நாம் தமிழர் கட்சிக் கொள்கை - மாற்றுக் கொள்கை அல்ல, இனவெறுப்பு கலந்த பாசிசம்
Anti-fascism exhibition 1998 |
'நாம் தமிழர் கட்சி' கோவையில் வெளியிட்ட ஆவணம்
அது வெளியிடப்பட்ட நாளிலிருந்து கடுமையான விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது. பெரியாரின்
மீதான பொய்யுரைகளுக்காக மட்டுமே அது விமர்சிக்கப்படவில்லை. இனவெறியை அடிப்படையாகக்
கொண்டு வெற்று முழக்கங்களை 'மாற்று' அரசியலாக முன்வைத்து சிறுபான்மை மொழி, மதங்களைச்
சார்ந்தவர்களை எதிரியாக சித்தரிக்கிறது. அதன் இந்த பாசிச அரசியல் தமிழகத் தமிழர்களுக்கும்,
ஈழத்தமிழர்களுக்கும் புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகங்களுக்கும் எதிர் விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய
அபாயம் நிறைந்தது என்கிற காரணத்திற்காகவே விமர்சனத்திற்கு உள்ளாகிறது.
திரு. சீமான் ஆனந்தவிகடன் நேர்காணலில் “கொள்கை
விளக்க ஆவணம் திருத்துதலுக்கும் மாறுதலுக்கும் உட்பட்டது என்பதை அதில் நாங்கள் தெளிவாகக்
குறிப்பிட்டு இருக்கிறோம்.” என்கிறார். எதிர்ப்பின் காரணமாக நாளையே நாம் தமிழர்
கட்சி இந்த ஆவணத்தை திருத்தவோ, மாற்றவோ செய்யலாம். ஆனால் வரலாற்றுத் திரித்தல்கள்,
தகவல் திரித்தல்கள் மற்றும் முரண்பாடுகளுடன் பாசிச, இனவெறுப்பை கொள்கையாக வகுத்து
'மாற்று அரசியலாக' அறிமுகம் செய்ததற்கு என்ன பதிலை வைத்திருக்கிறார் திரு. சீமான்?
பெரியாரை விமர்சிக்கக் கூடாதா என்கிற கேள்வியையும்
அவர் எழுப்பியிருக்கிறார். பெரியாரையும் அவரது போராட்டங்களையும் யாரும் விமர்சிக்கலாம்.
ஆனால் அத்தகைய விமர்சனங்கள் சரியான தகவல்களோடும், நேர்மையுடனும் இருப்பதே 'மாற்றை'
முன்வைக்கிற அரசியல் கட்சிக்கும், அதன் தலைமைக்கும் பெருமை சேர்ப்பதாகும். சீமானுக்கு
முன்னர் பார்ப்பனீய சிந்தனையாளர்களும், 1994ல் பெங்களூர் குணாவின் பிரச்சார நூலும்,
தொடர்ந்து இந்துத்துவ இணையதளப் பிரச்சாரகர்களும் பலமுறை தமிழர்களுக்கும், தமிழ்மொழிக்கும்
எதிரானவராக பெரியாரை சித்தரித்திருக்கிறார்கள். பெரியாரை அவர் பேசிய, எழுதிய, நிலைப்பாடுகள்
எடுத்த போராட்டச் சூழல்களிலிருந்து கருத்துக்களைப் பிரித்தெடுத்தும், பிழையாக தகவல்களைத்
திரித்தும் பரப்பிய அவதூறு நோக்கிலான அத்தகைய விமர்சனங்களை பலரும் ஆதாரங்களுடன் மறுத்திருக்கிறார்கள்.
ஆனால் நாம் தமிழர் கட்சி உருவாகும் வரையில் பெரியார் தி.க. அமைத்துக் கொடுத்த மேடைகள்
தோறும் 'நான் பெரியாரின் பேரன்...' என்று அறிவித்துக் கொண்ட திரு. சீமான், அந்த மேடைகள்
ஒன்றில்கூட பெரியாரை விமர்சிக்கவுமில்லை; பிரதான எதிரியாக சித்தரிக்கவுமில்லை. ஆவண
வெளியீட்டிற்குப் பின்னர் பெரியார் தி.க. கண்டிக்கத் துவங்கியவுடன் பதிலளிப்பதற்கு
முடியாமல் "அண்ணன்களுக்கு கண்டிக்க உரிமையுண்டு" என்ற பெயரில் பதுங்குகிறார்.
