Tuesday, November 06, 2007

இலங்கை அரசுக்கான ஆதரவுகளிலிருந்து இந்தியா விலகவேண்டும்

னுராதபுரம் வான்படைத்தள தாக்குதல், மணலாற்றில் சிங்கள இராணுவத்திற்கு எதிரான சமர்களில் புலிகளின் இராணுவ திறன் வெளிப்பட்டிருந்த சூழலில் நவம்பர் 2 வெள்ளிக்கிழமை அதிகாலை கிளிநொச்சியில் விமானகுண்டு வீசி அரசியல் பிரிவு தலைவர் திரு.சுப.தமிழ்ச்செல்வன் அவர்களை இலங்கை அரசு கொலை செய்திருக்கிறது. விமானதாக்குதல் நடந்து சுமார் 6 மணிநேரத்திற்கு பின்னர் (பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கை காரணங்களுக்காக தாமதமான அறிவிப்பாக இருக்கலாம்) புலிகள் இயக்கத்தின் செயலாளர் சீரன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு செய்த பின்னர் தென்னிலங்கையிலிருந்து தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டார் என்ற தகவலை தெரிவித்தனர்.

தமிழ்ச்செல்வனது கொலையை உளவியல் ரீதியாக தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்த ஆரம்பித்தது தென்னிலங்கை. இலங்கை அதிபரின் சகோதரரும் இராணுவ அமைச்சருமான கோத்தபாய ராஜபக்சே "This is just a message, that we know where their leaders are. I know the locations of all the leaders, that if we want we can take them one by one, so they must change their hideouts." "When the time comes only, we take them one by one." என ராய்டர் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்திருந்தார். இந்த செய்தி வழி தமிழ்மக்களது போராட்டத்தை தலைமைகளை அழிப்பது மூலம் நசுக்குவோம் என விடுத்த எச்சரிக்கையாகவே பார்க்கமுடிகிறது. தலைவர்களை அழித்தொழிப்பதனால் உண்மையான மக்கள் போராட்டங்களை அழித்துவிட முடியாது என்பது உலக விடுதலைப் போராட்டங்கள் தரும் பாடம். உண்மையிலேயே இலங்கை அரசிற்கு புலிகளின் தலைவர்களது நடமாட்டங்கள் தெரியுமா என்பது கேள்வியே. சாதாரண தமிழ்மக்களையே அவர்களது குடியிருப்புகள், பள்ளிக்கூடங்கள் என குண்டுவீசி மக்களை கொலைசெய்யும் இராணுவமும், சிங்கள அரசும் புலிகளின் தலைவர்களது இருப்பிடங்களை தெரிந்து வைத்திருந்தால் இதுவரையில் விட்டுவைத்திருப்பார்களா? கோத்தபாய ராஜபக்சேவின் நோக்கம் தமிழ்மக்களது மத்தியில் பாதுகாப்பற்ற அச்ச உணர்வை உருவாக்குவதாக அமைகிறது. கிளிநொச்சியில் தமிழீழத்தின் அரசியல் கட்டுமானங்களும், தமிழீழ நிர்வாக பணிமனைகளும் நிறைந்திருப்பதும் தமிழ்ச்செல்வன் அத்தகைய பணிகளை தலைமையேற்று நடத்திக்கொண்டிருந்தார் என்பதும் உலகறிந்த உண்மை. இப்பணிமனைகளை சிங்கள அரசிற்கும் தெரிந்திருப்பதில் வியப்பேதுமில்லை. தமிழ்ச்செல்வன் சமாதான பேச்சுவார்த்தை முன்னெடுப்புகளில் தலைமை பொறுப்பில் இருந்தவர் என்ற அடிப்படையில் இக்கொலை சமாதானத்திற்கான வாய்ப்புகளை உடைத்தெறிந்திருக்கிறது.

