மாமிசத்தை புசித்து இரத்தத்தை பருகுபவன்
ஆதிநகரக் குடிகளை
நவபாணங்களில்
எரித்துக் கொன்ற
இந்திரனுக்காக
நகர்களும்
தேர்களும்,
தெருக்களும்,
மாடங்களும், மரங்களும்
நவீனம் பூசிக்கொண்டன.
அவன் வருகைக்காக
மண்டையோடுகளும்
எலும்புத் துண்டுகளும்
கோர்த்து
நவசாமிகள் மந்தரித்த
மாலையுடன்
காத்திருந்த இவனோ
முன்பிருந்து
காடுகளில்
நகர்களில்
நாடுகளில்
ஆதிக்குடிகளை
வேட்டையாடி
அகதிகளாக்கி கொன்ற
இந்திரனின் பிள்ளை.
அவன்
"வறுமையையும், நோயையும்
விரட்டுகிற வல்லமை
உனக்குள்ளது" என்றான்.
இவன் விரட்டியடிப்பதில்
வல்லவன் தான்.
நகரங்களின் தெருக்களில்
விரட்டியடிக்கப்பட்ட பிச்சைக்காரர்களும்
இடிந்த கட்டிட வனாந்தரங்களில்
அநாதரவாக அடைக்கப்பட்ட
பெண்களும், பசிக்கு அழுத குழந்தைகளும்
காடுகளுக்குள் சுட்டு கழிகளில்
இவன் கட்டியிழுத்த
ஆதிக்குடி மக்களும்
கிழக்கு தீவில்
இவனது பாணங்களால்
எரிக்கப்பட்ட ஆதிநிலமும்
இவனது வல்லமையின்
அடையாளங்கள்.
எசமானைப் போன்று
வறியவர்களை
நோயாளிகளை
குழந்தைகளை
எளியவர்களை
கொன்று
மாமிசத்தை புசித்து
இரத்தத்தை பருகுபவன் இவன்.
3 பின்னூட்டங்கள்:
super...
நல்ல கவிதை, எனக்கு ஒரு குழப்பம். நீங்க நாத்திகரா? ஆத்திகரா?
//நீங்க நாத்திகரா? ஆத்திகரா?//
மதங்கள், கடவுள்கள், சாமிகள் மீது பற்றோ, நம்பிக்கையோ இல்லை. மதங்களுக்குள் பயணித்து சுய அனுபவங்களின் அடிப்படையில் ஏற்பட்டது இந்த மாற்றம்.
அதற்காக, எவர் மீதும் எனது கருத்தை திணிப்பதில்லை.
Post a Comment
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com