இன்றைய நிலையில் தமிழ் மக்களுக்கு கருணாநிதி
மற்றும் ஜெயலலிதாவின் சனநாயகமற்ற, நாடகீய அரசியலிலிருந்து விடுதலையும் மாற்று அரசியலின்
தேவையும் உள்ளதை எவரும் மறுக்க முடியாது. அதனடிப்படையில் இந்திய அதிகார மையத்திடமிருந்து
தமிழகத்தின் உரிமைகளையும், மாநிலத்தின் அரசியல் அதிகாரத்தையும் எடுத்துக் கொள்ள வலுவான
மாநில அரசும், தலைமைகளும் தேவை. ஆனால் அத்தகைய அரசு பொய்யான பிரச்சாரங்களின் மூலமும்,
இனவெறியின் மூலம் நிறுவப்படும்போது அது பாசிசக் குணமுடையதாகவே இருக்கும். மற்ற கட்சிகளின்
அரசியல் கொள்கைகளையும், செயல்பாட்டு நடைமுறைகளையும் விமர்சித்து, அதற்கு மாற்றாக முற்போக்கான,
சனநாயக அடிப்படையிலான ஆக்கப்பூர்வமான கொள்கையையும், திட்டங்களையும் வகுத்திருக்க வேண்டும்.
நாம் தமிழர் கட்சி முன்வைத்துள்ள கொள்கைகள் இந்திய அரசாலும் அதன் அதிகார வர்க்கத்தாலும்
ஏமாற்றத்திற்குள்ளாகிற தமிழக மக்களின் உரிமைகளையும், அரசியலதிகாரத்தையும் முழுமையாக
அடையவும், ஈழத்தமிழர்களின் உரிமைக்கான கொள்கை மாற்றங்களை உருவாக்கவும் உதவாது.
'தமிழ் உலகின் முதல் மொழி. தமிழர் உலகின் முதல்
மக்கள்' என்பதும் 'தமிழ்', 'தமிழர்' தொன்மை, சிந்துசமவெளி நாகரீகம் உட்பட நாம் தமிழர்
கட்சி ஆவணம் கட்டியமைக்கிற கதைகளும் வரலாற்று அடிப்படையிலோ, அறிவியல் அடிப்படையிலோ
நிரூபிக்கப்படாத பழம்பெருமையைப் பேசுகிறது. அதனடிப்படையில் தமிழ்நாட்டின் முரண்பாடுகளை
அடையாளப்படுத்தி, வரிசைப்படுத்தி நாம் தமிழர் கட்சியின் அரசியலை வகுத்திருக்கிறது.
நிகழ்கால அரசியலையும், எதிர்கால அரசியலையும் மாற்றியமைக்க பழங்கால ஆதி மனிதனையும்,
மனித சமூகத்தையும் தமிழ், தமிழர் என்ற அடையாளத்திற்குள் அடைத்து, அதனடிப்படையில் கொள்கைகளை
வகுப்பதிலிருந்தே அதன் பாசிசமும், இனவெறுப்பும் துவங்குகிறது.
சிறுபான்மை மதங்களைச் சார்ந்த மக்கள் மீதான பாசிசம்
நாம் தமிழர் கட்சியின் ஆவணத்தில் அசீவகம், உலகாய்தம்,
வள்ளுவம், வள்ளலாரியம் ஆகியவற்றை இணைத்து 'தமிழியம்' என்று தமிழர்களின் நெறியாக குறிப்பிடுகிறது.
