கேள்வி பதில்: தூங்குவது போல நடித்தல்!
கேள்வி: முடிவெடுக்கும் இடத்தில் கலைஞர் எங்கே இருக்கிறார்? காங்கிரசும், பாமகவும், மதிமுகவும், கம்யூனிஸ்டுகளும், அதிமுகவும் தானே இருக்கிறது? தமிழக சட்டமன்றத்தில் 95 இடங்களை வைத்துக்கொண்டு அவர் எதை பிடுங்க முடியும்? ஈழத்து செல்லப்பிள்ளை, தமிழ்நாட்டின் கைப்பிள்ளை வைகோ அவர்களால் வந்த வினை இது. கடந்த 2006 தேர்தலில் கடைசி நிமிடத்தில் ஒரு சீட்டுக்காக அதிமுகவிடம் சோரம் போன அவரது கோழைத்தனமான நயவஞ்சகத்தால் மாநிலத்தில் தமிழுணர்வாளர்களின் பலம் மட்டுப்படுத்தப்பட்டது?
பதில்: முடிவெடுக்கும் இடத்தில் முதல்வர். கருணாநிதி இல்லை என்பது மாயை. 95 இடங்களை சட்டமன்றத்தில் இருப்பதால் ஒன்றும் செய்யமுடியாது. அப்படி செய்தால் ஆட்சி கவிழ்ந்து ஜெயலலிதா பலம் பெற்றிருப்பார் என்பதும் மேலோட்டமாக உண்மையாக தெரியும். உண்மை அதுவல்ல. மத்திய அரசு திமுக தயவில் நாட்களை உருட்டியதையும் இங்கு பார்க்க வேண்டும். கடந்த வருடம் திமுக எடுத்த நிலைபாட்டில் உறுதியாக இருந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. ராமதாசையும், ஜெயலலிதாவையும் கண்டு அச்சமடைந்து அவர்களை எப்படி எதிர்கொள்ளலாமென்று கவனம் செலுத்திய முதல்வர், மத்திய அரசை தான் சொல்லியபடியெல்லாம் வைத்திருக்கும் வாய்ப்புகளிருந்தும் எதையும் செய்யவில்லை. ஈழத்தமிழர்களுக்கு எதிராக 5 வருடங்களாக மத்திய அரசு கொடுத்த ஆயுதங்கள், உதவிகள், சதிவேலைகள் எவற்றிற்கும் எதிராக ஒரு வார்த்தையும் பேசாமல் மத்திய அரசில் பங்குபெற்றது திமுக. ராமதாசும் பேசவில்லை அதனால் நான் பேசவில்லை என்னும் வாதம் பெரிய கட்சியான திமுகவுக்கும், தமிழினத்தலைவர் பட்டம் சூட்டியவருக்கும் அழகல்ல. அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரிக்க கருணாநிதியின் காலைப்பிடித்து கெஞ்சியது காங்கிரஸ். அதை ஒரு துருப்புச்சீட்டாக வைத்து அப்போதாவது ஈழப்பிரச்சனையில் கொள்கை மாற்றம் உருவாக்க முனைப்பெடுத்தாரா? இல்லை. ஏன்?
ஈழத்தமிழர்கள் கொல்லப்படுவதற்கு காங்கிரஸ் கட்சி முழுக்காரணம். அந்த கட்சியோடு யார் கூட்டணி வைத்தால் என்ன? அவர்கள் தமிழர்களின் எதிரிகளே! காங்கிரஸ் இன்று சட்டச்சபையில் இவ்வளவு எண்ணிக்கையில் இடங்களை வைத்திருக்க யார் காரணம்? சட்டமன்ற தேர்தலில் தொகுதி உடன்பாட்டின் போது வைகோ எப்படி முறைத்துக்கொண்டு போனாரோ அதே அளவு வைகோவை இழிவுபடுத்திய பங்கு கருணாநிதிக்கு உண்டு. சட்டசபைத் தேர்தலில் காங்கிரசுக்கு இடங்களை அள்ளிக்கொடுத்தார். அதன் விளைவை அனுபவிக்கிறார்.
ஈழப்பிரச்சனைக்காக என்ன செய்வதென்று சொல்கிறார் இன்று கருணாநிதிக்கு அருகிலிருந்து ஆலோசனை வழங்கும் தமிழுணர்வாளர் ஒருவர். அவரது பெயரை சொல்ல விரும்பவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும் ஒருவரால் போகுமிடத்துக்கு வழிகாட்ட இயலாது. அப்படிப்பட்ட தலைமை அவசியமும் இல்லை.
