கூடங்குளம் அணு
உலைகளுக்கு ஆதரவாக இணையத்தில் சிலர் மிக தந்திரமாக முன்வைக்கிற வாதங்களில்
அணு உலைகளால் விளைகிற கதிரியக்க ஆபத்தையும், யுரேனியம் எடுப்பதற்காக
தோண்டப்படுகிற சுரங்கங்களின் கதிரியக்க, சுற்றுச்சூழல் ஆபத்துகள் அனைத்தும்
வசதியாக மறைக்கப்படுகின்றன. ஹிரோசிமா zero groundல் எடுக்கப்பட்ட நிழல்
படம் அணு உலை அழிவிலிருந்து மீண்டுவிடலாம் என்பது போன்ற மாயை தோற்றத்தை
உருவாக்க இணையத்தில் காட்டப்படுகிறது. செர்னோபில் அணு உலை வெடிப்பில்
எடுக்கப்பட்ட படங்கள் வசதியாக மறந்து போகின்றன.
|
ஹிரோசிமா அணுகுண்டு வெடித்த அழிவின் பின் அமெரிக்க ராணுவம் எடுத்த புகைப்படம் |
அணுகுண்டும் நீண்டகால பாதிப்பை உருவாக்குபவை
தான். அணுகுண்டு வீச்சில் உடனடியாக
உயிரிழந்தவர்கள் சுமார் 70,000 முதல் 90,000 பேர். ஆனால் 1950ற்குள்
மொத்தம் சுமார் 2,50,000 பேர் உடனடியாக மற்றும் கதிர் வீச்சு நீண்டகால
பாதிப்புகளால் கொல்லப்பட்டனர். ஹிரோசிமா அணு
குண்டு வீச்சையும், அணு உலை வெடிப்பையும் ஒப்பிடும் போது அணு உலை கதிர்
வீச்சு பன்மடங்கு விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. அதற்கு சோவியத்தின்
செர்னோபில் அணு உலை வெடிப்பு உதாரணமாக உள்ளது. எப்பிரல் 26, 1986ல்
செர்னோபில் அணு உலை வெடிக்க ஆரம்பித்த போது 3 கிலோ மீட்டர்களுக்கு அப்பால்
ஊழியர் குடியிருப்பில் இருந்த 50,000 மக்கள் வெளியேற்றப்பட்டனர். 25
ஆண்டுகள் ஆகியும் அப்பகுதிகளில் மக்கள் மீள் குடியமர்த்தப்பட வில்லை.
ஹிரோசிமாவில் அமெரிக்கா வெடித்த அணுகுண்டைக் காட்டிலும் 400 மடங்கு அதிகமாக
கதிர்வீச்சை செர்னோபில் பரப்பியது. சோவியத் நிபுணர்கள் அயராது பணியாற்றிய
போதும் 10 நாட்கள் தொடர்ந்து அணு உலை எரிந்தது. அணு உலை வெடித்த சில
வாரங்களுக்குள் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
ரசியா, பெலாரஸ், உக்ரைன் நாடுகளில் மொத்தம் 90,000 சதுர மைல்கள் பரப்பளவு
(233,000 சதுர கிலோ மீட்டர்கள்) சுகாதாரத்தை பாதிக்கிற அளவு கதிர்வீச்சு
துகள்கள் மாசுபடுத்தியது.
|
செர்னோபில் அணு உலை வெடிப்பின் கதிர்வீச்சை கட்டுப்படுத்தவும், சுத்தமாக்குதல் பணியிலும் ஈடுபட்டு கதிர்வீச்சால் பாதிப்படைந்து கைவிடப்பட்ட வாகனங்கள், உலங்கு வானூர்திகள், கருவிகளின் ஒரு சிறுபகுதி (புகைப்படம்: Obin Robinson, vwvortex) |
ஆனால் உலகப் போரின் முடிவில்
அழிவிலிருந்து மீண்டு ஹிரோசிமா, நாகசாகி உட்பட பல நகரங்களையும் துரித
வேகத்தில் எழுப்பிய, தொழில்நுட்பமும், உடனடியாக செயல்படும் ஆற்றலும்,
அனுபவமும் நிறைந்த ஜப்பான் தான் புக்குசிமா அணு உலைகளின் கதிர்வீச்சுக்களை
கட்டுப்படுத்த முடியாமல் திணறியது. உலக நாடுகளின் ஆதரவை கோரியதும்,
கதிரியக்கம் காற்று, கடல்நீர் வழி பரவி ஆபத்தை உருவாக்கியது. அது ஏன்?
