வன்னியில் 2009ல் இறுதி தாக்குதல்களில் சுமார் 40,000 தமிழ்மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், 3 லட்சம் மக்கள் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் நடத்தப்பட்டுள்ளன, தமிழ்மக்கள் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கும், துன்புறுத்தலுக்கும் ஆளாகியுள்ளனர், விடுதலைப்புலிகளாக சந்தேகப்படுபவர்கள் இரகசிய முகாம்களில் பல ஆண்டுகள் அடைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்படுகின்றனர், அவர்களில் பலர் படுகொலைக்கும், காணாமல் போகவும் செய்யப்பட்டுள்ளனர் என்று கொடூரமான மனித உரிமைக் குற்றங்களை உறுதிப்படுத்துகிறது ஐ.நா பொதுச்செயலாளரின் வல்லுநர் குழுவின் அறிக்கை. கடந்த இரண்டு ஆண்டுகளாக மனித உரிமை அமைப்புகளும், தமிழ் மக்களும் இக்குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். ஆனாலும், ஐ.நா வல்லுநர் குழு அறிக்கை அக்குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக வலிமை சேர்க்கிறது. அவற்றை மனித குலத்திற்கு எதிரான குற்றங்களாகவும், போர்க்குற்றங்களாகவும் அடையாளப்படுத்தியுள்ளது.
ஆனால், தமிழர்கள் மீது இலங்கை அரசு திட்டமிட்டு நடத்திய விமானகுண்டு தாக்குதல்கள், கொத்துக்குண்டு தாக்குதல்கள், எறிகணை படுகொலைகள், சித்திரவதைகள், காணாமல் போகவைத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் சித்திரவதைகள் ஆகிய அனைத்தையும் சர்வதேச இனப்படுகொலை தடுப்பு மற்றும் தண்டனைச் சட்டத்தின் அடிப்படையில், இனப்படுகொலையாக அடையாளப்படுத்த தவறியுள்ளது அல்லது மறைக்கிறது இவ்வறிக்கை. ஐ.நா அறிக்கையை வெளியிடுவதால் தானாக விசாரணை நடத்தப்படுமென்று புரிந்துகொள்ள கூடாது. அவ்வாறு கருதினால் ஏமாற்றமே மிஞ்சும். ஆனால், இவ்வறிக்கை இனப்படுகொலை குற்றம் மற்றும் போர்க்குற்றங்களை சர்வதேச அளவில் மக்கள் மன்றங்கள், மற்ற நாடுகளின் அரசுகள், நாடுகளின் தூதுவர்கள், பல்கலைக்கழகங்கள், அமைப்புகளின் ஆதரவை திரட்டி, சர்வதேச அளவில் விசாரணையை நடத்த அழுத்தம் உருவாக்க உதவியாக இருக்கும். தமிழ்மக்களும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும், இளைஞர்களும், மாணவர்களும், சட்டவல்லுநர்களும் அதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட வேண்டும்.
வன்னியில் நடத்தப்பட்டது போர்க்குற்றம் மட்டுமல்ல, அப்பட்டமான இனப்படுகொலை குற்றம். வன்னிப்படுகொலைகளை இனப்படுகொலையாக அறிவிக்க முயற்சிகள் தொடரவேண்டும்.
ஐ,நா அறிக்கை புலிகள் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள்:
- மக்களை பாதுகாப்பு அரணாக பயன்படுத்தியது.
- புலிகள் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து வெளியேற முயற்சித்தவர்களை சுட்டு கொலை செய்தது.
- மக்களுக்கு அருகே கனரக இராணுவ ஆயுதங்களை பயன்படுத்தியது.
- குழந்தைகளை கட்டாயமாக படையில் சேர்த்தது.
- மக்களை கட்டாய வேலை வாங்கியது.
- தற்கொலை தாக்குதல்களில் மக்களை கொலை செய்தது.
