வி.பி.சிங்: சில குறிப்புகள்!
மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்காக வீதியில் போராடிய இந்திய முன்னாள் தலைமை அமைச்சர் திரு.வி.பி.சிங் அவர்களது மறைவு வருத்தமானது. மிகவும் கண்ணியமும், கடமையுணர்வும் மிக்க தலைவர் அவர்.
விஸ்வநநாத் பிரதாப் சிங் என்ற இயற்பெயருடன் ஜூன் 25, 1931ல் அலகபாத்தில் மன்னர் குடும்பத்தில் பிறந்த இவர் வழக்கறிஞர். அரசியல் தலைவர். ஓவியர். கவிஞர். மனித உரிமை போராளி. 1969ல் உ.பி மாநிலத்தில் சட்டசபை உறுப்பினராக முதல் முறையாக தேர்வானார். ஐந்தாவது நாடாளுமன்றத்திற்காக 1971ல் முதல் முறை நாடாளுமன்றத்திற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். வர்த்தகத்துறை அமைச்சர். உ.பி.மாநில முதலமைச்சர். இந்திய நிதியமைச்சர் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ஆகிய பல பொறுப்புகளில் செயல்பட்டுள்ளார். 1984 தேர்தலில் ராஜீவ் வெற்றியின் பின்னர் நிதியமைச்சரானார். அப்போது திருபாய் அம்பானி மற்றும் அமிதாப் பச்சனின் வரி மோசடிக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுத்தார். அதனால் ராஜீவி அவரை நிதியமைச்சர் பதவியிலிருந்து விலக்கினார். அவரது செல்வாக்கு காரணமாக பாதுகாப்பு துறை அமைச்சராக்கப்பட்டார். ராஜீவ் காந்தியின் ஆட்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த வி.பி.சிங் போபர்ஸ் பீரங்கி பேர ஊழலை எதிர்த்து காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறினார்.
தொடர்ந்து நடந்த தேர்தலில் அவரது ஜனதா தளம் கட்சி போட்டியிட்ட தேசிய முன்னணி வெற்றிபெற்றது. டிசம்பர் 2, 1989 முதல் 10 நவம்பர் 1990 வரையில் இந்தியாவின் தலைமை அமைச்சராக இருந்தார். ராஜீவ் காந்தியின் தவறான அணுகுமுறையும், இலங்கை கொள்கையும் காரணமாக சுமார் 2000 கோடி ரூபாய்களை செலவிட்டு இந்திய இராணுவம் ஈழத்தமிழர்கள் சுமார் 10,000 பேரை கொன்றுகுவித்தது. பலநூறு தமிழ்ப்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தது. தமிழர்களது உடமைகளை கொள்ளையிட்டன. அமைதிப்படை என்ற பெயரில் ஆட்கொல்லி படைகளாக மாறியது இந்திய படைகள். திரும்பிச்செல்ல பிரேமதாசா கடும் அழுத்தம் கொடுக்கவும் இந்திய படைகளை வி.பி.சிங் ஆட்சியில் திருப்பி அழைத்தார்.
