Thursday, March 20, 2008

அப்பாவின் ஓய்வும், உடலுழைப்பு பற்றிய பகிர்தலும்

ழுப்பத்து எட்டு வயதான அப்பா இந்த மாதம் வழக்கமான வேலையிலிருந்து ஓய்வுபெற்றார். சுமார் 38 வருடங்கள் ஓடியாடி சிறு முதலாளி ஒருவரின் ரப்பர் தோட்டத்தில் காடுமையான உழைப்பு. முப்பத்தெட்டு வருடங்களுக்கு வாரக்கூலி வேலைக்கு சேர்ந்த நாளைப் பற்றிய நினைவுகளை தொலைபேசியில் குறிப்பிட்ட அப்பாவின் உணர்வை உணர முடிந்தது. உழைப்பு நம் மக்களோடு எவ்வளவு பிணைந்திருக்கிறது. குடும்ப பொருளாதார சூழல் காரணமாக கடைசி வரை உழைத்துக் கொண்டிருப்பதை தவிர வேறு எந்த வழியுமற்றவர்கள் பற்றி எப்போதாவது நாம் சிந்தித்திருக்கிறோமா? அவர்களது முன்னேற்றம், உடல்நலன், ஓய்வு எந்த பொருளாதார மேற்கோள்களிலும், புள்ளிவிபரங்களிலும் 'வளரும் இந்தியாவில்' உணரப்படாதது கவலையளிக்கும் விசயம். எழுபது வயதை கடந்தும் அம்மாக்கள் நமது குடும்பங்களில் உழைத்துக் கொண்டிருப்பதை பற்றி நினைக்காமல் இருப்பது அதைவிட கொடுமையானது. அம்மாக்கள் என்றாலே நமக்கு சேவகம் செய்ய 'படைக்கப்பட்டவர்கள்' என்ற மனநிலை நம்மில் ஊறிப்போயிருக்கிறது.

'கறுப்பி' (இயற்பெயராக தெரியவில்லை) என்று அறியப்படும் 70 வயதுடைய மூதாட்டி கடவத்தில் பாக்கு, வெற்றிலை, பழங்கள், காய்கறி எடுத்து சென்று சந்தையில் தினம் தோறும் விற்கிறார். காலை 7 மணி முதல் மதியம் 1 மணிவரையும், மாலையில் 3 முதல் 6 மணிவரையும் கடுமையான உழைப்பு. வாரம் இருமுறை அதிகாலையில் வடசேரி, மார்த்தாண்டம், கருங்கல், தக்கலை சந்தைகளிலிருந்து காய்கறி, வெற்றிலை, பாக்கு, பழங்கள் வாங்கி அரசு பேருந்தில் ஏற்றி வந்து விற்று பிழைக்கும் உழைப்பு மிகுந்த ஓய்வற்ற வாழ்க்கை.

பசுமணி, 74 வயதிலும் மரம்வெட்டும் வேலை செய்கிற முதியவர். 'வெள்ளெளுத்தால்' கண்பார்வை சற்று குறைந்த வயதிலும், விடியக்காலம் 4.30 மணிக்கு பழங்கஞ்சியை குடிச்சிட்டு, கோடாரியை தோளில் போட்டபடியே ரோட்டோரமாக காத்திருப்பார். சுருளோடு, தடிக்காரன்கோணம், குலசேகரம், களியல் பகுதிகளில் எங்காவது 'ஸ்லாட்டர்' ரப்பர் மரம் முறிக்க போகும் ஆராவது விளிச்சா, வேலை கெடைக்கும். இல்லன்னா அடுத்தநாள் சாப்பாட்டுக்கு பக்கத்து வீட்டில ரேசன் அரிசி கடன் வாங்கணும்.

ஞானப்பூ, எழுபது வயதிலும் சுறுசுறுப்பாக நாத்து நட்டு, களைபறிக்கும் பெண்மணி. அவர் களைபிடுங்கிக் கொண்டு வெற்றிலை குதப்பல் தெறிக்க அடிக்கிற கிண்டல்கள் கடும் வெயிலில், குனிந்து நின்று களைபிடுங்கும் மற்ற பெண்களுக்கும் வலியை சிறிது மறக்க வைக்கும். காலை 7 மணிக்கு துவங்கி மாலை 3 மணி வரையில் கடும் உழைப்பிற்கு பின்னர் மண்சுவர் எழுப்பி ஓலைக்கூரை கூழமாகிப்போன வீட்டில் ஐம்பது ரூபாய் கூலியில் கிடைத்த சாப்பாடு முழு குடும்பத்திற்கும். வயல்காரர் கூப்பிடும் போது செருப்பை தூரத்தில் கழற்றி வைத்து அவன் முன்னால் நிற்கும் சுயமரியாதையற்ற 'நாய் பொழைப்பு'.

