இனி மெல்ல....சாகும் திமுக அரசியல்!
‘என்ன சொன்னாலும் இந்த தேர்தலில் ஓட்டுப் போட போகமாட்டேன்’, விடாப்பிடியாக இருக்கிறார்.
‘ஏன் வாக்களிக்க மாட்டீங்க?’.
‘ஈழப்பிரச்சனையில் எல்லா கட்சிகளும் ஏமாற்றிவிட்டது’, பதில் சுருக்கென்று வருகிறது.
திமுக ஒரு பேரியக்கமாக உருவான காலம் துவங்கி கடந்த ஐம்பது ஆண்டுகளாக அவர் வைத்திருந்த நம்பிக்கை தகர்க்கப்பட்டது உணரமுடிகிறது. கூட்டமாக படுகொலை செய்யப்படும் தமிழர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்காத அரசியல் தலைவர்கள் மீதான சலிப்பும், வேதனையும் நம்பிக்கையின்மையும் தமிழக மக்களிடம் குமுறலாக இருக்கிறது. திமுக தலைமையை நேரடியாக விமர்சிக்காவிட்டாலும் பெரியவர் மு.க மீதான ஏமாற்றம் உடன்பிறப்புகளிடம் தெரிகிறது. கொள்கை அடிப்படையில் ஒன்றிப்போயிருக்கும் தொண்டர்களுக்கு அதுவரை தலைமை மீதான ஏமாற்றத்தினால் அமைப்பிலிருந்து வெளியேறுவது எளிதாக இருப்பதில்லை. இத்தகைய தருணங்களில் அமைப்புகளிலிருந்து தீர்க்கமான சிந்தனையுடன் வெளியேறுபவர்கள் மனதிற்குள் ரணங்களுடன் தான் வெளியேறக்கூடும். அவர்களுக்குள் ஏமாற்றத்தின் வலியும், காயமும் இருக்கத்தான் செய்யும். உதாரணமாக பெரியவர் தமிழருவி மணியன் அவர்கள் காங்கிரசின் அனைத்து பதவிகள் மற்றும் உறுப்பினர் நிலையிலிருந்தும் வெளியேறிய போதும் ரணப்பட்டிருப்பார். ஆனாலும் வெளியேறிய பிறகு சிறகடித்து சுதந்திரமாக பறக்கும் சிட்டுக்குருவியின் உணர்வு கிடைத்திருக்கும்.
பதவிகளுக்காக பெரிய பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு கொள்கையாவது, மண்ணாங்கட்டியாவது. தலைமைக்கு தலையாட்டி பலன் பெறுவதோடு எல்லாம் முடிந்து போகும். அவர்களைப் பொறுத்தவரையில் கட்சி மாறுவது வேடந்தாங்கலுக்கு வரும் பறவை போன்ற வளம் தேடும் இடப்பெயற்சி. எந்த பதவிகளையும், பலனையும் அனுபவிக்காத உண்மையான அடிமட்ட தொண்டர்களின் நிலமை அதுவல்ல. அவர்களைப் பொறுத்தவரையில் கட்சின் அல்லது தலைமையின் போக்கில் உடன்பாடில்லை ஆனாலும் வேறுவழியில்லை என்ற மிகவும் பரிதாபமான நிலையில். இன்று அப்பாவும் அத்தகைய நிலையில் இருக்கிறார்.