அதில் 3 வது முரண்பாடாக,
தமிழியத்திற்கும் முகமதியத்திற்கும், தமிழியத்திற்கும் கிறித்துவத்திற்கும் இடையே முரண்பாடு (நாம் தமிழர் கட்சி ஆவணம், பக்கம் 37)
அடையாளப்படுத்துகிறது. மேற்கொண்டு அதன் விளக்கமான
பகுதியில்,
3ம் முரண்பாடுகளான முகமதியமும், கிறித்தவமும் தமிழ்த்தேசியத்தை ஒவ்வொரு காலத்தில் ஆளுமை செலுத்தியவை; சட்டப் பாதுகாப்பும், சொத்துடமை வலுவும், பன்னாட்டுப் பின்புலமும் கொண்டு, மதவழித் தனி இனக்கட்டுமானம் கொண்டவை; முகமதியத் தமிழரும், கிறித்தவத் தமிழரும் தங்களுடைய முதன்மை அடையாளம் தமிழ்தேசிய அடையாளமே என்று உணர்ந்து வருவாராயின், நட்பு முரண் வகையிலும், அல்வழிப் பகைமுரண் வகையிலும் இடம்பெறுவர்; இவர்கள் எச்சரிக்கையோடும் விழிப்போடும் அன்போடும் கையாளப்பட வேண்டிய தரப்பினர். (நாம் தமிழர் கட்சி ஆவணம்: பக்கம் 39)
ஆர்.எஸ்.எஸ், சங்பரிவார அமைப்புகளின் கொள்கை ஆவணத்தைப்
படிப்பது போன்ற பதட்டத்தை இது உருவாக்குகிறது. பார்ப்பனீய இந்துத்துவ அரசியலும், நாம்
தமிழர் கட்சியின் கொள்கையும் இணையும் புள்ளியும் இது. சாவர்க்கர், கோல்வால்கரின் இந்துத்துவ
கோட்பாட்டிலிருந்து சற்றும் பிசகாமல் பல நூறு ஆண்டுகளாக இந்த நாட்டில் வாழுகிற இஸ்லாமியர்களையும்,
கிறிஸ்தவர்களையும் எதிரிகளாக சித்தரிக்கிறது. இங்குள்ள மக்கள் சாதி ஒடுக்குமுறை மற்றும்
தனிப்பட்ட விருப்பின் காரணமாக தனது மதத்தை தேர்வு செய்த உரிமையை எதிர் நிறுத்துகிறது.
அவர்களை "எச்சரிக்கையோடும் விழிப்போடும் அன்போடும் கையாளப்பட வேண்டிய தரப்பினர்"
என்று சிறுபான்மை மதங்களைச் சார்ந்த மக்கள் மீதான கண்காணிப்பையும், சந்தேகத்தையும்
தமிழக மக்களிடையே விதைத்து, பிளவை உருவாக்க முனைகிறது.
முகமதிய மன்னர்கள் ஆட்சியையும், பிரித்தானிய காலனியாதிக்கத்தையும்
"முகமதியமும், கிறித்தவமும் தமிழ்த்தேசியத்தை ஒவ்வொரு காலத்தில் ஆளுமை செலுத்தியவை"
என்பதன் வழியாக இஸ்லாமிய, கிறித்தவ மக்களின் மீது பழி சுமத்துகிறது. "சட்டப் பாதுகாப்பும்,
சொத்துடைமை வலுவும், பன்னாட்டுப் பின்புலமும் கொண்டு, மதவழித் தனி இனக்கட்டுமானம் கொண்டவை"
என்பதன் மூலம் இஸ்லாமியர்களையும், கிறித்தவர்களையும் அன்னியப்படுத்துகிறது. "முகமதியத்
தமிழரும், கிறித்தவத் தமிழரும் தங்களுடைய முதன்மை அடையாளம் தமிழ்தேசிய அடையாளமே என்று
உணர்ந்து வருவாராயின்" என்கிற பாசிச, இனவெறி நிபந்தனையை முன்வைக்கிறது.
சிறுபான்மை மதங்களைச் சார்ந்த மக்களுக்கான தனிச்
சட்டப் பாதுகாப்புகளை பறித்து பொதுசிவில் சட்டம் கொண்டு வரவேண்டுமென்று இந்துத்துவ
அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அந்த மத நிறுவனங்களின் சொத்துக்கள் மற்றும்
அயல்நாட்டு தொடர்புகளை எதிரியாகவே அவை சித்தரிக்கின்றன. இந்துத்துவா என்பது கலாச்சாரமென்றும்,
அத்தகைய 'கலாச்சார தேசியத்தை' பிறமதங்களின் மக்கள் ஏற்றுக்கொள்ளவும் அத்வானியும், இந்துத்துவவாதிகளும்
வலியுறுத்தியதும் கவனிக்கத்தக்கது. அதே வகையில் நாம் தமிழர் கட்சி 'தமிழியத்தை' முன்வைக்கிறது. இவை ஒரு மதசார்ப்பற்ற, சனநாயக அரசிற்கு உகந்த கூறுகளல்ல.
