Thursday, October 30, 2008

ஈழப்பிரச்சனையில் தமிழக/இந்திய முரண்கள்-பாகம்3

தமிழராக மட்டும் பிறக்க கூடாது… எங்கட வலியும், துயரமும் அவ்வளவு பெரியது…” மட்டகளப்பில் வாழும் தமிழ் சகோதரி ஒருவர்.


டந்த 25 வருடங்களாக இலங்கை பேரினவாத அரசுகளுக்கு நெருக்கடிகள் வரும்போதெல்லாம் இந்திய ஆளும், அதிகார வர்க்கமும், மேட்டுக்குடி ஊடகங்களும் ஆதரவாக களத்தில் இறங்கிவிடுகின்றன. ஈழத்தமிழர்களை கொன்றொழிக்கிற இலங்கை அரசின் யுத்தத்தை தடுத்து நிறுத்த தமிழக மக்கள் விடுக்கிற கோரிக்கைக்கு ‘இலங்கையின் உள்விவகாரத்தில் தலையிட முடியாது’ என்று சால்சாப்பு கதைகளை சொல்லும் ஜெயலலிதா, ஞானசேகரன், புதுடில்லியின் அதிகார வர்க்கம் எதற்காக ஆயுதங்களையும், பயிற்சிகளையும், பெரும் பண உதவிகளையும், வல்லுநர்களையும் இலங்கை அரசுக்கு வழங்கியது என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டும். யுத்தத்தை நிறுத்த தலையிட முடியாது என்று நழுவுகிற இந்தியா எந்த அடிப்படையில் இலங்கை அரசியல் சட்டத்தின் 13வது திருத்தத்தின் படியான தீர்வை இனப்பிரச்சனைக்கு முன்வைக்கிறது?


பாசில் ராஜபக்சேவின் புதுடில்லி வருகைக்கு பின்னர் கூட்டாக இந்தியா-இலங்கை வெளியிட்ட அறிக்கை; //Both sides discussed the need to move towards a peacefully negotiated political settlement in the island including in the North. Both sides agreed that terrorism should be countered with resolve. The Indian side called for implementation of the 13th Amendment and greater devolution of powers to the provinces.//


இந்தியா இனப்பிரச்சனைக்கு தீர்வாக முன்வைக்கிற 13வது திருத்தம் தமிழர்களுக்கு இந்தியாவின் மாநிலங்களுக்கு இருக்கும் உரிமையை கூட வழங்கவில்லை. மாகாண கவுன்சில்களை உருவாக்கவும், அந்த மாகாண கவின்சில்களுக்கு சில சிவில் உரிமைகளை வழங்கவும் 13வது திருத்தம் வழி ஏற்படுத்துகிறது. ஆனால் 13 சட்ட திருத்தம் ஈழத்தமிழர்களது அரசியல் உரிமைகளையும், விருப்பங்களையும் முன்னெப்போதையும் விட சிங்கள ஆதிக்கம் நிறைந்த கொழும்புவின் மத்திய அரசின் அதிகாரத்திற்குள் முடக்குகிறது. மாகாண கவின்சில்களில் முதலமைச்சர்கள் பதிவியும், கவர்னர் பதவியும் உருவாக்கப்படும். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் முதலமைச்சரை விடவும் இலங்கை அரச அதிபரால் நியமிக்கப்படும் கவர்னருக்கு செயல்படும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எக்காலத்திலும் தமிழர் ஒருவரால் இலங்கையின் அதிபராவதை நினைத்தும் பார்க்க இயலாத அரசியல் சட்ட பொறிமுறையில், நினைத்த நேரம் சிங்கள அதிபரால் தமிழர் பகுதிகளின் முதலமைச்சர்களையும், செயல்திட்டங்களையும் முடக்க இயலும். 13வது சட்டத்திருத்ததால் தமிழர்களுக்கு சுயமாக நிதியை கையாண்டு திட்டங்களை உருவாக்கவோ, மாகாணத்தின் நிலம் உள்ளிட்ட வளங்களில் அதிகாரம் செலுத்தவோ, காவல்த்துறையையும் சட்டம் ஒழுங்கு, உயர்கல்வி போன்றவற்றை நிர்வகிக்கவோ அதிகாரமில்லை. இலங்கை அரசு நினைத்தால் மாகாண கவின்சில்கள் சம்பந்தமான சட்டத்தை எளிதாக திருத்தங்களை உருவாக்க அனுமதி வழங்குகிறது. புதுடில்லியின் வழிகாட்டுதலில் தான் இந்த 13வது சட்டத்திருத்தத்தை இலங்கை அரசு உருவக்கியது. தமிழகத்தின் பேரூராட்சி தலைவருக்கு உள்ள அதிகாரத்தையும் விடவும் குறைந்த அளவு அதிகாரத்தை கொண்ட மாகாண கவுன்சில் கொண்ட 13வது சட்டத்திருத்ததை காட்டி ஈழத்தமிழர்களின் அரசியல் சுயநிர்ணய உரிமைப் போராட்டமான தமிழீழ கனவை இந்தியா தொடர்ந்து நசுக்குகிறது.


