிகளிடமே இருக்கிறது. அவ்வப்போது தமிழகத்தின் 'அறிக்கை எதிர்ப்புகளுக்காக' காலம் தாழ்த்தினாலும், சிங்கள பேரின ஆதரவு இந்திய அதிகார மையத்தில் ஊறிப்போன ஒன்று.

இந்த நிலையில் ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை இந்தியாவிடமிருந்து வர வாய்ப்பில்லை, விடுதலை உணர்வு என்னும் உயரிய இலட்சியத்தில் இருக்கிறது. அணையாமல் காக்கப்படும் விடுதலை உணர்வு பொங்கு தமிழாக எழும் பெருந்தீயில் சுதந்திரம் மலரும். சிங்களதேசம் தானமாக ஆயுதம் பெறும் போது, ஈழத்தமிழர்கள் உரிமைக்காக தங்களை காத்துக்கொள்ள போராடுகிறார்கள். கொடையாக கிடைப்பது தானம் மட்டுமே. போராடி பெறுவது தான் சுதந்திரம்! உணர்வோடு போராடுங்கள் உங்கள் உரிமைகள் இன்று இல்லையென்றால் நாளையாவது பிறக்கும்!

9 பின்னூட்டங்கள்:

Anonymous said...

மிக நல்ல பதிவு. தொடருங்கள்.

ஒரு ஈழத் தமிழன்

Anonymous said...

டண்டணக்கா டிய்யாலோ!!!பிரிவினைவாதி கொய்யாலோ!!!

பாரதி தம்பி said...

//கொடையாக கிடைப்பது தானம் மட்டுமே. போராடி பெறுவது தான் சுதந்திரம்//

மிகச்சரியான வார்த்தைகள். அடிமைப்படுத்திய வெள்ளயனை அடித்து விரட்டாமல், 'அவன் கொடுத்தான். நாங்க வாங்கிக்கிட்டோம்' என்று சுதந்திரத்தை பிச்சையாக மாற்றி வைத்திருக்கும் முன்னோர்கள் நிறைந்த தேசம் இது. அவர்களின் வழி வந்தவர்கள்தான் இப்போதும் அரசுக்கட்டிலில் ஆட்சி புரிகின்றனர். அவர்களுக்கு, போராளிகளின் குணம் புறக்கணிக்கத்தக்கதாய் தெரிவதில் ஒன்றும் ஆட்சேபனை இல்லை.

Anonymous said...

புனைப்பெயருக்குள் ஒழிந்திருந்து கொண்டு நீ இதுவும் பேசுவாய் இன்னமும் பேசுவாய்.போய் யாழ்பாணத்தில் போய் இரண்டு மாசம் இருந்துபார்தெரியும்.புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் மக்கள் கொடுக்கிற விலை.

ஒரு வீட்டில் ஒரு பிள்ளை கட்டாயம் சண்டைக்கு போகவேணும்.நீ சொந்தமாக தொழில் தொடங்கி அது நல்லா நடந்தால் அடுத்தநாள் வந்துநிற்பாங்கள் புலியள்.காசுதா இல்லாட்டி காம்புக்கு வா என்டு. படிச்ச ஆக்களுக்கு மரியாத இல்ல.எதிர்கருத்தை தாங்கிக்கொள்கிற பக்குவம் இல்ல.

உங்களுக்கு ஒன்றும் தெரியாது.எங்கேயோ பாதுகாப்பா இருந்து கொண்டு போராட்டத்துக்கு ஆதரவுகோடுத்து பதிவு போடுறாராம்
"போராடி பெறுவது தான் சுதந்திரம்! உணர்வோடு போராடுங்கள் உங்கள் உரிமைகள் இன்று இல்லையென்றால் நாளையாவது பிறக்கும்!"
அதுக்குள்ள இந்த உசுப்பல் வேற..

Anonymous said...

வெளி நாடுகளில் அகதிகளாகப் போன ஈழத்தமிழர்கள் அந்நாடுகளில் அடிக்கும் கொட்டத்தைப்பார்த்தால், "அகதியா இருக்கும் போதே இந்த ஆட்டம் போடுறானே, இவன் இலங்கையில் என்ன ஆட்டம் போட்டிருப்பான், அதுதான் அவனுங்க அடிமேல அடி கொடுத்துக்கிட்டு இருக்கானுங்க!" என்று என் காது பட பேசும் கூட்டம் இங்கு அதிகமாகவே உள்ளது.

உண்மை தானே?!

பகீ said...

//புனைப்பெயருக்குள் ஒழிந்திருந்து கொண்டு நீ இதுவும் பேசுவாய் இன்னமும் பேசுவாய்.போய் யாழ்பாணத்தில் போய் இரண்டு மாசம் இருந்துபார்தெரியும்.புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் மக்கள் கொடுக்கிற விலை.//

to write this you also come as and anonymous. How can you comment like this as an anonymous. Please start advice when you are in a right position. I am from Jaffna. I don't have any problem to support this article.

Oorodi bage.

பொன்ஸ்~~Poorna said...

//தென்னிந்தியர்களில் குறிப்பாக "மதராசிகள்" பிரிவினைவாதிகளாகவே புறக்கணிக்கப்பட்ட காலம். தமிழகம் இந்தி மொழி ஆதிக்கத்தையும், திணிப்பையும் எதிர்த்தது. திராவிட இன உணர்வை ஊக்கப்படுத்தியது என பார்ப்பனீய, பனியா கூட்டணிக்கு எதிரான அரசியல் துருவத்தில் தமிழகம் தலைமை வகித்தது. //
ஈழப் போராட்டத்தைப் பற்றிய இடுகை என்றாலும், சமீப காலத்து நிகழ்வுளால் எனக்குள் எழுந்திருந்த பல கேள்விகளுக்கு இந்த வரிகள் பதிலளிக்கின்றன..

இதுவும் தொடரா? ஒரே சமயத்தில் எத்தனை தொடர்கள்?

thiru said...

//இதுவும் தொடரா? ஒரே சமயத்தில் எத்தனை தொடர்கள்?//

பொன்ஸ்,

இது தொடர் கட்டுரையல்ல. :)

thiru said...

//Anonymous said...
புனைப்பெயருக்குள் ஒழிந்திருந்து கொண்டு நீ இதுவும் பேசுவாய் இன்னமும் பேசுவாய்.//

நண்பரே,

நமக்கு இது சொந்த பெயர் தான். இதை உங்களது உண்மை பெயரில் வந்து எழுதியமைக்கு வாழ்த்துக்கள் பிரபு! :)

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com