Tuesday, August 07, 2007

சங்கராச்சாரியின் பக்தனும், உச்சநீதிமன்ற வழக்கும்

"ஜெயேந்திரரின் தீவிர பக்தன் என்பதால் அவர் தொடர்பான வழக்கை விசாரிக்கப் போவதில்லை" என உச்சநீதிமன்ற நீதிபதி பி.கே. பாலசுப்பிரமணியன் நீதிமன்றத்தில் அறிவித்திருக்கிறார். உச்சநீதிமன்றம் விசாரித்துவரும் இந்த வழக்கு வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமனை கொலை செய்ததில் சங்கராச்சாரியின் பங்கு சம்மந்தப்பட்டதல்ல. உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.கே. பாலசுப்பிரமணியன் மற்றும் நீதிபதி மாத்தூர் தலைமையில் விசாரணணயில் இருப்பது புதுச்சேரி நீதிமன்றத்தில் நடந்து வரும் சங்கரராமன் கொலை வழக்கில் தமிழக அரசு வழக்கறிஞர்கள் வாதாடுவதற்கு தடை கோரி காஞ்சி சங்கராச்சாரி தரப்பில் தொடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் கொலை வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை வழங்கப்பட்ட நிலையில் நீதிபதி பி.கே.பாலசுப்பிரமணியன் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். தனிமனிதனாக ஒருவர் நான் பக்தன் என அறிவிப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக தனது தலைமையின் கீழ் நடந்து வரும் வழக்கு சம்பந்தமாக நீதிபதியின் இந்த அறிவிப்பு அதிர்ச்சிகரமானது. 'இந்திய நீதித்துறை சட்டத்திற்கு கட்டுப்பட்டதா? சாமிகளுக்கு கட்டுப்பட்டதா?' என சாமானியனையும் கேட்க தூண்டுகிறது நீதிபதியின் இந்த அறிவிப்பு.

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் சங்கராச்சாரி மீதான வழக்கு காஞ்சீபுரம் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு தமிழகத்தில் நடைபெற்றால் நியாயமான தீர்ப்பு கிடைக்காது என வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற சங்கராச்சாரி வைத்த கோரிக்கைக்கு ஏற்ப இந்த வழக்கு புதுச்சேரி நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. குற்றவாளிகளுக்கு எதிராக புதுச்சேரி நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞர்கள் வாதாடினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கை நடத்திய உச்சநீதிமன்றத்தின் ஒரு நீதிபதி சங்கராச்சாரியின் பக்தனாக மாறியிருக்கிறார். மேலும் சங்கராச்சாரியார் மனு மீது புதிய பெஞ்ச் விசாரணை நடத்தும் என அறிவித்து சங்கராச்சாரி மனு மீதான விசாரணையை மூன்று வாரத்திற்கு தள்ளிவைத்திருக்கிறார்.

புதுச்சேரியில் நடைபெற்று வரும் சங்கரராமன் கொலை வழக்கில் குற்றவாளிகள் நீதிமன்றம் செல்லாமல் காலம் கடத்துவதும், நீதிமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படுவதுமாக இழுக்கப்படுகிறது. பிரதான குற்றவாளியாக கருதப்படும் சங்கராச்சாரி சட்டத்தின் ஓட்டைகளில் ஒளிவதும், சங்கரராமனின் ஆவி துரத்துவதுமான இந்த தொடர் விளையாட்டு இன்னும் எத்தனை ஆண்டுகள் தொடருமோ. பாதிக்கப்பட்ட சங்கரராமனின் குடும்பத்தினருக்கு நீதி எப்போது?