கேள்வி : கொத்துகுண்டுகள், ரசாயன ஆயுதங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி கொடூர இனயுத்தம் செய்துகொண்டிருந்த இலங்கை அரசு இனி கொல்லும் ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோம் என்ற அளவுக்கு இறங்கி வந்திருப்பதற்கு கலைஞரே காரணம். இத்தகைய ஒரு வாக்குறுதியை இலங்கை அரசிடம் இருந்து பெருவதே குதிரைக்கொம்பாக இருந்தது. இனி வாக்குறுதியை மீறும் பட்சத்தில் இலங்கை அரசுக்கு எதிரான சர்வதே ராணுவநடவடிக்கையை கோரமுடியும்.
பதில் : உண்ணாவிரத நாடகத்தினாலொன்றும் சிறீலங்கா அரசு இத்தகைய அறிவிப்பை வெளியிடவில்லை. உண்ணாவிரதமிருந்த பிறகும் ‘சொக்கத்தங்கம் சோனியா’ அசையவில்லை. கருணாநிதியை அண்ணா சமாதியிலிருந்து பத்திரமாக மதிய உணவிற்கு அனுப்ப பா.சிதம்பரத்தை வைத்து அறிவிக்க ஒரு நாடகம் அரங்கேறியது. கருணாநிதிக்கு பா.சிதம்பரம் வழியாக கொடுத்த வாக்குறுதிகளை வைத்து எதையும் செய்யமுடியாது.
அப்போது சிறீலங்கா ஏன் கனரக ஆயுதங்களைப் பாவிக்கப் போவதில்லையென்று அறிவித்தது? அமெரிக்காவும், பிரிட்டனும், பிரான்சும், ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து பல முயற்சிகளை எடுக்கின்றன. அதை எதிற்கும் சீற்றம் சிங்கள அமைச்சர்களின் அறிக்கைகளில் காணமுடியும். R2P அதாவது Right to Protect என்று ஒரு கோட்பாடு உலகத்தில் இருக்கிறது. வன்னியில் நடப்பது போன்ற இனப்படுகொலைகளை தடுக்க R2P கோட்பாட்டை பயன்படுத்தி உலகநாடுகள் தலையிடமுடியும். அந்த தலையீடுகள் இராணுவ நடவடிக்கை, பொருளாதார தடைகள், இராஜதந்திர உறவுகளை முடக்குதல் போன்ற எதுவாகவும் இருக்கலாம். மேலும் 29 ஏப்பிரலில் ஐ.நா பாதுகாப்புச்சபை கூட்டம் கூடுவதாகவும் தகவலுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் சிறீலங்கா மீதான அழுத்தத்தை எதிர்கொள்ள ராஜபக்சே & சோனியா company எடுத்த தந்திர நடவடிக்கையது. அப்படி அயல்நாடுகளோ, மனித உரிமை அமைப்புகளோ வன்னியில் புகுந்தால் இனப்படுகொலைக்கு ஆதரவாக இந்தியா செய்த குட்டுகளும், போர்க்குற்றங்களும் அம்பலமாகுமல்லவா? அந்த கவலையில் புதுடில்லியும், கொழும்புவும் உலக நாடுகளை ஏமாற்ற அரங்கேற்றும் நாடகம் இந்த கனரக ஆயுதம் பயன்படுத்தமாட்டோமென்ற அறிவிப்பு. அதற்கு பிறகும் விமானத்தாக்குதல் நடந்ததே. அந்த அறிவிப்பிற்கு பிறகும் ஐய்யன். வாழும் வள்ளுவர் என்ன செய்தார்? கருணாநிதியின் உண்ணாவிரதம் பற்றி அலட்ட அவசியமில்லை. தமிழக அரசியல்வாதிகள் அனைவரின் தேர்தல் நாடகங்களில் இதுவுமொன்று.
கேள்வி : சரி. புலம்பெயர் ஈழத்தமிழர்களுக்கு கலைஞர் மீது புழுதிவாரித் தூற்றுகிறார்களா?