இந்துத்துவ அரசியல் அதன் பழம்பெருமை, பழங்கதைகளை
பெருமிதமான அடித்தளமாக வைத்து, நில எல்லையை முன்வைத்து, மற்ற மொழி, மதங்களைச் சார்ந்த
மக்களை எதிரிகளாக சித்தரித்து அதன் அரசியல் கொள்கையை வகுத்திருக்கிறது. தேர்தல்களுக்கு
ஏற்ப அவற்றிலிருந்து தந்திரமாக பிரச்சாரங்களையும், முழக்கங்களையும் தேர்ந்தெடுத்து
முன்வைக்கிறது. இந்துத்துவ அரசியலின் நாயகர்களில் மன்னர்களுக்கு முக்கிய இடமளித்திருக்கிறது.
மராட்டிய மன்னன் சிவாஜி இந்துத்துவ அரசியலுக்கு அடையாளமாக்கப்பட்டிருக்கிறார்.
அதேவகையில், நாம் தமிழர் கட்சியும் பழங்கால கதைகள்,
மன்னர்கால பழம்பெருமையை அடித்தளமாக வைத்து எல்லைகளை விரித்துக் கட்டி எழுப்புகிறது.
அதன் நாயகர்களில் சோழமன்னர்களும், பிரதானமாக '25 பெருமைமிகு நாடுகளை வென்று ஆண்ட அருண்மொழித்
தேவனாம் இராசராசன்' இடம்பெறுகிறார். நிகழ்கால அரசியலில் அதிகாரம் செலுத்துகிற ஆட்சியாளர்களும்
சனநாயகத்தை கட்டுப்படுத்துகிற மாமன்னர்களாக இருக்கையில், நாம் தமிழர் கட்சியின் தமிழ்த்தேசிய
மன்னர்காலப் பெருமிதம் எத்தகைய மாற்றத்திற்கு உதவப்போகிறது? மும்பையில் சிவசேனா கட்சியினருக்கு
ஆதரவாக மும்பை வாழ் தமிழ்மக்களிடம் திரு. சீமான் தேர்தல் பிரச்சாரம் செய்ததையும் இங்கே
கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. பெரியார் மீதான அதன் விமர்சனங்களும் இந்த நேர்கோட்டில்
தான் அமைந்துள்ளது. இந்துத்துவாவிற்கு தமிழகத்தில் அரசியல் களத்தை விரிவாக்குகிறது
நாம் தமிழர் கட்சியின் கொள்கை.
சாதீய ஒடுக்குமுறை, ஒதுக்குதல், தீண்டாமை, அடக்குமுறைகள்
குறித்து...