இராணுவ தாக்குதல்களால் எக்காலத்திலும் தமிழர் இனப்பிரச்சனையை முடித்து வைக்க என்பது 23 ஆண்டுகால இராணுவ நடவடிக்கைகள் சொல்லுகின்றன. 1983 கருப்பு ஜூலை இனக்கலவரத்தின் போது சிறுகுழுக்களாக இயங்கிய பல போராளி இயக்கங்கள் இன்று தனது அடையாளங்களையும், சுயத்தையும் இழந்து தமிழர்கள் உரிமைகளை பெற முயல்வதை விட்டு, சிங்கள பேரினவாதத்தின் மடிப்பிள்ளையாக பதவியும், பணமும் பெறுவதிலேயா கவனமாக இருக்கிறது. இவர்களது செயல்களின் காரணமாக ஈழத்தமிழர்களிடமோ, தமிழக தமிழர்களிடமோ அல்லது உலகமெங்கும் பரவியுள்ள தமிழர்களிடமோ ஆதரவில்லை. இவற்றில் சில குழுக்கள் சிங்கள பேரினவாதிகளை விட படுகொலைகள், வன்புணர்ச்சிகள், ஆட்கடத்தல் என தமிழ்மக்களுக்கு எதிரான குற்றங்களை புரிந்தவர்கள் என்பது வேதனையான உண்மை. இராணுவத்தின் கைத்தடிகளாக செயல்பட்ட இவ்வகை குழுக்கள், பயணம் செய்யும் தமிழ்ப்பெண்களிடம் சோதனை என்ற பெயரில் வக்கிரமாக நடந்துகொள்வதும், பொருட்கள் இருக்கும் பைகளை கட்டாரியால் கிழித்து அட்டகாசம் செய்வதும் சாதரணமான நிகழ்வுகள் என பலர் சொல்வதுண்டு. நில ஆக்கிரமிப்பு, கப்பம் வசூலிப்பது, ஆட்கடத்தல், படுகொலைகள், வன்புணர்ச்சியில் ஈடுபடும் இவர்களுக்கு இலங்கை அரசின் ஆதரவு இருப்பதை மனித உரிமை அமைப்புகளும், சர்வதேச ஊடகங்களும் சுட்டிக்காட்டி வருகின்றன. தமிழ் மக்கள் மீது இவர்கள் செய்யும் கொடுமைகளை உணர்ந்தும் இந்திய அரசின் ஆதரவு இவர்களுக்கு வழங்கப்படுவது கண்டிக்கத்தக்கது.

சிங்கள பேரினவாதிகளுக்கு ஆதரவாக செய்திபரப்பும் ஏடுகளை படித்து "புலிகள் பயங்கரவாதிகள்" என நீலிக்கண்ணீர் வடிப்பவர்கள், சிங்கள அரசு பயன்படுத்தும் அடக்குமுறைகளும், தாக்குதல்களும் தமிழர்களது வாழ்வை, வசிப்பிடங்களை, கல்வியை, கனவை, எதிர்காலத்தை என எல்லாவற்றையும் சிதைத்திருப்பதை அறிவார்களா? தமிழகத்திலிருந்து பெரும்பாலும் இக்கருத்துக்களையுடையவர்கள் மக்கள் போராட்டங்கள் பற்றிய எந்த அறிவும், சுயஉணர்வுமற்ற, அறிவுசீவிகளாக தங்களை காட்டிக்கொள்ளும் நடுத்தரவர்க்கத்து சீமான்களாகவும், 'இந்தி' தேசியவாதிகளாகவுமே இருக்கிறார்கள். இவர்களுக்கு உள்ளங்கை தான் உலகம். ஈழம் மட்டுமல்ல அனனத்து பிரச்சனைகளிலும் இந்த சுயஉலகத்தை கடந்து சமூகம் பற்றிய பரந்த பார்வையற்ற சுயநலமிகள் இவர்கள். ஈழப்பிரச்சனைக்கு எதிராக ராஜீவ் காந்தியை தினமும் பக்கம் பக்கமாக எழுதியும், பேசியும் கொலைசெய்யும் இவர்கள் வடிக்கும் கண்ணீர் ராஜீவ் காந்தி மீதான பற்றோ பாசமோ காரணமல்ல; மாறாக ஜெயலலிதா அம்மையாரின் வார்த்தையில் சொன்னால் 'பரம்பரை பகை'. ராஜீவின் கொலையை தங்களது சுயநலத்திற்காக பயன்படுத்தி ஈழத்தமிழர்கள் சுய உரிமை பெற்று வாழவிடாமல் தடுக்கிறார்கள்.

