டெசோ நாடகமும், வேதனைச் சுழலுக்குள் தமிழ் மக்களும்.
காலையில் டெசோ மாநாடு துவக்க உரையில் திரு.மு.கருணாநிதி ஆற்றிய உரையின் அடிப்படையில் சில குறிப்புகளை எழுதவேண்டிய அவசியம் வருகிறது.
படத்தில்: 2009 வன்னி இனப்படுகொலையின் போது தமிழ் மக்களின் இடப்பெயர்வு. |
இனப்படுகொலைக்கும், அரசியல் உரிமைகள் மறுப்பிற்கும் உள்ளான மக்களின் நீதிக்கான போராட்டத்தின் நியாயத்தை இடப்பங்கீடு கோரிக்கை அளவிற்கு மாற்றி உப்புசப்பில்லாத தீர்மானங்களை முன்மொழிகிறது டெசோ. படுகொலைக்கும், பல்வேறு வடிவங்களிலான இழப்பிற்கும் உள்ளான ஒரு மக்கள் சமூகத்தைத் தனது அரசியல் சுயநலத்திற்காவும், விளம்பரத்திற்காகவும் பயன்படுத்துகிற கயமைத்தனத்தைத் தொடராமல் இருப்பதே ஈழத்தமிழர்களுக்குக் கருணாநிதியும், திமுகவும் செய்கிற பெரும் உதவியாக இருக்கும்.
இன்றைய நிலையில் உலகமெங்குமிருந்து பங்கேற்பாளர்களை அழைத்து மாநாடுகளைக் கூட்டுவது பணம் இருக்கிற அமைப்புகளுக்கு மிக எளிதாக சாத்தியமாகிற விசயம் தான். இதிலொன்றும் அதிசய சாதனைகளில்லை. இத்தகையக் கார்ப்பரேட் மாநாடுகளின் பேசுபொருள்களும், முன்னிலைப்படுத்தப்படும் நபர்களும், பேசப்படுகிற விசயங்களும், தீர்மானங்களும் தான் அதன் அரசியலை தீர்மானிக்கின்றன.
- ஈழத்தில் இனப்படுகொலை நடைபெற்றது. 1 லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் அதில் கொல்லப்பட்டனர். பல ஆயிரம் பேர் அரசியல் கைதிகளாகச் சிறைகளில் நீதி விசாரணை எதுவுமில்லாமல், சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். காணாமல் போகவைத்தலும், ஆட்கடத்தலும், கொலைகளும், மிரட்டல்களும் தமிழ்மக்கள் மீது தொடர்ந்து நடத்தப்படுகிறது. பாதுகாப்பும், நீதியும், நிவாரணமும் இல்லாத சூழலில் இழப்புகளுக்கு உள்ளான தமிழ் மக்களின் புலம்பெயர்வு அதிகமாகி வருறது.
- ஈழத்தில் தமிழ்மக்களின் நிலங்களும், வளங்களும், கலாச்சாரமும் இலங்கை அரசின் ராணுவத்தின் முற்றுகைக்குள் சிக்கியிருக்கிறது. கலாச்சார அடையாளங்கள் அழிக்கப்பட்டு, உரிமைகள் மறுக்கப்படுகின்றன.
- உடனடியாக ஈழத்தில் தமிழ் மக்களின் பாதுகாப்பையும், உடனடி நிவாரணத்தையும், நிலங்கள், கலாச்சாரம், வாழ்வை, உரிமைகளை உறுதிப்படுத்திப் பாதுகாக்கிற பொறிமுறையை ஐ.நா நேரடி தலையீட்டில் உருவாக்க வேண்டும்.
- பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களைக் கண்டறிந்து அவர்களுக்கான நிவாரணங்களையும், நீதியையும் வழங்க வேண்டும். சிறைகளில் வாடுகிற அரசியல் கைதிகள் குறித்த தகவல்களை வெளியிட்டு அவர்களுக்கு முறையான நீதியையும், நிவாரணத்தையும் வழங்கல். காணாமல் போகவைக்கப்பட்ட மக்கள் குறித்த உண்மைநிலையைக் கண்டறிந்து வெளியிடல் இவற்றை ஐ.நா பொறிமுறை மூலம் உறுதிப்படுத்த வேண்டும்.
- இனப்படுகொலையைச் சர்வதேச அளவில் விசாரித்து உண்மையை வெளிப்படுத்தவும், நீதி வழங்கவும் சிறப்பு நீதிமன்றத்தை உருவாக்க ஐ.நா தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
- தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையுண்டு என்பதை அங்கீகரித்து, தமிழர்களுக்கான அரசியல் தீர்வை அவர்களே தீர்மானிக்கிற சூழலை ஐ.நா உருவாக்க வேண்டும்.
உங்கள் கருத்து என்ன?
Post a Comment
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com