Wednesday, February 11, 2009

ஈழம்: யாரது குரல் சிபிஎம்?

தென்னிலங்கையில் வசிக்கும் எனது சிங்கள தோழியிடம், ‘இனப்பிரச்சனையில் உனது கருத்து என்ன?’ என்று கேட்டேன். பின்னலாடை நிறுவனங்களின் சுரண்டலுக்கு எதிராக போராடிய சிறிது ‘முற்போக்கு’ பார்வை கொண்டவள் அந்த தோழி.

‘எங்க நாடு சின்ன நாடு. இதை எப்படி துண்டாடுவது?’ என்றார்.

‘இந்தியா மாதிரி பெரிய நாடாக இருந்தால், தனிநாடு கோரிக்கையை ஆதரிப்பீர்களா?’

யோசித்தபடியே, ‘ம்ம்…என்ன சொல்றதுன்னு தெரியல்லை.’ என்றார்.

பேரினவாத கருத்துக்கள் பேசும் ஊடகங்கள், அரசியல்வாதிகள், அமைப்புகள், குடும்பம் மற்றும் நண்பர்களிடையே வாழும் எவருக்கும் சுயமாக சிந்திக்க வாய்ப்பு கிடைப்பது அரிது தான். ஒருவகையில் இப்படிப்பட்ட சூழலில் வாழ பழகிப்போன பேரினவாத/மேலாதிக்க எண்ணமுடையவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள். சிபிஎம் கட்சியின் தோழர். வரதராஜனும் இந்த பரிதாபமான சூழலில் இருக்கிறாரா என்னும் ஐயம் எழுகிறது.

ஈரோட்டில் சிபிஎம் கூட்டமொன்றில் கலந்துகொண்ட தோழர்.வரதராஜன் "30 லட்சம் தமிழர்களைக் கொண்ட இலங்கையில் தனிநாடு சாத்தியமாகாது." என்று பேசியிருக்கிறார். இதற்கு முன்னர் திருவாரூர் அருகே ஊடகங்களிடமும் அபத்தமான இந்த கருத்தை தெரிவித்திருந்தார். தேசிய இனங்களின் விடுதலை மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் மட்டுமே தீர்மானிப்பவையல்ல என்பதை முதலில் சிபிஎம் புரிந்துகொள்ள வேண்டும். ‘பெருங்கடவுள்கள்’, ‘சிறுதெய்வங்கள்’ என்பது போல ‘பெருந்தேசியம்’, ‘சிறுதேசியம்’ என்று சிபிஎம் வகை பிரித்தாலும் ஆச்சரியமில்லை. அசாம் மாநிலத்திற்குள் வாழும் மக்கள் மட்டும் 2001 மக்கட்தொகையில் 2.66 கோடி பேர். அசாம் தேசிய இனப் போராட்டம், காஷ்மீரிகளின் போராட்டம் ஆகியவற்றில் சிபிஎம் நிலைபாடு என்ன? தமிழகத்தில் சுமார் ஆறரைக் கோடி தமிழர்கள் வாழுகிறார்கள். மக்கள் எண்ணிக்கை அடிப்படையில் தமிழகத்தில் சிபிஎம் கருத்து சொல்லுமா? செர்பிய குடியரசிலிருந்து தனிநாடாக பிரிந்த கொசோவோ மக்கட்தொகை 20 முதல் 22 லட்சம் மட்டும். 1965ல் பிரிட்டன் காலனியாதிக்கத்திலிருந்து சுதந்திர நாடாக மாறிய மாலத்தீவு 298 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடையது. மாலத்தீவு மக்கட்தொகை 2006 கணக்குப்படி 2,98,842 பேர். உலகில் மிகச்சிறிய குடியரசான நயுரு தீவு (Nauru) 13,770 மக்களையும், 21 சதுரகிலோமீட்டர் பரப்பளவை மட்டுமே கொண்டது. உலகில் இரண்டாவது சிறிய நாடான மொனாகோ 1.95 சதுர கிலோமீட்டர்களை மட்டுமே கொண்டது. அதன் மக்கட்தொகை 32,796 பேர்.