ஸ்டீபன், அறுபத்தெட்டு வயதில் எருதூர்க்கடை 'முக்கு ரோட்டோரமா' மீன் அறுத்து விற்பதை பார்க்கும் போது உழைப்பின் இலாவகம் புரிகிறது. அளவாக துண்டு போட்டு விக்கலைன்னா நட்டம் வந்தா முதலாளி என்னதான் சொந்தக்காரனா இருந்தாலும் விடமாட்டார். காலையில மீன் எடுத்து தலைசுமட்டுல கொண்டுவந்து விற்கும் ஸ்டீபன் புற்றுநோயாளி. மருத்துவம் பார்க்க வசதியில்லாமல், மகள் ஒருத்தியின் ஆதரவுடன் அவ்வப்போது 'கதிர் பிடித்தும்' பலனில்லாமல் இறந்து போனார்.

உடலுழைப்பு தொழிலாளர்கள், முதியவர்கள், விளிம்புநிலையினர் மீது நாம் மேற்கொள்ளுகிற சுரண்டலை எவ்விதத்திலும் உணராமல் இருப்பது மோசமான சமூகநோய். அரசு மற்றும் தனியார் துறையில் முறைப்படுத்தப்பட்ட வேலைகளுக்கு மட்டும் ஓய்வுபெறும் காலமும், ஓய்வுகால சமூக பாதுகாப்பு திட்டங்களும் இருக்கிறது. நடைபாதையில் பழங்கள் விற்கும் 70 வயது மூதாட்டியும், தள்ளாடும் வயதில் மரம்வெட்டும் 74 வயது முதியவரும், களையெடுக்கும் 70 வயது பெண்மணியும், உடல்நிலை பாதிக்கப்பட்ட மீன்விற்கும் 68 வயது உழைப்பாளியும் நமது சமூகத்தில் அளித்திருக்கும் பங்கை மதித்து, அவர்களை பாதுகாத்திருக்கிறோமா? ஆசிரியர்களும், வங்கி ஊழியர்களும், அரசு அதிகாரிகளும், இராணுவமும், தபால்காரர்களும், கிராம அலுவலக ஊழியரும் 58 அல்லது 60 வயதில் ஓய்வெடுக்க முடிகிறது. சுமார் 93 % உடலுழைப்பு தொழிலாளர்கள் எந்த அடிப்படை சமூகபாதுகாப்பு திட்டகளுமில்லாமல் இறுதிவரையில் உழைப்பை மட்டுமே நம்பியிருக்கிறார்கள். இவர்களுக்கு இந்தியா என்னும் அடையாளத்தின் பொருள் என்ன?

சமூக பாதுகாப்பு திட்டங்களும் (social protection), சுயமரியாதையும் (dignity) குறைந்த/இல்லாத வேலைகளில் கிராமங்கள் முதல் நகரங்கள் வரையில் பெரும்பாலும் பெண்களும், முதியவர்களுமே அதிகபடியாக இருக்கின்றனர். வியாபாரத்தில் மட்டுமல்ல, விவசாயம் உள்ளிட்ட உணவு உற்பத்தி, குடிசைத்தொழில்கள், கட்டுமான பணிகள் என்று நாம் உயிரோடு இயங்க அவர்கள் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். 'சோம்பேறிகளாக வேலையில்லாமல் இருந்தாலும் இளம்வயதினர் இப்படிப்பட்ட வேலையை செய்ய விரும்புவதில்லை' என்று விவசாய வேலைகளுக்கு செல்ல தயங்கும் இளைய வயதினரைப் பற்றி குறைகூறுகிறோம். வேலை மற்றும் வருமான உத்தரவாதமும் இல்லாத, சமூகபாதுகாப்பு திட்டங்களற்ற, கடும் உடலுழைப்பு வேலைகளுக்கு நாம் செல்ல ஏன் விரும்பவில்லை என்று ஒருமுறையாவது சிந்தித்திருக்கிறோமா?