இந்திராகாந்தி அம்மையாரிடம் இருந்த அரசியல் அனுபவமும், முதிர்ச்சியும் காரணமாக ஈழத்தமிழர் இனப்பிரச்சனை பற்றி இந்திய கொள்கையில் தெளிவு இருந்தது. ஆர்.வெங்கட்ராமன் போன்ற தமிழின எதிர்ப்பாளர்கள் அமைச்சர்களாக இருந்தும் இந்திரா அரசில் மேலாதிக்க பார்ப்பனீயம் ஈழம் விடயத்தில் அடங்கியிருந்தது. இந்திரா அம்மையார் இறந்த பின்னர் அரசியல் அனுபவம் இல்லாத ராஜீவ் பிரதமரானார். ராஜீவ் உயிரோடு இருந்த போது கொள்கை வகுப்பாளர்களாக, தூதுவர்களாக இராஜீவை சுற்றி தங்களது அதிகார மையங்களை நிறுவினர். ராஜீவ் காலத்தில் தமிழர்களுக்கு எதிரான இந்திய கொள்கையை உருவாக்கி சிங்களர்களுக்கு ஆதரவாக இந்திய இராணுவத்தை நிறுத்தியவர்கள் இந்த தந்திரம் மிக்கவர்கள். ராசீவ் மறைந்த பின்னர் மரணத்தை பயன்படுத்தி 16 ஆண்டுகள் தமிழர்களை எதிரிகளாக நடத்திய இவர்களது போக்கு கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் தடா, பொடா கொடுஞ்சட்டங்கள் எத்தனை பேரின் வாழ்வை விழுங்கியது?

ஈழத்தமிழர் இனப்பிரச்சனையில் 1991ற்கு பின்னர் வெளியே தெரியாமல் இந்தியா கொடுத்த ஆயுதங்கள், நிதி, பயிற்சிகள், தொழில்நுட்ப உதவி, உளவுத்தகவல்கள் என தமிழ் மக்களை கொன்றொழிக்க மட்டுமே பயன்பட்டிருக்கிறது. இருந்தும் ஈழத்தமிழர்கள் முன்னைவிட பிரபாகரன் மீதும், புலிகள் இயக்கம் மீதும் அதிக நம்பிக்கையே கொண்டனர். இந்திய துணைக்கண்டத்தில் வசிக்கும் நாம் இதன் காரணத்தை புரிவது அவசியம். ஆரம்பத்தில் ஈழம், தமிழ் மக்களது அபிலாசைகளுக்காகவும் பேசியும், போராடியும் வந்த பிற போராளி குழுக்களை விட புலிகள் இயக்கம் இராணுவ, நிர்வாக, கட்டமைப்பு ரீதியான வளர்ச்சியில் முன்னேறியது. பிற போராளி இயக்கங்களிலிருந்து புலிகளை வேறுபடுத்தியது புலிகளின் இந்த வளர்ச்சி. புலிகள் இயக்கம் மீது விமர்சனங்கள் இருப்பினும் தமிழ்மக்கள் புலிகள் அமைப்பு மீது பாதுகாப்ப்பு உணர்வையும், நம்பிக்கையையும் கொண்டனர். இந்த நம்பிக்கை தான் பெரும் சமர்களின் போதும், சிங்களம் நடத்திய போர் நடவடிக்கைகளின் போதும் தமிழ்மக்கள் புலிகளுக்கு உதவியாகவும், புலிகளை சார்ந்தும் இருக்க வைத்தது. வன்முறை, பயங்கரவாதம் என ஒற்றை பரிணாம பார்வையில் புலிகளையும், ஈழத்தமிழர் போராட்டத்தையும், அவர்களது கனவையும் எதிர்ப்பது தமிழ்நாட்டில் பிறந்து, வளரும் நமக்கு எளிது. ஆனால் சாவின் பிடியில், பேரினவாத அரசியல், இராணுவ ஒடுக்குமுறையை சந்திக்கும் மக்கள் வான்குண்டுகளையும், வன்புணர்ச்சிகளையும் காந்திய புன்னகையில் எதிர்கொள்ள இயலாது.