13வது சட்டத்திருத்ததின் வழியை பின்பற்றி ராஜபக்சே உருவாக்கிய கிழக்கு மாகாண அரசால் தற்போது மனித உரிமையும், சமாதானமும், மக்களாட்சியும் மலர்ந்து பாலாறும், தேனாறும் பருகுகிறார்கள் கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் மக்கள்? கருணா, பிள்ளையான், டக்ளஸ் தேவானந்தா ஆகியோர்களின் ஆயுதம் தாங்கிய படையினர் வீடு வீடாக சென்று மக்களை இழுத்துச் செல்வதும், இளையோரையும், சிறுவர்களையும் ஆயுதகுழுக்களில் சேர்ப்பதையும், ஆட்கடத்தல், படுகொலைகளை தொடர்வதையும் அவர்களுக்கு வழங்கியுள்ள எம்.பி மற்றும் முதலமைச்சர் பதவிகளில் மறைக்க இயலாது. இலங்கை அரசு படைகளது கெடுபிடிகளும், அச்சுறுத்தல்களும், கொடுமைகளோடு நிறுத்தாமல் ஆயுதக்குழுக்களை ஆதரித்து, உருவாக்கி தமிழர்களை தமிழர்களை வைத்தே கொலை செய்கிறது. கிழக்கு பகுதியின் இயற்கை வளங்களை கொள்ளையிடும் நோக்குடன் இந்தியா ஆதரிக்கும் தீர்வு சாதாரண பொதுமக்களான தமிழ் மக்கள் எவரும் மட்டக்களப்பில் பாதுகாப்பில்லாத நிலையை இன்று உருவாகியிருக்கிறது. யுத்தமும், பாதுகாப்பற்ற நிலையும் நீடிக்கும் போதே கிழக்கு பகுதியில் வளங்களை சுரண்ட மின்நிலையங்கள், எண்ணை அகழ்வு என்று இறங்கிவிட்டது இந்தியா.


ஆயுத போராட்டத்தை பயங்கரவாதம் என்று வரையறுக்கும் போது ஆயுதக்குழுக்களின் தலைவர்களான கருணா, பிள்ளையான், டக்ளஸ் தேவானந்தா எப்படி காந்தியின் மறுபிறப்பானார்கள் என்று யார் கேட்கப்போகிறார்கள்? இந்தியா சமாதானவாதிகளாக சித்தரிக்கும் இவர்களைப் பற்றி மனித உரிமை அமைப்புகள் குற்றப்பட்டியலே வைத்திருக்கின்றன. இலங்கை அரசு கள்ளத்தனமாக பிரித்தானியாவுக்கு அனுப்பி சிறையிலடைக்கப்பட்ட போது கருணாவை சர்வதேச நீதிமன்றத்தில் போர்க் குற்றங்களுக்காக விசாரிக்கவேண்டுமென மனித உரிமை அமைப்பு முறையிட்டது. கடந்த ஜூன் மாதம் ஜெனிவாவில் நடந்த விவாத கூட்டமொன்றில் இலங்கை தூதுவரிடம் கிழக்கு மாகாணத்தில் ஆயுதகுழுக்கள் இலங்கை படையினரின் ஆதரவுடன் சிறார்களை ஆயுததாரிகளாக மாற்றுவது பற்றிய குற்றச்சாட்டும், கடத்தப்பட்ட சிறார்கள் எண்ணிக்கையும் மனித உரிமை அமைப்பு ஒன்றினால் முன்வைக்கப்பட்டன. இலங்கை தூதுவரால் குற்றச்சாட்டை மறுக்க முடியாமல் பாதியிலேயே கூட்டத்தை விட்டு வெளியேறினார்.


தமிழ்தேசிய கூட்டணியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருவர் கூட ஆயுதம் தாங்கியவர்களில்லை. அவர்களை தொடர்ந்து இலங்கை அரசு படுகொலை செய்த போதெல்லாம் இந்தியா மௌனமாகவே இருந்தது. இந்த படுகொலைகள் நடந்த போதும் இந்தியாவின் ஆதரவு சர்வதேச மனித உரிமை கூட்டங்களில் தொடர்ந்தன.


ஈழத்தமிழர்களது விருப்பத்துக்கு எதிரான 13வது சட்டத்திருத்தத்தை உடும்பு பிடியாக இந்தியா பிடித்திருக்க காரணமென்ன?


ஈழத்தமிழர்களை மறைவான யுத்ததில் கொல்கிறது இந்தியா!

நேரடியாக யுத்தத்தில் கொல்கிறது இலங்கை!

நாளை பார்க்கலாம்…

உங்கள் கருத்து என்ன?

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com