ஈழப்பிரச்சனையில் தமிழக/இந்திய முரண்கள்-பாகம்2
"சிங்கள மக்களின் ஆட்சியில் இருந்து நாம் விடுபடாத நிலையில் தமிழினம் பூண்டோடு அழிந்துவிடும். எனவே, தமிழீழம் தான் எமது இறுதித் தீர்வு"
1976 ஆம் ஆண்டு நவம்பர் 19 இலங்கை பாராளுமன்றத்தில் நிகழ்த்திய இறுதி உரையில் தந்தை.செல்வநாயகம்.
“This convention resolves that restoration and reconstitution of the Free, Sovereign, Secular Socialist State of TAMIL EELAM based on the right of self determination inherent to every nation has become inevitable in order to safeguard the very existence of the Tamil Nation in this Country.”
Political Resolution unanimously adopted at the First National Convention of the Tamil United Liberation Front held at Pannakam (Vaddukoddai Constituency) on 14 May 1976 presided over by Mr. S.J.V. Chelvanayakam, Q.C, M.P.
ஈழத்தமிழர்களுக்காக மனிதசங்கிலி நடைபெற்ற நாளிற்கு முன்னர் சென்னையிலுள்ள இலங்கை தூதரகத்தையும், சுப்பிரமணியசாமியின் மதுரை அலுவலகத்தையும் கோபமடைந்த வழக்கறிஞர்களும், மாணவர்களும் தாக்கினர். ஈழத்தமிழர்களது போராட்டத்துக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாளர்கள் மீது வெளிப்படையான கோபமுமாக தமிழக மக்களின் எழுச்சி உருவான சூழலில், ஜெயலலிதா தனது மோசமான அரசியலை அறிக்கைகள் வழி தொடர்ந்தார். உடன்பிறவா சகோதரி ஜெயலலிதாவின் அறிக்கை ‘உணர்ச்சிவசப்பட்டு’ உரையாற்றிய வைகோவை கைது செய்ய வைத்தது. ஜெயலலிதாவை வாய்மூட வைப்பதாக நினைத்து வைகோவை சிறைக்கு அனுப்பும் அரசியல் நடவடிக்கையை கலைஞர் செய்தார். ஈழத்தமிழர் பிரச்சனையில் ஜெயலலிதாவின் அறிக்கைகளுக்கு கலைஞர் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க என்ன அவசியம்? ஜெயலலிதாவின் அறிக்கைகளுக்கு மக்களிடம் குப்பை காகிதங்களின் மதிப்புமில்லை என்பதை தமிழக முதல்வர் உணரவில்லையா?
தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் ஞானசேகரன் விடுத்த அறிக்கைகளும், பேட்டிகளும், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் நடத்திய கூட்டமும் சேர்ந்து கலைஞரின் நாற்காலி கால்களை வெட்ட துவங்கியிருந்தது. புதுடில்லிக்கு அரசியல் கெடு வைத்த கலைஞருக்கு தமிழக எம்.எல்.ஏக்கள் மூலம் காங்கிரஸ் கட்சி அரசியல் கேடு வைக்க துவங்கியது. காங்கிரசையும், ஜெயலலிதாவையும் எதிர்கொள்ள மனிதச்சங்கிலி முடிந்து மழைவெள்ளம் காயும் முன்னர் சீமானையும், அமீரையும் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தது கலைஞரது அரசு. மனிதசங்கிலியில் இணைந்த ஒவ்வொருவரையும் இன்னும் ஏன் தமிழக அரசு கைது செய்யவில்லை என்ற கேள்வி ஜெயலலிதா அல்லது காங்கிரசிடமிருந்து வருமானால், அதையும் செய்து முடிக்கும் கடமையுணர்வு கலைஞருக்கு (!) வருமென நம்பலாம். இந்த