புலிகள் போர்க்குற்றங்கள் செய்திருப்பதாக ஜெனிவா சட்டங்கள் அடிப்படையில் இவ்வறிக்கை குறிப்பிடுகிறது. வன்னி இனப்படுகொலையின் போது, அரசு தரப்பு குற்றங்களை மறைப்பதற்காக, தமிழ்மக்களை அரசின் பக்கமாக திருப்புவதற்காக தந்திரமான சூழலை உருவாக்கி புலிகள் மீது சில குற்றச்சாட்டுகளை வைத்ததாக சில குற்றச்சாட்டுகள் பலராலும் மறுப்பிற்கும், சந்தேகத்திற்கும் இடமாகியுள்ளன. தென்னிலங்கையில் அமைச்சர்கள், அதிகாரிகள் சிலர் மீதான குண்டுதாக்குதல் அனைத்தையும் புலிகள் மீது அரசு குற்றம் சுமத்திய போதும், ஐ.நா அறிக்கையில் அவற்றின் உண்மைநிலை குறித்த சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. இவற்றில், பாரபட்சமற்ற சர்வதேச விசாரணை உருவாகிற போது புலிகள் மீதான குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மை தெளிவாகும். அப்படியான சர்வதேச விசாரணையில் புலிகளின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதனால் உண்மை வெளிப்படுவது மட்டுமல்ல; அவற்றிற்கான பரிகாரங்களையும், நிவாரணங்களையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெற்றுத்தரவும் உதவும்.
ஐ,நா அறிக்கை இலங்கை அரசு மீது சுமத்தியுள்ள கடுமையான குற்றச்சாட்டுகள் 5 விதமானவை:
- பாதுகாப்பு வளையத்தில் மக்களை பெரும்தொகையாக வரவளைத்து, மக்கள் அப்பகுதியில் இருப்பதை வேவு விமானங்கள் மற்றும் உளவுத்தகவல், ஐ.நா அமைப்பு மற்றும் செஞ்சிலுவை சங்கம் மூலம் அறிந்த பிறகும் திட்டமிட்டு அப்பகுதிகளில் ஏராளம் கனரக ஆயுதங்கள் மற்றும் பல்முனை எறிகணைகளை மக்கள் மீது வீசி பெரும் எண்ணிக்கையில் மக்களை படுகொலை செய்தது. அதனால் இறுதி கட்டத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்பட்டனர். அழுத்தங்களிலிருந்து தப்பிப்பதற்காக சர்வதேச அமைப்புகளை மோதல் பகுதிகளில் அரசு அனுமதிக்கவில்லை.
- அடையாளம் மிகதெளிவாக அறிந்த பிறகும், வன்னியிலுள்ள அனைத்து மருத்துவமனைகளையும் திட்டமிட்டு குண்டுவீசி அரசு தாக்கியது. ஏற்கனவே காயங்களுக்குள்ளான மக்கள் மருத்துவமனை குண்டுவீச்சுக்களில் மீண்டும் தாக்குதலுக்குள்ளாகி கொல்லப்பட்டனர்.
- மோதல் பகுதிகளில் தங்கியிருந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, அடிப்படை மருந்து பொருட்கள், குறிப்பாக காயங்களுக்கு மருத்துவம் செய்வதற்கு அத்தியாவசியமான மருத்துவப் பொருட்கள் கொண்டுசெல்ல அனுமதிக்காமல் மிகதெளிவாக திட்டமிட்டு அரசு தடுத்தது. அதோடு, வன்னியில் இருந்த மக்களின் எண்ணிக்கையை வேண்டுமென்றெ திட்டமிட்டு குறைத்து மதிப்பிட்டு வெளியிட்டது.