நீதிமன்றம் புனிதமானது, நீதிமன்றங்களை அதனால் விமர்சிக்க கூடாது என்பதான பார்வை நம்மிடையே பரவலாக இருக்கிறது. உண்மையில் நீதிமன்றங்கள் புனிதமானவை தானா? மனிதகுல பரிணாம வளர்ச்சியில் வல்லவனின் வார்த்தைகளே தீர்ப்பாக ஆதிகாலம் தொட்டு மக்களாட்சி வரை தொடரவே செய்கிறது. தற்கால நீதிமன்ற நடைமுறையானது 'சட்டத்தின் அடிப்படையில் ஒருவர் குற்றம் செய்தவரா? இல்லையா?' என்று நடைபெற்ற சம்பவங்கள், சாட்சிகள் வழி விசாரிக்கப்பட்டு வழக்கறிஞர்களின் வாதத்தின் அடிப்படையில் சட்டரீதியான அணுகுமுறையாகவே தீர்ப்புகள் அமைதல் வேண்டும். இதில் நீதிபதிக்கு மிக முக்கிய பங்கு உண்டு. "சட்டத்தின் முன் அனைவரும் சமம்" என்ற பார்வை நீதிபதிக்கு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இங்கே 'அனைவரும்' என்பது குற்றம் செய்தவன் அரசனோ, ஆண்டியோ, சங்கராச்சாரியோ எவராக இருப்பினும் சட்டத்தின் முன்னர் சமமாக நடத்தப்படல் வேண்டும் என்பதாக பொருள். ஆனால் நீதிமன்ற நடைமுறையில் என்ன நடக்கிறது?

சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய குடியரசு தலைவரை கைது செய்யும் உத்தரவு ஒன்றை பிறப்பித்தார் நீதிபதி ஒருவர். அந்த உத்தரவு பிறப்பிக்க லஞ்சம் பெறப்பட்டிருந்ததும், குற்றச்சாட்டு உண்மையா? குற்றம் சாட்டப்பட்டவர் யார் என எந்த விசாரணணயும் மேற்கொள்ளப்படவில்லை என்பது தெரியவந்தது. நீதிபதிகளை நியமனம் செய்வதில் எந்தவிதமான வெளிப்படையற்ற தன்மையும் இல்லாதது இதற்கு மிக முக்கியமான காரணம். லஞ்சம், சட்டத்துக்கு எதிரான செயல்கள் என சில நீதிபதிகள் செய்யும் செயல்களால் நீதிமன்றம் மீதான கேள்விகள் பலமாக எழுகின்றன.தான் சார்ந்திருக்கும் மதம், சாதி, அரசியல் சார்ந்த உணர்வுகளும், வெறித்தனமும் நீதிபதிகளையும் ஆட்டிவைக்கிறது. இப்படிப்பட்ட நீதிபதிகள் வழங்கிய/வழங்கும் தீர்ப்புகள் தங்களது தனிமனித விருப்பு/வெறுப்புகள் அடிப்படையில் அமைகிறதே தவிர சட்டத்தின் பார்வையில் சமம் என்ற கோட்பாட்டிற்கு எதிராகவே அமையும்.

வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டியவர் "சட்டத்தின் முன் அனைவரும் சமம்" என்ற கோட்பாட்டை விட்டு கீழிறங்கியிருக்கிறார். நீதிபதிக்கான முதன்மையான பண்பை இழந்த ஒருவர் இனி வழக்குகளில் எந்த அடிப்படையில் நீதிபதியாக இருக்க இயலும் என்ற கேள்வி எழுகிறது. சாமியார்களின் காலடியில் வீழ்ந்து கிடக்கும் இந்திய அரசியல் தலைவர்கள் வரிசையில் நீதித்துறையிலிருந்து நீதிபதி பி.கே.பாலசுப்பிரமணியன் புது வரவு.

சட்டத்தின் முன்னர் விசாரிக்கப்படும் நீதிமன்ற நடவடிக்கைகளை காலம் கடத்த சங்கராச்சாரி தரப்பு எடுக்கும் முயற்சியின் ஒரு பகுதி தான் இந்த உச்சநீதிமன்ற வழக்கு. குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாகவே நீதிபதியின் இந்த நடவடிக்கை அமைகிறது. 'சட்டம் ஒரு இருட்டறை' என்பதால் சங்கராச்சாரிகள் போன்ற பலம் பொருந்தியவர்கள் கண்ணாமூச்சியாட்டம் ஆட வாய்ப்புகள் அதிகம். கொலை செய்யப்பட்ட சங்கரராமனின் குடும்பத்திற்கு நீதி எப்போது?