கைது படலங்கள் துவங்கியதிலிருந்து கலைஞரது அனைத்துக் கட்சி கூட்ட முடிவுகள் காற்றில் கரைந்து போனது. புதுடில்லி மற்றும் தமிழக அரசின் நிலையான தன்மையை காரணமாக வைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகலில் நழுவ துவங்கியது மட்டுமல்ல; சிங்கள பேரினவாத அரசால் யுத்தத்தில் கொல்லப்படும் ஈழத்தமிழர்களையும், சிங்கள பேரினவாத அரசின் கடற்படையால் கொல்லப்படும் தமிழக மீனவர்களையும் பாதுகாக்க எந்த உறுதியான அழுத்தத்தையும் தொடர்வதாக தகவலில்லை. உயிருக்கான பாதுகாப்பு உத்தரவாதத்தை உருவாக்க துவங்கிய தமிழகத்தின் எழுச்சியை பசிக்கொடுமைக்கு உணவு சேகரிக்கும் நிவாரண பணியாக மாற்றியது கலைஞரின் அரசியல். புதுடில்லிக்கு எச்சரிக்கை விடுத்த தமிழர்களின் எழுச்சியை கலைஞரின் கைது நடவடிக்கை மிரட்டுகிறது. ஈழத்தமிழர்கள் விசயத்தில் கலைஞரை இழுக்கும் கயிற்றை ஜெயலலிதாவின் பொய்யறிக்கைகளும், காங்கிரசும், உளவுத்துறையும் பெற்றிருப்பது தமிழக அரசியலின் வேதனை நிகழ்வுகளில் ஒன்று. ஈழப்பிரச்சனையில் கலைஞர் ஏன் ஜெயலலிதா மற்றும் புதுடில்லி முன்னால் எழுந்து நிற்க தயங்குகிறார்? அவருக்கே வெளிச்சம்!
ராஜபக்சேயின் சகோதரர் பாசில் ராஜபக்சே புதுடில்லிக்கு பறந்து பிரணாப் முகர்ஜியை சந்தித்த பின்னர் கலைஞரை சென்னையில் பிரணாப் முகர்ஜி சந்தித்த போது ஈழத்தமிழர் பிரச்சனையில் கடந்த 5 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக ஒட்டுமொத்த அரசியல் சரணடைந்திருக்கிறார் கலைஞர். ‘மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க மாட்டோம்’ என்ற கலைஞரது வார்த்தைகள் மழைவெள்ளத்தில் மனிதசங்கிலியாக இணைந்த பல இலட்சம் மக்களையும் சேர்த்து புதுடில்லி பாதுசாவின் கால்களில் அடமானம் வைத்தது. கலைஞர் இப்படி ஒரு உறுதியை கொடுக்க புதுடில்லி ஈழத்தமிழர் பிரச்சனையில் கொடுத்த உத்தரவாதம் என்ன? ஏற்கனவே இலங்கை இனப்பிரச்சனையில் ‘மத்திய அரசின் வெளியுறவு கொள்கையை ஏற்பதாக’ கலைஞர் அறிவித்ததன் விளைவு தான் இந்தியா மறைமுகமாக இலங்கையில் யுத்தம் நடத்த காரணமானது. தற்போது, தமிழர்களை துல்லியமாக அழித்தொழிக்க வழங்கி வருகிற இரகசிய பயிற்சிகளையும், தகவல்களையும், உதவிகளையும், அனுப்பியிருக்கும் இந்திய இராணுவ வல்லுநர்களையும், ஆயுதங்களையும் இலங்கையிடமிருந்து திரும்ப பெறுவதாக புதுடில்லி அறிவித்ததா? வட்டியில்லா கடனாகவும், குறைந்த வட்டிக்கும் தமிழ் மக்களது வரிப்பணத்தை இலங்கைக்கு வழங்கி தமிழர்களை கொல்ல ஆயுதம் வாங்குவதை ஊக்குவிப்பதை நிறுத்துவதாக மன்மோகன்சிங் அரசும், பா.சிதம்பரமும் அறிவித்தனரா? தமிழ்மக்கள் குடியிருப்புகள், பாடசாலைகள், காடுகழனிகளில் தாக்குதலை நிறுத்தி மக்கள் மீதான இராணுவ, துணைப்படைகளின் நெருக்குதலை பின்வாங்குவதாக இலங்கை அறிவித்ததா? இந்தியா இலங்கை கூட்டறிக்கையில் இதற்கான எந்த உறுதியும் கண்டனமும் இல்லை.