"நாம் ஒரு தேசமாக இருப்பதாக நம்பினால், நாம் மிகப்பெரியதொரு மாயையில் இருப்பதாகப் பொருள். பல்லாயிரம் ஜாதிகளாகப் பிரிந்திருக்கும் மக்கள் எப்படி ஒரு தேசமாக முடியும்? நாம் சமூக ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் ஒரு தேசமாக இல்லை என்பதை எவ்வளவு விரைவில் உணர்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது. அமெரிக்காவில் ஜாதிப் பிரச்சனை இல்லை. இந்தியாவில் ஜாதிகள் இருக்கின்றன.ஜாதிகள் தேசியத்திற்கு எதிரானவை. முதலில் அவை சமூக வாழ்க்கையில் பிளவை ஏற்படுத்துகின்றன; அவை தேசியத்திற்கு எதிரானவை ஏனெனில், அவை ஜாதிகளுக்கிடையே பொறாமையையும், பகைமையையும் உருவாக்குகின்றன. ஆனால், நாம் உண்மையில் ஒரு தேசமாக விரும்பினால், இவை அனைத்தையும் வென்றாக வேண்டும்." - டாக்டர் அம்பேத்கர்
அம்பேத்கரின் இக்கருத்தை தமிழ்த்தேசிய அரசியலுக்கு
பொருத்திப் பார்ப்பது ஆக்கப்பூர்வமான, சனநாயக முறையிலான மாற்று அரசியலை கட்டியெழுப்ப
அவசியமாகிறது. தமிழகத்தில் ஆழமாக பிறப்பு முதல் இறப்பிற்குப் பின்னர் வரையில் நடைமுறையில்
இருக்கிற சாதீய அடக்குமுறை, ஒடுக்குமுறை மற்றும் ஒதுக்குதலை முதன்மையான முரண்பாடாக
நாம் தமிழர் கட்சி அணுகவில்லை. சாதியப் படிநிலையில் கீழ் படி முதல் மேல் படி வரை படிப்படியாக
உயர்கிற அதிகாரமும், வெறுப்பும் கலந்த அடக்குமுறையை வாழ்வியலாகக் கொண்டிருக்கிற மக்களை
அவற்றிலிருந்து விடுவிக்க சாதியொழிப்புத் திட்டம் எதையும் முன்வைக்காமல் "தமிழராக
நாம் ஒன்றிணைவோம்" என்கிறது நாம் தமிழர் கட்சி. துல்லியமான திட்டங்ளை முன்வைக்காமல்
'தமிழர்' என்கிற முழக்கத்தை மட்டும் முன்னெடுப்பது ஒடுக்கப்படுகிற மக்களுக்கு எந்த
மாற்றத்தையும் உருவாக்காது. நாம் தமிழர் கட்சி சாதிய முரண்பாட்டை மிக எளிமைப்படுத்தி
கடந்துசெல்வது, அதன் ஆதிக்கசாதி அரசியல்தன்மையை அப்பட்டமாக்குகிறது. இன்றைக்கு அரசியல்
அதிகாரத்தை அனுபவிக்கிற ஆதிக்கசாதிகளின் அரசியலுக்கு எவ்வகையிலும் அது மாற்றாகவோ, மாறுபட்டதாகவோ
இல்லை.
சிறுபான்மை மொழியினர் மீதான பாசிசம்
'இன்னார் தெலுங்கு பேசுகிற சாதியைச் சார்ந்தவர்',
'இன்னார் கன்னடம் பேசுகிற சாதியைச் சார்ந்தவர்' என்று சாதி வழியாக பல தலைமுறைகளுக்குப்
பின்னால் சென்று மொழிப் பின்புலத்தை அடையாளப்படுத்தி ஒருவரைத் தாக்குவது எவ்வகையிலும்
ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. அடிப்படையில் இது பாசிச குணமுடையது. தமிழகத்தில் தலைமைகளின்
கொள்கை மற்றும் செயல்பாட்டை விமர்சிப்பதற்குப் பதிலாக இந்த அசிங்கமான, அருவருப்பான
சாதிவெறி, இனவெறி மற்று மொழிவெறிப் பாசிசத்தையே நாம் தமிழர் கட்சி அதன் பிரச்சாரங்களில்
முன்னெடுக்கிறது.
குறிப்பிட்ட ஒரு எல்லைக்குள் பெரும்பான்மை மொழி
வழி வந்தவர்களை மட்டுமே மையப்படுத்தி உருவாக்குகிற எந்த அரசியல் கொள்கையும், தேசியமும்
ஆபத்தான பாசிச இனவெறுப்பை அரசியல் பாதையாக்குகிறது. சிறுபான்மை மொழி பேசுகிறவர்களிடம்
அவர்களது மொழியை விட்டும் பெரும்பான்மையினரின் மொழியை "தாய்மொழியாகவும், வாழ்வியல்
மொழியாவும்" ஏற்றுக்கொள்ள வலியுறுத்துவதும், வற்புறுத்துவதும் சனநாயகத்துக்கு
எதிரானது மட்டுமல்ல; உரிமைகளை மறுக்கிற பாசிச அரசியலாகும். ஈழத் தமிழர்கள் மீது அவர்களது
தாய்மொழி அல்லாத சிங்கள மொழியைத் திணித்தது சிங்கள இனவெறி அரசு. அத்தகைய அரசியலையே
நாம் தமிழர் கட்சி முன்வைக்கிறது.