அப்பாவுக்கும், எனக்கும் அரசியல் கருத்துக்களில் முரண்பாடுகள் வருவதுண்டு. அரசியல் பற்றி கடுமையாக விவாதிப்போம். திமுகவை சமூகநீதிக்காகவும், தமிழுணர்விற்காக முன்னொரு காலத்தில் பாடுபட்ட பேரியக்கமாக பார்த்திருக்கிறேன். இன்றைய திமுக அப்படியல்ல என்பது எனது பார்வை. உலகமயமாக்கல் பொருளாதாரத்தின் அனைத்து கழிவுகளையும் மக்கள் மீது திணித்து பன்னாட்டு, தனியார் முதலாளிகளுக்கு உதவுகிற ஊதுகுழலாக மாறியிருக்கிறது திமுக. அதிமுக மட்டும் என்ன வெளிச்சம் என்று கேட்பவர்களுக்கு அதிமுக பற்றி சமூகநீதி, தமிழுணர்வு, பொருளாதாரம் உட்பட எந்த தளத்திலும் முன்னரும், தற்போதும் எனக்கு எந்த உடன்பாடுமில்லை என்பது மட்டுமே எனது பதில். திமுக கலைஞருக்கோ, ஸ்டாலினுக்கோ, அழகிரிக்கோ, அன்பழகனுக்கோ, துரைமுருகனுக்கோ, கனிமொழிக்கோ மட்டும் சொந்தமான நிறுவனமாக 1949ல் உருவாகவில்லை. பதவிகளை அவர்கள் அனுபவிக்கட்டும். ஆனால் திமுகவின் கொள்கை யாருக்காக அண்ணாவால் உருவாக்கப்பட்டவை? திமுக அன்றைக்கு தமிழக மக்களுக்கான இயக்கம். இன்று தனது மக்களுக்கான நிறுவனம். சன்குழுமத்திற்கு முன், சன்குழுமத்திற்கு பின் என்று நாம் திமுக வரலாற்றை பகுத்துப் பார்த்தால் இயக்கமாக செயல்பட்ட திமுகவிற்கும், நிறுவனமாகியிருக்கும் திமுகவிற்கும் வேறுபாடுகளை உணரமுடியும். இரண்டையும் கொள்கை நிலைபாடுகள் அடிப்படையில் ஒப்பீடு செய்து பார்க்க வேண்டும். கலைஞரின் அழகு தமிழில் மயங்கி கிடந்த தமிழர்கள் ஈழப்பிரச்சனையில் அகமுரண்பாடுகளையும் காணத் துவங்குகிறார்களென்று நினைக்கிறேன். அவரது கடந்தகால போராட்ட வரலாறுகளில் இதுவரையில் மூழ்கிக்கிடந்த மக்கள் நிகழ்காலத்தில் அவர் என்ன செய்கிறார் என்பதை கூர்ந்து கவனிக்கிறார்கள். தயாநிதி மாறனின் அரசியலை அச்சமாக கவனித்து வந்த மக்களுக்கு அண்ணன் அழகிரியின் நுழைவும் வந்து சேர்ந்திருக்கிறது. துவக்ககாலங்களில் அடிமட்ட தொண்டர்களின் தன்னலமற்ற உழைப்பிலும், ‘திண்ணைப் பேச்சுக்களாலும்’ சமுதாயத்தின் அடிவேர்வரை கொள்கைப்பிடிப்போடு திமுக பரவியிருந்தது. இப்போதெல்லாம் பதவிகளையும், உறுப்பினர் அட்டை பெறுவதிலும் முடங்கிப்போயிருக்கிறது. எந்த இயக்கமும் நிறுவனமாகும் போது இயக்கத்திற்குரிய சிறப்புகளான கொள்கை, இயங்கும்தன்மை, கூட்டான கருத்துப்பரிமாற்றங்கள் எல்லாம் கடந்தகாலமாகிவிடும். திமுகவும் நிறுவனமயமாகிவிட்டது. சன் குழுமங்களும், புதுடில்லியின் அமைச்சரவை பங்கேற்பும் திமுகவை வெகுவாக பாதித்திருக்கிறது. இந்த அரசியலின் விளைவுகளை இன்னும் சிறிது காலம் பொறுத்து மக்கள் புரிந்துகொள்வார்கள்.
கொள்கை அளவிலான அரசியல் நிலைபாடுகளில்லாமல், எதிரிக்கு எதிரி நண்பன் என்னும் துருவமயமான தமிழக அரசியல் மு.க x எம்ஜிஆர் காலம் தொட்டு நடைபெறுகிறது. ஜெயலலிதாவின் வருகைக்கு பிறகு பலம்பெற்று ‘பரம்பரை’ குடும்பப் பகை போலாகிவிட்டது. எந்த மக்களுக்காக பாடுபடுவதாக சொல்கிறார்களோ அந்த தமிழக மக்களையும் கூறுபோட்டு எதிராக நிற்க வைக்க இந்த அரசியல் காரணமாயிற்று. ஜெயலலிதாவுக்கு இருக்கும் பங்கிற்கு சற்றும் குறைவில்லாத அளவு மு.கவிற்கும் இதில் பங்குள்ளது. இருவரின் இந்த போக்குகளால் தமிழர்களுக்கு பாதிப்பு தானே தவிர எந்த நன்மையுமில்லை. கொள்கைரீதியாக எதிர்த்து அரசியல் நிச்சயம் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். ஆனால அதற்கான அறிகுறிகள் தமிழகத்தில் இருக்கிறதா? அதனால் தமிழக அரசியல் கட்சிகளின் ஒற்றுமையை எதிர்பார்க்க இயலாது. ஈழப்பிரச்சனைக்காக மட்டுமல்ல எந்த பிரச்சனையிலும் இவர்கள் ஒன்றுசேர்ந்து மத்திய அரசுடன் வாதாடுவதோ, போராடுவதோ எதிர்பார்ப்பது ஏமாற்றத்தில் முடியும்.