விவசாயம், கட்டிட வேலை உள்ளிட்ட வேலைகளில் நிலவுகிற வேலை நிச்சயமற்றதன்மை, கூலி சார்ந்த உழைப்பு சுரண்டல், சமூகப்பாதுகாப்பு திட்டங்கள் இல்லாமை, சாதி அடிப்படையிலான சுயமரியாதையற்ற அடிமைத்தனம் கலந்த மிகமோசமான சுரண்டல் உடலுழைப்பு வேலைகளின் சமூக அங்கீகாரம், சுயமரியாதை, வாழ்க்கைத்தரம் போன்ற அடிப்படை அம்சங்களுக்கு வேட்டுவைக்கிற சவாலாக இருக்கிறது. நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் முன்னர் தொழிலதிபர்களை சந்தித்து முதலாளிகள் கருத்து கேட்கும் நாம், என்றாவது உடலுழைப்பு தொழிலாளர்கள் கருத்து கேட்டு திட்டங்கள் இயற்றியிருக்கிறோமா? அவர்கள் நமது சமூகத்தின் அங்கமாக இல்லையா? உடலுழைப்பு தொழிலாளர்களது பங்கேற்பற்ற நமது ஆட்சி, அதிகாரமுறைக்கு மக்களாட்சி என்று அழைப்பதன் வழியாக நம்மை நாமே கேலிசெய்கிறோம்.

உடலுழைப்பு தொழிலாளர்களை புறக்கணிப்பது உணவு உற்பத்திமுறை, கட்டுமானப் பணிகள், துணை நிறுவனங்களது உற்பத்தியில் பெரும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். உடலுழைப்பு தொழிலாளர்களுக்கு சமூகபாதுகாப்பு திட்டங்கள், வாழ்க்கைத்தரத்திற்கேற்ற வருமான உத்தரவாதம், சாதி அடிமைத்தனங்களிலிருந்து விடுதலை பெறுவதற்கான திட்டங்கள் பாரபட்சமில்லாது அமைந்தாலொழிய இம்மக்களுக்கு ஓய்வு, பாதுகாப்பு, சுயமரியாதை என்பது கனவு மட்டுமே.

7 பின்னூட்டங்கள்:

வெற்றி said...

திரு,
மனதைத் தொட்ட பதிவு. உங்கள் பதிவில் குறிப்பிட்டிருந்தவர்கள் என் ஊரில் வசித்த பலரை ஞாபகப்படுத்தினார்கள்.

70 வயது கழிஞ்சும், கிணறு வெட்டும் வேலை, கமத் தொழில் என கஸ்ரப்பட்டு உழைத்த என் ஊரவர்களை இப்போது நினைத்துப் பார்த்தால் மனது கனக்கிறது.

இதில் இன்னும் வேதனையான விடயம் என்னவென்றால் அவர்களின் உழைப்பு அன்றாடச் செலவுக்கே சரியாகிவிடும். எதிர்காலச் சேமிப்பு ஒன்றும் கிடையாது.

அவர்கள் மிகவும் முதுமையடைந்து வேலை செய்ய முடியாத நிலை வரும் போது பிச்சை எடுத்துச் சீவிப்பது போல வாழும் நிலை அவர்களுக்கு நேர்ந்து விடுகிறது.

மலைநாடான் said...

திரு!

வளருர்முக நாடுகளில் கவனம்பெறவேண்டிய முக்கியமானதொரு விடயம். ஆனால்..?

முரளிகண்ணன் said...

மனது கணத்தது

லக்கிலுக் said...

:-(

என்னதான் செய்யமுடியும்?

குழந்தைத் தொழிலாளருக்கு இருப்பது போல முறைசாரா தொழிலாளர்களுக்கு வாகாக ஏதாவது சட்டம், கிட்டம் இருக்கிறதா?

thiru said...

வெற்றி,

//இதில் இன்னும் வேதனையான விடயம் என்னவென்றால் அவர்களின் உழைப்பு அன்றாடச் செலவுக்கே சரியாகிவிடும். எதிர்காலச் சேமிப்பு ஒன்றும் கிடையாது.

அவர்கள் மிகவும் முதுமையடைந்து வேலை செய்ய முடியாத நிலை வரும் போது பிச்சை எடுத்துச் சீவிப்பது போல வாழும் நிலை அவர்களுக்கு நேர்ந்து விடுகிறது.//

உண்மை வெற்றி! சமூகப்பாதுகாப்பு திட்டங்கள் அவர்களது உழைப்பிற்கு இல்லாததே இதற்கான அடிப்படை காரணம். உழைக்கும் காலங்களில் ஓய்வூதீயம், காப்பீடு, சுகாதாரம், பேறுகால திட்டங்கள், குடும்பநல திட்டங்கள் அரசு மற்றும் தனியார் துறை நிரந்தர வேலையில் இருப்பது போன்று கிடைத்தால் இந்த நிலமையை தடுக்க முடியும். அரசின் பங்கு இதில் மிக முக்கியமானது. தேவையற்ற விசயங்களிலும், முக்கியமற்ற பிரச்சனைகளுக்கும் செலவிடும் மனிதவளம், பொருளாதார வளத்தை இதற்காக பயன்படுத்தலாம்.