- அரசு (இராணுவ) நடவடிக்கையை 'மனிதாபிமான மீட்பு நடவடிக்கை' என்று சித்தரித்த போதிலும், மோதல் பகுதிகளிலிருந்து வெளியேறிய மக்களை மீண்டும் கடுமையான இழப்பிற்கும், துன்பங்களுக்கும் ஆளாக்கியது. அதனால் தேவையில்லாமல் கணக்கற்ற மக்கள் கொல்லப்பட்டனர். உள்நாட்டில் புலம்பெயர்ந்த மக்களை முகாம்களில் அடைத்து வைத்து, மீண்டும் அலைக்கழிப்பிற்கும், சுரண்டலுக்கும் ஆளாக்கியது. விடுதலைப்புலிகளாக சந்தேகப்பட்டவர்களை ஆய்வு செய்வதில் எவ்வித வெளிப்படைதன்மையும் கடைபிடிக்கவில்லை. அவர்களில் பலர் கொல்லப்பட்டனர், பலர் காணாமல் போயுள்ளனர். பெண் போராளிகளின் உடைகளை அகற்றியுள்ள அசைபடங்கள் மற்றும் ஒளிப்படங்களிலிருந்து பாலியல் சித்திரவதைகளும், பாலியல் வன்கொடுமையும் நடந்துள்ளது தெரிகிறது. விசாரணையின் போது சித்திரவதைகள் தொடர்ந்து நடைபெறுகிறது. அவர்களை செஞ்சிலுவை சங்கம், இலங்கை மனித உரிமை ஆணைக்குழு அல்லது மற்ற அமைப்புகளின் சோதனை அல்லது தொடர்புகளுக்கு இடமளிக்காமல் பல ஆண்டுகளாக தனிமுகாம்களில் அடைத்து வைத்துள்ளது.
- அரசோடு முரண்படும் ஊடகங்களையும், கண்டனம் தெரிவிப்பவர்களையும் கடத்துதல், 'வெள்ளைவேன்' அனுப்பி கடத்துதல், காணாமல் போக வைத்தல் மற்றும் கொலைமிரட்டல் உள்ளிட்ட பலவகை மிரட்டல் வழிகளை பயன்படுத்தி அவர்களின் குரல்களை அரசு அடக்குகிறது.
இலங்கை அரசு சர்வதேச மனிதாபிமான, மனித உரிமை சட்டங்களை கண்மூடித்தனமாக மீறியுள்ளது. சர்வதேச சட்டங்களில் இறையாண்மை உட்பட எந்த காரணத்திற்காகவும் பாரபட்சமற்றமுறையில் மக்கள் குடியிருப்புகளில் விமானகுண்டுகள், எறிகணைகள், கொத்துக்குண்டுகள் வீச அனுமதியில்லை. இலங்கையில் தமிழ்மக்கள் வாழுகின்ற பகுதிகளில் மட்டும் அத்தகைய பாரபட்சமற்ற தாக்குதல்களை நடத்தி, கட்டாயமாக வெளியேற வைத்து, குண்டுவீசக்கூடாத மருத்துவமனைகள், பாதுகாப்பான பகுதிகளில் மக்கள் இருப்பது அறிந்தும் மரணத்திலிருந்த மக்களை துரத்தி, துரத்தி மரணம் வரையில் வேட்டையாடி கொலை செய்தது இலங்கை அரசு. உள்நாட்டு சட்டங்கள் மற்றும் சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் மக்களை பாதுகாக்க கடமையுள்ள இலங்கை அரசு செய்தது போர்க்குற்றம் மட்டுமல்ல. அப்பட்டமான இனப்படுகொலை!
தயங்குகிற ஐ.நா, தடுக்கிற இந்தியா!
இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், மனித இனத்திற்கு எதிரான குற்றங்களை இலங்கை அரசு செய்திருந்தும் ஐ.நா மனித உரிமை பேரவையில் 2009ல் இந்தியா இலங்கைக்கு ஆதரவாக நின்று நடவடிக்கை உருவாகாமல் காப்பாற்றியது மட்டுமல்லாமல், தனது செல்வாக்கை பயன்படுத்தி மற்ற நாடுகளின் ஆதரவை திரட்டி பாராட்டு தீர்மானம் நிறைவேற்றியது. இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலை தாக்குதல்கள் இந்திய அரசின் ஆதரவு, ஆலோசனை, இராணுவ பயிற்சிகள், தொழில்நுட்ப உதவி, ஆயுதங்கள், பணம் மற்றும் ராசாங்க நடவடிக்கைகள் மூலம் உலகத்தின் பார்வையையும், நடவடிக்கையையும் முடக்கி நடத்தப்பட்டது. அதற்கான தெளிவான ஆதாரங்கள் பல வெளியாகியுள்ளன. வெள்ளைக்கொடியுடன் புலிகளின் முக்கிய தளபதிகள் சரணடைந்து, கொல்லப்பட்ட குற்றங்களில், சரணடைவதற்கான ஏற்பாடுகள் ஐ.நா பொதுச்செயலாளரின் அலுவலகத்தில் உயர் அதிகாரியான இந்தியர் விஜய் நம்பியாருக்கு பல மணி நேரங்களுக்கு முன்பு புலிகளிடமிருந்து நேரடியாக அறிவிக்கப்பட்டிருந்தது. விஜய் நம்பியார் அறிந்து நடைபெற்ற இக்குற்றங்களின் விஜய்நம்பியாரின் பொறுப்பு குறித்து விசாரணை வேண்டும். வன்னிப்படுகொலையின் போது கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கையை கணக்கெடுத்த போதும் ஐ.நா அவற்றை வெளியிடாமல் மறைத்தது. அதன் மூலம் இலங்கை அரசுக்கு அழுத்தங்கள் ஐ.நா பாதுகாப்பு சபை மூலம் உருவாகாமல் தடுத்தது. இதிலும், விஜய் நம்பியாருக்கு முக்கிய பங்குண்டு, பான் கி மூன் நடவடிக்கையும் எவ்விதத்திலும் வெளிப்படையாக இல்லை. ஐ.நா நடவடிக்கை இனப்படுகொலை, போர்க்குற்றங்களுக்கு துணையாக இருந்துள்ளதை ஐ.நா அதிகாரிகள் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் தெரிவிக்கின்றனர். ஐ.நாவிற்கு அழுத்தங்களை உருவாக்கிய விசயத்தில் இந்தியாவே தலைமை பங்காற்றியது. இந்த நிலையில் இந்தியா நிரந்தரமற்ற உறுப்பினராக ஐ.நா பாதுகாப்பு சபையில் இடம்பெற்றுள்ளது. இனப்படுகொலை, போர்க்குற்ற விசாரணை கோருகிற அதே வேளையில் இனப்படுகொலையில் இந்தியாவின் பங்கையும், இனப்படுகொலையாளர்களை இந்தியா பாதுகாப்பதையும் ஊடகங்கள், சமூக ஊடகங்கள் வழியாக வெளிப்படுத்துவது அவசியமானது.
யார் விசாரணையை நடத்துவது?
ஐ.நா அறிக்கையிலும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் அறிக்கைகளிலும் குற்றவாளியாக நிறுத்தப்பட்டுள்ள இலங்கை அரசு அத்தகைய விசாரணையை நடத்துமா? அதற்கான தகுதியும், முகாந்திரமும் இலங்கையில் உள்ளதா? இக்கேள்விகளுக்கு ஐ.நா வல்லுநர் குழு அறிக்கையில் அதற்கான பதில்களும் உள்ளன.
இலங்கை அரசிடமிருந்து, நீதியை, சமாதானத்தை எதிர்பார்ப்பது சாத்தியமானதல்ல. இலங்கை அரசு நியமித்துள்ள கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (டுடுசுஊ) சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் உருவாக்கும் என்கிற பிரச்சாரம் போலியான கானல்நீர். வாகனத்தில் செல்லும் போது கானல்நீரை தேடி பயணம் போனாலும் தாகத்திற்கு பருகமுடியாது, காரணம் அது தண்ணீரல்ல, தண்ணீர் போன்ற போலியான ஒரு தோற்றம் மட்டுமே. 'இக்குழுவின் எண்ணமும், செயல்பாடும் குறைபாடுடையது. சர்வதேச தரத்திலான சுதந்திரதன்மை, பாரபட்சமின்மை, சாட்சிகளை நடத்துகிற விதம், சாட்சிகளுக்கான பாதுகாப்பு ஆகிய செயல்களில் குறையுள்ளது.' என்கிறது ஐ.