பதில்: முதலில் கேள்வியே தவறு. ஈழத்தமிழர்கள் எந்த புழுதியையும் தூற்றவில்லை. அவர்களுக்கு சொந்தபந்தங்களின் இழப்புகளிலும், கருணாநிதி-சோனியாவின் துரோக-வஞ்சக கூட்டணியால் ஈழமும், போராட்டமும் சந்திக்கிற அழிவுகளை கண்டும் கண்ணீர்விட்டு கதறியழுது, வீதிகளிலும், அதிகாரபீடங்களிலும், ஊடகங்களிலும் போராடவே நேரமில்லை. இதற்கிடையில் பாவம் புள்ள கருணாநிதியையா தூற்ற நேரம்? இன்னொன்று தமிழகத்திலுள்ள தமிழர்களான வழக்கறிஞர்கள், மாணர்வர்கள், பெண்கள், வணிகர்கள், கலைத்துறையினர், மாற்று சிந்தனையுள்ளவர்கள், இனஅழிப்பை எதிர்க்கும் ஊடக நண்பர்கள் கருணாநிதியால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து களத்தில் குதித்துள்ளனர். அது தான் உண்மை. பழியை ஈழத்தமிழர்கள் மீதும் பிரபாகரன் மீதும் சுமத்தி கோழையின் நடிப்பிற்கு நாம் உதவிடக்கூடாது.
தமிழினத்தலைவர் பட்டத்தையும், தமிழகத்தின் ஆட்சியையும், மத்தியில் அதிகாரபலத்தையும் வைத்திருந்தும் தமிழர்கள் கொல்லப்படும் போது அண்ணா துவங்கிய திமுகவை தனது சுயநலத்திற்காக பயன்படுத்தி கோழையாக நாடகங்களை நடத்துவதோடு, உணர்வாளர்களின் போராட்டங்களை அடக்குவதாலும், அவர்களை பொய்வழக்குகளில் சிறைப்படுத்துவதாலும், உண்ணாவிரதமிருந்த பெண்களை 4 நாட்கள் சென்னை முழுவதும் ஒவ்வொரு இடமாக துரத்தியதாலும் வருகிற நியாயமான கோபம்.
கேள்வி : பிரபாகரன் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு ஆதரவளிக்காமல் ராஜபக்சேவை கொண்டு வந்ததால் தனது தலைமையின் தோல்வியை மறைக்க கருணாநிதியை பழி சொல்கிறார்களா?
பதில்: அடடா… ரணில் விக்கிரமசிங்கே கருணாவை (இந்தியாவின் துணைகொண்டு) பிரித்ததாக சொன்னதும் ராஜபக்சே அரசாங்கத்தின் இன்றைய போர் வெற்றிகளுக்கு தாங்கள் தான் காரணமென்று ரணிலும் அவர் கட்சியினரும் சொன்னதை கவனிக்கலையா? போர் நிறுத்த காலத்தில் ‘பிஸ்கோத்துகளை’ கொடுத்தவர் அவர். இடைக்கால நிர்வாகம் ஒன்றை புலிகள் முன்வைத்த போது அதை கூட பரிசீலிக்கவில்லை. விரிவாக இங்கு அதை விளக்க நேரமில்லை. சுருக்கமாக அவரை நம்புவது சொக்கத்தங்கம் சோனியாவை தமிழர்கள் நம்பியது போன்றது. ஈழத்தமிழர்களும், உணர்வாளர்களும் தெளிவாக இருக்கிறார்கள். உடன்பிறப்புகளே இன்னுமா முதல்வர்.கருணாநிதியை நம்புகிறீர்கள்?
9 பின்னூட்டங்கள்:
நல்ல பதில் திரு...
ஆனால், தலைப்பு: "கண் என்றால் என்வென்றே அறியாத குருடர்களுக்கு" என இருந்திருக்க வேண்டும்....
இந்த பதில்களினாலும், சங்கராச்சாரி பக்தர்களுக்கு இணையான கொலைஞர் டிவி மொதலாளி (இது மட்டும் தான் எஞ்சி நிக்குது) பக்தர்களுக்கு எதுவும் சென்று சேரப் போவதில்லை என்பது மட்டும் உறுதி...
ஏனெனில் அவர்கள் தான் "கண் என்றால் என்வென்றே அறியாத குருடர்கள்" ஆயிற்றே...
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....
இவண்
உலவு.காம்
பதி கருத்திற்கு நன்றி!
கொள்கைப் பற்றிற்கும், தலைமை பக்திக்கும் வேறுபாடு உண்டு இல்லையா?
http://tamilnational.com/news-flash/821-situation-report-apr28.html
ஒரு ஒரு கேள்வி தான் உங்களிடம். கலைஞர் துரோகி. ஜெ எதிரி என்கிறீர்கள்.