|
ஜப்பானின் புக்குசிமா அணு உலை வெடிப்பு (படம்: javedantv.com) |
ஜப்பானோடு
ஒப்பிடும் போது பாதுகாப்பு கட்டமைப்புகள், தொழில்நுட்பம், விரைந்து
செயலாற்றும் திறன் உட்பட எதிலும் இந்தியா ஒப்பிட முடியாது. ஆழிப்பேரலை
தாக்கிய போது மக்களை காப்பாற்ற, மீள் குடியமர்த்த இந்தியா/தமிழ்நாடு எத்தனை
நாட்கள், ஆண்டுகள் எடுத்தது என்பதையும் நினைபடுத்திக்கொள்வது நல்லது.
ஆழிப்பேரலையில் முதல் 2 நாட்கள் மக்கள் தான் ஒருவருக்கு ஒருவர் மீட்பு,
உதவி பணிகளில் ஈடுபட்டனர். அப்பகுதிகளில் முதல் 2 நாட்களில் அரசு நிர்வாகம்
பெரியதாக எதையும் செய்யவில்லை. ஆழிப்பேரலை ஆபத்து மீட்புப்பணி போல அணு உலை
வெடிப்பு, கதிரியக்க ஆபத்துகளின் போது மக்கள் ஈடுமுடியாது. அதற்கான
கவசங்கள், தொழில்நுட்பம், பாதுகாப்பு மையங்கள், கதிர் துகள்களை அகற்றுகிற
மையங்கள், பாதுகாப்பு வழிமுறைகளில் மக்கள் பழக்கப்படுத்தப்படவும் இல்லை.
அவை அனைத்திலும் தேர்ச்சி மிக்க ஜப்பான் மக்கள் அணு உலைகளின்
அருகாமையிலிருந்து வெளியேறிய போதும் கதிர்வீச்சு தாக்கியிருந்தது. அணு உலை
விபத்துகள் அவ்வளவு கொடூரமான அழிவை ஏற்படுத்தக்கூடியது.
|
கூடங்குளம் அணு உலைகளை எதிர்த்து போராடுகிற மக்கள் (படம்: இந்தியா டுடே) |
அதிக செலவு
செய்து, மரணத்தையும், ஆபத்தையும், அழிவையும் ஏற்படுத்துகிற அணு உலைகளில்
மட்டும் தான் தேவையான மின்சாரத்தை உருவாக்க முடியுமா? காற்று, சூரிய சக்தி,
கடல் அலை, நீர், கழிவு பொருட்களில் பாதுகாப்பான முறையில் தேவையான
மின்சாரம் தயாரிக்க வாய்ப்பிருந்தும் இந்தியா அணு உலைகளை நோக்கி நகர காரணம்
என்ன?
அணு உலை, அணு குண்டுகள், அணு உலை கழிவுகள் மட்டுமல்ல,
அணுசக்தி உற்பத்தியில் எரிபொருளாக பயன்படுத்தப்படுகிற யுரேனியம் தோண்டி
எடுக்கிற போதும் இயற்கை அழிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. அணு
மின்சார உற்பத்தி மிக அதிகமாக செலவை உருவாக்குவதும் கூட.
1 கருத்துக்கள்:
அமெரிக்க அடிமை மண்ணு மோகன் சிங்குக்கு இதை பற்றி கவலை இல்லை. போதாகுறைக்கு அப்துல் கலாம் என்ற கோமாளி.
Post a Comment
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com