//India conveyed its concern at the humanitarian situation in the northern part of Sri Lanka, especially of the civilians and internally displaced persons caught in the hostilities and emphasised the need for unhindered essential relief supplies. Mr. Rajapaksa briefed the Indian authorities of the efforts by the Sri Lanka Government to afford relief and ensure the welfare of the civilian population in the North. He assured that the safety and wellbeing of the Tamil community in Sri Lanka is being taken care of.
As a gesture of goodwill, India has decided to send around 800 tonnes of relief material to Sri Lanka for the affected civilians in the North. The Government of Sri Lanka will facilitate the delivery. Both sides agreed to consult and cooperate with each other in addressing these humanitarian issues.//
இலங்கை அரசு ஈழத்தமிழ் மக்கள் மீது தொடுக்கிற தாக்குதலை நிறுத்த அறிக்கையில் எந்த உறுதியும் இல்லை. மேம்போக்கான யுத்ததால் பாதிக்கப்படும் மக்கள் மீது அக்கறை செலுத்துவதாக தெரிவித்து விட்டு, ‘தடையில்லாமல் நிவாரண பொருட்கள் கிடைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது’ இந்தியா. நமது வீடுகள், பள்ளிக்கூடங்கள், அலுவலகங்கள், கடைகள், கோயில்கள் மீது வான், தரை வழி குண்டு தாக்குதல்கள் தொடர்வதை தடுக்க வேண்டாம். ஆனால் பிரியாணி பொட்டலம் தடையில்லாமல் கிடைக்க வழிசெய்தால் போதும் என்றால் தமிழக மக்களும், புதுடில்லி மக்களும் ஏற்றுக்கொள்வார்களா? அதுவும் அந்த நிவாரண பொருட்களை தாக்குதலை தொடுத்து வருகிற சிங்கள பேரினவாத இலங்கை அரசு வழியாகவே வழங்க ஒப்புக்கொண்டிருக்கின்றனர் புதுடில்லியும், கலைஞரும். சர்வதேச செஞ்சிலுவை சங்கம், ஐ.நா அமைப்புகள் போன்ற பாரபட்சமற்ற அமைப்புகளை கூட குறிப்பிடவில்லை. இந்தியா, தமிழர்களது பணத்தில் நிவாரண பொருட்கள் வழங்கி தனது ஆதரவு ஆயுதகும்பல்களை வளர்க்க இந்தியாவின் ஆதரவு எப்போதும் போல தொடர்கிறது. கலைஞரும் ஆமாம் சாமி போட்டுவிட்டார். இனி என்ன ஈழத்தமிழர்களுக்கு கொத்துக்கறியும், கோழி பிரியாணியும் தான்!
இந்தியாவில் இருப்பிடங்கள், வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள், கல்விக்கூடங்கள் அனைத்திலும் விமான தாக்குதலில் சிதைத்து, குழந்தைகள் முதல் முதியவர்கள் வரையில் கொன்றொழிக்கும் அதே வேளை 800 டன் அல்ல 80,000 டன் சப்பாத்தியும், பருப்பு குழம்பும், சோறும் வழங்கினால் புதுடில்லி மற்றும் சென்னையில் உள்ள அரசுகள் ஏற்றுக்கொள்ளுமா? இந்த முரண்பாட்டிற்கு பெயர் நல்லெண்ண நடவடிக்கையாம். யார் மீது நல்லெண்ணம்? சிங்கள பேரினவாதம் மீதா? இந்தியா-இலங்கை கூட்டறிக்கையில் என்ன அரசியல் தீர்வு சொல்லப்பட்டுள்ளது? ஈழத்தமிழர்களுக்கு இந்த அரசியல் தீர்வு எப்படிப்பட்டது?
...நாளை பார்ப்போம்…
உங்கள் கருத்து என்ன?
Post a Comment
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com