‘ஜெயலலிதாவுக்கு, மு.க பரவாயில்லை’ என்கிறார்கள். அப்படியானால் அ.தி.மு.க மற்றும் திமுக துவங்கிய காரணங்களுக்கும் கொள்கைகளுக்கும் வேறுபாடில்லையா? அப்பாவுடன் பெரும்பாலும் முரண்படும் இடம் இது. அப்போதெல்லாம் ‘சரிடே. கலைஞரின் போக்கு சரியில்லைன்னு வைத்துக்கொள்வோம். வேற ஒரு யோக்கியனை காட்டு பார்க்கலாம்’ என்பார் அவர். யோக்கியன் என்பதற்கான அளவுகோல் என்ன? மு.கவின் பன்முக பரிணாம திறமைகள் வியப்பிற்குரியவை. அவரது இராஜதந்திரம் வலியது என்பதெல்லாம் உண்மை தான். அவை எதற்காக எப்படி பயன்படுகிறது என்பதையும் பார்க்க வேண்டும். ‘ராஜதந்திரியின் தோல்வி உச்சபட்ச ராஜதந்திரத்தில் முடியுமென்று’ நினைக்கிறேன். மத்திய அரசுடன் முரண்பட்டு தீர்க்கமான நிலையை எடுக்கமுடியாத நிலை அரசு பொறுப்பிலுள்ளவர்களுக்கு உண்டு என்பதை நாம் கவனிக்கவேண்டுமென்கிறார் மு.கவிற்கு அருகிலிருக்கும் தமிழுணர்வாளர் ஒருவர். முரண்படவேண்டாம். ஈழப்பிரச்சனையை தவிர வேறு எவற்றிலாவது காங்கிரசுக்கு எதிரான நிலைப்பாட்டிலிருந்து முறையாக, தீர்க்கமாக வாதாடமுடிகிறதா திமுகவால்? அணுசக்தி ஒப்பந்தம் பற்றிய திமுகவின் தகிடுதத்தப் பேச்சுக்களும், நிலைபாடுகளும் இதற்கு உதாரணம். எம்ஜிஆர் உயிரோடு இருந்த போது ஆட்சியை இழந்தும், ஆட்சிக்கு வராமலும் தொடர்ந்து பல ஆண்டுகள் திமுக பலமாக இருந்தது. இன்று திமுகவிற்கு அல்லது தமிழகத்திற்கு இழப்பு ஏற்படுமென்பது மட்டுமே ‘தலைவரின்’ கவலையல்ல. நிறுவனங்களால் நிறைந்திருக்கும் குடும்பங்களின் கதி? சுயநலம் எங்கு முளைக்கிறதோ அங்கேயே அரசியல் உரிமைகளுக்கான போராடும் குணமும் புதைக்கப்பட்டுவிடுகிறது.