பிரபாகரனுக்கு கருணா துரோகி. ராஜபக்ஷே எதிரி. துரோகியை அழிக்க எதிரியோடு பிரபாகரன் கூட்டு சேருவாரா?
நீங்கள் மட்டும் ஏன்?
தலைமைப் பக்தி கிடக்கட்டும். கருணாநிதி வெறுப்பு அதீதமாகி ஜெ. ஆதரவு என்ற இழிநிலைக்கு போவது எந்த வகையில் நியாயம்?
//லக்கிலுக் Says,
ஒரு ஒரு கேள்வி தான் உங்களிடம். கலைஞர் துரோகி. ஜெ எதிரி என்கிறீர்கள்.
பிரபாகரனுக்கு கருணா துரோகி. ராஜபக்ஷே எதிரி. துரோகியை அழிக்க எதிரியோடு பிரபாகரன் கூட்டு சேருவாரா? நீங்கள் மட்டும் ஏன்?//
தம்பி,
இந்த ஒப்பீடு கருணாநிதியின் இன்றைய அரசியலுக்கு பொருத்தமானதல்ல. இது அபத்தமான வாதம்.
தமிழினத்தின் கருவையும் அழிக்காமல் விடமாடடேனென்று அடங்காமல் நிற்கிற வஞ்சகி ஒருத்தி செய்யும் ஆயுத, பொருளாதார, இராணுவ, ராஜதந்திர உதவிகள் மற்றும் யுக்திபூர்வமான ஆலோசனைகளையும், செய்மதி கண்காணிப்புகளையும் அறியாதவரா கருணாநிதி? கருணாநிதிக்கு இந்த தேர்தலில் போடுகிற ஒவ்வொரு வாக்கும் தமிழர்களை ஏதிலிகளாகவும், பிணங்களாகவும் மாற்ற கொடுக்கும் அனுமதி பத்திரம். 'சொக்கத்தங்கம் சோனியா' பட்டம் எப்போது கொடுத்தார் அவர்? ஒரு இனம் செத்துக்கொண்டிருக்கும் போது சொக்கிப்போகிறார் சோனியாவிடம். கடுமையான நிலைபாட்டை எடுத்திருக்க வேண்டிய பொறுப்பு, அதிகாரம், பலம் அனைத்தும் இருந்தும் அவர் செயல்படவில்லை. அதற்கான காரணம் தமிழக ஆட்சி இழப்பு என்ற சொத்தை வாதமும், ஜெயலலிதா மீதான அச்சமும். ஒருவேளை அப்படி தமிழகத்தில் ஆட்சி போயிருந்தாலும், மத்தியிலும் ஆட்சி போயிருக்கும். இந்திய அணுகுமுறை இவ்வளவு மோசமாக இருந்திருக்காது. ஆட்சியை ஒருவேளை அவர் இழந்திருந்தால் மக்கள்சக்தி (அவருடைய பிள்ளைகளை சொல்லவில்லை) அவரோடு அரணாக நின்றிருக்கும். அவருக்காக தமிழ் இன உணர்வாளர்கள் நாமெல்லாம் போராடியிருப்போம்.
இன்று ராஜபக்சே-சோனியா கம்பெனி மக்களை கொன்று இந்த நாடகங்களையும் அரங்கேற்றியிருக்காது. கலைஞரும் கொலைஞராக கவிதை கேட்டிருக்கமாட்டார். வன்னியில் நம் மக்கள் இப்படியா கொடுமைகளையும், இழப்புகளையும், அழிவுகளையும் சந்தித்திருப்பார்கள்? அவர் நடத்திய மனிதச்சங்கிலி நாடகம் முதல் உண்ணாவிரம் வரையில் தமிழர்களின் போராடும் காலத்தை நாள் நீட்டிப்பு செய்து, போலியான நம்பிக்கையை கொடுத்து கடைசியில் ஏமாற்றத்தை தந்தது. இனி நமக்கு இழக்க இதவிட ஒன்றுமில்லை. இன்னமும் கோழையாக வாக்குப்பிச்சை கேட்பது அவருக்கு அழகல்ல.