18 பின்னூட்டங்கள்:

கோவி.கண்ணன் said...

சட்டம் தன் கடமையை செய்யும் என்று அதிகாரிகள் பேசுவதெல்லாம் வரட்டு வேதாந்தமா ?

சட்டத்தின் முன் அனைவரும் சமம்.

பணியில் சேரும் போது பாரபட்சமின்றி செயல்படுவேன் என்று உறுதி மொழி எடுத்துக்கொண்டவர் இதுபோன்று அறிக்கைவிடுவது கண்டனத்துக்குறியது.

மத்திய அரசு இவரை பணியில் தொடர்ந்து வைத்திருப்பது குறித்து பரீசீலிக்க வேண்டும் !

"பிரம்மனே முருகனால் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறான்" என்பது இந்த வேதாந்திகளுக்கு தெரியாதா ?

சிவபாலன் said...

ச்சே... வெறுப்பாக இருக்கிறது!

என்னத்த சொல்ல.. ம்ம்ம்ம்.......

தருமி said...

"சட்டத்தின் முன் அனைவரும் சமம்"

ஹா .. ஹா.. !!
:(

மாசிலா said...

திரு ஐயா, நீதிபதி பி.கே. பாலசுப்பிரமணியன் இப்படி வெளிப்படையாக தன் சார்பினை தெரிவித்து பொறுப்புகளில் இருந்து விலகிக்கொண்டதும் ஒரு வகையில் நல்ல தீர்க்கமான முடிவுதானே.

இஃதில்லாமல், அனைத்தையும் மூடி மறைத்து கடைசியில் காவி கோமனத்துக்கு ஆதரவாக தீர்ப்பு கொடுத்திருந்தால் அது இதைவிட கொடுமையல்லவா?

தனக்குள் ஏற்பட்டிருந்த மனப்போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து தைரியமான தெளிந்த முடிவெடுத்திருக்கிறார் எனவே என் மனதிற்கு படுகிறது.

அவரும் மனிதர்தானே! இவ்வழக்கிற்கு நீதி வழங்க தான் தகுதியற்றவன் என பொறுப்புகளில் இருந்து விலக முடிவெடுத்த ஒரு பெரிய நீதிபதியை யாருக்கும் குறைகூற யோக்யதை இல்லை எனவே படுகிறது. நல்ல நடுநிலமையுடன் எடுக்கப்பட்ட முடிவாகவே இது தெரிகிறது.

இப்ப என்ன குடி முழுகி போச்சு? இவரு இல்லைன்னா, இன்னொருத்தர். அவ்வளவுதான்.

Anonymous said...

இவர் செய்தது சரியென்றே படுகிறது. இப்படி வழக்கிலிருந்து
கழண்டுக்கொள்ளாமல் சாமியார் வழக்குகளுக்கு தீர்ப்பு (?)
சொல்லும் பக்த நீதிபதிகள் இன்னும் ஆபத்தானவர்கள்.

அதே நேரத்தில் சட்டத்தின் அடிப்படையில் நீதி வழங்க தெரியாது
என்பவர்கள் நீதிபதி வேலைக்கு லாயக்கானவர்கள் இல்லை..

இலவசக்கொத்தனார் said...

மாசிலா சொல்வது சரியாகவே படுகிறது. தனது தம்பியைப் பற்றிய வழக்கை ஒரு அண்ணன் விசாரிப்பது இல்லை, தன் குடும்பத்திற்கான ஆப்பரேஷன்களை ஒரு மருத்துவர் செய்வதில்லை. உணர்ச்சிகளால் எடுக்கப்படும் முடிவுகள் தவறாகி விடக்கூடாதென்பதினால்தானே.