தொலைநோக்கற்ற/சுயநல பார்வைகள் இவற்றை செய்ய அனுமதிக்குமா?

thiru said...

மலைநாடான்,

உண்மை தான் வளரும் நாடுகள் கவனம் செலுத்தவேண்டிய மிக முக்கியமான விசயம் உடலுழைப்பாளர்கள் சம்பந்தமான பாதுகாப்பு திட்டங்கள். வளர்ந்த நாடுகளின் காலடியிலும், உலகவங்கி, பன்னாட்டு வர்த்தக நிறுவனத்தின் வாசலிலும் விழுந்து கிடக்கும் நாடுகள் தங்களுக்குள் வலுவான அணியை சேர்த்து மக்கள்மயமாகும் மாற்று பொருளாதாரத்திற்காக உருவாக்க தேவை எழுகிறது. ஆனால் சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளும் அதற்கான பாதையில் செல்வதாக இல்லை. பொருளாதார வளர்ச்சி குறியீடுகள் மேற்குலக நாடுகளின் பாதையிலான வளர்ச்சியை மையமாக கொண்டு செயல்படுத்தப்படுகிறது. போகவேண்டிய தூரம் இன்னும் அதிகமிருக்கிறது...

முரளிகண்ணன்,

உங்களைப் போன்ற உணர்வு தான் எனக்கும்.

லக்கிலுக்,

கடந்த வருடம் அமைப்புசார தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு திட்டங்கள் பற்றிய சட்ட முன்வரைவு ஒன்று நாடாளுமன்றத்தில் விவாதத்திற்காக வைக்கப்பட்டது. 1970களில் இடதுசாரி தொழிற்சங்கங்களால் அமைப்புசாரா தொழிலாளர்கள் பற்றிய பிரச்ச்னை எழுப்பப்பட்டும் 1990களில் தான் அவர்களுக்கான நலவாரியங்கள் உருவாக்கப்பட்டன. தொழில்கள் அடிப்படையில் இயங்கும் நலவாரியங்கள் அனைத்து மாநிலங்களிலும் இன்னும் உருவாக்கப்படவில்லை. கேரளா, மேற்கு வங்காளம், தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் மட்டும் நலவாரியங்கள் உருவாக்கியுள்ளன. நலவாரியங்கள் இயங்கும் முறை, திட்டங்கள் பற்றி விரிவாக எழுதப்படவேண்டிய விசயம். நலவாரியத்தின் திட்டங்கள் உடலுழைப்பு தொழிலாளர்களது அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக இருக்கின்றனவா என்பது கேள்வி. வெறும் சட்டங்கள் இயற்றுவதும், யானைப்பசிக்கு சோளப்பொரி திட்டங்களை அறிவிப்பதும் நிரந்தர தீர்வுக்கு உதவாத செயல்.

இலவச திட்டங்களை சமூக பாதுகாப்பு திட்டங்களாக மாற்றம் (பெயர் மாற்றம் மட்டுமல்ல) செய்யும் தேவை எழுகிறது. நிலத்திற்கும், உழைப்பிற்குமான தொடர்பை புரிந்து விவசாய கொள்கையில், நில உரிமை கொள்கையில் மாற்றங்கள் அவசியம். அரசின் தொழிலாளர் நலத்துறை (ஆழ்ந்த நித்திரையிலி்ருந்து விழித்து) தீவிர கண்காணிப்பு பணிகளில், தொழிலாளர் நலச்சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.

இவற்றை நடைமுறைப்படுத்த அரசு நினைத்தால் முடியும். அதற்கு அரசின் இன்றைய பொருளாதார கொள்கைகளில் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு நமது மக்களுக்காக மாற்றம் பெறவேண்டும். அதற்கு அரசியல் பலம் மட்டுமல்ல, தொலைநோக்கும் தேவை (அரசு என்று குறிப்பிட்டுள்ளது மத்திய, மாநில அரசு இரண்டையும் தான்).

எப்படி இலவச தொலைக்காட்சியால் இந்த மாற்றங்கள் வராதோ அதேப்போல, ரேசன் அரிசியை இலவசமாக வீட்டிற்கு சேர்ப்பதால் இந்த பிரச்சனையை தீர்க்க இயலாது.

thiru said...

அமைப்புசார தொழிலாளர்களுக்காக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வரைவு சட்டம் இங்கே: http://labour.nic.in/ss/UnorganisedSectorBillinRS.pdf

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com