இலங்கை தீவின் வடக்கு, கிழக்கு பகுதிகளை கொண்ட 19,509 சதுரகிலோமீட்டர் பரப்பளவு எல்லை தமிழர்களின் தாயகமான தமிழீழம் எனப்படுகிறது. 1979 ஆண்டின் மக்கட்தொகை கணெக்கெடுப்பின் படி 35,98,000 மக்களை கொண்டது இந்த நிலப்பரப்பு. போரினால் பாதிக்கப்பட்டு புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தமிழர்களின் சொந்த நிலமது. ஆக, தமிழர்கள் தனியான தேசிய இனம் என்ற அடிப்படையில் தங்களது ஆட்சி அமைப்புகளை உருவாக்க தனிநாடு கோரவும், உருவாக்கவும் மக்கட்தொகையும் எவ்விதத்திலும் தடையில்லை.

‘இலங்கை தமிழர்களுக்கு கூடுதல் சுயாட்சி, மொழி பாதுகாப்புப் பெற்று தர இந்தியா உதவ வேண்டும்.’ என்றும் பேசியிருக்கிறார் வரதராஜன். காங்கிரசின் கொள்கைகளை எதிர்ப்பது போன்ற பம்மாத்து வேலைகளில் ஈடுபடுகிற தோழர்கள் ஈழப்பிரச்சனையில் இராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தில் சுருண்டுவிடுகிறார்கள். இன்னொரு நிலப்பரப்பில் வாழுகின்ற/போராடுகின்ற தேசிய இனத்தின் பிரச்சனைகளுக்கு தீர்வை கொடுக்க மார்க்சீயம் சொல்லுகிறதா? ‘சிறிய நாடுகளை பிளவுபடுத்தி புதிய நாடுகளை உருவாக்கினால் ஏகாதிபத்திய சதிக்கு உடந்தையாக இருக்கும்’ என்கிறது சிபிஎம். அமெரிக்காவும், காங்கிரசும், இந்திய மற்றும் உலக ஏகாதிபத்திய நாடுகளும் ஒன்றுபட்ட இலங்கை என்கிறது. சிபிஎம் அதே கருத்தில் ஏகாதிபத்திய ‘டிக்காசன்’ சேர்க்கிறது. சிபிஎம் இதில் எங்கே ஏகாதிபத்தியத்திலிருந்து மாறுபட்டது?

‘இலங்கை தமிழர்களுக்காக தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள், உணர்வுகளை தூண்டுவதாக இருக்கிறது. ஆனால் போராட்டங்களால் இலங்கை தமிழர்களுக்கு எந்தவித பயனும் இல்லை. இலங்கை பிரச்சனையை வைத்து தமிழகத்தில் அரசியல் நடத்தப்படுகிறது’ என்றிருக்கிறார் தோழர். வரதராஜன்.

ஈழத்தமிழர்களின் வாழ்வும், உரிமையும் பற்றி கவலைப்படாது தமிழகத்திலும், இந்தியாவிலும் சில அரசியல் கட்சிகள் தங்களது பிழைப்புவாத அரசியலை தொடர்கின்றன என்பதில் நமக்கும் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், இந்த பிழைப்புவாத அரசியலில் சிபிஎம் எப்படி மாறுபட்டது? இவ்வளவு எண்ணிக்கையில் மக்கள் படுகொலைக்கு ஆளாகும் போதும் நாடு தழுவிய அளவில் சிபிஎம் என்ன போராட்டங்களை முன்னெடுத்தது?

போராட்டங்களால் இலங்கையில் தமிழர்களுக்கு எந்தவித பயனுமில்லை என்பதை சொன்ன அதே மேடையில், ‘இலங்கை தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வுகாண வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும்’ என்றிருக்கிறார். பயனில்லை என்றவர் செய்யும் போராட்டம் மக்களை ஏமாற்றவா? அல்லது யாரை வலியுறுத்த போகிறார்கள்?

ஈழத்தமிழர்களுக்காக சிபிஎம் போராட்டம் நடத்த வேண்டியது முதலில் இலங்கை ரத்னா புகழ் ‘மவுண்ட்ரோடு மார்க்சிஸ்ட் பத்ரிக்கா’ அலுவலகம் முன்பு. செய்வார்களா சிபிஎம் தோழர்கள்?

தோழர்! நீங்கள் குழம்பியிருக்கிறீர்களா? அல்லது குழப்புகிறீர்களா?

1 கருத்துக்கள்:

அர டிக்கெட்டு ! said...

சீபீஎம் கட்சிக்கும் மார்க்சியத்துக்கும் சம்பந்தம் இல்லை, இல்லை, இல்லவே இல்லை!

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com