தன்னால் நடு நிலமையான தீர்ப்புகள் எடுக்க முடியாதென்ற எண்ணம் வரும் பொழுது அவர் வெளிப்படையாக விலகிக் கொள்வது நல்லதே. இதில் வெறுப்பாகவே வேதனைப் படவோ எதுவும் இல்லை என்பதே என் எண்ணம்.

Thamizhan said...

நல்ல வேளை,இப்போதாவது சொன்னாரே!இவர் தாமாக பதவி விலகுவதுதான் உண்மையான நாணயம்.
சங்கராச்சாரியின் ஜாமீன் வழக்கு விசாரணையைப் படித்துப் பாருங்கள்.ஜாமீனைப் பற்றிப் பேச வேண்டிய நீதிபதி வழக்கையே விசாரித்து அவரை நிரபராதியாக்க முழு முயற்சியும் செய்து விட்டார்.அவரும் இந்த வழ்க்கில் வெளியேறுவது மக்களுக்குக் கொஞ்சம் மரியாதைக் கொடுக்கிறார்கள்(சட்டத்திற்கு) என்றாவது தோன்றும்.

thiru said...

//பணியில் சேரும் போது பாரபட்சமின்றி செயல்படுவேன் என்று உறுதி மொழி எடுத்துக்கொண்டவர்....//

கண்ணன்,

இதெல்லாம் பேச்சு மட்டும் தானோ செயல்?

thiru said...

சிவா, தருமி அய்யா,

வருகைக்கு நன்றி!

thiru said...

//மாசிலா said...
திரு ஐயா, நீதிபதி பி.கே. பாலசுப்பிரமணியன் இப்படி வெளிப்படையாக தன் சார்பினை தெரிவித்து பொறுப்புகளில் இருந்து விலகிக்கொண்டதும் ஒரு வகையில் நல்ல தீர்க்கமான முடிவுதானே. //

இந்த வழக்கில் இருந்து விலகுவதல்ல கேள்வி! சட்டத்தின் முன்னர் சங்கராச்சாரியை நிறுத்த பக்தனான பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு மனம் இடம் கொடுக்கவில்லை. நாளை இதே நீதிபதி இன்னொருவரை கொலை வழக்கில் சட்டத்தின் முன்னர் விசாரிப்பாரா? இது சட்டத்தின் முன்னர் எடுக்கும் இரட்டை நிலைப்பாடு ஆகாதா?

//இஃதில்லாமல், அனைத்தையும் மூடி மறைத்து கடைசியில் காவி கோமனத்துக்கு ஆதரவாக தீர்ப்பு கொடுத்திருந்தால் அது இதைவிட கொடுமையல்லவா?

தனக்குள் ஏற்பட்டிருந்த மனப்போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து தைரியமான தெளிந்த முடிவெடுத்திருக்கிறார் எனவே என் மனதிற்கு படுகிறது.

அவரும் மனிதர்தானே! இவ்வழக்கிற்கு நீதி வழங்க தான் தகுதியற்றவன் என பொறுப்புகளில் இருந்து விலக முடிவெடுத்த ஒரு பெரிய நீதிபதியை யாருக்கும் குறைகூற யோக்யதை இல்லை எனவே படுகிறது. நல்ல நடுநிலமையுடன் எடுக்கப்பட்ட முடிவாகவே இது தெரிகிறது.

இப்ப என்ன குடி முழுகி போச்சு? இவரு இல்லைன்னா, இன்னொருத்தர். அவ்வளவுதான்.//

இனிமேல் நீதிபதியாக தொடரும் தகுதி இவருக்கு இருக்கிறதா? குற்றம் சாட்டப்பட்டவர் நாட்டின் உச்ச பீடங்களில் இருந்தாலும் விசாரிப்பது ஒரு நீதிபதியின் கடமை. தன்னால் விசாரிக்கப்படவேண்டியவர் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர, அங்கே அவர் சங்கராச்சாரி என்னும் பதவியை பற்றியதல்ல விசாரணை. இந்த தெளிவு கூடவா நீதிபதிக்கு இல்லாமல் போயிற்று?

thiru said...