நா வல்லுநர் குழு அறிக்கை. ஏற்கனவே, பலமுறை சர்வதேச தலையீடுகளை தடுப்பதற்காக இலங்கை அரசு பலமுறை விசாரணைக் குழுக்களை நியமித்த நாடகங்கள் நடந்துள்ளன. அவைகளினால் மக்களுக்கு உண்மை நிலையும், நீதியும், பரிகாரமும், நிவாரணமும் கிடைக்கவுமில்லை. இலங்கையின் நீதிபரிபாலனை அமைப்பும் சுதந்திரமான, பாரபட்சமற்ற நீதி வழங்க முடியாத அளவு தோல்வியுற்றிருக்கிறது. இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கும் அதற்கான வலு இல்லை. குறைந்தபட்சம் இறந்தவர்களுக்கான சான்றிதழ்களை அவர்களது உறவினர்களுக்கு வழங்காமல் இழுத்தடிக்கப்படுகிறது. இவற்றை ஐ.நா குழு அறிக்கை தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளது. இப்படி சட்டத்தின் ஆளுகை தோல்வியடைந்துள்ள நிலையில், இலங்கையில் பாரபட்டமற்ற முறையில், சுதந்திரமாக, சர்வதேச சட்டங்களுக்குட்பட்டு இனப்படுகொலை, போர்க்குற்ற விசாரணை நடைபெற எந்த சாத்தியமும் இல்லை. 'அரசாங்கத்தின் பொறுப்பேற்பு குறித்த எண்ணம் சர்வதேச சட்டங்களுக்கு ஒத்துப்போக கூடியதல்ல', என்று மிக தெளிவாக ஐ.நா வல்லுநர் குழு தெளிவாக குறிப்பிடுகிறது. இதிலிருந்து இலங்கை அரசு முறையான விசாரணையை நடத்தும் சாத்தியம் எதுவுமில்லை என்பதை ஐ.நா வல்லுநர் குழு அறிக்கையே வெளிப்படுத்துகிறது.
இந்த நிலையில், இவ்வறிக்கையை வெளியிட்டு பேசியுள்ள ஐ.நா பொதுச்செயலர் பான் கி மூன் இலங்கை அரசின் ஒப்புதல் அல்லது உறுப்பு நாடுகளின் கோரிக்கை அவசியமென்று குறிப்பிட்டிருக்கிறார். இலங்கை அரசிடம் இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களை விசாரிக்க கோருவது அப்பட்டமான ஏமாற்று நாடகம்.
சர்வதேச விசாரணை ஏன் அவசியம்?
இத்தகைய கொடூரமான குற்றங்கள் இனிமேலும் நடக்காமல் தடுக்கப்பட வேண்டும். மக்கள் மீது நடத்திய குண்டுதாக்குதல்கள், படுகொலைகள், சித்திரவதைகள், காணாமல் போனவர்களின் நிலை, பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் சித்திரவதைகள் உட்பட்ட அனைத்து இனப்படுகொலை குற்றங்களும் வெளிப்படையாக விசாரிக்கப்பட வேண்டும். அவற்றின் பின்னணி, குற்றத்தை ஏவியவர்கள், துணைபுரிந்தவர்கள், ஆயுதம் மற்றும் ஆலோசனை வழங்கியவர்கள் அடையாளம் காணப்பட வேண்டும். அதற்கான பரிகாரங்களும், நீதியும், நிவாரணங்களும், குற்றவாளிகளுக்கு கடும்தண்டனைகளும் வழங்கப்பட வேண்டும். நிரந்தரமான சமாதானத்திற்கும், நல்லிணக்கத்திற்கும் இது அடிப்படையானவை. தமிழ் மக்களுக்கான அரசியல், சமூக, பொருளாதார உரிமைகளுக்கான சாத்தியப்பாடுகளும் இனப்படுகொலை, போர்க்குற்ற விசாரணையில் உள்ளது. சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமை சட்டங்கள் பாரபட்சமற்றவை. சர்வதேச அளவில் விசாரணை நடத்தப்படுமானால் சுதந்திரமாக, எவ்வித அச்சுறுத்தலும் இல்லாமல் பாதிக்கப்பட்ட மக்கள் சாட்சியம் அளிக்க முடியும். எனவே தான், மனித உரிமைகள் மீதான அக்கறையுள்ள அனைவரும் வன்னி இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களை பாரபட்சமற்ற சர்வதேச விசாரணை நடத்த வேண்டுகின்றனர். சர்வதேச விசாரணைக்கான போராட்டங்களையும், முயற்சிகளை தொய்வில்லாமல் தொடர வேண்டும்!