"பிற மொழியாளர்கள், பிறமொழியாளர்களாகவே தொடர்ந்து வாழ்வதும் அல்லது அந்த பிறமொழிகளுக்கும் தாய்மொழி தமிழே என்று உணர்ந்தறிந்து, தமிழை வாழ்வியல் மொழியாகவும், அடுத்து, வழிவழியாகத் தாய்மொழியாகவும் ஏற்றுத் தமிழராக வாழ்வதும் அவர்களுக்குள்ள உரிமை." (பார்க்க: பக்கம் 33, நாம் தமிழர் கட்சி ஆவணம்)
மொழி ஆதிக்க பாசிசத்தை இதைவிட மென்மையாக வேறுவழியில்
திணிக்க முடியாது. தமிழை தாய்மொழியாகக் கொண்டும், வாழ்வியல் மொழியாகக் கொண்டும், பிறமொழியை
கற்று அயல்நாடுகளில் வாழுகிற தமிழர்களுக்கு அந்த நாடுகளில் இதே வகை பாசிசத்தைப் பொருத்தினால்
எப்படியிருக்கும்? அவர்கள் தமிழ் மொழியைக் கற்கும் உரிமையை இழக்க மாட்டார்களா? புலம்
பெயர்ந்த தமிழர்கள் தமிழ் எழுத, பேச முடியாத தலைமுறையாக உருவாவதற்கு வழிவகுக்காதா? ஆவணத்தில் மொழி குறித்த நிலைபாடுகளில்
இன்னும் பல இடங்களில் நாம் தமிழரின் மொழி ஆதிக்க பாசிசம் வெளிப்படுகிறது.
"அவரவர் நாட்டில் அவரவர்க்கு உரிமை தமிழர்
நாட்டில் தமிழர்க்கு உரிமை" என்கிறது மற்றொரு முழக்கம். மராத்திய மண்ணிலிருந்து
வேற்று மொழிக்காரர்களை வெளியேற்றும் வகையில் அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் பால்
தாக்கரேவின் அரசியல்லுக்கு சற்றும் குறைந்ததல்ல இந்த முழக்கம். இந்த முழக்கத்தை பிறமாநிலங்களிலும்,
புலம்பெயர் நாடுகளிலும், மற்ற நாடுகளிலும் பல தலைமுறைகளாக வாழுகிற தமிழர்களுக்குப்
பொருத்திப் பார்க்க அச்சமாக இருக்கிறது. அவர்களது அரசியல் உரிமையையும், மொழியுரிமையையும்
பறிக்கிற இந்த பாசிசப் போக்கு கண்டிக்கத்தக்கது. இத்தகைய அரசியல், தமிழர்களின் விடுதலைக்கும்,
உரிமைப் போராட்டங்களுக்கும் எதிரானது.
ஈழ அடையாளங்களைப் பயன்படுத்தலும், இப்பாசிசக்
கொள்கையின் எதிர்விளைவுகளும்...
ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் தமிழீழத்தேசியத்
தலைவர் திரு.வே.பிரபாகரனின் இடம் சமன்செய்ய முடியாதது. தமிழகத்தின் அரசியலும், சூழலும்
ஈழத்தின் சூழலிலிருந்து வேறுபட்டது. ஆனால் திரு. வே. பிரபாகரனையும், ஈழத்தை தொடர்புபடுத்துகிற
முழக்கங்களையும் அரசியல் கொள்கை ஆவணத்தில் வைத்திருப்பதன் ரகசியம் ஈழத்தமிழர்களின்
ஆதரவை கவர்கிற திட்டம் தானே? இத்தகைய ஒரு பாசிச கொள்கையை முன்வைப்பதன் மூலம் ஈழத்தமிழர்களின்
விடுதலைக்கும், நீதிக்குமான போராட்டங்களுக்கு அது எதிர்விளைவுகளை உருவாக்குவதை ஈழத்தமிழர்களும்
கவனத்தில் எடுப்பது அவசியம்.