ஜெயலலிதாவின் எந்த வாக்குறுதிகள் மீதும் எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால் அவரது இன்றைய பேச்சுக்கள் இந்திய அரசின் முகத்தில் பூசப்படுகிற கரி. கருணாநிதியால் 'தனி ஈழம் தான் தீர்வு. தனி ஈழம் அமைக்க இந்திய அரசு உதவ வேண்டும். தனி ஈழத்தை இந்தியா அங்கீகரிக்க வேண்டும்' என்று எப்போதாவது இனி தீர்க்கமாக பேசமுடியுமா? அவரிடம் தான் இந்த வார்த்தைகளை எதிர்பார்த்து தமிழினம் தவம் கிடந்தது. ஒன்று புரிந்து கொள்ளுங்கள். இப்போதைய கருணாநிதியால் இந்தியாவிடமிருந்து எந்த துரும்பையும் பெறமுடியாது. அதைவிட மற்றவர்களை பெற முயற்சிக்கவும் அனுமதிக்கமாட்டேன் என்கிறார். போராட்டங்கள் முதல் அனைத்திற்கும் வெளிப்படையாக, மறைமுகமாக ஒரு சூனியக்காரனின் புத்தியுடன் செயல்படுகிறார். தந்தைப் பெரியார் இன்று இல்லாமல் போனது கருணாநிதிக்கு இலாபம். திமுகவின் இன்றைய அரசியல் அழிய வேண்டும். தமிழகம் குழப்பமான மனநிலையில் ஒரு தேர்தலை சந்திக்கிறது.
ஜெயலலிதா நடவடிக்கை இன்னும் எதிராக இருந்தால் இதுவரை கற்ற பாடங்களிலிருந்து அவரை எதிர்கொள்வது தமிழர்களால் முடியும். ஆனால் உணர்வுகளால் கட்டிவைத்து ஏமாற்றும் கருணாநிதியை தோற்கடிப்பதை தவிர வழியில்லை. மீண்டும் உடனடியாக காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் வந்தால் தமிழர்கள் அனைவருக்கும் சமாதி கட்டவேண்டியது தான் பாக்கி. கருணாநிதியால் காங்கிரசுக்கு ஆதரவு தருவதை தவிர எதையும் செய்ய இயலாது.
திராவிட அரசியல் புதுப்பொலிவும், மெருகும் பெற இந்த தோல்வி திமுகவிற்கு அவசியமான ஒன்று. போராட்டங்களை சந்தித்து அஞ்சாமல் நின்ற பழைய கலைஞரை நேசிப்போம். கோழையாகிப் போன இன்றைய முதல்வர்.கருணாநிதியின் நாடகங்களை நம்பமுடியவில்லை. ஈழப்பிரச்சனை அதற்கு ஒரு உதாரணம். அவரது பொரி உருண்டை திட்டங்கள் பலவற்றின் நோக்கங்களும், நிறுவனமயமும் திராவிட அரசியலில் இப்போது திமுக இல்லை என்பதற்கு சாட்சி. பார்ப்பனீயம் ஜெயலலிதாவிடம் இருந்தாலும், கருணாநிதியிடம் புகுந்தாலும் எதிர்க்கப்பட வேண்டியது.
//கொள்கைப் பற்றிற்கும், தலைமை பக்திக்கும் வேறுபாடு உண்டு இல்லையா?//
கொள்கைப் பற்று மட்டுமே இருப்பின், இயக்கம் தடம் புரளாமல் காத்தும் கொள்கை மாறாத் தலைமையையுமே வேண்டி நிற்பார்களேயே அன்றி கிடைத்த தலைமையை எல்லாம் ஏறுக் கொண்டு அவர்கள் செய்யும் எல்லா அயோக்கியத் தனங்களுக்கும் சப்பைக் கட்டு கட்டிக் கொண்டிருக்க மாட்டார்கள்...
இதிலே கருணாவை எதிர்த்தால் உடனே ஜெ ஆதரவாளர்கள்... :(
சிலர் எந்த தைரியத்தில் ஜெ தேர்தலுக்கு பிறகு மாறிவிடுவார் என பேசுகின்றனர் என்பது தான் புரியவில்லை.. மற்றவர்கள் சொல்லவது போல் ஜெ தேர்தலுக்கு பிறகு எல்லாம் மாற மாட்டார். தேர்தலுக்கு முந்திய நாளே தெளிவாகிவிடுவார் !!!! தேர்தல் முடிவுகள் வெளிவந்தவுடன் கபடி ஆட்டம் தான் !!!
ஆனால், எடுக்கும் எந்த முடிவாக இருந்தாலும் அது உறுதியாக இருக்கும்... இதற்கு சசியின் பதிவிலேயே ஏரளமான் பதில்கள் உள்ளது...
http://blog.tamilsasi.com/2009/04/dravidian-politics-karunanidhi.html
நல்லப்பதிவு திரு.
Post a Comment
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com