சாதாரண தொண்டர்களுக்கு இவற்றை புரிந்தாலும், அமைப்பிலிருந்து விலகிச்செல்வது எளிதல்ல. காரணம் திமுகவை வாழ்க்கையின் அங்கமாக பழகியவர்கள் அவர்கள். ஈழப்பிரச்சனையில் திமுக தலைமையின் தற்போதைய பேச்சுக்களும், எழுத்துக்களும், கவிதைக்குவியல்களும், தந்திகளும் ஏமாற்றம் தந்து அத்தகைய உணர்வுள்ள திமுகவினரையும் மாற்றியிருக்கிறது. அப்பாவின் அரசியல் உணர்வும் மாறியிருக்கிறது. அப்பா கழகம் துவங்கிய காலம் முதல் கழக உறுப்பினராக இருந்தார். அவரை ‘கழகம்’ என்று உடன்பிறப்புகளில் பலர் அழைப்பதை கேட்டிருக்கிறேன். திமுகவில் இதுவரையில் நான் உறுப்பினராக இல்லை. எந்த கட்சியிலும் நானில்லை. சுதந்திரமாக சிந்திக்க இப்படி இருப்பதிலும் ஒரு சுகம்.எனக்கும் முன்பெல்லாம் திமுக கொடி பெருமையும், நம்பிக்கையையும் இருந்தது. திமுகவின் வரலாற்றுக் காரணங்களோடு பெருமைப்பட எனக்கு தனிப்பட்ட காரணமும் இருந்தது. திமுகவின் துவக்க காலத்தில் ‘கடவுளுக்கு எதிரானவர்கள்’ என்று எதிர்கட்சிகள் பிரச்சாரம் செய்தன. அதனால் ஊரில் கொடி நாட்டும் இடத்திற்கும் எதிர்ப்பு. சொந்த நிலத்தில் கொடி நாட்டினால் யார் கேட்க முடியும்? 4 பேர் 1 சென்ட் நிலம் விலைகொடுத்து வாங்கி கழகக்கொடியை துவக்க காலத்தில் நாட்டி கழக பாசறை கட்டியிருக்கிறார்கள். அந்த நால்வரில் அப்பாவும் ஒருவர் என்பதை மற்றவர்கள் சொன்னபோது பெருமையாக இருந்தது. அவை கடந்த காலம்.
இரவு சாப்பாட்டு நேரங்களில் அப்பா எங்களுக்கு பெரியார், அண்ணா, கலைஞர் பற்றி சொல்லுவார். அப்பாவிடமிருந்து எனக்கு பெரியார் சிந்தனைகள் முதலில் அறிமுகம் துவக்கமானது. அப்பா வைத்திருந்த கழக புத்தகங்களை திருட்டுத்தனமாக எடுத்து படிக்கும் வேளைகளில் அண்ணாவின் கொஞ்சு தமிழிலும், கலைஞரின் வீரவசனங்களிலும், பெரியாரின் சிந்தனைகளிலும் ஒரு ஈர்ப்பு இருந்தது. இன்று எல்லாவற்றையும் பகுத்துப்பார்க்க பெரியார் கொள்கைகள் எனக்கு காலக்கண்ணாடி. அந்த விதத்தில் திமுகவின் இன்றைய நிலை வருத்தமே.
ஈழத்தமிழரையும், பிரபாகரனையும் எனக்கு அறிமுகம் செய்ததும் கழகம் தான். எட்டாம் வகுப்பில் மாணவனாக படித்துக் கொண்டிருந்த காலத்தில் ஈழப்பிரச்சினை பெரியதாக வெடிக்க ஆரம்பித்திருந்தது. தமிழர்கள் மீது இலங்கை அரசும், சிங்களவர்களும் நடத்திய கொடூரமான 1983 ஜூலை தாக்குதல்களை எதிர்த்து தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டங்கள் வெடித்தன. கண்டன ஊர்வலங்கள், மாணவர் போராட்டங்கள், வேலைநிறுத்தங்கள் நடந்தன. ஊரில் நடந்த பல போராட்டங்கள் சிறுவனாக இருந்த என்னையும் பாதித்தது. அப்போது கழகத்தினர் பெரிய கருப்பு, வெள்ளை கேலிச்சித்திரம் ஒன்றை வைத்திருந்தனர். தட்டியை பார்க்க சென்ற போது நான் கண்ட காட்சி என்னை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியது. அதில் "தமிழர்களின் கறி இங்கு கிடைக்கும்" என எழுதப்பட்டு சிங்களவர்கள் தமிழர்களை படுகொலை செய்த காட்சிகள் வரையப்பட்டிருந்தன.