காந்தி பிறந்த தேசம் என அகிம்சையை ஈழத்தமிழர்களுக்கு அறிக்கைகளில் உபதேசிக்கும் இந்தியா, புலிகளை அழித்தல் என்ற பெயரில் சிங்கள பேரினவாதத்திற்கு இராணுவ, ஆயுத உதவிகள் கொடுத்து வன்முறை பாதையில் ஈழத்தமிழ மக்களை கொலை செய்ய உதவுகிறது. கொலை செய்பவன் மட்டுமல்ல, கொலைக்கருவியும், நுட்பமும் வழங்குபவனும் கொலைச் சதிகாரன் தான். காந்தியம் பற்றி ஈழத்தமிழர்களுக்கு போதிக்கும் முன்னர் இந்திய அரசின் அணுகுமுறை அகிம்சையாக தான் இருக்கிறதா என்ற கேள்வி எழுப்புதல் அவசியமாகிறது. இந்த கேள்விக்கு இந்தியாவின் பதில் என்ன?

புலிகளை தண்டிப்பதாக நினைத்து ஒரு இனத்தையே அழிக்கும் நடவடிக்கைக்கு எங்களது வரிப்பணம் எங்களுக்கு தெரியாமலே கள்ளத்தனமாக பயன்படுத்துவது ஒரு அரச மோசடி. இந்திய அரசு இலங்கை இனப்பிரச்சனையில் தனது கொள்கையையும், திட்டத்தையும் வெளிப்படையாக முன்வைப்பது கடமை. அதை கேட்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள உரிமை.


ஈழத்தமிழர்கள் உரிமையுள்ள மக்களாக மனித விழுமியங்களோடு வாழ இந்திய அணுகுமுறையில் மாற்றம் அவசியம்

இறையாண்மை, ஒற்றையாட்சி என்ற ஆதிகால கோட்பாடுகளை விட்டு ஈழத்தமிழர்களுக்கு அவர்களது விருப்பத்தின், தேவையின் அடிப்படையிலான தீர்வை ஏற்படுத்த உதவுவது அவசியம். சிங்கள அரசிற்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ இந்தியா செய்யும் அனைத்து உதவிகளும், ஆதரவும் ஈழத்தமிழர்களை அழிக்க எடுக்கும் மறைமுக நடவடிக்கையாகவே பார்க்க இயலும். இந்தியாவோ அல்லது மற்றவர்களோ வெளியிலிருந்து திணிக்கும் எந்த தீர்வும் பயன்தராது. இந்திய அரச தரப்பு ஆதரவு கொடுக்கும் சில தமிழ்த் தலைவர்களது இயக்கங்கள் மட்டகளப்பு, யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் தமிழ்மக்களுக்கு எதிராக இன்றும் சித்திரவதை, பாலியல் கொடுமைகள், பணம்பறிப்பு, நிலம் அபகரித்தல், ஆட்கடத்தல், படுகொலைகளில் ஈடுபடுவது அனைவரும் அறிந்த உண்மை. ஜனநாயகம் மீது நம்பிக்கை கொண்டவர்களாகவும், அகிம்சைவாதிகளாகவும் காட்டப்படும் இவர்களது அமைப்பினர் கொடும் ஆயுதங்களோடு இன்றும் நடமாடுவது ஏன்?