//Anonymous said...
இவர் செய்தது சரியென்றே படுகிறது. இப்படி வழக்கிலிருந்து
கழண்டுக்கொள்ளாமல் சாமியார் வழக்குகளுக்கு தீர்ப்பு (?)
சொல்லும் பக்த நீதிபதிகள் இன்னும் ஆபத்தானவர்கள்.

அதே நேரத்தில் சட்டத்தின் அடிப்படையில் நீதி வழங்க தெரியாது
என்பவர்கள் நீதிபதி வேலைக்கு லாயக்கானவர்கள் இல்லை.. //

உண்மை அனானி!

thiru said...

//இலவசக்கொத்தனார் said...
மாசிலா சொல்வது சரியாகவே படுகிறது. தனது தம்பியைப் பற்றிய வழக்கை ஒரு அண்ணன் விசாரிப்பது இல்லை, தன் குடும்பத்திற்கான ஆப்பரேஷன்களை ஒரு மருத்துவர் செய்வதில்லை. உணர்ச்சிகளால் எடுக்கப்படும் முடிவுகள் தவறாகி விடக்கூடாதென்பதினால்தானே.

தன்னால் நடு நிலமையான தீர்ப்புகள் எடுக்க முடியாதென்ற எண்ணம் வரும் பொழுது அவர் வெளிப்படையாக விலகிக் கொள்வது நல்லதே. இதில் வெறுப்பாகவே வேதனைப் படவோ எதுவும் இல்லை என்பதே என் எண்ணம். //

கொத்தனாரே முதல் வருகைக்கு வணக்கம்!

தன்னால் நீதியான தீர்ப்பு வழங்க இயலாது என கருதும் ஒருவர் நீதிபதி பதவியிலிருந்தே விலகுவது தான் நீதித்துறக்கு நல்லது. அந்த வழக்கிலிருந்து மட்டும் விலகுவதும் இன்னொரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தீர்ப்பு எழுதுவதும் இரட்டைத்தன்மை வாய்ந்ததில்லையா?

thiru said...

//Thamizhan said...
நல்ல வேளை,இப்போதாவது சொன்னாரே!இவர் தாமாக பதவி விலகுவதுதான் உண்மையான நாணயம்.
சங்கராச்சாரியின் ஜாமீன் வழக்கு விசாரணையைப் படித்துப் பாருங்கள்.ஜாமீனைப் பற்றிப் பேச வேண்டிய நீதிபதி வழக்கையே விசாரித்து அவரை நிரபராதியாக்க முழு முயற்சியும் செய்து விட்டார்.அவரும் இந்த வழ்க்கில் வெளியேறுவது மக்களுக்குக் கொஞ்சம் மரியாதைக் கொடுக்கிறார்கள்(சட்டத்திற்கு) என்றாவது தோன்றும்.//

தகவலுக்கு நன்றி தமிழன்

Sridhar Narayanan said...

//இந்த தெளிவு கூடவா நீதிபதிக்கு இல்லாமல் போயிற்று?//

அதே கேள்விதான் எனக்கும் தோன்றியது. அவர் வெளிப்படையாக ஒத்துக் கொண்டது நல்லதுதான். ஆனால் அப்படி ஒத்து கொண்டதினால் அவர் இன்னும் மற்றவர்களுக்கு நீதி வழங்கும் பக்குவத்திற்கு வரவில்லை என்றுதான் தோன்றுகிறது.