அவரது ஆட்சியில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பில் இடப்பங்கீட்டை வழங்க மண்டல் விசாரணைக் குழு அறிக்கையை அமல்படுத்தி அதுவரையில் எல்லா அரசுகளும் புறக்கணித்த மக்களுக்கு சமூகநீதியை வழங்கினார். மண்டல் விசாரணை அறிக்கை அமலாக்கத்திற்கு எதிராக பாரதீய ஜனதா கட்சி பாபர் மசூதியை இடிக்க மதவெறி பிரச்சாரத்தை அத்வானி தலைமையில் ரதயாத்திரை துவங்கியது. அத்வானியை கைது செய்ய வி.பி.சிங் நடவடிக்கை எடுத்தார். அதனால் பாரதீய ஜனதா கட்சி அவரது அரசுக்கு வழங்கிய ஆதரவை விலக்கியது. மதவெறி அரசியலுக்கு எப்போதுமே எதிராக இருந்த அவர் பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் மிக உறுதியாக செயல்பட்டு மசூதியை பாதுகாத்தார். மதச்சார்பின்மையை காப்பாற்ற போராடிய அவரது அரசை கவிழ்க்க நடந்த அனைத்து அரசியல் குழப்பங்களிலும், சதிகளிலும் பாரதீய ஜனதா கட்சியும், காங்கிரசும் இறங்கின. ஆனாலும் சமரசமில்லாமல் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினார் வி.பி.சிங். 142-346 என்ற வாக்குகளில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியுற்று அவரது ஆட்சி முடிவுக்கு வந்தது. ஆனாலும், மதச்சார்பின்மை மற்றும் இடப்பங்கீடு அமலாக்கம் வழியாக சமூக நீதிக்கும், நாட்டின் எதிர்காலத்திற்கும் அவர் ஆற்றிய பணியின் பலன்கள் பல கோடி மக்களுக்கு மிக்க பலனுள்ளவை. காஸ்மீர் பிரச்சனி அவரது ஆட்சியின் போதும் வலுவாக இருந்தது. பொற்கோயிலில் இந்திரா காந்தி எடுத்த ராணுவ நடவடிக்கைக்கு நேரடியாக மன்னிப்பு கேட்டார் வி.பி.சிங். பஞ்சாபில் அமைதியை உருவாக்க அவரது ஆட்சி பெரும் பங்காற்றியது.
ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடர்ந்து, இந்திய அரசியலில் குழப்பம் நிறைந்த சிறுபான்மை ஆட்சியை திரு.சந்திரசேகர் அவர்களை தலைமை அமைச்சராக்கி ராஜீவ் தலைமையிலான காங்கிரஸ் துவக்கி வைத்தது. மோசமான பொருளாதார கொள்கையும், அரசியல் பித்தலாட்டங்களும் நிறைந்த இந்த ஆட்சியின் முடிவில் தேர்தல் வந்தது. காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சி அல்லாத முற்போக்கு கட்சிகளுக்கு வெற்றிவாய்ப்புகள் அதிகமாக இருந்த நிலையில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். மரண இரக்கத்தில் காங்கிரஸ் கூட்டணி தேர்தலில் வென்றது. அந்த தேர்தலில் பல தலைவர்கள் தோல்வியுற்றனர் ஆனாலும் வி.பி.சிங் வென்று நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார். அதன் பின்னர் தேர்தல் அரசியலில் ஒதுங்கியிருந்தார். ஆனாலும் 1996ல் நாடாளுமன்ற தேர்தல் வெற்றியின் பின்னர் அவரை தலைமை அமைச்சராக்கும் முயற்சி நடந்தன. அவற்றை ஏற்க மறுத்து ஆட்சிக்கான ஆலோசனைகளை வழங்கினார். சிறுநீரக கோழாறு, இரத்தப்புற்று நோய் காரணமாக அவர்து உடல்நலன் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. அந்த சூழ்நிலையிலும் புதுடில்லியில் மக்கள் குடியிருப்புகள் அகற்றம், உணவு வினியோக அட்டைகள், பன்னாட்டு நிறுவனங்கள் மக்களது நிலங்களை அபகரிப்பது உள்ளிட்ட பல பிரச்சனைகளில் மக்களோடு நின்று வீதியில் போராடினார். குறிப்பாக அனில் அம்பானியின் நிறுவனம் நிலம் கைப்பற்றுவதற்கு போதிய நிவாரணம் கேட்டு கிளர்ச்சி செய்த விவசாயிகளோடு போராடியதால் உத்தரப்பிரதேசத்தில் 2007ல் காசியாபாத்தில் அரசு கைது செய்தது.
மன்னர் குடும்பத்தில் பிறந்தும் இந்திய மக்களின் மாபெரும் தலைவரான வி.பி.சிங் இன்று மறைந்தார். அவரது இழப்பு குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் மட்டுமல்ல. நாட்டிற்கும் மக்களுக்கும் மிகப்பெரிய இழப்பு!