இலங்கை அரசை பொறுத்தவரை கடந்த மே மாதத்திற்குள் தீர்வு திட்டத்தை வைப்பதாக அறிவித்தது. இன்னும் இனபிரச்சனைக்கு எந்த தீர்வுமில்லாமல் இராணுவ நடவடிக்கையில் ஈடுபடுகிறது. புலிகளை இராணுவ ரீதியாக அடக்கலாம் அல்லது வெற்றி கொள்ளலாம் என்பது இயலாத விடயம் என இராணுவ ஆய்வாளர்கள் கூறுவதை கணக்கிலெடுப்பது அவசியம். புலிகளை அழித்தல் என்னும் பெயரில் வன்முறைக்கும், சாவிற்கும், இழப்புகளுக்கும், சொல்லமுடியாத சோகமான சித்திரவதைகளுக்கும் ஆளாவது சாதாரண மக்களே. இலங்கை இராணுவம் மனித உரிமை மீறல்களில் முன்னிலை வகிக்கிறது. ஹெயிட்டி (Haiti) நாட்டில் ஐ.நா பாதுகாப்பு படையில் ஈடுபட்ட இலங்கை இராணுவம் பாலியல் குற்றம் புரிந்தது கண்டறியப்பட்டு 111 சிப்பாய்களும், 3 அதிகாரிகளும் வெளியேற்றப்பட்டனர் (செய்தி ஆதாரம்: AFP). ஐ.நா அமைதிப்படையிலேயே பாலியல் குற்றம் நிகழ்த்திய ஒழுங்கற்ற படை இலங்கையில் தங்களது அதிகார வல்லமையில் தமிழ் மக்களிடம் எப்படி நடந்துகொள்வர் என்பதை சிந்திக்கவேண்டும். போராளி இயக்கங்களை காரணம் காட்டி ஒரு நாட்டின் அதிகாரப்பூர்வமான இராணுவம் மனிதஉரிமை மீறல்களிலும், போர்க்குற்றங்களிலும் ஈடுபடவோ அல்லது அவற்றிலிருந்து தப்பிக்கவோ முடியாது. மற்ற எவரையும் விட இராணுவத்திற்கும், அரசிற்கும் சர்வதேச சட்டங்களையும், மனித உரிமையையும் மதித்து நடக்கவேண்டிய மிகப்பெரிய பொறுப்பு உண்டு. இலங்கை இராணுவத்தின் கடந்தகால பல செயல்கள் வழி அதன் நேர்மையற்ற, கொலைவெறியும் மனிதநாகரீகத்திற்கு எதிரான செயல்களும் வெளிப்பட்டிருக்கின்றன. இப்படிப்பட்ட இராணுவத்தையும், அரசையும் இந்தியா இன்னும் ஆதரிக்கப் போகின்றதா? மக்களாட்சி அமைப்பில் வாளும் இந்திய மக்கள் நாம் அனைவரும் இதைப் பற்றி பொறுப்புடன் சிந்திப்பது அவசியம்.

ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரான எந்த தீர்வையும் புலிகளோ அல்லது மக்களோ ஏற்கமாட்டார்கள். சமாதானம் ஏற்படவேண்டுமானால் அரசியல் தீர்வுடன் கூடிய சமாதான பேச்சுக்களில் தான் இருக்கிறது. ஈழத்தமிழர்களை அழித்தொழிக்கும் எந்த முயற்சிகளுக்கும் தமிழக தமிழர்கள் இனியும் ஆதரவு வழங்கப்போவதில்லை என்பதை தமிழக அரசியலில் ஈழத்தமிழர்களுக்கான வெளிப்படையாக வளர்ந்து வருகிற ஆதரவு காட்டுகிறது. இந்திய அரசு அடக்குமுறை சட்டங்களால் ஈழத்தமிழர் மீதான தமிழகத்தின் உணர்வுகளை இனியும் அழித்துவிட இயலாது என்பதை உணர்ந்துகொள்வது அவசியம். இனப்பிரச்சனையில் இந்திய அரசு தனது நிலையை மாற்றி ஈழத்தமிழர்களுக்கு நியாயமான, நீதியான தீர்வை கிடைக்க முன்வரவேண்டும் என தமிழகத்தின் குரல்கள் சொல்கிறது. தற்போது ஈழத்தமிழர்களுக்கு எதிரான நிலையில் இலங்கை அரசுக்கு செய்து வருகிற அனைத்து உதவிகளிலிருந்து இந்தியா விலகவேண்டும். ஈழத்தமிழர் நலன் கருதியும், இந்திய கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையிலும் தமிழக தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து ஐ.நா மனிதஉரிமை கூட்டங்களில் இலங்கை அரசின் படுகொலைகளுக்கு முட்டுக்கொடுத்த இந்திய நிலைபாடு, இராணுவ பயிற்சிகள், ஆயுதங்கள், தூதரக நடவடிக்கைகளை உள்ளிட்ட அனைத்து இலங்கை அரச ஆதரவு நடவடிக்கைகளையும் கைவிடுவது காலத்தின் அவசியம். மனித உரிமைகளை மதிக்கும் கொள்கை மாற்றங்களால் மட்டுமே உலக அரங்கில் இந்தியா மரியாதையான இடத்தை பெற இயலும்.
திரு