குப்பனாக இருந்தாலும் சரி; குபேரனாக இருந்தாலும் சரி; சட்டத்தின் முன் அனைவரும் சரி சமமே. அப்படி பார்க்க விரும்பாத (அ) தெரியாத நீதிபதி எப்படி பாரபட்சமில்லாமல் மற்ற தீர்ப்புகளை வழங்கியிருக்க முடியும்? என்ற கேள்வி எழாமல் இல்லை.

//அவரும் மனிதர்தானே//

ஆம்! ஆனால் நீதி வழங்கும் பொறுப்பிலிருக்கும் மனிதர் என்பதை மறந்துவிடக் கூடாது.

வருந்ததக்க நிகழ்வு :-(

Anonymous said...

சத்தியம் சத்தியத்தை
சத்தியமாய் சத்தியமாக்கும்.


மதியினை மழித்திட்ட
மருளீர் மெய்யுணரீர்.

Anonymous said...

//பணியில் சேரும் போது பாரபட்சமின்றி செயல்படுவேன் என்று உறுதி மொழி எடுத்துக்கொண்டவர் இதுபோன்று அறிக்கைவிடுவது கண்டனத்துக்குறியது.

மத்திய அரசு இவரை பணியில் தொடர்ந்து வைத்திருப்பது குறித்து பரீசீலிக்க வேண்டும் !
//
தீர்க்கமான கருத்து.

நல்லடியார் said...

தனது அபிமானத்திற்குறியவருக்கு எதிராக அல்லது சாதகமாக தீர்ப்பெழுதத் தயங்கி தன்னை விடுவித்துக் கொண்ட செயல் ஒரு 'நடுநிலை' நீதிபதிக்கு அழகல்ல! இருந்தாலும் தனது உள்மனச்சுமையைச் சொல்லி ஒதுங்கி கொண்டதை நேர்மை என்று பாராட்ட முடியவில்லை!

நீதிபதிகளின் தீர்ப்பை குறைசொன்னால், சொன்னவரை நீதிமன்ற அவமதிப்பு என்று அலைக்கழிக்கும் சட்டம், நீதியைத் தரத் தயங்கும் நீதிபதியை என்ன செய்யப்போகிறது?
படத்திலுள்ளதுபோல் ஒரு நாட்டின் தலைமகன்களே மடாதிபதிகளிடம் தலைவணங்கி நிற்கும்போது, அப்பதவிக்குறிய மேன்மையும், நாட்டின் சட்டங்களும் தலைக்குணிந்துதானே நிற்கும்!

நோ கமெண்ட்ஸ் ப்ளீஸ் - 2

மாசிலா said...

திரு : //இந்த வழக்கில் இருந்து விலகுவதல்ல கேள்வி! சட்டத்தின் முன்னர் சங்கராச்சாரியை நிறுத்த பக்தனான பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு மனம் இடம் கொடுக்கவில்லை.// இந்த மனப்பக்குவம் அவருக்கு இல்லாமல் போனது வருந்தத்தக்கதே.

//நாளை இதே நீதிபதி இன்னொருவரை கொலை வழக்கில் சட்டத்தின் முன்னர் விசாரிப்பாரா? இது சட்டத்தின் முன்னர் எடுக்கும் இரட்டை நிலைப்பாடு ஆகாதா?// இன்னும் கூட்டி சொல்லப்போனால், இவ்வளவு காலமும் இந்த மனப்பான்மையுடனே அனைத்து வழக்குகளுக்கும் மதச்சார்பு நீதி வழங்கியிருக்க வாய்ப்புகளும் உண்டு.

எனவே, இதே கோணத்தில் மேலும் சொல்லவருவது, அவர் இதுவரை நீதி வழங்கி பாதிப்பிற்குள்ளாகி இருக்கின்ற மாற்று மத மற்றும் தலித் இன மக்கள் தங்களது இவரது தீர்ப்புகளை மதச்சார்புடையது, செல்லாதது என காரணம் காட்டி, நஷ்ட ஈடு கேட்டு, தீர்ப்புகளை மறுபரிசீலனை செய்யச் கேட்கலாம்.

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com