வன்னி இனப்படுகொலைக்குப் பிந்தைய தமிழக அரசியல்
முன்னெப்போதைக் காட்டிலும் ஈழ விடுதலைப் போராட்டத்தை மையப்படுத்தி முன்னெடுக்கப்படுகிறது.
நாம் தமிழர் கட்சி இனப்படுகொலை உக்கிரத்தின் விளைவாகப் பிறந்தது என்பதை யாரும் மறுக்க
முடியாது. தமிழக அரசியலையும், ஈழத்து விடுதலைப் போராட்டத்தையும் வேறுபடுத்த முடியாத
அளவு அக்கட்சி குழப்பமாக பிணைத்துள்ளது. இதனடிப்படையில் ஈழத்தமிழர்களில் பலரும் பல
நாடுகளில் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவையும், உதவிகளையும் செய்துவருகிறார்கள். நாம்
தமிழர் கட்சி முன்வைக்கிற அரசியல் மற்றும் கொள்கைகளின் விளைவுகள்
நன்மையோ, தீமையோ அவை ஈழத்தமிழர்களையும் பாதிக்கும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
கட்சி ஆவணத்தில் மிகக் கணிசமான பக்கங்களை திரு.
வே. பிரபாகரனுக்கும், ஈழத்தமிழர் குறித்தும் ஒதுக்கியிருப்பது ஈழத்தமிழர்கள் மற்றும்
ஈழ ஆதரவாளர்கள் மத்தியில் ஈர்ப்பை உருவாக்கலாம். நாம் தமிழர் கட்சி புலிகளின் கொடியினை
அடியொற்றிய கொடி. தமிழீழத்தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன் மற்றும் ஈழத்தை முன்னிறுத்திய
பிரச்சாரம் இவற்றை பயன்படுத்துகிற போது, அதன் கொள்கையின் விளைவுகள் ஈழத்தமிழர்களையும்
பாதிக்குமென்பதை கருத்திலெடுக்க வேண்டும்.
வன்னி இனப்படுகொலையில் 1 லட்சத்திற்கும் அதிகமான
தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்ட போது தமிழக அதிகாரம் கைகட்டி வேடிக்கை பார்த்த ஏமாற்றத்தை,
வேதனைகளை நெஞ்சில் தாங்கியும், இனப்படுகொலையின் உளவியல் தாக்குதலையும், நிர்மூலமாக்கப்பட்டுள்ள
தமிழர் விடுதலைப் போராட்ட வலிகளிலும் வாழுகிற மக்கள் நிகழ்கால, எதிர்கால அரசியலை தேர்ந்தெடுப்பதிலும்,
கட்டமைப்பதிலும் கவனத்தோடும், எச்சரிக்கையோடும் இருப்பது அவசியமாகிறது. அரசியல் இலக்குகளை
அடைவதற்கு கொள்கைகளும், திட்டங்களும் இன்றியமையாதவை என்கிற அடிப்படையில் தமிழ்த்தேசிய
அரசியலுக்காக முன்வைக்கப்படுகிற கொள்கைகள் விமர்சனத்திற்குள்ளாக வேண்டும். அத்தகைய
விமர்சனங்களை புறந்தள்ளுகிற எந்த முயற்சியும் ஆட்சியைக் கைப்பற்றி பதவிகளைப் பெற உதவலாம்.
சமூகத்தையும், அரசியல் அதிகாரத்தின் தற்போதைய நிலைமையையும் மாற்றுகிற அரசியல் இலக்குகளை
அடைவதற்கு எவ்வகையிலும் உதவாது.
அந்த வகையில், நாம் தமிழர் கட்சியின் கொள்கை மாற்றுக்
கொள்கை அல்ல. மற்றுமொரு அரசியல் கட்சியின் பிரகடனம். அது பாசிச, இனவெறியை அரசியலாக
வைக்கிறது. சனநாயமுறையில், ஆக்கப்பூர்வமான மாற்று அரசியலில் அக்கறையுடையவர்கள் அதை
விமர்சிப்பதும், எதிர்ப்பதும் காலத்தின் கட்டாயம்.
யோ.திருவள்ளுவர்,
12.06.2012
சித்திரம்: behance
உங்கள் கருத்து என்ன?
Post a Comment
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com