விடுதலைப்புலிகள் இயக்கப் போராளிகள் ஆசிரியர்களின் (ஈழப்பிரச்சனைக்காக குரலெழுப்ப ஆசிரியர்களை காணோம். ஈழப்பிரச்சனை என்றில்லை. பொதுப்பிரச்சனைகளில் ஆசிரியர்கள் நிலைபாடுகள் இன்று காணமுடியவில்லை. அவர்களது சம்பளக்கவலை அவர்களுக்கு) துணையுடன் எங்கள் பள்ளியில் குறும்படங்கள் திரையிட்டனர். அவற்றில் கண்ட வேதனைமிக்க காட்சிகளும், துப்பாக்கியுடன் மேலே பார்த்தபடி நின்ற ஒருவரும் மனதை என்னமோ செய்தது. அவர் தான் பிரபாகரன் என்று பின்னர் அறிந்தேன். தொடர்ந்து மாணவர் மலரில் கட்டுரைகள், மேடைப்பேச்சுக்கள், ஈழத்திற்கு போர்நிறுத்த காலத்தில் பயணம் இப்படி எனக்குள் மாற்றம் ஏற்படுத்திய திமுக இன்று ஈழப்பிரச்சனையில் மாறிப்போனது ஒரு காலநிலைமாற்றமா? ஈழம் தமிழகத்தில் பெரும்பான்மை மக்களுக்கு நெஞ்சுக்கு நெருக்கமான நெருப்பு உணர்வு. அன்றும், இன்றும் அப்படியே. இனி என்றும் அந்த நெருப்பு அணையாமல் இருக்கும் வேலையை செய்த காங்கிரசுக்கு நன்றி!
இன்றைய திமுகவிற்கும் பொருத்தமாக அறிஞர் அண்ணா சொல்லியிருக்கும் வார்த்தைகள்!
"தம்பி!
தமிழரின் பிணங்கள் கடலலையால் மோதப்பட்டு, மோதப்பட்டு, சிங்களத்தீவின் கரையிலே, ஒதுக்கப்பட்டிருக்கின்றன. ஆமடா, தம்பி! ஆம்! எந்த சிங்களம் சீறிப் போரிட்ட தமிழர்கள் முன் ஒரு காலத்தில் மண்டியிட்டதோ, எந்தச் சிங்களவர், போரில் தோற்றதால், அக்கால முறைப்படி, அடிமைகளாக்கபட்டு இங்கு கொண்டுவரப்பட்டு, காவிரிக்கு கரை அமைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்களோ, அந்தச் சிங்களவர்கள் காண, தமிழர்களின் பிணங்கள், சுறா தின்றதுபோக, சுழல் அரித்தது போக, மிச்சம் இருந்த பிணங்கள் சிங்களத்திதீவின் கரை ஓரம் கிடந்தன! தமிழரின் பிணங்கள் சிங்களத் தீவின் கரையிலே கிடக்கின்றன . . .
இவர்தம் ஆட்சியின் சிறப்பினை உலகுக்கே, எடுத்துக்காட்ட, சிங்களக் கரையிலே ஒதுக்கப்பட்ட 18 தமிழர்களின் பிணங்கள் போதுமே!! சிங்களவர் என்ன எண்ணியிருப்பர், தமிழரின் பிணங்களைக்கண்டு; தமிழருக்கு இது கதி, இவர்கள் ஆட்சியில்! இது குறித்து வெட்கித் தலை குனிந்து வேதனைப்பட்டு கிடக்க வேண்டியதிருக்க, வீறாப்பு காட்டுவதும், பேச்சை கூவமாக்குவதுமாக இருக்கிறார்கள். இறந்துபட்ட அந்தத் தமிழர்கள், அலை கடலிலே தத்தளித்தபோது, சுறா கொத்தியபோது, கைகால் சோர்ந்தபோது, கண் பஞ்சடைத்தபோது என்னென்ன எண்ணினரோ. எப்படி எப்படிப் புலம்பினரோ, யாரறிவர்! கடலில் தமிழன் பிணமாகி மிதக்கிறான். அது கண்டு சிங்களவன், இதோ கள்ளத் தோணி என்று கேலிபேசி சிரிக்கிறான், வாழவைக்கவேண்டிய பொறுப்பினை நிறைவேற்றும் தகுதி இழந்துபோனானாமே என்று கண்ணீர் வடிக்கவேண்டிய அமைச்சர் பேச்சை கூவம் ஆக்கிக்கொள்கிறார்; ஏனோ பாவம்!"
(அறிஞர் அண்ணா 04.09.1960)
இனி மெல்ல சாகும்…திமுக அரசியல் !
உங்கள் கருத்து என்ன?
Post a Comment
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com